Tags

, , , ,

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர் புஜம்
பிரஸந்ந வதநம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

ஓம் நமோ நாராயணாய

 • திருபல்லாண்டு” முதல் “திருவாய்மொழி” வரை ஆழ்வார்கள் (24 தலைப்புகளில்), நாராயணின் புகழைப் பாடிய பாசுரங்கள் திவ்ய பிரபந்தங்கள் திராவிட வேதம், திராவிட பிரபந்தம் என்று போற்றப்படுகின்றன-தொகுத்தவர் நாதமுனிகள்.
 • திருவரங்கத்தமுதனார் இயற்றிய ராமானுஜ நூற்றந்தாதியும் (பிரபந்த காயத்ரி) சேர்த்து (25 தலைப்புகளில்), நாலாயிர திவ்ய பிரபந்தங்கள்.
 • நாலாயிரத் திவ்வியப் பிரபந்த பாசுரங்களையும், ஆழ்வார்களையும் போற்றி துதிக்கும் பாடல்கள் தனியன்கள்.
 • ஆக தனியன்கள், மற்றும் 25 தலைப்புகளில் அமைந்துள்ள 4000 திவ்வியப் பிரபந்தங்களை, தனியன்கள் முதல் பாடலையும் ; மற்றும் திவ்வியப் பிரபந்த முதல் பாசுரத்தையும் இங்கே தரிசிக்கலாம்.
 • அந்தந்த தலைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ள மொத்த பாசுரங்களில் ஒவ்வொன்றிலும் முதல் பாசுரம்.
  • இந்த லிங்கிள் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.
  • மேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் சிறப்பாக இருக்கும்
  • லாயிர திவ்ய பிரபந்தங்களை பராயணம் செய்ய நாள் நேரம் உள்ளதா? நினைக்கதான் நாள் மனம் அம்சம் உள்ளதா? உள்ளம் உள்ளது ! முதலில் முதலை முனைவோம் முதல்வன் முகுந்தன் முன்னேற்றுவான்.

   *****Please click below to go to CONTENTS for all the Articles in HRE: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

   தனியன்கள்(ஆழ்வார்-திவ்வியப் பிரபந்த தொடக்கத்தில் அமைந்தவைகள்)

   ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
   யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம்

   …………………………………………..(முதன்மைத் தனியன்)
   ***அரங்கனே, மாமுனிகளின் உரை அனுதினமும் கேட்டு அவரின் அந்தரங்க சிஷ்யனாய் மாறிப் போனான்.
   ***திருவாய்மொழி ஒரு வருடகாலம் முடிந்து அன்று கடைசிநாள். (கலி 4534–பிரமாதீச வருடம் ஆனி மாதம் பெளர்ணமி ஞாயிற்றுக்கிழமை (09-07-1433) சாற்றுமுறை.
   ***மணவாள மாமுனிகளை கௌரவிப்பதற்காக அரங்கன் முன்பு திருப்பரிவட்டம் விரித்து வைக்கப்பட்டிருந்தன.
   ***குமாரன், நான்கு பிராயம் முடிந்து ஐந்தாம் பிராயத்திலுள்ள பாலகன்,  அனைவரையும் தாண்டி வந்து,  மணவாள மாமுனிகளுக்கு எதிரே கைகூப்பி நின்று
   ***திருமலையாழ்வாரான ஸ்ரீசைலேசரின் பரமக்ருபைக்குப் பாத்திரமானவரும், ஞான பக்தி வைராக்யங்களான குணக் கடலாகவும், யதீந்தரரான எம்பெருமானார் திறத்தில் ப்ரேமையே வடிவெடுத்தவராகவும் விளங்கும் அழகிய மணவாள மாமுனியை வணங்குகின்றேன்.
   ⇒என்று  மாமுனிகளைப் பார்த்து கைகூப்பி ஸேவித்தது ஓதி மறைந்தது.
   ***அந்த வைணவ சபையே அதிர்ந்தது. இது மணவாள மாமுனிகளுக்கு  நம்பெருமாள், குமாரானாக வந்து, உகந்து அளித்த தனியன்.  

   1. திருபல்லாண்டு (12 பாசுரங்கள்)–பெரியாழ்வார்

   பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
   மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
   வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
   வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
   படைபோர்புக்கு முழுங்கும் அப்பாஞ்ச்சன்னியமும் பல்லாண்டே

   ***வல்லபதேவ பாண்டியனுக்கு எழுந்த ஐயம் தீர்க்கும் பொருட்டு மதுரையில் நடைப்பெற்ற சமயவாதத்தில் வென்று, அரசனால் அளிக்கப்பட்ட பட்டத்துயானை மீது வரும்பொழுது திருமால் திருமகளோடு வானத்தில் கருடவாகனத்தில் எழுந்தருளியிருக்கக் கண்டு இறைவனின் வடிவழகில் மயங்கி எங்கே இறைவனுக்கு கண்திருஷ்டி விழுந்துவிடுமோ என்றஞ்சி பாடப்பட்ட திருப்பல்லாண்டு.

   ***மணிவண்ணா உன்னோடு ;நின் வலமார்பினில் வாழ்கின்ற என் தயாராகிய மங்கையும் ; நின் வல பாகம் உள்ள சக்ராயுதம் என்னும் சுடராழியும் ; சங்கம் என்னும் பாஞ்ச்சன்னியமும் போன்ற உன் அனைத்து ஆயுதங்களும் பல்லாண்டு வாழ்க.

   ***மேலும் சாற்றுமறை எனும் வைணவ தினசரி வழிப்பாட்டின் தொடக்கம் மற்றும் முடிவின்போதும், வைணவ கோயில்களின் திருவிழாக்களில் சுவாமி புறப்பாடு மற்றும் புறப்பாடு முடிந்து திருக்கோயில் திரும்பும்போதும் இன்றளவும் பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு பாடப்பட்டே பின்னரே சுவாமியை திருக்கோயிலுக்குள் எழுந்தருள செய்கின்றனர். இவ்வழக்கம் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது இராமானுசர் கொள்கைகளை பின்பற்றும் பிறபகுதி வைணவக் கோயில்களிலும் அனுசரிக்கப்பட்டுவருகிறது.

   2. பெரியாழ்வார் திருமொழி (461 பாசுரங்கள்)-பெரியாழ்வார்

   வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
   கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
   எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
   கண்ணன் முற்றம் கலந்து அளறாயிற்றே

   ***ஒளி நிறைந்த நீண்ட கண்களையுடையவனும், கேசி என்னும் அசுரனைக் கொன்றவனுமான, பேரெழில் மிக்கத் தலைவன் கண்ணன் பிறந்த திருநாளை முன்னிட்டு, அழகிய, வேலைப்பாடுகள் அமைந்த, உயரமான மாளிகைகள் நிறைந்த திருக்கோட்டியூரானது, கோகுலத்தை மிஞ்சும் வண்ணம் பேரெழில் பெற்றது; ஆயர்களும், ஆய்ச்சியரும், தங்கள் முன் எதிர்படுவோர் அனைவர் மீதும் நறுமண எண்ணையையும், வண்ணப் பொடிகளையும் தூவிக் குதூகலித்தனர். அவர்களின் இந்த மகிழ்ச்சி ஆரவாரச் செய்கையினால், கண்ணன் வீட்டின் பரந்த முற்றமும் நறுமண எண்ணெயும், வண்ணப் பொடியும் கலந்த சேறாய் மாறியிருந்தது.

   3. திருப்பவை (30 பாசுரங்கள்)ஆண்டாள் நாச்சியார்

   மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
   நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
   சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
   கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
   ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
   கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
   நாராயணனே நமக்கே பறை தருவான்
   பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

   ***அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

   ***இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் “நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 107 வது திருபார்கடலும் ,108 வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த இரு திருப்பதிகளை முடிவாக அடைய முடியும். இப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

   4. நாச்சியார் திருமொழி (143 பாசுரங்கள்)-ஆண்டாள் நாச்சியார்

   தையொரு திங்களும் தரை விளக்கித்
   தண் மண்டல மிட்டு மாசிமுன்னாள்,
   ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
   அழகினுக் கலங்கரித் தனங்கதேவா,
   உய்யவு மாங்கொலோவென்று சொல்லி
   உன்னையு மும்பியையும் தொழுதேன்,
   வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
   வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே.

   ***தைமாதம் முழுதும் நீ எழுந்தருளவேண்டிய இடத்தைச் சோதித்து மண்டல பூஜைக்காக குளிர்ந்த மண்டலாகாரத்தை இட்டு மாசி மாதத்தின் முதற்பக்ஷத்தில் அழகிய சிறிய மணல்களினால் நீ எழுந்தருளும் வீதிகளை அழகுண்டாவதற்காக நன்றாய் அலங்கரித்து உன்னையும் உன் தம்பியான சாமனையும் தொழுதேன். உக்கிரமானதும் நெருப்புப் பொறிகளை உமிழா நிற்பதுமான ஒப்பற்ற திரு வழியாழ்வானை திருக்கையில் அணிந்துள்ள திருவேங்கட முடையானுக்கு என்னை கைங்கரியம்பண்ணும்படி கல்பிக்கவேணும்

   5. பெருமாள் திருமொழி (105 பாசுரங்கள்)-குலசேகர ஆழ்வார்

   இருளரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி
   இனத்துத்தியணிபணம் ஆயிரங்களார்ந்த
   அரவரச பெருஞ்சோதி அனந்தனென்னும்
   அணிவிளங்கும் யர்வெள்ளையணையை மேவி
   திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர் பொன்னி
   திரைக்கையால் அடிவருடப் பள்ளிகொள்ளும்
   கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என்
   கண்ணினைகள் என்று கொலோ களிக்கும் நாளே?

   ***மிகவும் தெளிந்து விளங்கும் நீரினையுடைய காவிரியானது, தனது அலைகள் என்ற கைகளால் இதமாகத் திருவடிகளைப் பிடித்து விடும்படி தழுவி ஓடும் இடமான திருவரங்கம் என்னும் நகரத்தில், இருளானது சிதறி ஓடும்படி, ஓளி வீசும் மாணிக்கக்கற்களை பொருத்தியுள்ள நெற்றியினையும், மிகவும் நேர்த்தியான ஆயிரம் படங்கள் கொண்டு நாகங்களுக்கு அரசன் என்னும் மிகுதியான கம்பீரத்தையுடைய ஆதிசேஷனாகிய அழகுள்ள வெண்மைநிற படுக்கையில் கண்வளர்கின்ற நீல ரத்னக்கல் போன்ற பெரியபெருமாளை, என்னுடைய கண்கள் குளிர்ந்து வணங்கி நான் மகிழ்வுறும் நாளானது எந்நாளோ?

   ***என்றவாறு அரங்கனை நினைத்து ஏங்குகிறார் அரங்கனை அடைவதற்கு இந்த ஏக்கம் தாபமிருந்தால் போதும் அவன் செயல்பட தொடங்கிடுவான்.

   6. திருச்சந்த விருத்தம் (120 பாசுரங்கள்)-திருமழிசை ஆழ்வார்

   தருச்சந்தப் பொழில் தழுவு தாரணியின் துயர் தீர
   திருச்சந்த விருத்தம் செய் திருமழிசைப்பரன் வருமூர்,
   கருச்சந்தும் காரகிலும் கமழ் கோங்கும் மணநாறும்,
   திருச்சந்தத்துடன் மருவு திருமழிசை வளம்பதியே

   ***எம்பெருமானின் பெருமைகளை அநுபவித்து மகிழ்கிறவர் திருமழிசை ஆழ்வார். ‘இவ்வுலகிலுள்ள மக்கள் பகவானை நினைக்காமல் துன்புறுகிறார்களே! துன்பம் நீக்கும் வழியாது?’ என்று சிந்தித்தார். ராஜஸ தாமஸ நூல்களால் மனங்கலங்கி தேவதாந்தரங்களை நாடுவதுதான் துன்படையக் காரணம் என்று தெளிந்தார். ஸ்ரீமந்நாராயணனே பரதேவதை; தத்தவப் பொருள்’ என்பதை விளக்குவதற்காகவே இப்பிரபந்தத்தை அருளியுள்ளார். ‘பர, வ்யூஹ, விபவ, அர்ச்சாவதாரங்களில் எம்பெருமான் காட்டிய பெருமைகளை வாசித்தும் கேட்டும், அவனையே வணங்கும் பாக்கியத்தை எம்பெருமான் எனக்குக் கொடுத்திருக்கிறானே! என்னே கருணை!’ என்று கூறி மகிழ்கிறார்.

   7. திருமாலை (45 பாசுரங்கள்)-தொண்டரடிபொடி ஆழ்வார்

   காவலிற் புலனை வைத்துக் கலிதனைக் கடக்கப் பாய்ந்து,
   நாவலிட்டுழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே,
   மூவுலகும் உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற,
   ஆவலிப் புடைமை கண்டாய் அரங்கமா நகரு ளானே.

   *திருமாலை அறியாதோர் திருமாலை அறியாதார்என்பர் சான்றோர்!!!
   ***எல்லாவுலகங்களையும் (ப்ரளய காலத்திலே) திருவயிற்றிலே வைத்து (பிரளயம் நீங்கினபிறகு) அவற்றை வெளிப்படுத்திய ஜகத்காரணபூதனே அரங்கமாநகரளானே உனது திருநாமத்தைக் கற்றதனாலுண்டான செருக்கினாலே பஞ்சேந்திரியங்களையும் வெளியில் ஓடாதபடி அடைத்து பாபராசியை வெகுதூரம் உதறித்தள்ளி ஜயகோஷம் செய்து யமபடர்களின்  தலைமேல் அடியிட்டுத் திரிகின்றோம்

   8. திருப்பள்ளி எழுச்சி(10 பாசுரங்கள்)-தொண்டரடிபொடி ஆழ்வார்

   கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்!
   கனை இருள் அகன்றது, காலை அம் பொழுதாய்,
   மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்,
   வானவர், அரசர்கள் வந்து வந்து ஈண்டி
   எதிர் திசை நிறைந்தனர், இவரொடும் புகுந்த
   இரும் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்
   அதிர்தலில் அலைகடல் போன்று உளது எங்கும்,
   அரங்கத்து அம்மா, பள்ளி எழுந்தருளாயே!

   ***சூரியன் கிழக்கே தோன்றிவிட்டான். கருமை இருள் அகன்றுவிட்டது. காலைப் பொழுது மலர்கின்றது, மலர்களில் தேன் ஒழுகுகிறது. தேவர்கள் வந்து எதிர்திசையை நிரப்புகிறார்கள். அவர்களுடன் ஆண் -பெண் யானைகளின் கூட்டமும் வந்துள்ளன. முரசு கடல் அலைபோல அதிர்கிறது. அரங்கனே எழுந்தறள்வாய்

   9. அமலனாதிபிரான் (10 பாசுரங்கள்)திருபாணாழ்வார்

   அமலனாதி பிரானடியார்க் கென்னை யாட்படுத்த
   விமலன், விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்,
   நிமலன் நின்மலன் நீதி வானவன், நீள் மதிளரங்கத் தம்மான்,
   திருக்கமல பாதம் வந்தென் கண்ணினுள்ளன வொக்கின்றதே.

   ***பெருமானின் பேரழகில் ஈடுபட்டுப் பாதாதிகேச வருணனையாகப் பாடியுள்ளார். பாதாதிகேச வருணனை என்பது அடிமுதல் முடிவரை உள்ள இறைவனின் அங்கங்களைச் சிறப்பித்துப் பாடுதல் ஆகும்.

   10.கண்ணிநுண் சிறுதாம்பு(10 பாசுரங்கள்)-மதுரகவி ஆழ்வார்

   நம்மாழ்வார், நாதமுனிகளிடம் , திவ்ய பிரபந்தத்தை அளிக்க காரணமாய் விளங்கிய, திவ்ய பிரபந்தங்கள்:

   கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
   பண்ணி யபெரு மாயன் என்னப்பனில்
   நண்ணித் தென் குருகூர் நம்பி யென்றக்கால்
   அண்ணிக்கும் அமு தூறுமென்நாவுக்கே

   ***முடிகளையுடைத்தாய் நுட்பமாய் கயிற்றினால் யசோதைப்பிராட்டி தன்னைக்கட்டும்படி பண்ணுவித்துக்கொண்ட விசேஷ ஆச்சரிய சக்தியுக்தனாய் எனக்கு ஸ்வாமியான ஸர்வேச்வரனை விட்டு கிட்டி ஆச்ரயித்து தெற்குத் திசையிலுள்ள (ஆழ்வார் திருநகரியென்னும்) குருகூர்க்கு நிர்வாஹகாரன ஆழ்வார் என்று சொன்னால். பரமபோக்யமாயிருக்கும் என் ஒருவனுடைய நாவுக்கே அம்ருதம் ஊறா நிற்கும்.

   ***பன்னிரு ஆழ்வார்களுள் மதுரகவி ஆழ்வார் மட்டும் திருமாலைப் பாடாமல், திருமாலின் அவதாரங்களைப் பாடாமல், திருமாலின் அடியவராகிய நம்மாழ்வாரை மட்டும் பாடிய பெருமைக்குரியவர்.   அதையே தம் கடமையாகக் கருதி வாழ்ந்தவர். நம்மாழ்வாரை இறைவனாகக் கொண்டு பாடியதன் மூலம் இறைவணக்கமும் குருவணக்கமும் ஒரே தரத்தன என்று காட்டுகிறார்.

   11. பெரிய திருமொழி (1084 பாசுரங்கள்)-திருமங்கை ஆழ்வார்

   வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து,
   கூடினேன் கூடியிளையவர்த் தம்மோடு அவர்த்தரும் கலவியே கருதி,
   ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் திரிந்து,
   நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.

   ***கீழ்க்கழிந்த காலமெல்லாம் வாடிக்கிடந்தேன் , மனவருத்தமடைந்தேன் அளவற்ற துக்கங்களுக்கு இருப்பிடமான இல்லரத்திலே பிறந்து பொருந்தப்பெற்றேன்; அப்படி கிடந்ததனால் இளமை தங்கிய பெண்கள் தரக்கூடிய சிற்றின்பத்தை ஆசைப்பட்டு அந்தப்பெண்கள் போன வழியையே பற்றி ஓடினேன்; இப்படி ஓடித்திரியுமிடத்து; எம்பெருமான் திருவருளாலே ஞானமென்கிற ஒரு சிறந்த நிலையில் அடிவைத்து நன்மை தீமைகளை ஆராயப் புகுந்தேன் அப்படி ஆராயுமளவில் நாராயணா மஹா மந்த்ரத்தை நான் கண்டுகொண்டேன்.

   12. திருக்குறுந்தாண்டகம்(20 பாசுரங்கள்)-திருமங்கை ஆழ்வார்

   நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் சினைய வல்லார்
   கதியினைக் கஞ்சன் மாளக் கண்டுமுன் அண்டம் ஆளும்
   மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
   விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே.

   ***தாண்டகம் என்பது மலை ஏறுவதற்கு உதவியாக இருக்கும் ஒரு ஊன்றுகோல். மனித ஆன்மாவின் கடைத்தேற்றத்துக்கு கடவுள் ஒருவர் தான் ஊன்றுகோல் என்பதை இப்பாசுரங்கள் விளக்குகின்றன.

   13. திருநெடுந்தாண்டகம்(30 பாசுரங்கள்)-திருமங்கை ஆழ்வார்

   மின்னுருவாய் முன்னுருவாய் வேதம் நான்கில்
   →விளங்கொளியாய் முளைத் தெழுந்த திங்கள் தானாய்
   பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
   →பிறப்பிலியாய் இறப்பதற்கை எண்ணா(து) எண்ணும்
   பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்
   →புனலுருவாய் அனலுருவில் திகழும் சோதி
   தன்னுருவாய் என்னுருவில் சின்ற எந்தை
   →தளிர் புரையும் திருவடி என் தலை மேலவ்வே

   ***அறு சீரடியினாலாகிய தாண்டகத்தினைக் குறுந்தாண்டகம் என்றும் எண் சீரடியால் அமைந்ததினை நெடுந்தாண்டகம் என்றும் பகரப்படுகிறது.

   ***பாடலின் ஒவ்வொரு அடியும் இடையிலே தாண்டுவதை இந்தப் பாடல்களில் காணலாம். பாடலின் அகத்தே தாண்டுவது தாண்டகம்.

   14. முதல் திருவந்தாதி(100 பாசுரங்கள்)-பொய்கை ஆழ்வார்

   வையம் தகளியா வார்கடலே நெய்யாக
   வெய்ய கதிரோன் விளக்காகச்-செய்ய
   சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை
   இடர் ஆழி நீங்குகவே என்று

   ***கடலினால் சூழ்ந்த இவ்வுலகை அகழியாக கொண்டு, கடலை நெய்யாகக் கொண்டு,கதிரவனை திரியாகக் கொண்டு விளக்கை ஏற்றி திருமாலின் திருவடிக்கு பாசுரங்களை மாலையாகச் சூட்டினேன்.

   ***பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் சம காலத்தவர்கள்.இவர்கள் மூவரும் முதலாழ்வார்கள் ஆவர்.

   ***முன்னொரு காலத்தில் ஒருநாள், திவ்யபிரபந்த விளைநிலம் என்று சொல்லப்படும் திருக்கோவலூரில், பலத்த மழை பெய்ய, பொய்கையாழ்வார் ஒரு குடிசையில் மழைக்காக ஒதுங்கினார்.

   அவ்விடத்தில், ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம். சிறிது நேரம் கழித்தது, பூதத்தாழ்வார் நுழைந்தார். பின்னர், பேயாழ்வாரும் அங்கு வந்தார். இன்னும் சிறிது நேரம் கழித்து, அவர்கள் மூவரையும், நான்காவதாக ஒருவர் நெருக்குவதுப் போல் இருந்தது.

   ***நெருக்கத்தின் காரணத்தை அறிய வேறு விளக்கின்மையால், அவர்கள் பாசுரங்கள் மூலம் விளக்கேற்றினர்.பொய்கையார்,

   15. இரண்டாம் திருவந்தாதி(100 பாசுரங்கள்) –பூதத் ஆழ்வார்

   அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
   இன்பு
   உருகு சிந்தை இடுதிரியாநன்புருகி
   ஞானச்சுடர்
   விளக்கேற்றினேன் நாரணர்க்கு
   ஞானத்
   தமிழ் புரிந்த நான்

   ***அன்பை விளக்காக்கி, ஆர்வத்தை நெய்யாக்கி, சிந்தனையை விளக்குத் திரியாக்கி ஒளிவிடுகின்ற ஞானச்சுடரை, ஞானத்தமிழ் கொண்டு ஏற்றுகின்றேன் எனத் தம் சொல் மாலையைத் தொடங்கியவர் பூதத்தாழ்வார்.

   ***ஐம்புலன்கள் ஆகி நின்றவனும், ஐம்பெரும் பூதங்களாகி உலகத்து உயிர்களை வாழ வைப்பவனும் உலகளந்த பிரான் எனத் தம்முள் பெருமாளைக் காணும் ஆழ்வார், தம் மனம் திருமாலைத் தேடி ஓடுகின்றது என்று தம் நிலையை வெளிப்படுத்துகின்றார்.

   16. மூன்றாம் திருவந்தாதி(100 பாசுரங்கள்)-பேயாழ்வார்

   திருக்கண்டேன் பொன் மேனிகண்டேன், திகழும்
   அருக்கண்
   அணி நிறமும் கண்டேன்செருக்கிளரும்
   பொன்
   ஆழி கண்டேன், புரிசங்கம் கைகண்டேன்
   என் ஆழி
   வண்ணன்பால் இன்று

   ***இவர்கள் ஏற்றிய விளக்கில், மூன்றாவது ஆழ்வார் (பேயாழ்வார்), பரம்பொருளாகிய திருமாலின் பொன் மேனியை,  ஆழி என்னும் சக்ரம், மற்றும் புரிசங்கத்துடன் கண்டார் .நெருக்கத்தின் காரணம், திருமாலே என்று உணர்தனர்.

   17. நான்முகன் திருவந்தாதி (96 பாசுரங்கள்)-திருமழிசை ஆழ்வார்

   நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனும்
   தான் முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான்-யான் முகமாய்
   அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,
   சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து

   ***நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான்முகமாய் சங்கரனை படைத்தான் யான் முகமாய் அந்தாதி மேல்இட்டு அறிவித்தேன் அழ்பொருளை சிந்தாமல் கொண்மினீர்

   18. திருவிருத்தம் (100 பாசுரங்கள்)-நம்மாழ்வார்

   பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
   இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
   எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
   மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே

   ***மனிதனிடம் பொய் நிறைந்த ஞானம் உள்ளது. பொல்லாத ஒழுக்கம் உள்ளது. நல்லொழுக்கம் அவனிடம் இல்லை. அழுக்கேறிய உடல்தான் உள்ளது. சுத்தமான உடல் இல்லை. – இப்படிப்பட்ட மனிதப் பிறவியை வைத்துக்கொண்டு கடவுளைக் காண இயலவில்லை. எனவே அவன் “கடவுள் இல்லை’ என்று சொல்வது எவ்வளவு அபத்தம்.

   ***வானவர்களின் தலைவனே! இறைவனே! உலகினைக் காத்து அருளும் நீ, பல வகைப் பிறப்புகளை எடுக்கிறாய். நாங்களோ பொய்யே நிலைபெற்ற அறிவும் , தீய நடத்தையும், அழுக்குப் பதிந்த உடம்பும் கொண்ட மனிதப் பிறவியில் உழல்கிறோம். இப்படிப்பட்ட பிறவி அமையாதபடி நீதான் அருள வேண்டும்”

   19. திருவாசிரியம் (7 பாசுரங்கள்)-நம்மாழ்வார்

   செக்கர் மாமுகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்
   பரிதி சூடி, அஞ்சுடர் மதியம் பூண்டு
   பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்
   திகழ் பசுஞ் சோதி மரகதக் குன்றம்
   கடலோன் கைமிசைக் கண் வளர்வது போல்
   பீதக ஆடை முடிபூண் முதலா
   மேதகு பல் கலன் அணிந்து, சோதி
   வாயவும் கண்ணவும் சிவப்ப, மீதிட்டுப்
   பச்சை மேனி மிகப்ப கைப்ப
   நச்சு வினைக் கவர்தலை அரவினமளி யேறி
   எறி கடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து
   சிவனிய னிந்திரன் இவர் முதலனைத்தோர்
   தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த
   தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக
   மூவுல களந்த சேவடி யோயே.

   ***பவழங்களாலே சிவந்த இடங்களையுடையதும் பசுமையான நிறத்தையுடையதுமான ஒரு பச்சை மாமலையானது சிவந்த மேகத்தை அரையில் உடுத்தி, சூரியனையும் சந்திரனையும் , நக்ஷத்திரங்களையும் அணிந்து கடலரசனுடைய கைமேலே பீதாம்பரம், திருவபிஷேகம் கண்டிகை முதலான பல திருவாபரணங்களைச் சாத்திக்கொண்டு படுத்துக்கொண்டிருப்பதுபோல அழகிய வாயும் கண்களும் சிவந்திருக்கப்பெற்று பசுமையான திவ்யமங்கள விக்ரஹத்தின் நிறமானது மற்ற ஒளிகளெல்லாவற்றிற் காட்டிலும் மேலோங்கி விளங்கப்பெற்று அலையெறிகின்ற கடலினிடையே விஷத் தொழிலையும் கப்புவிட்டுக் கிளர்கின்ற(பல) தலைகளையுமுடைய திருவனந்தாழ்வானாகிற சயனத்தின் மீது ஏறி யோகநித்திரையில் அமர்ந்து சிவன் பிரமன் இந்திரன் முதலிய எல்லாத் தேவகள் சேவிக்கும்படியாக பள்ளிகொண்டிருக்கிற தாமரைப் பூவைத் திருநாபியிலே உடைய சர்வேஸ்வரனே மூன்று லோகங்களையும் அளந்த அழகியதிருவடிகளை யுடையவனே!

   20. பெரிய திருவந்தாதி (87 பாசுரங்கள்)-நம்மாழ்வார்

   முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே,
   இயற்றுவாய் எம்மொடுநீ கூடி-நயப்புடைய
   நாவீன் தொடைக் கிளவியுள் பொதிவோம், நற்பூவைப்
   பூவீன்ற வண்ணன் புகழ்

   ***எம்பெருமானைப் பற்றிப் பேசுகையிலே முற்பட்டிருக்கிற மனமே நீ (தனிப்பட்டுப் போகாமல்) என்னோடு சேர்ந்து காரியத்தை நடத்த வேணும்; (நாம் இருவருஞ் சேர்ந்து நடத்த வேண்டிய காரியம் என்னவென்றால்) எம்பெருமானுடைய திருக்கல்யாணகுணங்களை அன்பு பொறுந்திய நாவினாலே கவனஞ் செய்யப்படுகிற சேர்க்கைப் பொருத்தமுடைய சொற்களிலே அடக்குவோமாக

   21. திருவெழுகூற்றிருக்கை(1-பாசுரம்;46 lines)-திருமங்கை ஆழ்வார்

   ஒரு பேருந்தி யிருமலர்த் தவிசில்,
   ஒரு முறை அயனை யீன்றனை….⇒121(A)
   ஒரு முறை இரு சுடர் மீதினி லியங்கா, மும்மதிள்
   இலங்கை யிருகால் வளைய, ஒரு சிலை…⇒12321(B)
   ஒன்றிய ஈரெயிற் றழல்வாய் வாளியில்
   அட்டனை, மூவடி நானிலம் வேண்டி,
   முப்புரிலொடு மானுரி யிலங்கும்.
   மார்வினில், இரு பிறப் பொருமாணாகி,
   ஒருமுறை யீரடி,மூவுல களந்தானை…⇒1234321(C)

   ***ஏழு படிக்கட்டுகளில் ஒவ்வொன்றாக ஏறி நின்று அப்படிக்கட்டில் உள்ள எண்களால் தொகையிட்டுப் பாடி ஏறுவதும், இறங்குவதுமாகப் பாடுவது ( A to N) எழுகூற்றிருக்கை.
   முதலில்  121
   அடுத்தது 12321
   அடுத்தது 1234321
   அடுத்தது 123454321
   அடுத்தது 12345654321
   அடுத்தது 1234567654321 இருமுறை (என கீழ்கண்டவாறு மொத்தம்-14 : A to N )

   121
   12321
   1234321
   123454321
   12345654321
   1234567654321
   1234567654321

   1234567654321
   1234567654321
   12345654321
   123454321
   1234321
   12321
   121

   இந்த ப்ரபந்தம் ஒரு  தேர் போல் அமைந்திருப்பது.   இம்மாதிரி அமைப்பில் புனையப்பட்ட பெருமானைப்பற்றிய திவ்யப்ரபந்தமே திருஎழுகூற்றிருக்கை.

   A) பிரம்ம சிருஷ்டி செய்தவன் (121)
   B) லங்காபுரியை அழித்தவன் (12321)
   C) வாமன அவதாரம் எடுத்தவன்(1234321)
   D) கஜேந்த்ரனுக்கு அருள் புரிந்தவன்
   E) மஹான்களாலே வணங்கப்படுபவன்
   F) ருத்ரனால் அறியப்படாதவன்
   G) வராஹாவதாரம் செய்தவன்
   H) பாற்கடலில் யோக நித்திரை செய்பவன்
   I) வர்ணாச்ரம தர்மத்துக்கு நிர்வாஹகன்
   J) நப்பின்னைப் பிராட்டியை மணந்தவன்
   K) பாஹ்ய மதஸ்தர்களால் அறியப்படாதவன்
   L) பஞ்ச பூதங்களுக்கு பரிவர்த்தகன்
   M) திருமார்பில் பிராட்டியை கொண்டவன்எங்கும் வியாபித்த
   N) ஸர்வ நிர்வாஹகனன்

   22. சிறிய திருமடல்(1-பாசுரம் ;77½ lines)-திருமங்கை ஆழ்வார்

   காரார்வரை கொங்கை கண்ணர்
   கடலுடுக்கை சீரர்சுடர் சுட்டி
   செண்களுழிப்பெராற்று………….
   ………………………………………….

   ***திருமங்கையாழ்வார், தம்மை நாயகியாகவும், திருமாலை நாயகனாகவும் கொண்டு பாடுமிடத்தில்,  காதல் கைகூடப் பெறாமல் ஏங்குவதால் மடல் ஏறும் முயற்சியை நாயகி மேற்கொள்வதாக அமைத்து,

   ***சிறிய திருமடல், பெரிய திருமடல் என்று இரண்டு மடல் பாடல்களைப் பாடியுள்ளார்.

   ***பழைய தமிழ் இலக்கியங்களில், தலைவனே காதல் கைகூடப் பெறாமல் மடலேறும் மரபு உண்டு.ஊர் முழுவதற்கும் பறையறைந்து தலைவியின் படத்தை வரைந்து பனை ஓலைக் குருத்தில் குதிரை செய்து அதன்மீது ஏறி ஊர்வலம் வருவான் தலைவன்.

   ***ஆனால் நாயகியாகத் தன்னைப் பாவித்துப் பாடும் ஆழ்வார்,  மரபை மாற்றித் தலைவியே மடலேறுவதாகப் புதுமை செய்துள்ளார்.

   ****தமிழ் மரபில் தலைவனுக்கு மட்டுமே ‘மடல் ஏறுதல்’ கூறப்பட்டுள்ளது. ஆனால் இது தெய்வீகக் காதல் என்பதால் பெண்ணாகப் பாவித்துக் கொள்ளும் அடியவர் மடலேறுவது ஏற்புடையது எனலாம்.

   23. பெரிய திருமடல்(1-பாசுரம்;148½ lines)-திருமங்கை ஆழ்வார்

   மன்னிய பல் பொறிசேர் ஆயிர வாய்வாளரவின்,
   சென்னி மணிக்குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்……….
   …………………………………………………………………….
   ………………………………………………………………………

   சிறிய-பெரிய திருமடலேரிய திருமங்கையாழ்வார்

      தமிழில் அகத்துறை நூல்களில் ‘மடல்’ ஒரு வகை. இதை பக்தி இலக்கியத்தில் முதலில் பயன்படுத்தியவர் திருமங்கையாழ்வார்.

        விரும்பிய பெண்ணை அடைய முடியாத நிலையில் மடலேறியாவது அவளைப் பெறுவேன் என்று பனை மடல்களால் ஆன குதிரை வடிவம் அமைத்து ஊர் நடுவே காதலன் பிடிவாதம் செய்து தன் காதலியை அடையும் முரட்டுக் காதல் வகை.

        அவன் மேல் இரக்கம் கொண்டு பெண்ணைப் பெற்றவர்கள் திருமணத்துக்கு சம்மதிப்பார்களாம்.

     இந்த வழக்கத்தை மாற்றிய பெருமை திருமங்கையாழ்வாருக்கு உரியது.

        தான் ஒரு ஆண் என்றதால்,  தன் தன்மைக்கு ஏற்ப மடல் ஏறத் துணிந்தார் ஆழ்வார்.

        ஆனால்  ‘உலகில் ஆண் என்ற புருஷாகாரம் பகவான் ஸ்ரீவிஷ்ணுவுக்கே உரியது’ என்று புருஷ சூக்தம் புகல்வதால், பகவானைத் தவிர அனைவரும் பெண்களே.

        இதையே தன் சிறிய திருமடலுக்கும் பெரிய திருமடலுக்கும் மூலமாகக் கொள்கிறார் ஆழ்வார்.

        பெண்கள் மடலேறுதல் தகாது என்று இலக்கணம் சொன்னபோது, தன்னை ஒரு பெண்ணாக எண்ணி  திருமால் மீது காதல் கொண்ட பெண்  அவனை அடைய முடியாத நிலையில் மடல் ஏறத் துணிந்ததாகப் பாடி,  புரட்சி செய்கிறார்.

      கண்ணன் கிடைத்திலன் என்பதன் காரணத்தால் திருமங்கையாழ்வார் பெண்ணாகி மடலேறினார்.

   24. திருவாய் மொழி(1102 பாசுரங்கள்)-நம்மாழ்வார்

   உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்
   மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
   அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
   துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.

   ***எனது மனமே உயர்த்தி இல்லதாபடி உயர்ந்த கல்யாண குணங்களை உடையனானவன் யாவனொருவனோ? அஜ்ஞானம் நசிக்கும்படி ஞானத்தையும் பக்தியையும் கிருபை பண்ணினவன் யாவனொருவனோ? மறப்பு இல்லாத நித்ய சூரிகளுக்கு சுவாமி  யாவனொருவனோ? அந்த எம்பெருமானது துயர் அறப் பெற்ற சோதிமயமான திருவடிகளை வணங்கி நீ கடைத்தேறக்கடவை

   25. ராமானுஜநூற்றந்தாதி-பிரபந்த காயத்ரி(108 பாசுரங்கள்)-திருவரங்கத்தமுதனார்

   பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
   பாமன்னு மாறனடி பணிந் துய்ந்தவன் பல்கலையோர்
   தாம்மன்ன வந்த இராமாநுசன் சரணார விந்தம்
   நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே.

   ***மனமே தாமரைப்பூவில் பொருத்திய பிராட்டி அப்பூவை விட்டு போக்ய  திருமார்பையுடைய பெருமானுடைய திருக்கல்யான குணங்கள் நிறைந்த தமிழ்ப் பாசுரங்களிலே ஊற்ற முடையவரான நம்மாழ்வாருடைய திருவடிகளை ஆச்ரயித்து ஓதின மஹான்கள் நிலைபெறும்படி வந்தவதரித்த வருமான எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளை நாம் வாழ்வதற்கு அப்பெருமானரது திருநாமங்களையே சங்கீர்த்தனம் பண்ணுவோம்.

   1.கோயில் நம்பி

       ஸ்ரீரங்கம் கோயிலை நிர்வகித்து மிகுந்த செல்வாக்குடன் இருந்த்தால், இவரைக் ‘கோயில் நம்பி’ என்றும் ‘பிள்ளை’ என்றும் கௌரவமாக எல்லோரும் அழைத்தனர். பிற்பாடு இவருக்கு ராமானுஜர் சூட்டிய பெயர் ‘அமுதனார்’. இவரது ஆசிரியர் கூரத்தாழ்வார்.

       ஸ்ரீரங்கம் கோயில், ராமானுஜர் காலத்துக்கு முன்பு பலருடைய கட்டுப்பாட்டில் இருந்து வந்திருக்கிறது.ஆளவந்தாருக்கு பிறகு ராமானுஜர் காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம் வந்த பிறகு கோயில் நியமனங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று விரும்பி பல ஆலோசனைகளை வழங்கினார்.

       கோயிலின் நிர்வாகம் மற்றும், புராணம் வாசித்தல் போன்ற கைங்கர்யங்களை கோயில் நம்பி செய்து வந்தார். ராமானுஜர் கொண்டு வந்த திட்டங்கள், நிர்வாகத்தில் அவர் குறுக்கிடுவதாக ராமானுஜருக்கு பல இடையூறு செய்ததாகத் தெரிகிறது.

   2.பெருமாளின் எண்ணம்

       நம்பியை ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து வெளியேற்றினாலதான், தான் நினைத்தபடி கோயிலை நிர்வகிக்க முடியும் என்று எண்ணினார் ராமானுஜர்.

       ஒரு நாள் பெருமாள் புறப்பாட்டிற்காக காத்திருக்கும் போது, ராமானுஜர் சற்றே கண்ணயர்ந்து விட்டார். அப்போது, பெருமாள் ஸ்ரீராமானுஜர் கனவில் ‘கோயில் நம்பி நீண்ட காலமாக என்னையே நம்பி இருக்கிறார். அதனால் அவரை நீக்கவேண்டாம்” என்று சொல்ல, ராமானுஜர் கூரத்தாழ்வானிடம் “நமக்கு பல இன்னல்களை தரும் கோயில் நம்பியை நாம் வெளியேற்றுவது பெருமாளுக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது, அதனால் நாம் திரும்பவும் காஞ்சிபுரத்துக்கே சென்றுவிடலாம்” என்றார். “பெருமாள் இப்படி சொல்லுகிறார் என்றால் நிச்சயம் பெரிய கோயில் நம்பியை மனம் மாறச் செய்துவிடுவார்” என்று கூரத்தாழ்வான் சொல்ல “அப்படியானால் நம்பியை திருத்தும் பணியை நீங்களே மேற்கொள்ளும்” என்று உடையவர் கூரத்தாவாழ்வானைப் பணித்தார்.

   3.கூரத்தாழ்வான், கோயில் நம்பியிடம் நட்பு

       கூரத்தாழ்வான், பெரிய கோயில் நம்பியிடம் நட்புக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக உடையவரின் அருமை பெருமைகளை சொல்லி அவர் மனத்தை மாற்றினார். அதன் பிறகு பெரிய கோயில் நம்பி உடையவர் மீது மிகுந்த பக்தி கொண்டவாராக மாறினார்.

       ராமானுஜரின் பெருமைகளை அறிந்துகொண்ட நம்பி தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும்படி ராமானுஜரை வேண்டினார். “உங்கள் மனம் மாறச் செய்த கூரத்தாழ்வானே உங்களுக்கு உகந்த ஆச்சாரியன்” என்றார் ராமானுஜர்.

              நம்பியின் இலக்கிய அறிவையும், வாக்குவன்மையையும் போற்றி, அவருக்கு ‘அமுதன்’ என்ற திருநாமத்தை சூட்டினார் ராமானுஜர். “திருவரங்கத்தமுதனார்” என்றும் ‘பிள்ளை அமுதனார்’ என்றும் இவரை அழைப்பர்.

       இந்த சம்பவத்துக்கு பிறகு அமுதனாருடைய தாயார் பரமபதித்திட, பத்து நாட்கள் காரியம் நடந்து முடிந்து, ஏகாஹம் எனப்படும் 11ஆம் நாள் ஒரு நல்ல ஸ்ரீவைஷ்ணவரை அமர்த்த விரும்பினார் அமுதனார்.

   4.கூரத்தாழ்வான் ஏகாஹத்துக் வருதல்

       ராமானுஜரிடம் தனக்கு ஒருவரை நியமிக்க வேண்டினார். ராமானுஜர் கூரத்தாழ்வானை அழைத்து, அமுதனார் வீட்டுக்கு ஏகாஹத்துக்கு போகப் பணித்தார். தனது ஆசாரியரான கூரத்தாழ்வானே ஏகாஹத்துக் வந்ததால் அமுதனாருக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டது.

   5.அமுதனாரிடமிருந்து நிர்வாகம் மாறுதல்

   அன்று கூரத்தாழ்வான் உணவு உட்கொண்ட பின் ‘திருப்தி’ என்று கூறாமல் இருக்க, அமுதனார் வேறு என்ன வேண்டும் என்று கேட்க, அமுதனாருடைய கோயில் புராணம் வாசிக்கும் கைங்கர்யத்தையும், கோயில் நிர்வாகத்தையும் காணிக்கையாக கேட்டுப் பெற்றார். அவற்றை உடைவரிடம் சமர்ப்பித்தார். ராமானுஜரும் மிக்க மகிழ்ச்சி அடைந்து கோயில் நடைமுறைகளில் பல மாற்றங்களை கொண்டு வந்தார்.

       அமுதனாரிடமிருந்து நிர்வாகம் கைமாறிய பின், அவர் கோயில் கைங்கர்யங்களில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டது. இவர் செய்து வந்த புராண வாசித்தல் மற்றும் வேறு பணிகளை கூரத்தாழ்வான் செய்து வந்தார். அதனால் அமுதனார் கோயில் பணிகளில் அதிக ஈடுபாடுகொள்ளாமல் இருந்ததை பார்த்த ராமானுஜர் வருத்தப்பட்டு, இவருக்கு ஏதாவது பொறுப்பு தர வேண்டும் என்று எண்ணினார்.

   6.அமுதனார் சன்னதியில் இயற்பா சேவித்தல்

              ‘பிள்ளை திருவரங்கப்பெருமாள் அரையரிடம்’ ராமானுஜர் இயற்பா சேவிப்பதை மட்டும் பிக்ஷையாகப் பெற்று அமுதனாரை பெரிய பெருமாள் சன்னதியில் இயற்பாவைச் சேவிக்க நியமித்தார். அப்படி சேவிக்கும் நாட்களில் அமுதனாருக்கும் அதே போன்ற பிரம்மரத மரியாதையை ஏற்படுத்தி வைக்கப்பட்டது. அமுதனார் தனக்கு புத்தகம் பார்க்காமல் சேவிக்க வராது என்று ராமானுஜரிடம் சொல்ல, அமுதனாருக்கு புத்தகத்தைப் பார்த்துச் சேவிப்பதற்கு விசேஷமாக அனுமதி வழங்கினார். இன்றும் புத்தகத்தை பார்த்து இயற்பா சேவிக்கும் முறை இருப்பதற்கு இதுதான் காரணம்.

   7.திருவரங்கத்தமுதனார்ராமானுஜ நூற்றந்தாதி

       அமுதனார் ராமானுஜர் மீது கொண்ட பற்றின் காரணமாக ராமானுஜரை போற்றும் விதமாக சில பிரபந்தங்களை செய்து அவற்றை எம்பெருமானார் முன் வைக்க, அதை படித்துப் பார்த்த ராமானுஜர் தன்னைப் பற்றி அதிகமாக புகழ்ந்து இருப்பது தனக்கு உவப்பானதாக இல்லை என்றார்

   . கூரத்தாழ்வான் அறிவுரைப்படி ஆழ்வார்களிடத்திலும் திவ்யதேசங்களிடத்திலும் ராமானுஜர் கொண்ட பற்றைத் தெளிவுபடுத்தி, ராமானுஜ நூற்றந்தாதியை அமுதனார்பாடி, அதை ராமானுஜர் முன் வைத்தார். இதை பிரபன்ன காயத்திரி என்றும் சொல்லுவர்.

       இந்த சம்பவத்திற்குப் பிறகு, சித்திரை மாதம் 11ம் திருநாளில் ராமானுஜர் கனவில் பெருமாள் தோன்றி ”இன்று என்னுடன் கூட வர வேண்டாம்” என்று சொல்லிவிட்டு, அன்று பெருமாள் வீதி புறப்பாட்டின் போது வாத்தியங்களை நிறுத்தச் சொல்லிவிட்டு, வெறும் தீப்பந்தங்கள் மட்டும் இருக்க, இயற்பாவுடன் ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்க, அதை பெருமாள் கேட்டுக்கொண்டு சென்றார்.

              இன்றும் இந்த வழக்கம் அங்கு இருக்கிறது. அதே போல் ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்கும் போது கோஷ்டிக்கு வெகு அருகில் பெருமாள் எழுந்தருள்வார். அதற்குக் காரணம், இயல் கோஷ்டியில் தன்னையும் ஒரு அங்கத்தினராக ஆக்கிக்கொள்கிறார் என்பது. வாத்தியங்கள் இசைக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்க அதை நம்பெருமாள் செவிசாய்க்கும் வைபவத்திற்காக.

       இன்றும் பெரிய சன்னதியில்(ரங்கநாதர் சன்னதியில்) இயற்பா சேவித்த பின், அதனுடன் நூற்றந்தாதியும் சேவிக்கப்படுகிறது. அதே வழக்கம் நாச்சியார் கோயிலிலும், ஆண்டாள், ஆழ்வார் சன்னதிகளில் பின்பற்றப்படுகிறது

   ***ஆழ்வார்கள் அருளிய திவ்வியப் பிரபந்தங்களை நாதமுனிகள் தொகுத்தார். பின்னர் இதில் இராமானுச நூற்றந்தாதியையும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தமாய் அமைந்தது.

   ———————->>>HRE-7:நாலாயிர திவ்ய பிரபந்தங்கள்

   &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

   மெய்யன்பரே,

   • இந்த லிங்கிள் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.
   • மேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் சிறப்பாக இருக்கும்

   இந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு  மிகுந்த நன்றி

   Back to CONTENTS:

   https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

Advertisements