Tags

, , , , , , , , , , , , , , , , ,

       தட்சணின் மகளான விநதைக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவர் கருடன். அதனால் அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு. ஆடிமாதம் சுக்ல பஞ்சமி சுவாதி நட்சத்திரத்தில் கருட அவதாரம்-கருட பஞ்சமி.

HRE-Garudan-3

    நரசிம்மர் அவதாரம், கருடபகவானின் அம்சமாக பெரியாழ்வார் அவதாரமும் சுவாதி நட்சத்திரத்தில் தான்.

     அனந்தன், கருடன், விஸ்வக்சேனர் என்ற, நித்யசூரிகளில் வரிசையில் கருடன் இரண்டாமிடத்தை வகிக்கிறார்.  ஆதிசேஷனைப்போலவே கருடனும் திருமாலுக்குப் பலவித சேவைகளைச் செய்கிறார்.

சுபர்ணன்,
பன்னகாசனன்,
புஷ்பப்ரியன்,
மங்களாயன்,
சுவர்ணன்,
புன்னரசு

என்ற திருநாமங்களும் இவருக்கு உண்டு.
இவரின் தாயான வினதையை முன்னிட்டு வைநதேயன் என்றும், பெரிய திருவடி என்றும் அழைக்கப்படுகிறார் கருடாழ்வார்.
கருட பஞ்சமியும், ஆடி சுவாதியும் கருடாழ்வாரின் அவதார நன்னாட்கள்.

      அனந்தனான ஆதிசேஷன் இலக்குவனாக, பலராமனாக, ராமானுஜராக, பின்பு மணவாள மாமுனிகளாகவும் அவதரித்தார்.

     செம்பருந்து செம்மண் நிற இறக்கைகளைக் கொண்டு உடலின் நடுப்பகுதியை வெண்ணிறமாக உடைய பருந்து,கருடன். திருமாலின் வாகனம்.

HRE-Garudan-1இதை ‘கிருஷ்ண பருந்துசெம்பருந்து என்று சொல்வார்கள்.

       கருட தரிசனம் சுப சகுனமாகும். கருடன் மங்கள வடிவினன். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது.

விநதையும்-கத்ருவும்

    காஷ்யபருக்கு இரண்டு மனைவிகள் முதலாமவள் விநதை, இரண்டாமவள் கத்ரு. விநதை மிக நல்லவள், கத்ரு கொடியவள். இருவரும் கரு தரித்து கத்ரு ஆயிரம் முட்டைகளும், விநதை இரண்டு முட்டைகளும் இட்டனர்.

          ஐநூறு ஆண்டுகளுக்குப் பின் கத்ருவின் ஆயிரம் முட்டைகள் பொறித்து நாகங்கள் வெளி வந்தன.

        முட்டைகள் என்னவாயிற்று என்று எண்ணி அவசரத்தில் ஒன்றை உடைத்து பார்த்தாள் விநதை. உள்ளே குழந்தை பாதிதான் உருவாகி இருந்தது. அவனே அருணன். எஞ்சி உள்ள தன் தமயனின் முட்டையை பொறுமையுடன் பாதுகாக்க அறிவுரை கூறிவிட்டு அவன் சூரியனின் தேரோட்டி ஆனான்.

         கத்ரு, விநதையை ஒரு போட்டிக்கு அழைத்தாள். இந்திரனின் வெள்ளைக் குதிரையான உச்சைர்வத்தின் வாலின் நிறம் என்ன என்பதே போட்டி. விநதை தூய வெள்ளை நிறக் குதிரையான உச்சைர்வத்தின் வாலின் நிறம் வெள்ளை என்று கூற, கத்ரு கறுப்பு என்று கூறினாள். போட்டி நடைபெற்ற போது கத்ரு தனது மகன்களான நாகங்களை உச்சைர்வத்தின் வாலை சுற்றிக் கொள்ளக் கூறுகிறாள். எனவே அவர்கள் பார்த்த போது உச்சைர்வத்தின் வால் கருப்பாக தோன்றியது. சூழ்ச்சியால் தோற்ற விநதை கத்ருவின் அடிமையாக ஆகின்றாள்.

விநதையும்-கருடனும்

          குறிப்பிட்ட காலத்தில் கருடன் முட்டையில் இருந்து வெளி வருகிறான். அவன் உருவம் வளர்ந்து மிக பிரம்மாண்டமாக அஞ்சும் அளவிற்கு பெரியதானது. தேவர்கள் வேண்டுகோளின் படி அவன் தன் உருவத்தை சிறியதாக படுத்துகிறான்.

        தன் அன்னை விநதை, சிற்றன்னைக்கு டிமையாக சேவை செய்து வருவதைக் கண்டு கருடன் தன் அன்னையிடம் அவரது நிலைக்கான காரணத்தை கூற வேண்டுகிறான். விநதையும் நடந்ததைக் கூறுகின்றாள். கருடன் தன் சிறிய தாயாரிடம் தன் தாய்க்கு விடுதலை அளிக்குமாறு வேண்டுகின்றான். கத்ருவும் தேவ லோகத்திலிருந்து அமிர்தம் கொண்டு வா? உன் தாயை விடுதலை செய்கின்றேன் என்று பதிலிறுக்கின்றாள்.

     இந்திர லோகத்தை அடைந்த கருடன், அமிர்த குடத்தை நெருங்க கருடனுக்கும் தேவர்களுக்கும் இடையே பெரும் போர் நடை பெறுகின்றது. தேவர்களை வெற்றி பெற்று அடுத்து உள்ளே செல்கிறான் கருடன்.அங்கே இரு ராட்சசப் பாம்புகள் அவற்றை எளிதில் கொன்று, அமிர்தம் உள்ள குடத்தை எடுக்கிறான்.

     கருடனுடன் போரிட இந்திரனே வருகிறான் . ஆயினும் அவனாலும் கருடனை வெல்ல முடியாமல் இறுதியாக வஜ்ராயுதத்தை எய்கின்றான், கருடன் அப்போது வஜ்ராயுதத்தை வணங்கி தான் அமிர்தம் பெற வந்ததற்கான உண்மையான நோக்கத்தை கூறுகின்றான்.

மகா விஷ்ணுவும்-கருடனும்

திரும்பும் பொது மகா விஷ்ணு எதிரில் வர இருவரும் ஒருவரை ஒரவர் புரிந்து ஒரு சமரசத்திற்கு வருகின்றனர்.

கருடன் வீரத்தில் மகிழ்ச்சிகொண்ட திருமாலே, “உனக்கு என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டாராம். அவர் பரமனைப் பார்த்து, “நானே உமக்கு வரம் தருகிறேன்; என்ன வரம் வேண்டும்?’ என்று திருப்பிக்கேட்டாராம்.

திருமால், “நான் எப்போதும் உன் தோளுக்குமேல் இருக்கவேண்டும்’ என்று கேட்க, “அவ்வாறே ஆகட்டும்’ என்றார் கருடன். திருமால் கருடனிடம் “நீ வரம் ஏதும் கேட்கவில்லையே?’ என்று வினவ, “நான் உமது தலைக்குமேல் இருக்கவேண்டும்’ என்று கேட்க, திருமாலும் அருளினார்.

HRE-Garudan-2HRE-Garudan-6

 

 

 

            கருடாழ்வார் என்ற கருடன், பெருமாளின் வாகனமாக, கொடியாக ஏற்று வணங்கப்படுகிறார். பெருமாள் கருடனை ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்’ என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.  பெருமாளின் கொடியாகவும் விளங்குகிற காரணத்தால் பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இவருக்கு பெரிய திருவடி என்ற பெயரும் உண்டு.

     கருடன், சிற்றன்னையிடம் அமிர்தத்தை அளித்து தன் தாயின் அடிமைத்தனத்தை நீக்குகின்றான். நாகங்களை, அமிர்தத்தை பருகும் முன் குளித்து வருமாறு கூறுகிறான் கருடன். அவர்கள் குளிக்க செல்லும் போது இந்திரன் அமிர்தத்தை எடுத்து சென்று விடுகிறான்.

        இந்திரன் கருடனுக்கு ஒரு வரம் தருகிறான். கருடன் அன்று முதல் சிற்றன்னைக்கு துணை சென்ற நாகங்கள் எல்லாம் தனக்கு இயற்கையான இரை ஆக வேண்டும் என்று கேட்கிறான். அவ்வாறே இன்று வரை உள்ளது.

       கருடன், நாகங்களைக் கொன்றுவந்தார். இதற்கு முடிவுகட்ட எண்ணிய பிரம்மா, தேவர்களின் கோரிக்கையை ஏற்று, சூரியன் தன் தேரின் லகானாக ஒரு பாம்பை ஏற்க, சிவபிரான் ஒரு பாம்பைத் தன் ஆபரணமாகக் கொள்ள, திருமாலானவர் ஆதிசேஷனை தன் அரவணையாக ஏற்றுக்கொள்ள, சில நாகங்களை கருடனே தன் ஆபரணங்களாக ஏற்றுக்கொண்டார்.

கல்கருடன்

    கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கல்கருடன் மிகவும் பிரசித்தி பெற்றது. சுவாமி புறப்பாட்டின்போது கல் கருடனை 4 பேர் மட்டுமே தூக்குவார்கள். அங்கிருந்து நகர கருடனின் எடை அதிகரித்து 8 பேர், 16 பேர் என்று பலர் சேர்ந்து தூக்குகின்றனர். கருடன் நவக்கிரக தோஷத்தை நீக்கக் கூடியவர். ஜாதகத்தில் புத்திர தோஷம், ரோகம், சத்ரு பீடை, பில்லி, சூனியம் போன்றவற்றை நீக்கி சகல சவுபாக்கியங்களும் தரக்கூடியவர் கருடாழ்வார். ராகு, கேது போன்ற சர்ப்ப தோஷங்களை நீக்கி மங்களத்தை அருள்வார்.

கருடனின் சிறப்பு.

 • கருட பகவான் , சுக்ல பட்சம், சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர்.
 • எம் பெருமானுடைய சகல கைங்கரியங்களையும் செய்பவர்.
 • வானத்தில் கருட பகவானைப் பார்ப்பது மிகவும் விசேஷமானதாகும். இவர் வானத்தில் கம்பீரமாக சிறகுகளை அசைக்காமல் ஒரே நிலையில் தரிசிப்பது கோபுர தரிசனதிற்கு ஈடாகும்.
 • எல்லா ஆலயங்களிலும் கும்பாபிஷேகத்தின்போது கருட பகவானின் தரிசனத்தை எதிர்பார்ப்பார்கள்.
 • கருட பகவானுடைய அம்சமாகிய பெரியாழ்வாரும் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார்.
 • நரசிம்மர் அவதரித்ததும் இப்புனித சுவாதி நட்சத்திரத்தில்தான். எம்பெருமானுடைய வெற்றியைக் காட்டும் கொடி கருட பகவானே.
 • ஆபத்துக் காலங்களில் விரைந்து நம் துன்பங்களைப் போக்குவது மட்டுமல்லாமல், விபத்தால் வரும் மரண பயத்தைப் போக்குபவராகவும் விளங்குகிறார்.
 • தன்னைத் துதிப்பவர்களுக்கு ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீரியம், தேஜஸ் போன்றவற்றை வாரி வழங்குபவராய் நாள் பட்ட கர்ம வினைகளுக்கு அருமருந்தாகவும் விளங்குகிறார்.
 • எம்பெருமானின் திருமேனிக்கு ஏற்றவாறு இதமான காற்றைத் தரும் சாமரமாகக் உள்ளார்.
 • கருட பகவான் வைகுண்டத்தில் எட்டு விமானங்களில் ஒன்றான கிரிடாஜலத்தைக் திருப்பதி-திருமாலை எழுந்தருளச் செய்தார்.
 • இதுவே திருப்பதி-திருமலை பெருமாள் எழுந்தருளியுள்ள ஆனந்த நிலைய விமானமாகும்.
 • கருட பகவான் நிழல் பட்ட வயல்களில் அமோக விளைச்சல் உண்டாகும் என்பது ஐதீகம்.
 • பெரும்பாலும் கடவுளின் வாகனங்களுக்கு வாகனம் கிடையாது. ஆனால் கருட பகவானுக்கு வாகனம் வாயு தேவன்.
 • மகாபாரதப் போரின் இறுதியில் பாண்டவர்களுக்கு கருட வியூகத்தில்தான் வெற்றி கிட்டியது.
 • கருடன் தன்னுடைய தாயார் ‘வினயதா’ மீது அளவில்லாப் பாசம் கொண்டதால், பெண்களின் வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றுகிறார்.
 • கார்கோடன் என்னும் நாகத்தின் பெயரைச் சொன்னால் ஏழரை ஆண்டு பீடை போகும் . அந்தக் கார்கோடனே ஸ்ரீ கருட பகவானுக்கு அடக்கம். ஆகையால் இவரைத் துதிப்பவருக்கு ஏழரை சனியின் கொடுமை தணியும் என்பதும் ஐதீகம்.
 • கருட பகவானின் குலதெய்வம் குரு பகவான்(பிரகஸ்பதி). குரு பார்வையும் கருட பகவானின் அருட்பார்வையும் வாய்க்கப்பட்டால் நன்று.
 • பிரம்மோற்சவ காலங்களில் இரட்டைக் குடை பிடித்திருக்க, கருட வாகனத்தில் எழுந்தருளும் பெருமாளை தரிசிப்பதால் முக்தி கிடைக்கும் .
 • ராமாயணத்தில் ராம பிரானின் தூதனாக இலங்கைக்கு சென்று சீதா பிராட்டியை சந்தித்தவர் அனுமன்.
 • கிருஷ்ண அவதாரத்தில் தாயார் ருக்மணி கொடுத்த ஓலையை ஸ்ரீகிருஷ்ணரிடம் கொடுக்க தூது சென்றவர் கருடன்.
 • கிருஷ்ணாவதாரத்தில், சத்யபாமாவுக்காக கருடன் பாரிஜாத மரத்தைக் கொண்டுவந்தார்.
 • அனுமனும் கருடனும் பகவானின் தூதர்கள். இவர்களிடம் மனமுருக வேண்டினால் பகவானிடம் கொண்டு சேர்ப்பார்கள்.
 • கஜேந்திரன் என்ற யானையின் காலை ஒரு முதலை கல்வியிழுக்க, அந்த ஆபத்திலிருந்து காக்க திருமாலை “ஆதிமூலமே’ என்று கூவிச் சரணடைய, திருமாலின் திருவுள்ளத்தை அறிந்த கருடன் வாயுவேகத்தில் அவரை கஜேந்திரன் இருக்குமிடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தார்.
 • இராமாயண காலத்தில் போர்க்களத்தில் இராம-லட்சுமணர்களை இந்திரஜித் நாக பாசத்தால் கட்டிப்போட, அவர்கள் மயங்கி விழுந்தபோது கருட பகவான் வந்து தன் சிறகுகளால் வீசி அவர்களை மூர்ச்சையிலிருந்து தெளியவைத்தார்.
 • கருட பகவானே ஆழ்வார்களில் பெரியாழ்வாராக அவதரித்தார். பாண்டியன் சபையில் பரதத்வ நிர்ணயம் செய்து பொற்கிழியைப் பெற்றபோது, மன்னன் அவரை பெருமைப்படுத்த , பெரியாழ்வாரை யானைமீதேற்றி ராஜவீதிகளில் பவனிவரச் செய்தான். அப்போது தன் பக்தனின் வைபவத்தைக் கண்டுமகிழ திருமால் கருடாரூடனாக வானில் காட்சி கொடுத்தார்.
 • திருமாலின் திவ்யகருடசேவை காட்சியைக் கண்ட பெரியாழ்வார், யாரேனும் கண்திருஷ்டி வைத்துவிடுவார்களோ என்று மனம் பதறி, “பல்லாண்டு பல்லாண்டு‘ என்று பாடுகிறார். அவனுக்கு மட்டுமா பல்லாண்டு? அவனின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கைக்கும், அவன் திருக்கரங்களிலே ஜ்வலிக்கும் சங்கு சக்கரங்களுக்கும் பல்லாண்டு பாடுகிறார்.
 • அதனால்தான் பூமிப்பிராட்டியை அவரின் திருமகளாய் அவதரிக்கச் செய்து, அவளையும் தன் நாயகியாய் ஏற்றுக்கொண்டு அவருக்கு மாமனார் ஸ்தானத்தையும் கொடுத்தார்- பரவையேறு பரமபுருஷனான பரந்தாமன். ஸ்ரீவில்லிபுத்தூரிலே ஆண்டாள். ரங்கமன்னாருடன் ஒரே ஆசனத்தில் கருடனுடன் காட்சி யளிக்கிறான்.
 • கருட பகவானைத் துதித்தால் கொடிய நோய்களிலிருந்து நிவாரணம், தொலைந்த பொருள் கிடைத்தல், சர்ப்ப தோஷ நிவர்த்தி உள்ளிட்ட அனைத்து நலன்களும் கிட்டும்.
 • பிரஹலாதனைக் காக்க பெருமாள் நரசிம்ம மூர்த்தியாக ஹிரண்யனின் அரண்மணை தூணில் அவதாரம் செய்ததால் அவர் கருடன் மேல் எழுந்தருளி வராமல், கருடனை விடுத்து தனியாக வரவேண்டிய தாயிற்று. இதுபற்றி அறிந்த கருடன் மிகவும் துயருற்று பெருமாளிடம் நரசிம்ம அவதார காட்சியை தனக்கும் காட்டி அருள வேண்டினார்.
 • பெருமாள் கருடனை அஹோபிலம் சென்று தவமியற்றும்படி கூறி தான் அங்கேயே நரசிம்ம அவதார காட்சி தருவதாகவும் உறுதியளித்தார். அவ்வாறே பல இன்னல்களுக்கிடையே கருடன் தவமியற்றினார். கருடனுக்கு உறுதியளித்த படி பெருமாள் மலைக்குகையில் உக்ர நரசிம்மராய் காட்சியளித்தார்.
 • மாறாத பக்தி கொண்டு பெருமாள் சேவையே பெரிது என்று அவரிடம் பூரண சரணாகதி அடைந்ததால் கருடன், கருடாழ்வார் என்று போற்றி அழைக்கப்படுகின்றார்.
 • மணவாள மாமுனிகள் வேங்கடவனைத் தரிசிப்பதற்கு முன்பாக முதலில் ராமானுஜரை சேவித்து பிறகு கருட பகவானை வணங்கி விட்டு, பின்னர் ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம்.

கருட சன்னதிகள்.

பெருமாள் கோவில்களில் கருடனுக்கு தனி சன்னதிகள் உள்ளன. ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதசுவாமி கோவிலில் செப்புச் சிலை வடிவில் மிகப்பெரிய உயரமான கருடன் தனி சன்னதி கொண்டுள்ளார்.

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கல் கருடன் புகழ் பெற்றது.

    சென்னை சவுகார்பேட்டை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் பெண் கருடன் அருள்பாலிக்கிறார். திருவள்ளூர் மாவட்டம் கோயில் பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் அமர்ந்த நிலையில் தவம் செய்வது போல் பெருமாள் எதிரே உள்ளார்.

    நாகப்பட்டினம் மாவட்டம்,மயிலாடுதுறை தாலுக்கா தேரழுந்தூர் தேவாதிராஜன் கோவிலில் மூலவர் தேவராஜன் கருட விமானத்தின் கீழிருந்தவாறு அருள்பாலிக்கிறார்.

கருட புராணம்

        பதினெட்டு புராணங்களில் ஸ்ரீ கருட புராணம் மிகவும் பெருமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மனிதனின் பிறப்பு- இறப்பு, வினைகள், பாவ புண்ணிய பலன்கள் பற்றி விவரித்துக் கூறும் ஸ்ரீ கருட புராணம்.பெருமாளால் ஸ்ரீ கருடனுக்குப் போதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது

     கருடன் 16 வகையான விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர். விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், பிறருக்கு ஏறிய விஷங்களை இறக்கவும் முற்காலத்தில் ஞானிகள் பலவகை கருட மந்திரங்களை லட்சக்கணக்கில் ஜெபித்து சித்தி செய்து வைத்திருந்தனர்.

கருடசேவை

பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது.பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது. பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், “பிரம்மோற்சவம்’ என்பர். பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாக பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் கருடவாகன சேவை நடைபெறுகிறது.HRE-Garudan-5

 • சித்திரை-திருவோணம்.
 • வைகாசி-விசாகம்:காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள்- கருட சேவை
 • ரத சப்தமி-திருப்பதியில் கருடசேவை
 • புதுச்சேரி ஸ்ரீ வரதராஜபெருமாள் -கருடசேவை
 • நாச்சியார் கோவில்-கல் கருட சேவை
 • ஸ்ரீ பார்த்தசாரதி-கருட சேவை
 • ஸ்ரீ ஹயக்ரீவர்-ஆனி கருட சேவை
 • திருநாங்கூர்-பதினொரு கருட சேவை
 • கும்பகோணம்-அட்சய திருதியை 12 வைணவக் கோவில்-12 கருட சேவை
 • தஞ்சை மாமணிக் கோவில்- 23 வைணவக் கோவில்களின்-ஒரே நேரத்தில் 23 கருட சேவை
 • காஞ்சிபுரம்-வந்தவாசி நெடுஞ்சாலை- கூழமந்தல்-வைகாசி மாதம் 15 வைணவக் கோயில்களின்- 15 கருட சேவை.♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
  தத்புருஷாய வித்மஹே ஸுவர்ண பக்ஷியாய தீமஹி
  தந்நோ கருட ப்ரசோதயாத்
  &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

  Please go  to CONTENTS (Given below): https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

Advertisements