Tags

, , , , , , , , , , ,

  திரு+அல்லி+கேணி=திருவல்லிக்கேணி. அல்லி மலர்கள் நிரம்பப் பெற்றதால் இப்பெயர். மங்களாசாசனம் பெற்ற திவ்ய தேசம்

பிருந்தாரண்ய ஷேத்ரம்

    சுமார் 9 அடி உயர மூலவர், சாரதிக்குரிய மீசையோடு இருத்தல் இத்தலத்தில் மட்டுமே என்பது மிக முக்கிய சிறப்பாக கருதப்படுகிறது. குடும்ப சமேதராக பெருமாள் காட்சியளிக்கிறார்.

     கும்பாபிஷேகம் 1975, 1992 மற்றும் 2004–ம் ஆண்டுகளில் நடத்தப்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டு கும்பாபிஷேகம் 12-6-2015 (7-8am)

Parthasarathy-1

வடக்கு வாசல்

*****Please click below to go to CONTENTS for all the Articles in HRE: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

கோவில் அமைப்பு

     கோயில் ராஜகோபுரம், ஐந்து நிலைகளை உடையது. ஏழு கலசங்கள், பலிபீடம், கொடிமரம். பின்னர், துவஜாரோகண மண்டபம். இவைகளையும் கருடாழ்வார் சந்நதியையும் தாண்டி உள்ளே நேராகச் சென்றால் ஓங்கி உலகளந்தப் பெருமாளான பார்த்தசாரதியின் திவ்ய தரிசனம்.

Parthasarathy-2

சந்நதி கோபுரங்கள்

      நான்கு மாட வீதிகளைச் சுற்றிலும் வைணவர்களுக்கான அஹோபில மடம், வானமா மலை மடம், மாத்வர்களின் உத்திராதி மடம், வியாசராஜமடம், ராகவேந்திர மடம் என கிருஷ்ணனைப் போற்றிய பக்தர்களின் மடம்.

நாலாயிர திவ்யப் பிரபந்தம்:

வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தார் தொழுதேத்தும்
ஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திரு அல்லிக்கேணி
கண்டேனே.(1069)
……………………………..பெரிய திருமொழி-திருமங்கையாழ்வார்-2.3.2

        வேத-ஸ்வரூபியானவனும் அவரவர் ருசிக்குத் தக்கபடி வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கருமங்களின் பலன்களைக் கொடுப்பவனும் சிறந்த முனிவர்களால் (வ்யாஸர், பராசரர், வால்மீகி முதலிய முனிவர்களுக்கு இனிய கனிபோலே) அநுபவிக்கப்படுகிற கோதற்ற போக்யமான பழம் போன்றவனும் நந்தகோபர் ஆனைக் கன்று போன்ற பிள்ளையானவனும் பூமியிலுள்ளாரெல்லாரும் வணங்கித் துதிக்க நின்ற ஜகத்காரண பூதனும் அமுதம் போலே போக்யனானவனும் என்னை அடிமை கொண்டவனுமான எம்பிரானை (பார்த்தசாரதியை) ஒப்பற்ற ஸ்த்ரீகள் வசிக்கப் பெற்ற மாடங்களையுடைய சிறந்த மயிலைக் கடுத்த திருவல்லிக்கேணியிலே சேவிக்கப்பெற்றேன்

 Parthasarathy-3கோவில் குளம்

      இக்கோயிலில் உள்ள குளத்தில் மஹரிஷி ப்ருகுவிற்கு, ஸ்ரீமஹாலக்ஷ்மி தாயாரே, ஸ்ரீவேதவல்லியாக பிறந்ததாக கூறப்படுகிறது. இந்த குளத்தில் ஐந்து கேணிகள் உள்ளதாகவும், எப்பொழுதும் அல்லி பூக்கள் நிறைந்து இருந்தது என கூறப்படுகிறது. இதனாலேயே இந்த ஷேத்திரம் திருவல்லிக்கேணி என வழங்கப்படுகிறது.இங்கு உற்சவ மூர்த்தி தன் கதாயுதம் இல்லாமல் செங்கோலுடன் காட்சி தருகிறார்.

 

Parthasarathy-4

மூலவர்-சந்நதி

மூலவர்:வேங்கடகிருஷ்ணன் 

        மூலஸ்தானத்தில்-கண்ணன் குடும்பம். வேங்கடகிருஷ்ணன்-வெள்ளை மீசையுடன், வலது கையில் சங்கு ஏந்தி, இடது கை பாதத்தைச் சுட்டிக்காட்ட, இடுப்பில் கத்தி சலக்கிராம மாலை ஆதிசேஷன் தலையில் நின்றவாறு காட்சி-அருகே ருக்மணி தேவி.

       கிருஷ்ண பகவான், மகாபாரத போரின்போது அர்ஜுனனின் தேரோட்டியாக, இந்துக்களின் புனித நூலான ஸ்ரீமத் பகவத் கீதையை தந்தார். போரின்போது பீஷ்மரின் அம்புகளால் காயமடைந்த கிருஷ்ணர் முகம் முழுவதும் தழும்புகளுடன் காட்சி அளிக்கிறார்.

      இந்த இடத்தில் மட்டும் தான் கிருஷ்ண பகவான் மீசையுடனும், தன் பிரதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார். போரின் தொடக்கத்தில் இவர் எந்த ஆயுதமும் ஏந்தாமல் இருப்பதாக வாக்கு கொடுத்ததால் போரின் தொடக்கம் மற்றும் முடிவினை தெரிவிக்கும் சங்கத்தை மட்டும் ஏந்தியுள்ளார்.

ருக்மணி தேவியின் வலப்பக்கம்:கலப்பையோடு பலராமர்.

வேங்கடகிருஷ்ணன் இடப்பக்கம்:

தம்பி-சாத்யகி,அவருக்கு அருகே தெற்கு நோக்கி                             மகன்பிரத்யும்னன்,
பேரன்-அநிருத்தனன்.

    இப்படி குடும்ப சமேதராக பெருமாள் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டும்தான். மற்ற இடங்களில் பெருமாள் தனியாகவோ அல்லது பிராட்டியுடனோதான் நமக்கு தரிசனம் தருவார். ஆனால், திருவல்லிக்கேணி தரிசனமே வேறு, தனிச் சிறப்புடையது.

உற்சவர்:

பார்த்தசாரதி, ஸ்ரீதேவி-பூதேவி

Parthasarathy-5

உற்சவர்

பிற சன்னதிகள்

ஸ்ரீவேதவல்லி தாயார்:

       அத்ரி முனிவர், மார்க்கண்டேயர், பிருகு, ஜாபாலி போன்ற மகரிஷிகள் தவம் செய்து கொண்டிருக்கும் பிருந்தாரண்யம் என்று சொல்லப்படுகிற திருவல்லிக்கேணியில், ஒரு சந்தன மரத்தடியில் அழகிய பெண் குழந்தையாகத் தோன்றுகிறாள் லட்சுமி. லட்சுமியைக் கண்ட பிருகு முனிவர் மிக்க மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை தனது மனைவியிடம் கொடுத்து வேதவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார்.

   பாற்கடலில் பள்ளி கொண்ட நாராயணன், பூலோகம் வருகிறார். பிருந்தாரண்யத்தில் மனைவியை வேதவல்லி என்கிற பெயருடன் காண்கிறார். பிருகு முனிவரிடம் தான் யார் என்கிற ரகசியத்தைச் சொல்ல, முனிபுங்கவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பிரானையும், பிராட்டியையும் சேர்த்து வைக்கிறார்கள். திருமால், ரங்கநாதராக இத்தலம் வந்து அவளைத் திருமணம் செய்து கொண்டார்

யோக நரசிம்மர்:

         இவர் யோகத்தில் இருப்பதால் பக்தர்கள் மவுனமாக செல்ல வேண்டும்.இவர் கருவறையில் நாதம் எழுப்ப வேண்டிய மணிக்குக் கூட நாக்கு கிடையாது!

       அமர்ந்த நிலையிலுள்ள தெள்ளிய சிங்கப் பெருமாள் எனும் யோக நரசிம்மனாக பிரகலாதனுக்கு கிருத யுகத்தில் தரிசனம் தந்த கோலம், கோயிலின் பின்புற சந்நதியில் அமைந்துள்ளது. இதிலும் ஓர் அற்புதம் இருக்கிறது.
யோக நரசிம்மர் சந்நதியிலிருந்து வெளியே தெருவிற்கு வந்தால், பிரகலாதனாக முன் ஜென்மத்தில் இருந்த ராகவேந்திர சுவாமிகள்,பிருந்தா-வனஸ்தராய் காட்சி தருகிறார்.

      இவர்கள் தவிர பிற சன்னதிகளில் ரங்கநாதர், ஸ்ரீ ராமர், ஸ்ரீ வரதராஜர், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர் , மணவாள மாமுனிகள் மற்றும் வேதாந்தாசாரியர் ஆகியோரும் காட்சி தருகின்றனர். இங்கே பார்த்தசாரதி மற்றும் நரசிம்மருக்கு தனித்தனியே கொடி மரங்கள் மற்றும் வாசல்கள் கொண்டு தனித்தனி கோயில்கள் போல் திகழ்கின்றன.

         நின்ற நிலையில் அருள்பாலிக்கும் வேங்கட கிருஷ்ணன் எனும் பார்த்தசாரதி, அமர்ந்த நிலையில் யோக நரசிம்மராகவும், படுத்த நிலையில் ரங்கநாதராகவும் மூன்று சந்நதிகளில் நமக்குத் தனித்தனியே தரிசனம் தருகிறார்.

         பார்த்தசாரதி மற்றும் நரசிம்மருக்கு தனித்தனியே கொடி மரங்கள் மற்றும் வாசல்கள் கொண்டு தனித்தனி கோயில்கள் போல் திகழ்கின்றன.

          நின்ற நிலையில் காட்சி தரும் வேங்கட கிருஷ்ணனை எதிர்த் தெருவிலுள்ள மகான் வியாசராஜர் பிருந்தாவனத்திலிருந்தபடியே வணங்கிக் கொண்டிருக்கிறார்.வியாசராஜர் த்வைத சித்தாந்தம் கொண்ட மகான். இவர் கிருஷ்ண தேவராயரின் குரு.

பிரகாரத்தில்

    பிரகாரத்தில் கஜேந்திரவரதர், கருடர் மீது காட்சி தருகிறார். எனவே இவரை, “நித்திய கருடசேவை சாதிக்கும் பெருமாள்’ என்று அழைக்கின்றனர். திருக்கச்சிநம்பி, வேதாந்தச்சாரியார், ராமானுஜர், மணவாளமாமுனிகள், சக்கரத்தாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோர் பிரகாரத்தில் இருக்கின்றனர்.

ஐந்து மூலவர் ஸ்தலம்:

       பிரதான மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர், முன்மண்டபத்தில் ரங்கநாதர் மற்றும் ராமபிரான், பிரகாரத்தில் கஜேந்திரவரதர் மற்றும் யோகநரசிம்மர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர். எனவே இத்தலம், “பஞ்சமூர்த்தி தலம்’ என்றழைக்கப்படுகிறது.

               ரங்க நாதர் சன்னதியில், சுவாமியின் தலைக்கு அருகில் வராகரும், கால் அருகில் நரசிம்மரும் இருக்கின்றனர். ரங்கநாதர், இங்கு தாயாரை திருமணம் செய்துகொள்ள வந்தபோது நரசிம்மரும், வராகமூர்த்தியும் உடன் வந்தனர் என்ற அடிப்படையில் இந்த அமைப்பு உள்ளது. இவ்வாறு ஒரே சன்னதிக்குள் பெருமாளின் மூன்று கோலங்களையும் இங்கு தரிசிக்க முடியும். திருமணத்திற்கு வந்த ரங்கநாதரை, தாயார் “”என்னவரே!” என்ற பொருளில், “”ஸ்ரீமன்நாதா!” என்றழைத்தார். எனவே இவருக்கு “ஸ்ரீமன்நாதர்’ என்ற பெயரும் உண்டு.

        கிழக்கு நோக்கிய மூலவர் வேங்கட கிருஷ்ணன், மேற்கு நோக்கிய யோக நரசிம்மர் என இருவருக்கும் இரு திசைகளிலும் இரண்டு கொடி மரங்களும், வாசல்களும் உள்ளன.

தல விருட்சம்: மகிழம்

தீர்த்தம்: கைரவிணி புஷ்கரிணி

தல வரலாறு

         சுமதி என்கின்ற மன்னன் பெருமாள் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தான். பாரதப் போரில் பஞ்சபாண்டவர்களை வழிநடத்திய ஸ்ரீ கிருஷ்ணர் மீது அவனுக்கு மிகுந்த பிரியம் உண்டு . ஸ்ரீ கிருஷ்ணரின் தரிசனம் வேண்டுமென்று பெருமாளை கேட்டுக் கொண்டான்.

         சுமதி மன்னனின் கனவில் தோன்றிய பெருமாள் பிருந்தாரண்யம் என்ற துளசிக்காடு(பிருந்தா-துளசி,ஆரண்யம்-காடு)- (திருவல்லிக்கேணி) இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் வேடத்தில் தான் காட்சி அளிப்பதாக கூறினார்.சுமதி மன்னன் இங்கு வந்து பாரதப் போரில் அர்ஜுனனுக்கு சாரதியாய் இருந்த ஸ்ரீ கிருஷ்ணனை கண் குளிர தரிசனம் செய்தான்.பின் கோவிலும் எழுப்பியதாக வரலாறு.

          ஆதிகாலத்தில், மூன்றுமுறை இந்த பார்த்தசாரதி ஸ்வாமியை உலோகத்தில் வார்த்தும், முகம் மட்டும் பருக்கள் நிறைந்து காணப்பட்டது. என்ன இப்படி ஆகிவிட்டதே என்று சிற்பி கவலைப்பட, ‘பாரதப் போரில் என் முகம் அம்பால் காயப்பட்டது. அதை நினைவுறுத்தும் வண்ணமாகவே இந்த இடத்தில் நான் இப்படி எழுந்தருளியிருக்கிறேன்’ என்று சிற்பிக்கு, வேங்கடகிருஷ்ணன் கனவில் ஆறுதல் சொன்னதாக செய்தி உண்டு.

         இடதுகால் பெருவிரலுக்கு அடுத்த விரலில் நகம் இருக்காது. பாரதப் போரில் பீஷ்மர் சரணாகதிக்காக அம்புவிட, அந்த அம்பு கிருஷ்ணரின் அந்த விரல் நகத்தைக் கீறியது என்றும் சொல்கிறார்கள். பார்த்தசாரதியின் இடுப்பில் யசோதையால் கயிறு கட்டப்பட்ட தழும்பு.

இராமாநுஜர் திருஅவதாரம்

     பெரிய திருமலை நம்பிகள் (ஸ்ரீசைலபூரணர்) என்பவருக்கு இரு சகோதரிகள் இருந்தனர். மூத்த காந்திமதி அம்மையார் (பூமிபிராட்டி), ஸ்ரீபெரும்பந்தூரில் வாழ்ந்த கேஸவப்பெருமாளுக்கும், இளையவரான பெரியபிராட்டியை மதுரமங்கலம், கமலநயன பட்டர் என்பவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.

     திருக்கச்சி நம்பிகள் ஸ்ரீபெரும்பூதூரில் வாழ்ந்த கேஸவப்பெருமாள், இல்லத்தில் இளைப்பாறி வருவது வழக்கம். சிலகாலம் குழந்தைப்பேறு இல்லாது இருந்த கேஸவப்பெருமாள் ஒருநாள் தன் மனக்குறையை நம்பிகளிடம் பகிர்ந்துகொண்டர்.

புத்ர காமேட்டி யாகம்

      நம்பிகள் வரதராஜ பெருமாளிடம் விண்ணபிக்க, பெருமாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி-வேதவல்லித்தாயார் திருதலத்தில் புத்ர பாக்யம் வேண்டி புத்ர காமேட்டி யாகம் செய்ய பணித்தார்.

   கேஸவப்பெருமான்-காந்திமதி அம்மையார் தம்பதிகள் பல திவ்யதேஸங்களுக்குச் சென்று சென்னையிலுள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி-வேதவல்லித்தாயாரை தரிசித்து தங்களுக்கு புத்ர பாக்யம் வேண்டி புத்ர காமேட்டி யாகம் செய்து ஸ்ரீபெரும்பூதூர் திரும்பினர்.

         வேங்கட கிஷ்ணன் அருளால், காந்திமதி அம்மையார் கருவுற்றாள். கி.பி. 1017, பிங்கள ஆண்டு சித்திரை மாதம், சுக்ல பக்ஷ பஞ்சமி, திருவாதிரை திருநக்ஷத்திரத்தில் வியாழக்கிழமை அந்த தம்பதிகளுக்கு யதிராஜவல்லி சமேத ஆதிகேசவப்பெருமாள் சேவை சாதிக்கும் ஸ்ரீபெரும்மந்துரில் இராமாநுஜர் மகனாகப் பிறந்தார்.

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார், பேயாழ்வார், , ஸ்ரீராமானுஜர்.

வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழச்
செற்றவன்-தன்னை புரம் எரி செய்த சிவன் உறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானை –திருவல்லிக்கேணிக்
கண்டேனே(1068)

……………………….திருமங்கையாழ்வார்: பெரிய திருமொழி  (2.3.1)

வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தார் தொழுதேத்தும்
ஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திரு அல்லிக்கேணி கண்டேனே.(1069)

………………………..திருமங்கையாழ்வார்.பெரிய திருமொழி–2.3.2

 • ஸ்ரீ பார்த்தசாரதி லட்சார்ச்சனை -பிப்ரவரி- 10 நாட்கள் திருவிழா – பிரம்மோற்ஸவம்– ஏப்ரல் – 10 நாட்கள் திருவிழா – வைகுண்ட ஏகாதேசி மற்றும் புது வருடப் பிறப்பின் தவிர மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள்.
 • திருப்பதி லட்டு, உப்பிலியப்பன் கோயில் உப்பில்லா சாதம், மதுரை கள்ளழகர் கோயில் தோசை ஆகிய பிரசாதங்கள் பிரசித்தி பெற்றிருப்பதைபோல, இக்கோயிலில் சர்க்கரைப்பொங்கல் பிரசித்தி பெற்ற பிரசாதமாகும்
 • தியாகபிரம்மம் முத்துசுவாமி தீட்சிதர், பாரதியார் ஆகியோர் இத்தலம் குறித்து பாடியுள்ளனர். குறிப்பாக பாரதியார் பாடிய கண்ணன் பாடல்கள் அனைத்தும் இப்பெருமாளைப் பற்றியது எனக் குறிப்பிடுவர்.
 • சங்கீத மேதை தியாகராஜ சுவாமிகள், தத்துவ மேதை விவேகானந்தர், கணித மேதை ராமானுஜம், அரசியல் மேதை சத்தியமூர்த்தி ஆகியோர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுள்ளனர்.
  ***************************************************************
  Pl Also, Click & Look for other திவ்யதேசங்கள் at HRE Links given below  (I) சோழநாட்டுத் திவ்யதேசங்கள்-https://drdayalan.wordpress.com/2016/03/08/hre-40(II நடு நாடு திவ்யதேசங்கள்-https://drdayalan.wordpress.com/2016/04/20/hre-41(III)தொண்டை நாடு திவ்யதேசங்கள் –https://drdayalan.wordpress.com/2016/02/22/hre-37

  (IV) மலை நாடு திவ்யதேசங்கள்- https://drdayalan.wordpress.com/2016/06/12/hre-43

  (V) பாண்டிய நாட்டுத்திவ்ய தேசங்கள்- https://drdayalan.wordpress.com/2015/12/29/hre-35

  (VI) வட நாடு திவ்யதேசங்கள்-To be published soon

  &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

  மெய்யன்பரே,

  • இந்த லிங்கிள் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.
  • மேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் சிறப்பாக இருக்கும்
  • இந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி

  Also, please go  to CONTENTS for all the Articles in HRE:

 • https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/
Advertisements