Tags

, , , , , , , , , , , , , , ,

16.1. ஆழ்வார் & ஆச்சாரியர்களின் வரிசை

ஆழ்வார்கள் வரிசை

1.திருமால், 2. திருமகள், 3. சேனை முதலியார்,
4. நம்மாழ்வார்,5.பெரியாழ்வார்………….. மற்ற ஆழ்வாரகள்

ஆச்சாரியர்கள் வரிசை

1.திருமால், 2. திருமகள், 3. சேனை முதலியார்,
4. நம்மாழ்வார், 5.நாதமுனிகள்,  6. உய்யக்கொண்டார்,
7. மணக்கால் நம்பி, 8. ஆளவந்தார், 9.பெரியநம்பி,
10. இராமாநுசர், 11.எம்பார், 12.பட்டர், 13.நாஞ்சீயர், 14.நம்பிள்ளை, 15.வடக்கு திருவீதிப்பிள்ளை, 16.பிள்ளை லோகாச்சாரியார், 17.திருவாய்மொழிப்பிள்ளை and  18.மணவாள மாமுனிகள்.

1-Namalwar

நம்மாழ்வார்

    முதல் மூவரும் பரமபதத்தைச் சார்ந்தவர்கள். புவியைச் சார்ந்த ஆழ்வார்கள் ஆச்சாரியர்களின் பட்டியலில் நம்மாழ்வாரே முதல் ஆழ்வாராக ஆச்சாரியராக அமைந்துள்ளார்.

    வைணவப் பெரியார்கள் ஆழ்வார்கள் , ஆச்சாரியர்கள் என இரு திறத்தினராக வகுத்துள்ளளார்கள்.

   நம்மாழ்வார், ஆழ்வார்களுள் அவயவி (உறுப்பி) எனவும், ஏனைய ஆழ்வார்களை இவருக்கு அவயங்கள் (உறுப்புக்கள்) என்றும் கூறுவார்.

2-AllAlwars

பன்னிரு ஆழ்வார்கள்

   ஆழ்வார்கள் அனைவருக்கும் குருபோல நம்மாழ்வார் விளங்கிய காரணத்தால் மற்ற ஆழ்வார்களைத் தனது அங்கங்களாகக் கொண்டிருந்தார்.

    அந்த வகையில், பூதத்தாழ்வாரை தலையாகவும், பொய்கையாழ்வார், பேயாழ்வாரை கண்களாகவும், பெரியாழ்வாரை முகமாகவும், திருமழிசையாழ்வாரை கழுத்தாகவும், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார் என இருவரையும் கைகளாகவும், தொண்டரடிப் பொடி ஆழ்வாரைத் திரு மார்பாகவும், திருமங்கையாழ்வாரை வயிறாகவும், மதுரகவி ஆழ்வாரை பாதமாகவும் கொண்டு விளங்கினார்.

*****Please click below to go to CONTENTS for all the Articles in HRE: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

16.2.நம்மாழ்வார் அவதார பரம்பரை

     நம்மாழ்வார் தகப்பனார் காரியார். காரியாரது தகப்பனாராகிய பொற்காரியார் திருவண்பரிசாரத்தில் வாழ்ந்த, வேளாளர் குலச் செல்வரும் ஆகிய திருவாழ் மார்பரது அருந்தவச் செல்வியாகிய உடையநங்கையாரைக் காரியாருக்கு இல்வாழ்க்கைத் துணைவியாக்கினார்.

77

   கற்புடை நல்லாளும், கணவனைத் தொழுதேத்தும் பெண்பாலும் ஆகிய உடையநங்கையார், தம் கணவராகிய காரியாருடன் திருக்குறுங்குடியை அடைந்து, அப்பதியில் எழுந்தருளியிருக்கும் நம்பியைச் சேவித்து வணங்கி, ‘மக்கட் பேறு உண்டாகும்படி எம்பெருமான் அருள் புரிய வேண்டும்’ என வேண்டினார். அதனால் உதித்த புதல்வரே உண்மைப்பொருள் உணர்த்திய செம்மலாம் நம்மாழ்வார்.

16.3.நம்மாழ்வார் அவதாரம்

    நம்மாழ்வார், ஆழ்வார் திருநகரி (திருக்குருகூரில்) கலி பிறந்த 43 வது நாளில், காரியார் மற்றும் உடைய நங்கைக்கு, திரு மகனாராக, வேளாளர் குலத்தில் பிரமாதி ஆண்டு, வைகாசித் திங்கள், பன்னிரண்டாம் நாள், பௌர்ணமி திதியில், வெள்ளிக்கிழமை, விசாக நட்சத்திரத்தில், கடக லக்னத்தில், விஷ்வக்ஸேனரின் அம்சமாக , அவதரித்து அருளினார்.

16.4.குரு ஸ்தலமாக விளங்கும் ஆழ்வார் திருநகரி

இறைவன்: ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான்
இறைவி: ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி
தல தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், திருச்சங்கண்ணி துறை
விமானம்: கோவிந்த விமானம்
கிரகம்: குரு ஸ்தலம்
தல விருட்சம்: உறங்காப்புளி

9

      ஆழ்வார் திருநகரி தலத்திற்கு முன்னொரு காலத்தில் குருகூர் என்னும் பெயரே மிகவும் பிரசித்திபெற்றதாக இருந்தது.    ஒரு சமயம் பிரம்மா திருமாலை நோக்கி பூவுலகில் தவம் செய்வதற்கு ஒரு சிறந்த இடத்தை தெரிவிக்க வேண்டுமென வேண்ட, திருமால் தாமிரபரணியாற்றங்கரையில் ஆதிபுரி என்ற இனியதோர் இடத்தை படைத்து ஆதிப்பிரான் என்ற திருநாமத்தோடு எழுந்தருளியுள்ளோம். மனதுக்கினிய ரம்யமான சோலைகளும் வாவிகளும் சூழ்ந்த அந்த இடத்தில் சென்று தவம் செய் என்றார்.

    திருமாலை ஆதிநாதனாகக் கொண்டு கடுந்தவமியற்றிய பிரம்மாவுக்கு திருமாலே குருவாக உபதேசித்ததால் மகிழ்ந்த பிரம்மன்“குருகாத்தர மதர்ச்சனம்” என்றருளியதால் அதன் நினைவாக இவ்வூர்க்கு குருகூர் என்ற பெயர்.

16.5.நம்மாழ்வார்அதிசய பிறப்பு

    இவர் பிறந்த உடன் அழுதல், பால் உண்ணுதல் முதலியானவைகளை செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் அவரை “மாறன்” என்றே அழைத்தனர். மாயையை உருவாக்கும் “சட” எனும் நாடியினாலே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகிறது. ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த இவர் சட நாடியை வென்றதால் “சடகோபன்” என்றும் அழைக்கப்பட்டார். யானையை அடக்கும் அங்குசம் போல, பரன் ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டியமையால் “பராங்குசன்” என்றும், தலைவியாக தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது “பராங்குசநாயகி” என்றும் அழைக்கப்படுகிறார்.

    இறைவன் முன் குழந்தையைக் கிடத்தி, அதற்கு ‘மாறன்‘ என்னும் திருநாமத்தைச் சூட்டி, அப்பெருமானைச் சேவித்து வணங்கிப் போற்றிக் குழந்தைக்கு அருள் புரிய வேண்டினார்கள்.அக்குழந்தை தவழ்ந்து சென்று, அங்கிருந்த புளியமரப்பொந்தில் தியான நிலையிலேயே அமர்ந்து கொண்டது.

  ஆழ்வார் அவதரித்தற்கு முன்னதாக ஆதிசேடன் அப்பதியின் திருக்கோயிலின்கண் ஒரு புளிய மரமாய்த் தோன்றி விளங்கலானான். உலகம் உய்ய அவதரித்த ஆழ்வாருக்குத் திருமகள் நாதன் ஞானமாகிய அமுதத்தை ஊட்டியருளிச் சென்றனன். அதனால் ஆழ்வார் உலகத்தில் பிறக்கும் குழந்தைகளின் செயலினின்றும் வேறுபட்ட நிலையில் வைகுந்தவாசனின் திருவடிகளையே தமது திருவுள்ளத்தில் கொண்டிருப்பாராயினார். இதனை அறியாத பெற்றோர்களின் வருத்தம் எல்லை கடந்ததாயிற்று.

    வைகுந்தத்த இறைவன் சேனை முதலியாரை நோக்கி, ‘மாறானாகிய நம்மாழ்வாருக்கு உண்மைப் பொருள்களை யெல்லாம் உபதேசித்து வருவீராக’ எனப் பணிக்க, அங்ஙனமே அவர் திருக்குருகூருக்குச் சென்று பிறர் அறியாதபடி ஆழ்வாருக்குத் தத்துவப் பொருள்களை உபதேசிக்க, ஆழ்வார் அக்கோயிலின் கண் உள்ள புளிய மரத்தின் அடியிலே பதினாறு ஆண்டுகள் வரையிலும் யோகத்தில் எழுந்தருளியிருந்தார்.

16.6.மதுர கவியாழ்வார்-நம்மாழ்வார் சந்திப்பு

       வட நாட்டில், அயோத்தியில், மதுர கவியாழ்வார் தங்கி இருக்கையில் ஒரு புது விதமான பேரொளியைக் கண்டார். அவ்வொளி, தென்திசையில் இருந்து வருகிறது என்பதை அறிந்து, தென்னகத்தை நோக்கிப் பயணித்தார்.

   தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீரங்கத்திலுள்ள கோவிலிலிருந்து அந்த ஒளி வருகிறது என்று எண்ணி, மதுரகவியாழ்வார், திருவரங்கத்தை அடைந்தார். ஆனால், அந்த ஒளி மேலும் தென்திசையில் இருந்து வந்தது. எனவே, அவ்வொளி வந்த திசையை நோக்கிச் சென்ற போது, அது நம்மாழ்வார் வீற்றிருந்த புளியமரத்தை அவருக்குக் காட்டியது.

3-Nam & MKavi

மதுர கவியாழ்வார்-நம்மாழ்வார்

    மதுரகவியார், ஆழ்வாரை நோக்கி, ‘உயிரற்றதாகிய பிரகிருதியினால் ஆகிய உடம்பில் அணு வடிவாயுள்ள ஆன்மா புகுந்தால் எதனை அனுபவித்துக்கொண்டு எவ்விடத்தில் இன்பம் உண்டென்று எண்ணியிருக்கும்?’ என்ற பொருள் அடங்கிய, செத்தத்தின் வயிற்றிற் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று கேட்டார்.

   அதற்கு ஆழ்வார், “அந்த உடலின் தொடர்பினால் ஆகும் சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்னும் இவ்வைந்தினால் வரும் இன்ப துன்பங்களை அநுபவித்துக்கொண்டு அவ்விடத்திலேயே ‘இன்புற்றேன்; இளைத்தேன்’ என்று சொல்லிக் கொண்டே கிடக்கும்” என்ற பொருள் அடங்கும்படி, அத்தை தின்று அங்கே கிடக்கும்”என்று திருவாய்மலர்ந்தருளினார்.

     அதாவது, செத்தது என்பது உடல்; சிறியது என்பது உயிர். உயிரானது உடலினுள் இருக்கும் பொழுது அதற்கென்று தனியான இன்பம், துன்பம் எதுவும் கிடையாது. உடல் நொந்தால், உயிரும் நோகும்; உடல் இன்புற்றால், உயிரும் அப்படியே இன்புறும். அதனால், உயிரானது உடலின் இன்ப, துன்பங்களைத் தின்று, அங்கேயே இருக்கும். என்று, அந்த உயிர் உண்மையை(தன்னிலை அறிதல்) உணர்கிறதோ, அன்று அது இறைவனைப் பற்றிய எண்ணங்களையே உணவாக உண்டு, அவரது திருவடி நிழலிலே நீங்கா நிலைத்துவிடும்.

   பிறப்பின் போது, ஒரு ஆன்மா எந்த வகையான உடலுள் புகுகிறதோ அந்த உடலுக்கேற்ப அதன் தோற்றத்திற்கேற்ப மட்டுமே சுகதுக்கங்களை அடைய முடியும் என்றும், மெய்ஞ்ஞானத்தை உணர்வதென்பது அந்த உடம்புடன் சம்மந்தப்பட்ட குணநலன்களையும் சார்ந்தது.

    முக்தி அடைவதற்கு, ஆன்மாவுக்கு கிடைக்கும் கூடும் முக்கியமாகிறது ! ஆன்மா உய்வுற ஒரு ஜென்மமும் ஆகலாம், பல ஜென்மங்களும் ஆகலாம்! இங்கே, உடல் ‘செத்தது’ ஆகவும், ஆன்மா ‘சிறியது’ ஆகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.என்று சொன்ன ,நம்மாழ்வாரின் அந்த பதிலைக் கேட்ட கணத்திலிருந்து, மதுரகவி அங்கேயே தங்கி, நம்மாழ்வாரின் பிரதான சீடராகி, அவருடைய திருவடிகளிலே தம்முடைய முடியுற வணங்கிக் கைகூப்பி, நின்று, “அன்புடையீர், அடியேனை ஆட்கொண்டருள்வீர்”என்று வேண்டினார்.

    நம்மாழ்வார் மதுரகவியாரைப் பார்த்து, “நாம் பகவானை அனுபவித்து அருளிச் செய்யும் திவ்யப்பாசுரங்களை பட்டோலையில் பதிவு செய்ய வேண்டும் எனத் திருவாய்மலர்ந்தருள, மதுரகவியாரும் பட்டோலையை அலங்கரிக்க, நம்மாழ்வாரும் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகளை அருளினார்.

   ஆனால், அதற்கு பிறகும் கூட, நம்மாழ்வார் அந்த இடத்தை விட்டு நகரவேயில்லை.எம்பிரானின் அவதாரம் தானே நம்மாழ்வார், அவருக்கே அவர் இருக்கின்ற இடங்கள் எல்லாம் தெரியாதா, என்ன? நம்மாழ்வார், திருவாய் திறந்து பாசுரங்களை எல்லாம் பாடத்துவங்கின போது, திருமாலின் திவ்ய தேசங்கள் அனைத்தும் அவர் மனக்கண்ணில் தோன்றின.

16.7.நம்மாழ்வார் திவ்யப் பிரபந்தங்கள்

    நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 1000 க்கும் மேற்பட்ட பாடல்கள் நம்மாழ்வாரால் பாடப்பெற்றவை ஆகும். அவரது திருமொழிகள் மொத்தம் 4 ஆகும். அவை,

திருவிருத்தம்-100 பாசுரங்கள் (ரிக் வேத சாராம்)
திருவாசிரியம்-7 பாடல்கள் (யசூர் வேத சாராம்)
பெரிய திருவந்தாதி87 பாடல்கள் (அதர்வண வேத சாராம்)
திருவாய்மொழி-1102 பாடல்கள் (சாம வேத சாராம்)

      இவ்வாறு, ரிக், யசூர், சாம, அதர்வண என்னும் 4 வேதத்தினையும், தமிழில் படைத்து, தமிழ் மக்களும் வேதத்தின் அர்த்தங்களைப் புரிந்து அதன் பலனை அடைய அருளிச்செய்ததினால், நம்மாழ்வார், வேதம் தமிழ் செய்த மாறன் என்று அழைக்கப்படுகின்றார். இவரது பாடல்கள் அனைத்திலும் வேதத்தின் சாரம் செறிந்து இருப்பதை, அவரது பாடல்களை உளமார ஓதும் வேளையில் உணரலாம். இவர், இறைவனை தலைவனாகவும், தன்னை தலைவியாகவும் வைத்து பாடினார், ஆழ்வாரகளில், மிக அதிகமாக 1296 பாசுரங்களை அருளிச் செய்தார்.

உயர்வற வுயர்நலம்முடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே
.
……………………….>>>(
திருவாய் மொழி:1.1.1)

   உலகு உய்யச் பாமாலைகளால் பரந்தாமனைப் பாடிய நம்மாழ்வார் , திருப்புளியடியில் முப்பத்தோராண்டு எழுந்தருளியிருந்தார்.

    வைணவர்களின் தமிழ் வேதமாகிய நாலாயிரத்துள் முதல் மூன்றும் மூன்றாம் ஆயிரத்துள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. திருவாய்மொழி நான்காம் ஆயிரமாக அமைக்கப்பட்டிருக்கின்றது.

   நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி (தெய்வப் பேச்சு, பகவத் விஷயம்“) என்று அழைக்கப் படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவாய்மொழிக்கு மிக உயரிய இடம் தரப்பட்டுள்ளதற்கு, இராமனுசரும், அவருக்கு பின்னால் வந்த வேதாந்த தேசிகரும், மணவாள மாமுனிகளும் போற்றினாரகள். இராமானுசரின் முதன்மைச் சீடரான திருக்குருகைப் பிரான் பிள்ளான் திருவாய்மொழிக்கு உரை எழுதியுள்ளார்.

    வியாசாவதாரம் எடுத்துப் பிரம்ம சூத்திரங்களை இயற்றிய இறைவனே நம்மாழ்வாராக அவதரித்துத் அந்தப் பிரம்ம சூத்திரத்தினுடையவும், வேத வாக்கியங்களினுடையவும் அர்த்தங்களை விளக்க வேண்டி திருவாய்மொழியை அருளிச் செய்ததாக வைணவர்கள் நம்புகின்றனர். ‘மன்னும் வழுதி வளநாடன் மாறன் திருக்குருகூர் சடகோபன் தமிழ்’ என்று நாதமுனி குறிப்பிடுவதை வைத்து இவ்வாழ்வார் பாண்டிய மரபினர் என்று கூற முடியும்.

குறுமுனிவன் முத்தமிழும் எம் குறளும்
சிறுமுனிவன் வாய் மொழியின் சேய்

   என்று வள்ளுவர், நம்மாழ்வார் பாசுரங்கள் குறித்து, கூறியதாகச் சொல்லப்படுகிறது. மாறன், இப்படி இறைவனைப் பற்றிய இன்சிந்தனையோடு 35 ஆண்டு காலம் இப்பூவுலகில் வாழ்ந்து வந்தார். அதன் பிறகு இவர் விருப்பத்திற்கிணங்க, இறைவனும் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசலைத் திறந்து நம்மாழ்வாரைத் தம்மொடு இரண்டறக் கலக்கச் செய்துவிட்டார்.

16.8.கண்ணிநுண்சிறுதாம்பு-மதுர கவியாழ்வார்

   நம்மாழ்வாரிடம் பட்டோலையை அலங்கரித்த மதுரகவி ஆழ்வார் வைகுந்தநாதனைப் பாடாமல் மதுரமானதும், அன்பு நிறையப் பெற்றதுமான,”கண்ணிநுண் சிறுத்தாம்பு என்று தொடங்கும், பதினொரு பாசுரங்களால் நம்மாழ்வாரைப் பாடியுள்ளார்.

    நூல் இயற்றப் புகுவோர் முதலில் விநாயகருக்கு வணக்கம் கூறுதலைப் போன்று, நம்மாழ்வாருக்கு வணக்கம் கூறுதல் மரபாயிற்று.

   இதனால்தான், கம்பர் ராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றும்போது, ம் சடகோபனைப் (நம்மாழ்வார்) பாடினாயோ?‘ என்று கேட்டாராம் பெருமாள். கம்பர் உடனடியாக நம்மாழ்வாரைப் போற்றி, ‘சடகோபரந்தாதி‘ பாடினார்.

16.9.ஸ்ரீசடாரி-நம்மாழ்வார்

    நம்மாழ்வாரையே தெய்வமாகப் போற்றிய “மதுர கவி ஆழ்வார்”, ‘தேவு மற்றறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவனே’ என்று ‘எனக்கு வேறு எந்தத் தெய்வமும் தேவை இல்லை. குருகூர் நம்பியான நம்மாழ்வாரின் பெயரைச் சொன்னபடியே இருப்பேன்’ என்று சொல்கிறார்.

5-Sadari

ஸ்ரீசடாரி

     திருமால் கோவில்களில் ‘ஸ்ரீ சடாரி’ என்னும் திருமால் பாதங்கள் சடகோபன் (நம்மாழ்வார்) என்றே வழங்கப்படுகின்றன.

16.10.நம்மாழ்வாரின் பிறபெயர்கள்

 1. சடகோபன்
 2. மாறன்
 3. காரிமாறன்
 4. பராங்குசன்
 5. வகுளாபரணன்
 6. குருகைப்பிரான்
 7. குருகூர் நம்பி
 8. திருவாய்மொழி பெருமாள்
 9. பெருநல்துறைவன்
 10. குமரி துறைவன்
 11. பவரோக பண்டிதன்
 12. முனி வேந்து
 13. பரப்ரம்ம யோகி
 14. நாவலன் பெருமாள்
 15. ஞான தேசிகன்
 16. ஞான பிரான்
 17. தொண்டர் பிரான்
 18. நாவீரர்
 19. திருநாவீறு உடையபிரான்
 20. உதய பாஸ்கரர்
 21. வகுள பூஷண பாஸ்கரர்
 22. ஞானத் தமிழுக்கு அரசு
 23. ஞானத் தமிழ் கடல்
 24. மெய் ஞானக் கவி
 25. தெய்வ ஞானக் கவி
 26. தெய்வ ஞான செம்மல்
 27. நாவலர் பெருமாள்
 28. பாவலர் தம்பிரான்
 29. வினவாது உணர்ந்த விரகர்
 30. குழந்தை முனி
 31. ஸ்ரீவைணவக் குலபதி
 32. பிரபன்ன ஜன கூடஸ்தர்
 33. மணிவல்லி
 34. பெரியன்

16.11.நம்மாழ்வாரால் பாடப்பெற்ற தலங்கள்

1. திருவரங்கம், 2. திருப்பேர்நகர், 3. கும்பகோணம், 4. திருவிண்ணகர், 5. திருக்கண்ணபுரம், 6. திருமாலிருஞ்சோலைலை, 7. திருமோகூர், 8. திருக்குருகூர், 9. ஆழ்வார் திருநகரி, 10. ஸ்ரீவரமங்கை, 11. திருப்புளிங்குடி, 12. திருப்பேரை, 13. ஸ்ரீவைகுந்தம், 14. வரகுணமங்கை, 15. பெருங்குளம், 16. திருக்குறுங்குடி, 17.திருக்கோவலூர்,18. திருவநந்தபுரம்,19. திருவண்பரிசாரம், 20. திருக்காட்கரை, 21. திருமூழிக்களம், 22. திருப்புலியூர், 23. திருச்செங்குன்றூர், 24. திருநாவாய், 25. திருவல்லவாழ், 26. திருவண்வண்டூர், 27. திருவட்டாறு, 28. திருக்கடித்தானம், 29. திருவாறன்விளை, 30. திருவேங்கடம், 31. திருவயோத்தி, 32. துவாரகை, 33. வடமதுரை, 34. திருப்பாற்கடல், 35. பரமபதம்.

16.12.திருப்புளிய மர வரலாறு

   ஸ்ரீராமர் தனது அவதாரப் பயனை உலகத்திற்கு வழங்கி வைகுண்டம் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக, அயோத்தியில் ஸ்ரீராமரைக் காண எமதர்மராஜா வந்திருந்தார். நாங்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம் என ராமர், இலக்குவனுக்கு ஆணையிட்டார்.

    அந்த சமயத்தில், துர்வாச முனிவர் அங்கு வர, அவரது கோபத்தை அறிந்த இலக்குவன், ராமரது ஆணையை மீறி முனிவரை உள்ளே விட்டான். ராமன் முனிவரை நல்ல விதமாக உபசரித்து வழியனுப்பி தனது பேச்சை மீறிய இலக்குவன் மீது கோபம் கொண்டார். எமதர்மராஜரும் சென்றபின், இலக்குவனைப் பார்த்து “நீ அசையாப் பொருளாக ஆவாயாக” என சாபமிட்டார்.

    இலக்குவன் தன் சகோதரனிடம் மன்னிப்பு கோரினார். மனமிரங்கிய ராமர், நான் அளித்த சாபம் நடந்தே தீரும் எனக் கூறினார். உனக்கு மட்டுமல்ல, இந்தப் பிறவியில் நிரபராதியும், கர்ப்பிணியுமான சீதா தேவியை காட்டுக்கு அனுப்பிய காரணத்தால் நான், “உறங்காப் புளியாக, அசையாப் பொருளாக மாறப் போகும் உன் அருகிலேயே, ஐம்புலன்களையும் வென்ற பிரம்மச்சாரியாக சடகோபன் என்ற பெயருடன் அவதரிக்கப் போகிறேன்” எனக் கூறினார்.

  கற்பக விருட்சம் போல் இந்த உறங்காப்புளி மரம் அமைந்துள்ளது. இதன் இலைகள் இரவிலும் மூடாது. உறங்காமல் இவ்வுலகைக் காக்கும். இந்த உறங்காப் புளியமரம், ஸ்ரீ இலக்குவனின் அவதாரமாகவே காட்சி அளிக்கிறது. இந்தப் புளிய மரம் பூக்கும், காய்க்கும், ஆனால் ஒருபோதும் பழுத்ததில்லை.

   பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து இன்றும் நமக்குக் காணக் கிடைக்கிறது நம்மாழ்வார் தவம் செய்த இம்மரம், சுமார் 5100 ஆண்டுகள் பழைமை உடையது. ஆனால் இன்றும் செழுமையுடன் உள்ளது என்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த மரத்தினைச் சுற்றி 36 திருக்கோயில்களின் பெருமாள் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளதால், இங்கு வந்து வழிபட 36 திவ்விய தேசங்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும்.

4-Pulliam Tree

ஆழ்வார் திருநகரி தலம்-திருப்புளிய மரம்

கம்பர், ராமானுஜர் வழிபட்ட, இந்த குருகூர் ஸ்தலம், மணவாள மாமுனிகள் அவதரித்த தலமும் ஆகும்.

    இந்தக் கோவிலில் ஆதிசேஷனே (இலக்குவனன்), புளியமரமாக வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு ‘சேஷ-ஷேத்திரம்‘ என்று பெயர். நாகதோஷம் உள்ளவர்கள் இத்தல பெருமாள், நாச்சியார்கள், கருடன், நம்மாழ்வார் மற்றும் இத்தல புளிய மரத்துக்கு நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால், நாக தோஷங்கள் உனடியாக விலகும்.

****திருப்பதி ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்***. 

16.13.நம்மாழ்வார் பக்தி.

    எனக்கு பக்தி ஒன்றும் இல்லை. உலக பற்று ஒன்றும் விடவில்லை. கண்ணா, உன்னை எப்படி வணங்க வேண்டும் என்று கூட எனக்குத் தெரியாது. எல்லோரும் செய்கிறார்களே என்று நானும் உன்னை புகழ்ந்தேன். என்ன ஆச்சரியம், என் பொய்யான பக்தியைக் கூட உண்மை என்று கொண்டு எனக்கு நீ அருள் புரிந்தாய். உன் அருளைப் பெற்று விட்டேன். இனி மேல் நீ என்னை விட்டு போவதானால் போய் கொள். எனக்கு ஒன்றும் கவலை இல்லை. ஆனால், உன்னால் போக முடியாதே என்று ஆனந்தத்தில் மிதக்கிறார் அவர்.

கையார் சக்கரத்து என் மாணிக்கமே என்றென்று,
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி,
மெய்யே பெற்று ஒழிந்தேன் , விதிவாய்கு இன்று காப்பார் யார் ,
ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே.

     பொருள் : கையில் சக்கரத்தைக் கொண்ட என் கரு மாணிக்கமே என்று என்று பொய்யாகச் சொல்லி உலக விஷயங்களில் மூழ்கி இருந்தாலும், உண்மையான உன்னை பெற்றேன் உன் அருள் பெறுவதை யார் தடுக்க முடியும். ஐயோ கண்ணபிரான் நீ என்னை விட்டுப் போய் விடுவாயா ? (போகமாட்டாய், போக முடியாது)

    பொய்யாகவேனும் பக்தி செய்தால்.நாளடைவில் அதுவே உண்மையாக மாறிப் போகும். விரும்பாமல் சாப்பிட்டாலும் லட்டு இனிக்கத்தானே செய்கிறது.

16.14.நாதமுனிகளின் தமிழ்த் தொண்டு(Please refer Article HRE-10)

HRE-10: https://drdayalan.wordpress.com/2015/03/07/hre-10

மதுரகவி ஆழ்வாரின் காலத்திற்குப் பிறகு நாலாயிர திவ்யபிரபந்தப் பாடல்களும் எங்கு போனதென்று தெரியவில்லை.

    நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை நாதமுனிகளுக்கு, நம்மாழ்வாரே பிரத்யட்சமாகி அனைத்து பாக்களையும் அருள, நாதமுனிகள் அவற்றை ஏட்டில் எழுதித் தொகுத்தார்

    கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள வீரநாராயணபுரம் என்று அழைக்கப்படும் காட்டுமன்னார்  கோயில் என்ற ஊரில் அவதரித்த நாதமுனிகள் என்ற வைணவ ஆச்சாரியாரின் பெரும் முயற்சியால் அனைத்து நாலாயிர திவ்வியபிரபந்த பாடல்களும் கிடைக்கப் பெற்றன. அவரது சீரிய தொண்டினால் நாடெங்கும் நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாடல்கள் பரவின.

16.15.நம்மாழ்வாரின் திருவாய்மொழி சிறப்பு

உயர்வற உயர் நலம்

 • அரங்கனே ஓராண்டு காலம் அமர்ந்து கேட்டது.
 • திருவாய்மொழி சாம வேத சாராம் & துவைய மந்திரத்தின் பொருளை உணர்த்துவது.
 • நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நான்காவது ஆயிரமாக அமைந்தது. 1102 பாசுரங்களைக் கொண்டது (S.No:2675-3776)
 • அனைத்து திருவாய்மொழி பாசுரங்களும் திருவந்தாதிகளாக அமைந்தது.
 • பத்து பத்து (100 பதிகங்கள்) என ஒவ்வொரு பத்திலும் (பதிகத்திலும்) 11 பாசுரங்கள் கொண்டது (10 x 10 x 11 = 1100).
 • இரண்டாம் பத்து எழாம் திருமொழியில் (2.7) மட்டும் 13 பாசுரங்கள் என இரண்டு பாசுரங்கள் அதிகமாக அமைந்துள்ளது.
 • ஆக திருவாய்மொழி பாசுரங்கள் மொத்தம் 1102.
 • திருவாய்மொழி முதல் பாசுரம்(1)

உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.
………………………………..(திருவாய் மொழி:1.1.1)

திருவாய்மொழி நிறைவு பாசுரம் (1102)

அவாவறச் சூழரியை அயனை அரனை அலற்றி
அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவிலந் தாதிகளால் இவையா யிரமும் முடிந்த
அவாவிலந் தாதியிப் பத்தறிந் தார்பிறந் தாருயர்ந்தே.
…………………………………(
திருவாய் மொழி:10.10.11)

 • திருவாய்மொழி வீதிகளில் ஓதி செல்லாமல் ஓரிடத்தில் அமர்ந்து ஓதக்கூடியது.

  16.16.திருவாய்மொழி நூற்றந்தாதி

   நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியில் உள்ள ஒவ்வொரு பதிகத்துக்கும் ஒரு வெண்பா என 100 வெண்பாக்கள் பதினைந்தாம் நூற்றாண்டு மணவாள மாமுனிகள் பாடிய நூற்றந்தாதியில் உள்ளன.

   ஒவ்வொரு பதிகத்திலுமுள்ள தொடக்கச் சொல்லை அப்பதிக வெண்பாவின் முதற்சொல்லாகவும், பதிகத்தின் இறுதிப் பாடலிலுள்ள இறுதிச் சொல்லை வெண்பாவின் ஈற்றுச் சொல்லாகவும் அமைத்து வெண்பா வரும்படி அமைத்து நூற்றந்தாதி நூல் நம்மாழ்வாரின் புகழைப் பாடுகிறது.

முனியே. நான்முக னே.முக்கண் ணப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே. என்கள்வா
தனியேன் ஆருயிரே. என் தலை மிசையாய் வந்திட்டு
இனிநான் போகலொட் டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே
…………………………………………திருவாய்மொழி-10.10.1

அவாவறச் சூழரியை அயனை அரனை அலற்றி
அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவிலந் தாதிகளால் இவையா யிரமும் முடிந்த
அவாவிலந் தாதியிப் பத்தறிந் தார்பிறந் தாருயர்ந்தே
…………………………………………திருவாய்மொழி-10.10.11

முனி மாறன் முன்புரைசெய் முற்றின்பம் நீங்கித்
தனியாகி நின்று தளர்ந்து-நனியாம்
பரமபத்தி யால்நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமையுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து
 ……………….மணவாள மாமுனிகள்திருவாய்மொழி நூற்றந்தாதி-100

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ,
சடகோபன் தண்தமிழ்நூல் வாழ, கடல் சூழ்ந்த,
மன்னுலகம் வாழ, மணவாள மாமுனியே,
இன்னுமொரு நூற்றாண் டிரும்.

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம்.
HRE-16: நம்மாழ்வார்


*******************************************************

16.17.வைகுண்ட ஏகாதசி
ஆழ்வார் திருவடி தொழுதல்
நம்மாழ்வார் மோட்ச வைபவம்

   பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி தொடங்கி இராப்பத்து என்னும் உற்சவம் நடக்கும். பத்து நாள் விழா. பத்தாவது நாள் நம்மாழ்வார் மோட்சத்துடன் முடியும்.

     மோட்சத்துக்காக வைகுண்ட வாசல் திறக்கப்பட்டதைத்தான் பரம பத வாசல் திறப்பு விழா என்னும் சம்பிரதாயத்தின் மூலம் காட்டுகிறார்கள்.

     ராப்பத்து பத்து நாளும் இரவு நேரக்கோலாகலங்கள்! நம்மாழ்வாரின் பாசுரங்கள் மட்டுமே பத்து நாட்களும் ஓதப்படுகிறது! நூறு நூறு பாசுரங்களாக பத்து நாட்கள் ஓதப்படுகின்றன.

   அதன் பின்னர் நம்மாழ்வார் மோட்சம்! இறுதி நாளில் நம்மாழ்வாரின் மற்றைய மூன்று பிரபந்தங்களும் இராமானுச நூற்றந்தாதியும் ஓதப்படுகின்றன.

அரங்கனின் திருவோலை

     திருமங்கையாழ்வார் காலத்தில் அரங்கனின் திருவோலை ஆழ்வார் திருநகரிக்கு அனுப்பப்பட்டு அங்கே மதுரகவி ஆழ்வாரால் நிலைநிறுத்தப்பட்ட நம்மாழ்வாரின் திருமுன்பு அவ்வோலை படிக்கப்படும்.

    நம்மாழ்வார் அங்கிருந்து வந்து திருவரங்கத்தில் இத்திருவிழா முழுதும் அரங்கனுடன் வீற்றிருந்து பின் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.

ஆளவந்தாருக்குப் பிறகு இராமானுசர் திருவரங்கன் திருக்கோயிலிலேயே நம்மாழ்வாரை எழுந்தருளிவித்தார்.

   நம்மாழ்வாரும் அரங்கனுமாய் அமர்ந்து இவ்விழாவை நடத்தும்படி செய்தார். அப்போதிலிருந்து அரங்கனின் திருவோலை திருவரங்கத்தில் இருக்கும் நம்மாழ்வார் திருமுன்பே படிக்கப் பட்டு திருவிழா தொடங்குகிறது.

 அரங்கன் திருமாமணி மண்டபத்தில் இராத்தங்கி நம்மாழ்வாருக்கு மோட்சம்

      திருநாட்கள் அனைத்திலும் முக்கியமான திருநாள் இதுதான்! இதை ‘ஆழ்வார் திருவடி தொழுதல்’ என்று போற்றுவார்கள். அரங்கன் எப்போதும் இரவில், வெளி மண்டபங்களில் எங்கும் தங்குவதே இல்லை. எந்நேரமானலும் மூலஸ்தானம் திரும்பிவிடுவார். இந்த ஒரு திருநாளில் மட்டும் 10-ம் திருநாள் தீர்த்தவாரி முடிந்து வந்தவர், ‘ஆழ்வார் மோட்சம்’ வைபவத்துக்காக, திருமாமணி மண்டபத்திலேயே இராத்தங்கி நம்மாழ்வாருக்கு மோட்சம் தருகிறார்.

     11-ம் நாள் விடியற்காலை இரண்டு அர்ச்சகர்கள் கைத்தலங் களில், நம்மாழ்வாரை ஏந்திய அரையர் ‘சூழ்விசும்பணி முகில்’ எனும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைப் பாடிக் கொண்டுவர, அரங்கனின் திருவடியில் நம்மாழ்வாரின் திரு முகம் பதியும்படி, எழுந்தருளச் செய்வார்கள். அப்போது, ‘ முனியே..! நான்முகனே..’ என்கிற கடைசி திருவாய்மொழியை, அதீத உயிர்ப்புடனும் ஆழ்வார் நம்மை விட்டுப் பிரிகிறாரே என்ற உள்ளத் தவிப்புடனும் அரையர்கள் கதற, ஆழ்வாரின் சிரம் மீது திருத்துழாய் சமர்ப்பித்துக் கொண்டே இருப்பார்கள் அர்ச்சகர்கள்.

     நம்பெருமாள், நம்மாழ்வார் ஆகிய இருவரும் அர்ச்சா ரூபமாக இருந்தாலும் இருவரின் திருமேனியிலும் ஒரு தெய்வீக சிலிர்ப்பையும், நம்மாழ்வாரிடம் தெய்விகமான, அமைதியான, அழகு ததும்புகிற பொலிவையும், அரங்கனிடம் பெரும் வாட்டத்தையும் அப்போது கண்டு உணரலாம்!

   அரங்கனையும் ஆழ்வாரையும் காணக் காண ஒரு பரவசம், மெய்சிலிர்ப்பு, உயிரோட்டம், அசாத்திய அதிர்வு. இருவரின் உணர்வு பூர்வமான திருவுள்ளப் பரிமாற்றத்தை அர்ச்சையிலும் காண்பது என்பது அரிது. இந்த அரிய நிகழ்வை உளப் பூர்வமாக பலர் கண்ணீர் கசிய தரிசிக்கலாம்!

      இராப்பத்தின் நிறை நாள் நம்மாழ்வார் மோட்சம். பத்து நாட்களாக சொர்க்க வாசலில் நின்று இறைவன் தாளடி அடைய வேண்டும் என்று கெடுமிடராயவெல்லாம் கேசவாவென்று ஒன்றுமோராயிரம் உள்ளுவார்ர்க்கு உம்பரூரே என்று இன் தமிழ் ஆயிரம் பாடிய நம்மாழ்வாருக்கு  வைகுந்தப் பேற்றை எம்பெருமான் வழங்குகின்றார்.

அரங்கன் ஆழ்வாரைத் திருப்பித் தரும் வைபவம்

      இராப்பத்தின் ஒவ்வொருநாளும் பரமபத வாசல் வழியாக எழுந்தருளும் நம்மாழ்வார் சரணாகதியின் மூலம் எம்பெருமான் திருவடி அடைகின்றார். பின் உலகில் உள்ளோர் எல்லோரும் தாங்கள் உய்ய ஆழ்வாரை இந்த நானிலத்திற்கு தந்தருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய அவ்வாறே பெருமாள் அனுகிரகிக்க ஆழ்வாரை திருப்பி தருவதாக ஐதீகம்.

       இராப்பத்தில் தினமும் நடைபெறுவது போல எம்பெருமான் புறப்பாடு கண்டருளி, சொர்க்க வாசல் சேவை தந்தருளி இராஜ நடை, சிம்ம நடை, நாக நடை, காவடி சிந்து கண்டருளி ஆஸ்தானத்திற்கு எழுந்தருளுகின்றார். ஆழ்வார் ஆச்சாரியார்களுக்கு அருளப்பாடு ஆகி, சாற்று முறை துவங்குகின்றது.

       அடைந்தார்க்குத் தானே துணையாகின்ற திருமோகூர்க் காளமேகப் பெருமாளைச் சரணமடைந்து ஆழ்வார் தாம் பிறவித்துயரொழிந்து வீடுபெறக் கருதியதை அருளிச் செய்த

தாள் தாமரைத் தடமணிவயல்திருமோகூர்
நாளும்மேவிநன்கமர்ந்துநின்று அசுரரைத்தகர்க்கும்

தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய்
காளமேகத்தையன்றி மற்றின்றிலம் கதியே

 என்னும் பாசுரத்துடன் சாற்று முறை துவங்குகின்றது.

பணி நெஞ்சே! நாளும் பயமபரம்பரனை
பிணியொன்றும் சாரா பிறவி கொடுத்தருளும்
மணிநின்றசோதி மதுசூதனன் என்னம்மான்
அணிநின்ற செம்பொன் அடலாழியானே

கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே

        என்று எம்பெருமானிடம் பக்தியுடையவர்கள் செய்ய வேண்டிய செயல்களை கூறிய பாசுரங்கள் சேவித்து எட்டாம் திருவாய் மொழி வரை சேவித்து நிறுத்துகின்றனர்,

    நம்மாழ்வாரை ஆட்கொள்ள எம்பருமான் திருவுள்ளம் கொண்டபடியால் சொர்க்கத்தின் வாசல் கதவுகள் திறக்கின்றன, அதை உணர்த்தும் வகையில் இதுவரை ஆஸ்தானத்தில் எழுந்தருளி இருந்த ஆழ்வாரை எம்பெருமானின் திருமுன்னே ஏழப்பண்ணுகின்றனர் பட்டர்கள் குழந்தையைப் போல கைத்தல சேவையினால்.
நனி சிறந்த அறிவு பெற்ற ஆழ்வார் திருநாட்டுக்குச் சென்ற போது

சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்கின
ஆழ்கடலலைதிரை கையெடுத்தாடின
பூரணபொற்குடம் பூரித்தது உயர் விண்ணில்
கீதங்கள் பாடினர் கின்னரர்கெருடர்கள்

கணங்கள்வலம்புரி கலந்தெங்கிமிசைத்தனர்

வைகுந்தம் புகுதலும் வாசலில்வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமதிடம் புகுதென்று
வைகுந்த்தமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்னவர் விதியே

விதிவகை புகுந்தனரென்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நற்சுண்ணமும் நிறை குடவிளக்கமும்
மதிமுகமடந்தையர் ஏந்தினர் வந்தே.

        இந்த பாசுரங்கள் எல்லாம் வெகு மெதுவாக சேவிக்கப்படுகின்றது. பத்தாம் திருவாய்மொழி துவங்குகின்றது.

முனியே! நான்முகனே! முக்கண்ணப்பா! என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண்கருமாணிக்கமே என் கள்வா!
த்னியேனாரியிரே! என்தலைமிசையாய் வந்திட்டு
இனிநான் போகலொட்டேன் ஒன்றும்மாயஞ்செய்யேலென்னையே

       என்று மூவருள் முதல்வராகிய மூர்த்தியாகிய கருமாணிக்கத்தின் பொற் பாத்ங்களை பற்றிக் கொண்டு ஒன்றும் மாயம் செய்யாதே மணிவண்ணா என்று சேவிக்கின்றார். இத்திருவாய்மொழியின் எட்டு பாசுரங்கள் சேவித்த பின் நம்மாழ்வார் திருவடி தொழல் மற்றும் நம்மாழ்வார் மோட்சம் துவங்குகின்றது.

     பட்டர்கள் ஆழ்வாரை பெருமாளை கையில் தாங்கிச் சென்று பெருமாளை சுற்றி வந்து ஆழ்வாரை பெருமாளின் திருப்பாத கமலங்களிலே சேர்ப்பித்து சிறிது சிறிதாக திருத்துழாயினால் ஆழ்வார் முழுதும் மறையும் வண்ணம் சூடுகிறனர். சாம்பிராணி புகையால் பெருமாளும் ஆழ்வாரும் மறைக்கப்படுகின்றார்.

நம்மாழ்வார் மோட்சம் (திருத்துழாயால் ஆழ்வார் மூடப்படல்)

 சூழ்ந்த கன்றாழ்ந்துயர்ந்த முடிவில் பெரும்பாழேயோ?
சூழ்ந்ததனில் பெரிய பரநன் மலர் சோதீயோ!
சூழ்ந்ததனில் பெரிய சுடர் ஞானவின்பமேயோ!
சூழ்ந்ததனில் பெரிய என்னவாவறச் சூழ்ந்தாயே

அவாவறச்சூழ் அரியை அயனையரனையலற்றி
அவாவற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவிலந்தாதிகள் இவையாயிரமும் முடிந்த
அவாவிலந்தாதியிப்பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே

      என்னும் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. ஆசைகளை விட்டு எம்பெருமானிடம் சரணாகதி செய்து நம்மாழ்வார் திருநாட்டிற்க்கு ஏகி விட்டார்.

ஆனால் இப்பூவுலகில் மானிடர்களை நல் வழிப்படுத்த ஆழ்வாரை திருப்பித்தர பட்டர் பெருமான் விண்ணப்பம் செய்கின்றார். பட்டரின் விண்ணப்பத்தை ஏற்று பெருமாளும் நீங்கள் உய்ய ஆழ்வாரைத் திருப்பித் தந்தோம் ! தந்தோம்! தந்தோம்! என்று திருவாய் மலர்ந்தருளுகின்றார். பின் திருத்துழாய் நீக்கப்பட்டு நம்மாழ்வார் மீண்டும் ஆஸ்தானத்தில் எழுந்தருளுகின்றார். பின் பெருமாளுக்கும் ஆழ்வார் ஆச்சாரியர்களுக்கும் தீபாராதணை, பின் தீர்த்த பிரசாத விநியோகம், திருத்துழாய் பிரசாதம் வினியோகிக்கப் படுகின்றது. எல்லா வைணவத்தலங்களிலும் ஆழ்வார் திருவடி தொழல் உற்சவம் நடைபெறுகின்றது.

***********************************************************

பன்னிரு ஆழ்வார்கள் (HRE Links)

RELATED ARTICLES-ஆழ்வார்கள்

Pl Also, Click & Look for each ஆழ்வார் at the HRE Links for ஆழ்வார்கள் given below

 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மெய்யன்பரே,

 • இந்த லிங்கிள் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.
 • மேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் சிறப்பாக இருக்கும்
 • இந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி

Also, Please click below to go  to CONTENTS for all the Articles in HRE:

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

Advertisements