Tags

, , , , , , , ,

மதுரகவியாழ்வார்-அவதாரம்

     பாண்டிய நாட்டில் திருக்கோளூரில் கி.பி. 8 ம் நூற்றாண்டு (745 – 805 AD) ஈசுவர ஆண்டு சித்திரைத் திங்கள் வளர்பிறை சதுர்த்தசி திதியில் வெள்ளிக்கிழமையன்று சித்திரை நட்சத்திரத்தில் கருடனின் அம்சமாய் மதுரகவியாழ்வார் திருவவதரித்தருளினார்.

இவர்தம் சிறுவயதிலேயே சிறந்த பாடல்கள் இயற்றவும், கேட்போரின் செவியும் மனமும் குளிரும் வண்ணம் இனிய பாடல்களைத் தன் மதுரமான குரலில் பாடவும் வல்லவர்.

புனித யாத்திரை

     நிலையற்ற இப்பூலோக வாழ்வின் மீது பற்றின்றி, எம்பெருமானின் திருப்பாதத்தைத் தேடிப் புனித யாத்திரை மேற்கொண்டு, அனைத்து திருத்தலங்களுக்கும் சென்றார்.

     கயா, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை சென்று ஸ்ரீமன், நாராயணனைத் தரிசித்து, இறுதியாக அயோத்யாவை அடைந்தார். அங்கு அவர் தம் திருப்பயணத்தை முடித்துவிட்டு, தாம் பிறந்த ஊருக்கு வர புறப்பட்ட போதுதான், நம்மாழ்வாரிடம் அவரை அழைத்துச் சென்ற அந்த பேரொளியைக் கண்டார்.

*****Please click below to go to CONTENTS for all the Articles in HRE: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

நம்மாழ்வார் பேரொளி

     அயோத்தியில் தங்கியிருந்தபோது தெற்கே ஒரு பேரொளியைக் காணுற்று வியப்படைந்தார். மறுநாளிரவிலும் அதே ஒளி அவ்வாறே தோன்றிற்று. மதுரகவிகள் ‘தெற்கே ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ளது; அதைச் சென்று காணவேண்டும்’ என்று தீர்மானித்து தெற்கு நோக்கிப் புறப்பட்டார். அவ்வொளி தோன்றிய இடமாகிய திருக்குருகூரை அடைந்தார்.

           ஆழ்வார் திருநகரி வந்தவுடன் அந்த ஜோதியைக் காணாத ஆழ்வார், அந்த ஊர் மக்களிடம் இந்த ஊரின் சிறப்பு என்ன எனக் கேட்டார். ஊர் மக்களும், அந்த ஊர் புளிய மரத்தின் கீழ் பத்மாசனத்தில் சின் முத்திரையோடு அமர்ந்திருக்கும் நம்மாழ்வாரைப் பற்றி கூறினார்கள்.

மதுரகவியாழ்வார்-நம்மாழ்வார் சந்திப்பு
(Pl Refer HRE-16 ; Click the LINK below)

HRE-16: நம்மாழ்வார்: 5-7-2015
https://drdayalan.wordpress.com/2015/07/05/hre-16

புளியமரத்தின் கீழ் எழுந்தருளியிருந்த அவ்வொளியாகிய நம்மாழ்வாரை சமாதியிலிருக்கக் கண்டார். முதலில் ஒரு பெரிய கல்லை கீழே போட்டு அந்த சத்தத்தினால் அவர் சமாதியைக் கலைத்தார். மேலும் அவர் நிலையை அறிய விரும்பி, உடம்பில் ஆத்மா வந்து புகுந்து எதனைஅனுபவித்து எங்கே இருக்கும் ?என்று நினைத்து,

3-Nam & MKavi

மதுரகவியாழ்வார்-நம்மாழ்வார்

     “செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத்தின்று எங்கே கிடக்கும்? என்று வினவினார்.

     “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்என்று விடை வந்தது.

பிறந்தது முதல் பெற்றவர்களிடம்கூட பேசாத நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வாரிடம் அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும் (அந்த உடலின் தொடர்பால் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்தபடி அங்கேயே இருக்கும்) என்று பதில் உரைத்தார்.

      இந்த வினா-விடை இரண்டிலும் தத்துவம் புதைந்துள்ளது. ‘சூட்சுமமாயிருக்கும் ஜீவன் பிறப்பெடுத்தால் அதன் வாழ்வு எப்படி இருக்கும்?’ என்பது கேள்வி. ‘தன் புண்யபாவங்களின் பயன்களை நுகர்வதே அதன் வாழ்க்கையாக இருக்கும்’ என்பதே விடை.

    மதுரகவிகள் அக்கணமே அவரை தன் ஆசாரியராக வரித்தார். நம்மாழ்வாரும் இவரை அடிமை கொண்டு, மூவகைத் தத்துவங்களின் இயல்பையும் மற்றும் அறியவேண்டிய யோக இரகசிய உண்மைகளையும் சீடனுக்கு உபதேசித்தார்.

   சிறந்த குரு பக்திக்கு, மதுரகவியாழ்வாரே சிறந்த எடுத்துக்காட்டு . உண்ணும் சோறும், பருகும் நீரும், திண்ணும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே என்று இருந்தவர் நம்மாழ்வார். ஆனால் மதுரகவியாழ்வாருக்கு எல்லாமும் நம் நம்மாழ்வாரே ஆவார். மதுரகவியாழ்வார், கடவுள் மேல் கொண்ட பக்தியைக் காட்டிலும், தன் குரு மேல் கொண்ட பக்தியே அதிகம்.

கண்ணி நுண் சிறுத்தாம்பு-மதுரகவியாழ்வார்

     நாளடைவில்  நம்மாழ்வார் தமக்கு செய்த மாபெரும் அனுக்ரஹத்தை நினைந்து உருகி அவரைக் குறித்து பதினோரு பாசுரங்களால் ஆன ஒரு பாமாலை இயற்றினார். அப்பாமாலையின் முதற்பா, “கண்ணிநுண் சிறுத்தாம்பு என்று தொடங்குவதால் அதற்கு  “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்பது பெயராயிற்று.

கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணி
யபெரு மாயன்என் னப்பனில்
நண்ணித்
தென்குரு கூர்நம்பி யென்றக்கால்
அண்ணிக்
கும்அமு தூறுமென் நாவுக்கே….1

  முடிகளையுடைத்தாய் நுட்பமாய் கயிற்றினால் யசோதைப்பிராட்டி தன்னைக்கட்டும்படி பண்ணுவித்துக்கொண்ட விசேஷ ஆச்சரிய சக்தியுக்தனாய் எனக்கு ஸ்வாமியான ஸர்வேச்வரனை விட்டு கிட்டி ஆச்ரயித்து தெற்குத் திசையிலுள்ள (ஆழ்வார் திருநகரியென்னும்) குருகூர்க்கு நிர்வாஹகாரன ஆழ்வார் என்று சொன்னால். பரமபோக்யமாயிருக்கும் என் ஒருவனுடைய நாவுக்கே அம்ருதம் ஊறா நிற்கும்.

    நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நம்மாழ்வாரைப் பற்றி அமைந்த இந்த 11 பாடல்களும் இறைவனைக் குறிப்பவை அல்ல. இந்த கண்ணிநுண் சிறுத்தாம்பு என்னும் பாடல்தான், அந்த 4000 திவ்ய பிரபந்த பாடல்கள் என்னும் பொக்கிஷத்திற்கான திறவுகோல் ஆகும்.

       நம்மாழ்வாரை நாம் அழைக்கும், வேதம் தமிழ் செய்த மாறன் என்னும் பெயர் மதுரகவியாழ்வார் அளித்ததே! அதோடுஅளவில்லா ஞானத்து ஆசிரியர் என்றும் தம் குருவை மதுரகவியாழ்வார் அழைத்தார்.

    தம் குருவுக்காக அவர் ஒரு விக்ரகம் செய்து, அவருக்கு அணுதினமும் அபிஷேகம், ஆராதணை செய்து வணங்க வேண்டுமென்று எண்ணி, தாமிரபரணி ஆற்று நீரைக் காய்ச்சி ஒரு விக்ரகமும் செய்தார்.

    நம்மாழ்வார், மதுரகவியாழ்வாரிடத்தில் கனவில் தோன்றி, ‘இவ்விக்ரகம் தன்னுடையது அல்லவென்றும், இது பின்னாளில் வரப்போகும் ஸ்வாமி ராமானுஜரின் (பவிஷ்யத் ஆச்சார்யார்) விக்ரகம் என்று கூறினார். அதன் பிறகு, நம்மாழ்வாருக்குத் தனியாகப் புது விக்ரகம் செய்தார்.

    நம்மாழ்வார் காலத்துக்குப் பின் அவரது விக்ரகத்தை ஆழ்வார் திருநகரியில் எழுந்தருளச் செய்தார்.இவை இரண்டும் இன்னும் இருக்கின்றன.அதனால் மதுரகவியாழ்வார், ஆழ்வார்க்கடியன் என்று அழைக்கப்படுகிறார்.

ஆச்சாரியனுக்கே முதலிடம்

    வைணவ சம்பிரதாயத்தில் ஆச்சாரியனுக்கே முதலிடம். அப்படி ஆச்சாரியனான நம்மாழ்வாரைப் போற்றித் துதித்தவர் மதுரகவி ஆழ்வார். தூணிலும் துரும்பிலும் வியாபித்திருந்த பெருமாளை ‘உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே’, என்று துதித்திருந்தவர் நம்மாழ்வார்.

    நம்மாழ்வாருக்குக் கண்ணன் உயிர் தெய்வம் என்றால், மதுரகவி ஆழ்வாருக்கோ நம்மாழ்வாரே உயிர். ஸ்ரீபிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியார் போன்ற பெரியவர்கள், பகவத் பக்திகூட வந்துவிடும், பாகவத பக்தி வருதல் அபூர்வம் என்று குறிப்பிட்டுச் சொல்வார்கள்.

அன்பன் தன்னை அடைந்தவர் கட்கு எல்லாம்
அன்பன்
தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய்
மதுர கவி சொன்ன சொல்
நம்புவார்
பதி வைகுந்தம்
காண்மினே –11

    இப்பாசுரத்தில் மதுரகவி ஆழ்வார் அன்பன் என்ற சொல்லை மூன்று முறை பயன்படுத்தியிருக்கிறார். மூன்று இடங்களிலும் மூன்று வெவ்வேறு பொருள்களை இந்தச் சொல் தருகிறது. முதல் அன்பன் என்ற சொல்லுக்குப் பொருள் கருணை. இரண்டாம் அன்பன் என்பது ஆச்சார்யன் பெயர் (அதாவது தென் குருகூர் நம்பியான நம்மாழ்வார்). மூன்றாம் அன்பனுக்குப் பொருள் அடியவன், அதாவது தன்னையே சொல்லிக்கொள்கிறார்.

தமிழ்ச் சங்க புலவர்கள்

    மதுரகவி, ஆழ்வார் தம் குருவான நம்மாழ்வாரின் பெருமைகளையும் பிரபந்தங்களையும் உலகெங்கும் பரப்பி உயர்வுற்றார்.

     நம்மாழ்வார் திருநாடு அலங்கரித்த பின்னர், அவருடைய அர்ச்சை வடிவ உருவத்தைத் திருக்குருகூர் நகரில் எழுந்தருளச் செய்து போற்றி வந்தார்.
மதுரகவியார்,  நம்மாழ்வாருக்கு நித்திய நைமித்திக விழாக்களையெல்லாம் சிறப்புற நடத்தி வந்தார். அத்திரு விழாக்களில் வேதம் தமிழ் செய்த மாறன் வந்தார்;  திருமாலுக்குரிய தெய்வப் புலவர் வந்தார்;  அளவிலா ஞானத்து ஆசிரியர் வந்தார் என்பவை முதலாகப் பல விருதுகளைக் கூறித் திருச்சின்னம் முழங்கினார்.

    இதனைக் கேள்வியுற்ற மதுரைச் சங்கத்தாரது மாணாக்கர்கள் எதிரில் வந்து, ”உங்கள் ஆழ்வார் பக்தரே அன்றி பகவானல்லரே. இவர் சங்கமேறிய புலவரோ? இவர் பாடிய திருவாய்மொழி சங்கமேறிய செய்யுளன்று. இவரை வேதம் தமிழ் செய்தவர் என்று புகழ்வதும் தகுமோ?” என்று பலவாறு பேசி விருதுகளைத் தடுத்துரைத்தனர்.

    அதற்கு மதுரகவிகள் மனம் பொறாமல் வருந்தி,  ”இவர்களின் கர்வம் பங்கமாகும்படி தேவரீர் செய்தருள வேண்டும்” என்று நம்மாழ்வாரைத் துதித்தார்.

நம்மாழ்வாரும் ஒரு கிழ வடிவம் ஏந்தி ,  திருவாய்மொழியில் கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணுந் திருநாமம் திண்ணம் நாரணமே’ என்ற பாசுரத்தின் முதலடியை ஒரு சிற்றேட்டில் எழுதி ,  சங்கப் பலகையின் மீது வைத்தால் அவர்கள் செருக்கு அடங்கும் என்று கூறியருளினார்.

     சங்கப் பலகையில் ஒரு முனையில் கண்ணன் கழலிணை பாசுரம் எழுதி வைத்த நறுக்கு ஓலை வைக்கப்பட்டது.  மறுமுனையில் புலவர்கள் ஏறி அமர்ந்தனர்.  சங்கப் பலகை, பொற்றாமரைப் பொய்கையில் மூழ்கி, தன் மேலிருந்த புலவர்களையெல்லாம் நீரில் வீழ்த்தி, மேலெழுந்து தன்மீது வைத்த சிறு முறியை மாத்திரம் ஏந்திக் கொன்டு மிதந்தது.

       நீரில் விழுந்து எழுந்து, நீந்திக் கரை சேர்ந்த சங்கப் புலவர்கள், வேதம், வேதத்தின் முடிவுப் பொருட்கள் முதலான யாவற்றையும் பிறரால் கற்பிக்கப்படாமல் தாமேயுணர்ந்த நம்மாழ்வாரது இறைமை எழில் பொருந்திய திறனைத் தெரிந்து செருக்கு அழிந்தனர்.  மதுரகவியாழ்வாருடன் சேர்ந்து நம்மாழ்வாரின் விருது கூறல் முதலியவற்றை முன்னிலும் சிறப்பாக நடத்தி வந்தனர்.

    தொடர்ந்து, மதுரகவியாழ்வார் தமது குருவாகிய நம்மாழ்வாருக்கு பலவகை விழாக்களையும் ஆராதனைகளையும் நடத்தி வந்ததோடு, ஆழ்வாரது அருந்தமிழ் மறைகளின் பொருட்களைப் பலரும் உணரும்படி உரைத்து சிலகாலம் எழுந்தருளியிருந்து பின்பு பேரின்பப் பெருவீட்டை அடைந்தார்.

மதுரகவிகளை ஆழ்வார்கள் வரிசையில் சேர்த்துக் கொள்வதற்கு முக்கியக் காரணம், அவர் நம்மாழ்வாரின் பிரதம சீடராக இருந்து திருவாய்மொழியை நெறிப்படுத்தினார் என்பதோடு, அதைப் பரப்பி ஒழுங்காகப் பாராயணம் செய்ய ஏற்பாடுகளும் செய்தார் என்பதனால்தான்!

    மதுரகவியாரும், நம்மாழ்வாரின் அருளிச்செயல்களான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்று நான்கு பிரபந்தங்களை  ஓலைகளில் எழுதினார். இவை நான்கும் வேத சாரமாக கருதப்படுகின்றன.

“மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
`நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்”

    என்பது மதுரகவி ஆழ்வார் வாக்கு.

நாதமுனிகள்(Pl Refer HRE-10 ; Click the LINK below)

HRE-10: நாதமுனிகள்:7-3-2015
https://drdayalan.wordpress.com/2015/03/07/hre-10

மதுரகவியாருக்கு பிறகு நம்மாழ்வாரின் பாசுரங்களை இவரது சீடர்கள் அனுசந்தித்து வந்தார்கள்.  எனினும் நாளடைவில் அவை வழக்கில் காணாமல் போயின.

       ஆழ்வார்கள் காலத்திற்குப் பிறகு தமிழகத்தில் தோன்றிய முதல் வைணவ ஆச்சாரியாரான நாதமுனிகள் (ஸ்ரீ ராமானுஜருக்கு முற்பட்டவர்) ஒரு சமயம் கும்பகோணம் நகரில் அமைந்த ஸ்ரீ ஆராவமுதப் பெருமாள் திருக்கோயிலில் தரிசனம் செய்தபோது பக்தர்கள் சிலர் நம்மாழ்வார் திருவாய்மொழிப்பதிகம் ஒன்றை ஓதியதைக் கேட்டார். அப்பதிகத்தின் இறுதியில் ஓராயிரத்துள் இப்பத்தும் என்று அமைந்ததைக் கேட்டு, மீதியுள்ள 990 பாசுரங்களை அறிவீரா என்று வினவ, அந்த பக்தர்களோ இந்த ஒரு பதிகத்தை மட்டுமே செவிவழியாக அறிந்து ஓதி வருகிறோம் என்று பதில் கொடுத்தனர்.

       நம்மாழ்வாரின் அவதாரத் தலமாகிய ஆழ்வார் திருநகரிக்கே சென்று அறிந்து வர எண்ணி, அங்கு சென்றார் நாதமுனிகள்.

    அந்தத்தலத்து வைணவர்களோ, நம்மாழ்வாரின் சீடராகிய மதுரகவியாழ்வார் இயற்றிய கண்ணிநுண்சிறுத்தாம்புப் பதிகத்தின் பெருமையைக் கூற, நாதமுனிகளும் அந்தப் (பதினோரு பாசுரங்கள்) மட்டும் அறிந்து கொண்டு பதிகத்தை இடைவிடாது பன்னீராயிரம் முறை ஓதினார்.

  இதனால் மகிழ்ந்து காட்சியளித்த நம்மாழ்வார், தமது திருவாய்மொழிப்பாசுரங்கள் ஆயிரம் மட்டுமின்றி, மற்ற ஆழ்வார்களின் பிரபந்தங்களையும் நாதமுனிகளுக்குப் போதிக்க, நம்மாழ்வார் அருளினைப் பெற்று திவ்ய பிரபந்தத்தை மீட்டார்  , அவர் மூலமே திவ்வியப் பிரபந்தம் தமிழ் மக்களைச் சென்றடைந்தது.

    இவ்வாறு மதுரகவியாழ்வாரின் குருபக்தி, அவரையும் ஆழ்வார் ஆக்கி, நம் அனைவரையும் ஆழ்வார் பாசுரங்களை ஆழ்ந்து அனுபவிக்க வைத்த திறம் பெருமையிலும் பெருமை மிக்கதாகும்.

       ஆச்சார்யனுடைய கைங்கர்யமே பரமபதத்திலும் பேறு அளிப்பதாகும். அந்த ஆச்சார்யன் மீது கொள்ளும் பக்தியே அதைப் பெறுவதற்கான வழியும் ஆகும் என்பதுதான் கண்ணிநுண் சிறுத்தாம்பு அளிக்கும் விளக்கமாகும்.
     மதுரகவியாழ்வார் ஆச்சார்ய பக்தியின் பெருமையை எடுத்துச்சொல்ல அவதரித்தவர்.
அதாவது, ஆச்சார்ய பக்தியும், பெருமானிடத்தில் உள்ள பக்தியும் படிக்கட்டுகளாக் கருதினால், பெருமான் மீது கொண்ட பக்தி என்பது முதல் படியாகும், ஆச்சார்ய பக்தி இரண்டாவதுப் படியாகும்.
ஒருவேளை பெருமானிடத்தில் உள்ள பக்தி குறைந்து அப் படிக்கட்டில்  இருந்து தவறினால், சம்சாரம் என்னும் கடலில் விழுந்து விடுவோம். ஆச்சார்ய பக்தி என்னும் படியில் இருந்து தவறினால், அடுத்தப்படியான பெருமானின் மீது கொண்ட பக்தி காப்பாற்றி விடும்.

******************************************************************

RELATED ARTICLES- ஆழ்வார்கள்

Pl Also, Click & Look for each ஆழ்வார் at the HRE Links for ஆழ்வார்கள் given below

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மெய்யன்பரே,

  • இந்த லிங்கிள் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.
  • மேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் சிறப்பாக இருக்கும்
  • இந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி

Please go  to CONTENTS for all the Articles in HRE:

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

Advertisements