Tags

, , , , , ,

1-Kulas Alwar

குலசேகர பெருமாள்

குலசேகரர் அவதாரம்(

ஸ்ரீகௌஸ்துப அம்சம் (மாசி சுக்ல பட்ச துவாதசி புனர்பூசம்)

     குலசேகர ஆழ்வார், சேர மன்னரும் சந்திர குலத்தவருமான, திருடவிரதற்கு மகனாக,கொல்லி நகரில் (திருவஞ்சிக்களம்(கேரளம், (திருச்சூர் அருகில்) பிரபவ வருடம் ( 750 – 780AD) மாசி மாதம் சுக்ல பக்ஷம் துவாதசி வெள்ளிக் கிழமை, புனர்பூச நட்சத்திரத்தில் ஸ்ரீகௌஸ்துபாம்ஸராய் (பெருமாள் அணியும் இரத்தின மாலையின் அம்சம்) பிறந்தார்.

      குலசேகர ஆழ்வார் நால்வகைப் படை கொண்டு பகைவர்களை வென்று நீதிநெறி பிறழாமல் செங்கோல் செலுத்திக் கொல்லி நகரை அரசாண்டு வந்தார். தனதாட்சிக்குட்பட்ட தமிழ் மண்டலங்களான திருவிதாங்கூர் , குட்டநாடு (மலபார்), தென்பாண்டிநாடு (நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகள்) ஆகியவற்றின் தலங்களைச் தரிசித்துள்ளார்.

*****Please click below to go to CONTENTS for all the Articles in HRE: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

குலசேகர பெருமாள்

    இவருக்கு இறைவன் காட்சி தந்தமையால் இன்பமும், செல்வமும், அரசாட்சியும் தமக்கு வேண்டாமென்று துறவினை மேற்கொண்டார். இவர் பெரிய பெருமாளாகிய ராமபிரானிடத்தில் அன்பு பூண்டவரானதால் ‘குலசேகரப் பெருமாள்’ என்றே பெயர் வழங்கலாயிற்று.

சிங்க மராத்தியர்தம் கவிதைக் கொண்டு, சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம் என்னும் பாடலுக்கேற்ப்ப அங்கு யானைத்தந்தம் மட்டுமல்ல மாலின் மாலையாய் ஒரு மன்னவன் குலசேகரப் பெருமாள் அவதரித்துள்ளார்.

    குலசேகர பெருமாள் சாதாரண மாந்தராய் மண்ணில் பிறக்கவில்லை. அவர் மூவேந்தர்களில் ஒருவரான சேரப் பேரரசின் செல்வக் குமரனாய் அவதரித்தார். அரச குடும்பத்தில் பிறந்த இவர், மன்னனாய், மண்ணைக் கைப்பற்றி வாழாமல், மாலவனின் மனதைக் கைப்பற்ற எண்ணி வாழ்ந்த உத்தமர்.

      பாலகனாய் இருந்த காலத்திலே இவர் வேதங்கள், வெவ்வேறு மொழிகள் என்று கல்விகேள்விகளில் சிறந்து விளங்கியதோடல்லாமல், வாள் வீச்சு, அம்பெய்தல், குதிரையேற்றம், யானை ஏற்றம், தேரோட்டல், கதை, கம்பு, சிம்பு என்று அனைத்திலும் அவர் வல்லவராய் இருந்தார். உரிய காலத்தில் அரச பதவியேற்ற இவர், செவ்வனே அரசாட்சி நடத்தி அனைவரின் அன்பையும் மதிப்பையும் பெற்றார். முகிலும் மாதம் மும்மாரி மாறாமல் பெய்து எல்லா நலமும், வளமும், செல்வமும் பெற்று சேரநாடு பொன்விளையும் பூமியாய் பொலிவுற்று விளங்கியது.

      இவர் போர்க்களத்தில் சென்றால், வாகை மாலையன்றி வேறு எதையும் சூடமாட்டார். தன் தோள் வலிமையாலும், அறிவுக்கூர்மையினாலும், ஸ்ரீரங்கநாதரின் அருளினாலும் எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடச்செய்தார். அவரது திறமையையும், பேராண்மையையும் கண்டு, பாண்டிய மன்னன் தன் மகளை அவருக்கு மணம் செய்து வைத்தார்.

      மன்னன் குலசேகரருக்கு ஒரு ஆண்மகவும், பெண்பிள்ளை ஒன்றும் பிறந்தது. தன் மகனுக்கு திடவிரதன் என்று தன் தந்தையாரின் பெயரையேச் சூட்டினார். இவ்வாறு வீட்டையும், நாட்டையும் கருத்துடன் ஆண்டு வந்த குலசேகரருக்கு, போரில் பல உயிர்கள் இறப்பது அவருக்கு வெறுப்பை உருவாக்க ஆரம்பித்தது. அதனால், நாளாக நாளாக அரச வாழ்வில் விருப்பங்குறைய ஆரம்பித்தது.

இராமனின் கதைகள்

      எம்பிரான் இராமராசனின் வாழ்வியலிலும், மழலைக்கண்ணனின் கள்ளக் குறும்புக் கதைகளிலும் காலத்தைக் கழிக்க ஆரம்பித்தார்.

     ஒவ்வொரு நாளும் பண்டிதர்களை அழைத்து, எம்பிரான் இராமனின் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அதில் தம்பி இலக்குவனனை சீதாப் பிராட்டிக்குக் காவல் வைத்து விட்டு, அசுரர்களை எதிர்க்கத் தனியே சென்றார், இராமர் என்று சொல்லக்கேட்டார். 2-Raman      இதைக்கேட்ட, குலசேகரர், தனியே இருக்கும் இராம்பிரானுக்கு அசுரர்களால் ஏதேனும் துன்பம் நேருமோ என்று அஞ்சி, தன் நால்வகைப்படைகளையும் இராமபிராணுக்குத் துணையாய் அனுப்ப எத்தனித்தார். அப்பொழுது, அந்த பண்டிதர், இராமர் ஒருவரேத் தனியாய் அவர்களை எல்லாம் வென்றுவிட்டார், என்று கூறி சமாதானப் படுத்தினார்.

   அவரது பற்றும் பக்தியும் இத்துடன் நின்று விடவில்லை. அவர் இராமபிரானுக்காக ஒரு பொற்சிலையை நிர்மாணித்து, அதை தினமும் வழிபட்டு வந்தார்.

அமைச்சர்கள் சூழ்ச்சி

      மன்னனின் நிலையை அறிந்த அவரது அமைச்சர்கள், இந்நிலை நீடித்தால், நாட்டின் நிலைமை மிகவும் மோசமாகி விடும் என்று எண்ணி, அவருக்கு ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மேலும், விஷ்ணு பக்தர்கள் மேலும் இருந்த மதிப்பையும் மரியாதையையும் அகற்றுவதற்கு ஒரு ஏற்பாடு செய்தனர்.

       அரன்மனையுள் அரசன் வணங்கும் பெருமாளின் திருவாபரணப்பெட்டியில் இருந்தவற்றுள் மிக அழகான ஒரு நவரத்தின மாலையை எடுத்து மறைத்து அரசனிடம் ஆபரணத்தைத் திருடியது விஷ்ணு பக்தர்கள் தான் என்று பழி சுமத்தினர்

      இதைக்கேட்ட குலசேகரர், செந்தனலில் தன்னைச் சுட்டது போல் துடித்தார். ஒருநாளும் எம்பிரானின் பக்தர்கள் , வெறும் பொன், பொருள் மீது பற்று கொண்டவர்கள் அல்ல, என்று அவர் தீவிரமாக நம்பினார்.

       ஒரு குடத்தினுள் நச்சுப் பாம்பொன்றை இட்டு மூடினர். அடியவர் தாம் குற்றம அற்றவர் எனில் அக் குடத்தில் கை விட்டு மீள வேண்டும் என்றனர். அரசரோ அடியவரைத் தடுத்து அவர்கள் சார்பாக “பேரனன்பர் கொள்ளார்” என்று கூறி கோவிந்தனை வேண்டிக் குடத்தில் கை விட்டு வெற்றிகரமாக மீண்டார். அமைச்சர்கள் மனம் வருந்தி மன்னன் தாள் பணிந்து நவரத்தின மாலையை சமர்ப்பித்து மன்னிக்க வேண்டினர்.

ஆட்சிப்பொறுப்பை துறத்தல்

    இதனால் மனம் நொந்த குலசேகரரும், தன் ஆட்சிப்பொறுப்பை மகன் திடவிரதனிடம் ஒப்படைத்து விட்டு, அடியாரை மதிக்காத, மக்களிடையே வாழ விருப்பற்ரவராய்ஆனான செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன் என்று தன் விருப்பத்திற்குரிய அடியார் குழாத்தோடு திருவரங்கம் சென்றடைந்து, அடியவர் குழாத்தொடு, அணியரங்கத்தம்மானுக்கு பணி செய்து, 105 பாசுரங்களைக் கொண்டத பெருமாள் திருமொழி என்ற திவ்யப்ரபந்தத்தை பாடியருளினார்.

     இராமபிரானின் பல்வேறு புனிதத்தலங்களுக்கும் புனித யாத்திரை மேற்கொண்டு, பல்வேறு பாடல்கள் பாடினார்.

   இராமபிரானைப் போலவே இவரும் திருவரங்க பெருமானை வழிபட்டார். இராமபிரானைப் பெருமாள் எனவும், திருவரங்கப் பெருமானை பெரிய பெருமாள் எனவும், திருவரங்கப் பெருமான் வீற்றிருந்த திருக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு, பெருமாளை மட்டுமே இவர் வணங்கியதால் குலசேகரப் பெருமாள் என்று அழைக்கப்பட்டார். குலசேகரப் பெருமாள், பெருமாள் மீது பக்திச்சுவைச் சொட்ட பாடிய பாடல்கள் பெருமாள் திருமொழி ஆகும்.

குலசேகர ஆழ்வார் வணங்கிய திருத்தலங்கள்

  திருவரங்கம், திருவேங்கடம், திருவித்துவக்கோடு,திருஅயோத்தி, திருக்கண்ணபுரம்,திருசித்திரக்கூடம்.

       திருவரங்கம் சென்று திருவரங்கப் பெருமானை வாயார வாழ்த்தி நின்று தம் அனுபவத்தைப் பெருமாள் திருமொழியில் 31 பாசுரங்கள் பாடியருளினார். இவர் திருவேங்கடம், திருக்கண்ணபுரம் முதலான திருத்தலங்களையும் பாடியுள்ளார்.

    பெருமாள் திருமொழியில் பத்து பாசுரங்கள் ராமபிரானுக்காகப் பாடப்படும் தாலாட்டுப் பாடல்களாக அமைந்துள்ளன. இதனிலுள்ள முதற்பாடல் தெய்வபக்தி உள்ள அத்தனை தமிழ்த்தாய்மார்களும் தங்கள் சேய்களுக்காகப் பாடியிருக்கக்கூடிய பாடல்:

மன்னு புகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்
கன்னி நன்மா மதில் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே!
என்னுடைய இன்னமுதே இராகவனே! தாலேலோ!

குலசேகரப்படி

   திருமலை ஆண்டவன் சன்னிதியில் ஆண்டவனின் பவளவாயை எக்காலும் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டுமென்றும், அதற்காக தன்னை அவர் கோயில் வாசற்படியாகவே வைத்துக்கொள்ளவேண்டுமென்றும் குலசேகரர் மனமுருக வேண்டிக்கொண்ட பாசுரம்:

3-Kulas Padiசெடியாய் வல்வினைகள் தீர்க்குந்திருமாலே
நெடியானே வேங்கடவா ! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே.

      இதனால் இன்றும் வெங்கடேசப் பெருமாளின் வாசற்படிக்கு குலசேகரப்படி என்ற பெயர் வழங்குகிறது.

    இவர் திருவேங்கடவனிடம் இவ்வாறு வேண்டிநின்றாலும் ஆண்டவன் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் என்ற காரணத்தால் ஸ்ரீரங்கநாதன் கோயிலிலும் கர்ப்பகிருகம் முன்னிருக்கும் படி குலசேகரன் படி என்று அழைக்கப்படுவதைப் பார்க்கலாம்.

 திருவரங்க பணி

    திருவரங்கம் பெரிய கோயிலில் மூன்றாவதாக இருக்கும் திருச்சுற்றிலே சேனைவென்றான் திருமண்டபம் என்பதைக் கட்டினார். இத்திருச்சுற்றையும் செப்பம் செய்தார். இதனாலேயே இம்மூன்றாவது சுற்றுக்கு இவரது பெயர் இன்றும் வழங்குகிறது. குலசேகராழ்வாரால் ”பவித்ரோற்சவ மண்டபம்” கட்டப்பட்டது. இந்த மண்டபம் உள்ள பிராகாரத்தை திருப்பணி செய்தவரும் இவரே!.

  4-SriRangam    பல திருத்தலங்களுக்கும் சென்று கடைசியாக மன்னார்கோயில் திருத்தலம் வந்தார் குலசேகரர். அங்கே பெருமானின் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களைக் கண்ணாரக் கண்டு மகிழ்வெய்தி அங்கேயே முக்தியடைந்தார். அங்கே அவருக்கு தனி சந்நிதியும் இருக்கிறது. இந்தத் திருத்தலம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

    குலசேகர ஆழ்வாரின் பிரபந்தப் பாசுரங்கள் ‘பெருமாள் திருமொழி’ என்று 105 பாடல்கள். ராமாவதாரத்தையும் கிருஷ்ணாவதாரத்தையும் சிறப்பிக்கும் பாடல்கள்.

       தொடர்ந்து அரங்கன் அடியாரின் அடிமைத் திறத்தில் ஈடுபட்டும், அரங்கன் அடியாராய் உலகத்தாரொடும் பொருந்தாமல் தனித்திருக்கும் தன்மையுமாய் பத்துப் பத்துப் பாசுரங்கள் பாடுகிறார். இப்படி முப்பது பாசுரங்கள் அரங்கனைப் பாடிவிட்டு, பின்னர் திருவேங்கடமுடையான் பக்கலுக்குச் செல்கிறார் குலசேகராழ்வார்.

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வான்ஆளும் செல்வமும் மண்ணரசும் நான்வேண்டேன்
தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே!

         நான் தேவலோகத்திலே அரசனாக இந்திரனாக வாழ்ந்து அனுபவிக்கும் இந்திரபோகத்தை விரும்பவில்லை.  இவ்வுலகம் முழுவதையும் ஆண்டு இன்பமடையும் அரசபோகத்தையும் விரும்பவில்லை.  இத்தகைய இன்பங்கள் எல்லாவற்றையும்விட திருவேங்கடமலையில் உள்ள நீர்ச்சுனையில் ஒரு மீனாகப் பிறந்து திருவேங்கடமலையை விட்டுப் பிரியாமல் வாழவே விரும்புகிறேன் என்று வேண்டுகிறார்.

          மனவுறுதியை நமக்கு அளிக்க குலசேகராழ்வார் இந்தப் பத்துப் பாசுரத்தில் நமக்கு ஒரு வழியைச் சொல்கிறார்.

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல்; மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே!

   மருத்துவன் கத்தியால் அறுத்து சூடு போட்டாலும், அவன் தன்னுடைய உயிரைக் காப்பாற்றுகிறவன் என்பதால், நோயாளி அந்த மருத்துவனை விரும்புகிறான். அதுபோல், வித்துவக்கோட்டம்மானே, நீ மாயத்தால் மீளமுடியாத துயரினைத் தந்தாலும், அது எனக்குச் செய்யும் நன்மையே எனக் கருதி, உன் அருளையே எதிர் நோக்கிக் காத்திருப்பேன் என்கிறார்.

குலசேகராழ்வார்

 • பத்தே பத்து பாசுரங்கள் பாடி, பரந்தாமனோடே ஐக்கியமான திருப்பாணாழ்வாருக்கும், பல நூறு பாசுரங்கள் பாடிய திருமங்கையாழ்வாருக்கும் இடையே, நூற்று ஐந்தே பாசுரங்கள் பாடிய குலசேகராழ்வார் தனிப்பட்டு நிற்பவர்.
 • திருமங்கையாழ்வார் 86 திவ்ய தேசங்களை சேவித்து மங்களாசாசனம் செய்து திருப்தி கொண்டார்.
 • நம்மாழ்வார், “வேதம் தமிழ் செய்த மாறனாகிப்” போக,
 • பெரியாழ்வார், கண்ணனைக் குழந்தையாய்க் கொண்டாட,
 • ஆண்டாள் அவனைக் கணவனாய் விரிக்க,
 • திருப்பாணாழ்வார் பத்துப் பாசுரங்களால் பரமனைக் கவர,

         குலசேகரர் இவர்களோடு போட்டி போட விழையவில்லை. மன்னர் அல்லவா, இராஜ தந்திரம் அறிந்திருப்பாரே. வித்தியாசமாய் யோசித்தவர். திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருப்பவன் திருமலையில் நின்றருள்கிறான். மனிதனாய்ப் பிறப்பெடுத்தவனுக்கு திருமலை சம்பந்தம் வேண்டாமா ?

“ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன்
ஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால்
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே”

திருவேங்டச்சுனையில்

 • மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே”
 • பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே”
 • செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே”
 • தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே”
 • கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே”
 • “நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே”

எல்லாவற்றையும் சொல்லிவிட்டோமா என்று ஒருமுறை எண்ணிப்பார்த்தவர், எதற்கும் இருக்கட்டும் என்று

 • “செம்பவள வாயான் திருவேங்கடம் என்னும் எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே”

என்றும் சொல்லிவைத்தார்.

சரி, இன்னொன்றையும் முன்னெச்சரிக்கையாய்க் கேட்டு வைக்கலாம் என்று நினைத்தார் போலும்.

“செடியாய் வல்வினைகள் தீர்க்குந்திருமாலே
நெடியானே வேங்கடவா ! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே”

      திருவேங்கடவனின் பவளவாயை எக்காலும் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டுமென்றும், அதற்காக தன்னை அவர் கோயில் வாசற்படியாகவே வைத்துக்கொள்ளவேண்டுமென்றும் குலசேகரர் கேட்டுவைக்கிறார்.

      திருவரங்கத்தில்தான் தனது அருமை மகளை ரங்கநாதருக்குத் திருமணம் செய்து மகிழ்ந்தார்.

      இன்றும் சேரகுல-வல்லியோடு ரங்கநாதர் காட்சி தருவதைக் காணலாம். பெரியாழ்வார் போலவே தனது மகளை அரங்கனுக்குத் திருமணம் செய்ததால் இவரும் ‘மாதவன் மாமன்’ எனும் பெருமை பெற்றார்.

      எம்பெருமானை ஏத்தாது கழித்த நாட்கள் யாவும், பிறந்தும் பிறவாத நாட்களே.

  அஞ்சனமா மலைப்பிறவி ஆதரித்தன் வாழியே
  அணியரங்கர் மணத்தூணை யமர்ந்த செல்வன் வாழியே
  வஞ்சிநக ரந்தன்னை வாழ்வித்தான் வாழியே
  மாசிதனிபற் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
  அஞ்சலெனக் குடப்பாம்பில் கையிட்டான் வாழியே
  அநவாத மிராமகதை யகமகிழ்வான் வாழியே
  செஞ்சொல்மொழி நூற்றஞ்சுஞ் செப்பினான் வாழிய
  சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே

              குலசேகராழ்வார் திருவடிகளே சரணம்

**************************************************************

RELATED ARTICLES- ஆழ்வார்கள்

Pl Also, Click & Look for each ஆழ்வார் at the HRE Links for ஆழ்வார்கள் given below

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மெய்யன்பரே,

 • இந்த லிங்கிள் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.
 • மேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் சிறப்பாக இருக்கும்
 • இந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி

Please click below to go  to CONTENTS for all the Articles in HRE:

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

 

Advertisements