Tags

, , , , , , , , , , , , , , , , ,

திருமங்கை மன்னன்-ஆழ்வாரான மன்னன்  

{நீலன்→ பரகாலன்திருமங்கை மன்னன்கலியன்திருமங்கையாழ்வார்}

(நள ஆண்டு-பௌர்ணமி-வியாழக்கிழமை-கார்த்திகை-கிருத்திகை-சாரங்கம் (வில்)-அம்சம்-8-ம் நூற்றாண்டு

நீலன்-இயற்பெயர்
பரகாலன்-காரணப்பெயர்
திருமங்கை மன்னன்– மன்னனாக முடிசூட்டிக்கொண்டபின்
கலியன்-திருமாலை மணக்கோலத்தில் வழிபரி செய்ய சந்தித்தல்
திருமங்கையாழ்வார்-திருமாலின் மந்திர உபதேசம் பெற்ற ஆழ்வார்

33.1.நீலன்

       காவிரி நதி-சோழ வள நாடு-திருவாலிநாடு-   திருக்குறையலூரில், நான்காம் வர்ணத்தில், ஆலிநாடுடையாருக்கும்-வல்லித்திரு அம்மைக்கும் மகனாக திருமங்கையாழ்வார் அவதரித்தார். அவரது இயற்பெயர் நீலன்.

TM Alwar (1)     ஆலிநாடர், சோழனின் படைத் தலைவராக இருந்தார். நீலன் கற்க வேண்டியவற்றைக் கற்று , வடமொழியிலும் தமிழிலும் புலமை பெற்று ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நிலைபெற்று வளர்ந்தார்.

Please click below to go to CONTENTS for all the Articles in HRE: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

33.2.பரகாலன்

         பகைவர்களுக்குக் காலன் போன்று திகழ்ந்ததால்,   ‘பரகாலன் என்ற பெயரும் நீலருக்கு உண்டாயிற்று. பரகாலர் என்பதற்கு காலத்தைக் கடந்து நிற்பவர் என்னும் தத்துவ விளக்கப் பொருளும் உண்டு.

33.3.நாற்கவிப் பெருமான்

    திருமாலடியாரான அவர்  திருமாலின் திருவருளாலே ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, விஸ்த்தாரக்கவி என நான்கு வகைக் கவிகளையும் பாடும் திறமையும் வல்லமையும் பெற்றிருந்தார்.

நாற்கவி:

 • ஆசுகவி – உடனுக்குடன் பாடுவது.
 • மதுரகவி – இசை நயத்துடன் பாடுவது
 • சித்திரக்கவி – பாடலும், பாடலின் பொருளும் சித்திர அலங்காரமாய் அமைய பாடுவது.
 • விஸ்த்தாரக்கவி – விஸ்த்தாரமாக, விரிவாகப் பாடுவது.

     வீரர் மரபில் தோன்றியவர் என்பதால், வாள், வில், வேல் முதலிய படைக் கலங்களை பயன்படுத்தி போர் செய்வதில் வல்லவராகத் திகழ்தார். பகைவரை சுலபமாக வெற்றி கொள்ளும் தன்மை அவருக்கு வாய்க்கப் பெற்றிருந்தது. நீலனின் கல்வி திறமை வீரத்தை கண்ட சோழ மன்னன் அவரைத் தன் படைத் தளபதியாக ஆக்கிக் கொண்டான்.

        அந்தக் காலத்தில்  ‘நாலுகவிப் பெருமான்’ என்னும் சிறப்புடைய புலவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் மற்றைய புலவர்களை எல்லாம் வாதில் வென்று, பெருமையால் அகங்காரம் கொண்டிருந்தான். அவனுக்கு நீலனைப் பற்றித் தெரிய வந்தது. தன் கல்விச் செருக்கால், நீலனிடம் வாதிட்டு அவரை வாதில் வென்று காட்டிட ஆசை மிகக் கொண்டான். இந்தச் செய்தி தெரிந்து, அவரும் அந்தப் புலவனிடம் வாதிட முன்வந்தார்.

    வாதப் போர் பலமாக நடைபெற்றது. இறுதியில் புலவன் தோல்வியைத் தழுவினான். ஆகவே தனக்கு இது வரை இட்டுவந்த நாலுகவிப் பெருமான் என்ற பட்டத்தை இனியும் தான் வைத்திருக்க விரும்பவில்லை. எனவே தன் பட்டத்தினை,  நீலருக்கு இட்டு,   நாற்கவிப் பெருமான் என்கிற விருதை அவருக்கு அளித்தான்.

      இதையறிந்த சோழ மன்னன், நீலரை அழைத்து  அவருக்கு மேலும் விருதுகளை அளித்துப் பாராட்டினான்.

     பின்னர் நீலர் அந்தச் சோழனுக்காக போர்கள் பலவற்றை மேற்கொண்டு எதிரிகளை விரட்டி வெற்றிவாகை சூடினார். இதனால் மகிழ்ந்த சோழ மன்னன், நீலரின் வீரத்தையும் அறிவுக் கூர்மையையும் வியந்து பாராட்டி,  தன்னுடைய ஆட்சியின் கீழ் இருந்த திருமங்கை நாட்டுக்கு மன்னனாக்கி மகிழ்ந்தான்.

33.4.சுமங்கலை

      திருமங்கைக்கு நீலர் மன்னரானதும் அவரை எல்லோரும்  ‘திருமங்கை மன்னன்’ என்றே அழைக்கலாயினர். இப்படி இருக்கையில், சுமங்கலை என்னும் பெயர் கொண்ட தேவகன்னி ஒருத்தி, தன்னுடைய தோழியர் குழாத்துடன் இமயமலையின் வளங்களைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு வந்தாள். அப்போது, திருமாலின் அம்சராக எழுந்தருளியிருந்த கபில முனிவர், தன்னுடைய சீடர்களுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

     அவருடைய சீடர்களுள் ஒருவர் விகார வடிவத்தில் இருந்ததைக் கண்டு சுமங்கலை ஏளனம் செய்தாள். அதனைக் கண்ட கபில முனிவர் பெருவருத்தமும் கோபமும் அடைந்து சுமங்கலையை நோக்கி, ‘தேவ கன்னியான நீ இதே பூமியில் மானிடப் பெண்ணாகப் பிறந்து,  ஒரு மனிதனின் மனைவியாக வாழக் கடவாய்’ என்று சபித்தார்.

      இந்த சாப வார்த்தையைக் கேட்ட சுமங்கலை அஞ்சி நடுங்கினாள். தன்னுடைய செயலைப் பொறுத்து தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். கபில முனிவரோ அவளை நோக்கி, ‘நீ பரகாலரின் மனைவியாகி,  அவருடைய போர்க்கள வேள்வியைப் போக்கி,  அவரை திருமாலின் நல்லடியாராகத் திருத்தி அவருடன் வாழ் அதனால் உன் குறை தீர்ந்து,  உன் பொன்னாட்டை அடைவாயாக’  என்று அருள் புரிந்தார்.

        கபில முனிவருடைய சாபத்தின்படி,  சுமங்கலை திருவாலி நாட்டிலுள்ள திருநாங்கூர்ப் பொய்கையில் தோழியருடன் நீராடி,  குமுத மலரைக் கொய்து விளையாடிக் கொண்டிருந்தாள். தோழியர் இவளை அங்கேயே விட்டுவிட்டு அவர்களுடைய பொன்னாட்டுக்குப் போனார்கள்.

       சுமங்கலை குமுத மலரையே தன் தாயாகவும் பிறப்பிடமாகவும் கொண்டு,  அதனருகில் ஒரு மானிடக் குழந்தையாகத் தோன்றினாள்.

33.5.குமுதவல்லி

     அந்த நேரத்தில், திருமாலடியாரும், திருநாங்கூரில் வசித்து வருபவருமாகிய மருத்துவர் ஒருவர் அந்தப் பொய்கைக்கு நீராட வந்தார். அப்போது இந்தக் குழந்தையைக் கண்டார். சுற்றுமுற்றும் பார்த்தார். அருகில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். அக்குழந்தையைத் தன் இல்லத்துக்கு எடுத்துச் சென்று மனைவியிடம் மகிழ்ச்சியுடன் அளித்தார். அவர்கள் இருவரும் அக்குழந்தைக்கு,  குமுத மலரின் அருகில் கிடைத்ததால் ‘குமுதவல்லி என்னும் பெயரிட்டு அழைத்தனர். அக்குழந்தையைத் தாம் பெற்றெடுத்த குழந்தையைப் போன்று செல்வ வளத்தோடு வளர்க்கலாயினர்.

   இப்படி வளர்ந்து வந்த குமுதவல்லி  திருமணப் பருவம் எய்தினாள். குமுதவல்லியைப் பற்றிய செய்தி பரகாலரை எட்டியது. அவர் திருநாங்கூரிலுள்ள மருத்துவர் இல்லத்துக்குச் சென்று, அவரது வளர்ப்புப் பெண்ணாகிய குமுதவல்லியைத் தனக்குத் திருமணம் செய்து தர வேண்டும் என்று விண்ணப்பித்தார்.

     பெண்ணோ பிராமணப் பெண். பரகாலர் கள்ளர் ஜாதி. இருந்தும் தந்தை, பெண்ணுக்கு சம்மதம் என்றால் எனக்கு ஆட்சேபணை இல்லை என்று சொல்லிவிட்டார்.

       ஆனால் குமுதவல்லியாரோ, ‘திருவிலச்சினையும், திருநாமமும் உள்ள வைணவனுக்கு அன்றி மற்றவர்க்கு என்னைப் பேசவிடேன்’  என்று மறுத்துரைத்தாள்.

       மேலும் நாள்தோறும் ஆயிரத்தெட்டு ஸ்ரீவைணவர்களை அமுது செய்வித்து,  அவர்களுடைய ஸ்ரீபாத தீர்த்தமும் தளிகைப் பிரசாதமும் ஏற்றுக்கொள்ள மொழிந்தாள்.

         இந்த இரண்டையும் செய்வதாக நீலரும் ஒப்புக் கொண்டார். அதன்படி அவரது முதல் கடனை முதலில் நிறைவு செய்தார்.

         நான் வைணவனாகி விடுகிறேன் என்று திருமங்கை மன்னன் திருநறையூர் நம்பியிடம் சென்று பரம வைணவனாக்கிவிடும் என்று வேண்டிக் கொள்ள, நம்பியிடமிருந்து வைணவர்கள் தீட்சையில் பெறும் பஞ்ச சம்ஸ்காரங்களான சங்கு சக்கர முத்திரை, தாச நாமம், திருமந்திரம், நெற்றிக்கு திருமண் ஸ்ரீசூர்ணம், திருவாராதனை நியமங்கள் போன்றவற்றைப் பெற்றார்

33.6.பஞ்ச-சம்ஸ்காரம்

     பஞ்ச-சம்ஸ்காரம் என்பதை நல்வினை சடங்குகள் என்று தமிழில் சொல்லுவர். அதாவது,

 • தாப-சம்ஸ்காரம் : (தாபம்=சூடு) பெருமாளின் திருஅடையாளங்களாகிய சங்கு, சக்கரத்தில், வலது தோளில் சக்கரத்தையும், இடது தோளில் சங்கையும் நிரந்தரமாகத் தரிப்பது.
 • புண்ட்ர-சம்ஸ்காரம் – (திருமண் காப்புத் தரித்தல்) இறைவனின் பன்னிரண்டு திருப்பெயர்களைச் சொல்லி, பன்னிரு இடங்களில் திருமண் அணிதல்.

      கேசவாய நம-நெற்றி; நாராயணாய நம-நாபி; மாதவாய நம-மார்பு; கோவிந்தாய நம-நெஞ்சு; விஷ்ணுவே நம-வலது மார்பு; மதுசூதணாய நம-வலது புஜம்; த்ரிவிக்ரமாய நம-வலது தோள்; வாமனாய நம- இடது நாபி; ஸ்ரீதராய நம- இடது புஜம்; ரிஷிகேசாய நம- இடது தோள்; பத்மநாபாய நம- அடிமுதுகு; தாமோதராய நம; பிடாரி.

 • நாம சம்ஸ்காரம் (பெயர்) அதாவது, பெருமாளின் பெயர் அல்லது அவரது அடியவர்களான ஆசார்யர்களின் பெயர்கள் ஏதாவது ஒன்றை வைத்து, அப்பெயரின் முடிவில் தாசன், அடியவன் என்று வருமாறு குருவால் பெயர் வைக்கப் பெறுதல்.
 • மந்த்ர சம்ஸ்காரம் (மந்திரம்) எட்டெழுத்துகளுடைய திருமந்திரத்தையும், த்வயம், சரமசுலோகம் ஆகியவற்றை அதன் மறைபொருளோடு குருவின் மூலம், காதில் உபதேசமாகப் பெறுதல்.
 • யாக சம்ஸ்காரம் (பூசை, ஆராதணை) திருவாராதணை மற்றும் பூசை செய்யும் முறைகளை முறையாகக் கற்றுக் கொள்ளல்.

       இவை ஐந்தனையும் குருவிடமிருந்து (ஆசார்யரிடமிருந்து) ஒரே சமயத்தில் பெறுதலே பஞ்ச சம்ஸ்காரம் ஆகும். பஞ்ச சம்ஸ்காரம் பெற்றுக் கொண்ட ஒருவர் வேத முறைப்படி வைணவராகிறார். இதன் மூலம் அவரது உடல், மனம், சொல், சிந்தனை அனைத்திலும் வைணவநெறிக்கான நல்வினைகளும், சிந்தனைகளும் அவர் மனத்தில் பதிய ஆரம்பிக்கும்.

     நீலர் இந்த பஞ்ச சம்ஸ்காரத்தை பெற்றுக் கொண்ட குரு குருவுக்கெல்லாம் குருவானவர். குற்றமில்லா குணத்தவர். குறையொன்றும் வைக்கா குறையற்றவர் எம்பெருமான் திருநறையூர் ஸ்ரீநிவாசப் பெருமாள்.

     இறைவனையே குருவாகக் கொண்டு, அவர் மூலம் பஞ்ச சம்ஸ்காரம் பெற்ற ஒரே வைணவர், நீலர்தான்.

    குமுதவல்லியாரை அவள் பெற்றோர் திருமங்கை மன்னருக்கு நாடும் ஊரும் அறிய நல்லதோர் நாளில் மணம் செய்து கொடுத்தார்கள்.

33.7.குமுதவல்லி-திருமங்கை மன்னன்

        குமுதவல்லியாரைத் தமது வாழ்க்கைத் துணை ஆக்கிக் கொண்ட திருமங்கை மன்னரும், நாள்தோறும் ஆயிரத்தெட்டு ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அன்னமளித்து ஆராதித்தார். இப்படி நாள்தோறும் நடைபெறும் நல்விருந்தினை நானிலத்தோர் நயம்படப் பலருக்கும் நவின்று வந்தார்கள். இச்செய்தி சோழ மன்னனின் செவிகளுக்கும் எட்டியது.

      திருமங்கை மன்னன் தனக்குத் தரவேண்டிய பகுதிப் பணம் தாமதமாவதற்கான காரணம் இதுதானோ என்று எண்ணினான். தன் அரசுக்குச் சேர வேண்டிய பகுதிப் பணம் விரைந்து வந்தாக வேண்டும் என்னும் செய்தி தாங்கிய ஓலையுடன்,  தன் தூதுவர்களை திருமங்கை மன்னனிடம் அனுப்பினான் சோழமன்னன்.

     திருமங்கை சென்ற தூதுவர்கள் பகுதிப் பணத்தை விரைவில் தருமாறு பரகாலரை வற்புறுத்தினார்கள். பரகாலருக்குக் கடுங்கோபம் ஏற்பட்டது. விளைவு – தூதுவர்களை அடித்து விரட்டினார்.

      அவர்கள் அஞ்சி ஓடி அரசனிடம் சென்று நடந்த நிகழ்ச்சியைத் தெரிவித்தார்கள். பரகாலர் தனது ஆணையை மீறிவிட்டார் என்பதற்காகக் கோபம் கொண்ட சோழ மன்னன்,  தனது சேனாதிபதியை அழைத்து,  பெரும் படையுடன் திருமங்கை சென்று பரகாலனை பிடித்து வருமாறு ஆணையிட்டான்.

       சேனாதிபதியும் யானை, குதிரை, காலாட் படைகளுடன் சென்று பரகாலரை வளைத்துப் பிடிக்கப் போனான். மங்கை மன்னனோ தன் குதிரையின் மேலேறித் தம் படைகளுடன் வந்து, சேனைகளை எல்லாம் துரத்தியோட்டிவிட்டார்.

     இதைக் கேள்விப்பட்ட அரசன், தனது சதுரங்க சேனைகளுடன் வந்து,   பரகாலரைப் பிடிக்கும்படி தன் படை வீரர்களுக்கு உத்தரவு பிறப்பித்தான்.

     படையினரும் அவ்வண்ணமே பரகாலரை வளைத்தனர். பரகாலரும் முன்புபோல வாளும் கையுமாக ஆடல்மா என்னும் தனது குதிரைமேல் ஏறி படையினரைப் பாழாக்கித் துரத்த, எல்லோரும் தோற்றனர். பரகாலரும் வீரமுடையவராய்த் தமது கையிலிருந்த வாளின் பலத்தினால் படையை அழிக்கத் தொடங்கினார்.

    இதனைக் கண்ட அரசன் இவரைப் பார்த்து, ‘நீர் எதற்கும் அஞ்ச வேண்டுவதில்லை. உமது வீரம் கண்டு மகிழ்ந்தேன். நீர் செய்த தவறுகளை எல்லாம் மறந்தேன். அஞ்சாமல் என்னை நம்பி வாரும்’  என்று அழைத்தான். பரகாலரும் அரசன் மீதான பகைமை மறந்து உடன் சென்றார். அரசனும் பரகாலரை நோக்கி, ‘ தரவேண்டிய பகுதிப் பணத்தை தந்துவிட வேண்டும்,  அதுவரையில் அமைச்சர்களின் பாதுகாவலில் பரகாவலர் இருக்க வேண்டும்’ எனவும் பணித்தார். அமைச்சர்களும் பரகாலரைப் பிடித்துக்கொண்டு, ஒரு தேவாலயத்தில் சிறை வைத்தனர்.

33.8.பேரருளாளப் பெருமான்

        திரையைக் கொடுத்தால் சிறையில்லை என்றார். திருமங்கை மன்னர் அந்தக் கோயிலில் மூன்று நாட்கள் உணவின்றி சிறையிருந்தார். அந்த நேரம், திருமங்கை மன்னரது கனவில் பேரருளாளப் பெருமான் எழுந்தருளி, ‘உமது பகுதிக்கு வர வேண்டிய பணம் நாம் தருகிறோம். காஞ்சிபுரத்துக்கு வாரும் என்று அருளினார். பரகாலரும் மறுநாள் அமைச்சர்களிடம், ‘காஞ்சிபுரம் வந்தால் உங்கள் பகுதியைத் தருகிறேன்’ என்றார்.

       அமைச்சர்கள் அதனை அரசரிடம் தெரிவித்தனர். அரசரும் இதற்கு உடன்பட்டு,  தக்க காவலுடன் பரகாலரை காஞ்சிபுரத்துக்கு அனுப்பி வைத்தார்.

     காஞ்சிபுரம் சென்ற பரகாலர்,  புதையல் பொருளைக் காணாது வருந்திக் கிடந்தார். அவருடைய வருத்தமுற்ற மனத்தை மகிழ்விக்க எண்ணிய காஞ்சி பேரருளாளப் பெருமான், ‘அஞ்சாது நீர் அதை எடுத்துக் கொள்ளும்’  என்று பணம் இருக்கும் இடத்தை அடையாளமாகக் காட்டியருளினான்.

        வேகவதி நதிக்கரையில் அவருக்குப் புதையல் கிடைத்தது. பேரருளாளன் காட்டிய இடத்துக்குச் சென்ற பரகாலர்,  அங்கே பணம் இருக்கக் கண்டு,  அதை எடுத்து கப்பம் செலுத்த வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு,  அதுபோக மீதி இருந்த பணத்தை ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு உணவளிப்பதற்காக வைத்துக் கொண்டார்.

       நடந்த நிகழ்ச்சியை அரசனுக்கு அறிவித்த அமைச்சர், அரசர் முன்பாக திருமங்கை மன்னர் தந்த கப்பப் பணத்தை வைத்தார். வேந்தனோ, காஞ்சி அருளாளப் பெருமானான வரதராஜப் பெருமாளே பணம் தந்த செய்தியைக் கேட்டு பெருவியப்படைந்தான். இவர் மனிதர்களுள் மேம்பட்ட பெருமை கொண்டவர்; அவரை மதியாமல் இப்படி நடந்துகொண்டோமே என்று வருந்தினான்.

          காஞ்சிப் பேரருளாளன் அளித்த கப்பப் பணத்தை தனது கருவூலத்தில் சேர்க்க அவனுக்கு மனம் வரவில்லை. எனவே திருமங்கை மன்னரை அழைத்தான். அவரிடமே அப்பணத்தையும், சிறப்பாக வெகுமதிகளையும் அளித்து அவற்றை ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு உணவிட வைத்துக் கொள்ளுமாறு வேண்டினான். அதன் மூலம்,  திருமங்கை மன்னரை மூன்று தினங்கள் பட்டினி போட்ட பாவத்தைப் போக்கிக் கொண்டான்.திருமங்கை மன்னன் தன் ததியாராதனப் பணியைத் தொடர்ந்தார்.

33.9.பொருட்தேவைக்காக வழிப்பறி

     நாட்கள் சென்றன. ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ததீயாராதனம் குறைவற நடைபெற்று வந்தது. ஆனால், ஆழ்வாரின் கருவூலத்தில் இருந்த திரவியமோ குறைவுற்று வந்தது. பணம் யாவும் செலவழிந்ததும்,  திருமங்கை மன்னன் ததீயாராதனம் தொடர்ந்து நடைபெற என்ன வழி என்று யோசிக்கலானார்.

   பரகாலன் ஒரு வினோதமான முடிவெடுத்தார். செல்வந்தர்களிடமிருந்து பணத்தைப் வழிப்பறித்து அன்னதானம் செய்ய கூட்டாளிகளை உடன் வைத்துக் கொண்டு வழிப்பறி செய்தார்.

    வழிப்பறி செய்தேனும் பணம் சேர்த்து ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு உணவளிக்க தமக்குத் துணையாக இருந்த நால்வரோடு பொருள் மிகுந்தவரிடமிருந்து வழிப்பறி செய்து பொருள் ஈட்டி,  ஸ்ரீவைஷ்ணவ அடியார்களுக்கு உணவளிக்கும் செயலை நடத்தி வந்தார்.

33.10.பெருமாள்-தாயார் மணமக்கள் கோலம்

        ஒருநாள் பரகாலன் வழிப்பறி செய்வதற்காக,  திருமணங்கொல்லையில் ஓர் அரச மரத்தில் பதுங்கியிருந்தார்.

    இந்த விந்தையான பக்தனை திருமால் சந்திக்க விரும்பினார். புதுமணத் தம்பதிகள் போல வேடமிட்டுக் கொண்டு ஆடை ஆபரணங்கள் பளபளக்க திருவாலிக்கு அருகே திருமணங் கொல்லை என்னும் இடத்தில் அரசமரத்தினருகில் பதுங்கியிருந்த திருமங்கை மன்னன் முன் அவர்கள் நடந்து சென்றார்கள்.

        இக்கூட்டத்தைக் கண்ட பரகாலன் மகிழ்ச்சி மிகக் கொண்டார். உருவிய வாளும் கையுமாக, தன் பரிவாரங்களுடன் அவர்களை வளைத்துக் கொண்டார். மணக் கோலத்தில் அமர்ந்திருந்த திவ்விய தம்பதியிடம் இருந்த அணிகலன்களை எல்லாம் கவர்ந்து கொண்டார். எம்பெருமானும் இதைக்கண்டு, ‘நம் கலியனே  என்று அருளிச் செய்தார்.

           பகவான் எல்லா நகைகளையும் கழற்றிக் கொடுத்தார். கால் விரலில் ஒரு ஆபரணத்தைக் கழற்ற முடியவில்லை. பரகாலன் இதையும் விடமாட்டேன் என்ற சொல்லி குனிந்து வாயால் கடித்து கழற்ற முடியவில்லை. ‘சரியான கலியனப்பா நீ’ என்று பகவான் அவனுக்கு கலியன் (பலமுடையவன்) என்று பெயரிட்டார்.

     கவர்ந்த அணிகலன்களை எல்லாம் மூட்டையாகக் கட்டி வைத்தார். அந்த மூட்டையை எடுக்கப் பார்க்க, அவை பெயர்க்கவும் முடியாதபடி கனத்து இருந்தன. எவ்வளவோ கனமுள்ள பெரும் பொருட்களை எல்லாம் தூக்கிய கைகளால், இந்த மூட்டையைத் தூக்க முடியாமல் போகவே பரகாலன் கொஞ்சம் அசந்து போனார்.

    அவர் மணவாளனைப் பார்த்து,   ‘நீ மந்திரம் ஏதும் செய்தாயோ?’  என்று கோபத்துடன் கேட்டார். பிறகு, ‘நீ அந்த மந்திரத்தைச் சொல்லாவிடில், இந்த வாளுக்கு இரையாவாய்’ என்று தம் கையில் வைத்திருந்த வாளைக் காட்டி அதிகாரத்துடன் கேட்டார்.

        மணவாளக் கோலத்திலிருந்த எம்பெருமானும் எட்டு எழுத்தாகி,  மூன்று பதமான திருமந்திரத்தை ஆழ்வாரின் வலது திருச செவியில் உபதேசித்துக் காட்சி கொடுத்தார்.

33.11.பரகாலன்-»திருமங்கை ஆழ்வார்

      அதுவரையில் இவருக்கு இருந்த அறியாமை விலகியது. திருமந்திர அர்த்தம் விளங்கப் பெற்ற பரகாலன்,  தாம் அறிந்த திருமந்திரத்தையும், அதற்கு உள்ளீடான ஸ்ரீமந் நாராயணனுடைய வடிவமாகிய உருவத்தையும் அருள்மாரி என்னும் பெரிய பிராட்டியின் அருளாலே நேரில் கண்டு தரிசித்து திருமங்கை ஆழ்வாரானார்.

       திருமால் திருத்தல தரிசனம் செய்யும் அவா மிகப் பெற்றார். தலங்கள் தோறும் சென்று,  ஆங்காங்கு எழுந்தருளியுள்ள திருமாலை வணங்கிப் பின் சோழ மண்டலத்துக்கு எழுந்தருளினார்.

33.12.ஞானசம்பந்தர்

     அந்த நேரத்தில் ஆழ்வாரின் சீடர்கள், ‘நாலுகவிப் பெருமாள் வந்தார்! நம் கலியன் வந்தார்! ஆலிநாடார் வந்தார்! அருள்மாரி வந்தார்! கொங்கு மலர்க் குழலியர்வேள் வந்தார்! மங்கை வேந்தர் வந்தார்! பரகாலர் வந்தார்!’  என்று விருது கூறிச் சென்றார்கள்.

   அப்போது அங்கேயிருந்த சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவரான திருஞானசம்பந்தரின் சீடர்கள்,  “திருமங்கை மன்னர்  ‘நாலுகவிப் பெருமாள்’ என்ற விருது பெற்றவர்போலே விருது கூறல் கூடாது” என்று மறுத்துத் தடுத்தனர். விஷயம் திருஞானசம்பந்தருக்குச் சென்றது.

    அதனால் ஆழ்வார் வெண்ணெயுண்ட மாயனை எழுந்தருளுவித்துக் கொண்டு,  சம்பந்தருடன் வாதிக்கச் சென்றார்.  ‘ஒரு குறளாயிரு நிலம்’ என்ற திருமொழியை அருளிச் செய்து,  தம் பெருமையெல்லாம் புலப்படும் வண்ணம் பாடலைப் பாடினார்.

        ஞானசம்பந்தர் பிரான் ஆழ்வாரை நோக்கி, ‘உமக்கு நாலுகவிப் பெருமாள் என்னும் விருது பொருந்தும்.  ஆதலினால் விருதூதிக் கொண்டு செல்வீராக’  என்று மனமுவந்து கூறினார்.

         திருமங்கை ஆழ்வார் பல தலங்கள் தோறும் சென்று தலத்து இறைவனைச் சேவித்து திருவரங்கம் வந்தார். அங்குள்ள பெரிய பெருமாளுக்கும் அழகிய மணவாளனுக்கும் விமானம்,  மண்டபம்,  திருத்தளிகை,  திருமதில்,  கோபுரம் முதலிய தொண்டுகள் செய்ய விரும்பினார். அதற்காக நாகப்பட்டினம் சென்று பெரும் பொன்னை எடுத்து வந்தார்; அதனை விற்றுப் பெற்ற பொருளைக் கொண்டு விமானம், மண்டபம் முதலியன கட்டுவித்தார்.

        இதனைக் கண்ட தொண்டரடிப்பொடி ஆழ்வார்,  மலர் பறிக்கும் தமது ஆயுதத்துக்கு திருமங்கை மன்னருடைய பெயர்களுள் ஒன்றான  ‘அருள்மாரி’ என்னும் பெயரினை இட்டு மகிழ்ந்தார்.

     பின்னர் திருமங்கையாழ்வார்,  விமானம்,  மண்டபம்,  கோபுரம் முதலிய திருத்தொண்டுகள் செய்து அரங்க நகரைப் பொலிவுடன் திகழச் செய்தார்.

33.13.திவ்வியப் பிரபந்தப் பாசுரங்கள்

    நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களின் எண்ணிக்கையில் திருமங்கையாழ்வாரின் பங்கு கணிசமானது.கவித்துவமாக,  இலக்கணப்படி அமைந்த பல வகைப் பாடல்களையும் இயற்றியுள்ளார்.பெரும்பாலான திவ்விய தேசங்களையும் பாடியிருக்கிறார்.

நலாயிர திவ்யபிரபந்தம்-இரண்டவது ஆயிரம் (Full)

 • பெரிய திருமொழி (1084 பாடல்கள்)
 • திருநெடுந்தாண்டகம் (30 பாடல்கள்)
 • திருக்குறுந்தாண்டகம் (20 பாடல்கள்)

நலாயிர திவ்யபிரபந்தம்- மூன்றாவது ஆயிரம் (Later Part)

 • திருவெழுக்கூற்றிருக்கை (ஒரு பாடல் – 47 அடிகள்)
 • சிறிய திருமடல் (ஒரு பாடல் – 155 அடிகள்)
 • பெரிய திருமடல் (ஒரு பாடல் – 297 அடிகள்)

           என்கிற ஆறு வகை பிரபந்தங்களையும் 1137 பாசுரங்கள் அருளிச் செய்தார். நம்மாழ்வார் அருளிச் செய்த நான்கு வேதங்களின் சாரமாகிய நான்கு பிரபந்தங்களுக்கும் ஆறு அங்கமாக ஆசு, மதுரம்,  சித்திரம், வித்தாரம் என்கிற நான்கு விதமான கவிகளால் அருளிச்செய்து சிறப்புற்றார். இதனால் பரகாலருக்கு  ‘நாலுகவிப் பெருமாள்’  பட்டப் பெயர் இன்னும் சிறப்புற வழங்கலாயிற்று.

33.13(a): பெரிய திருமொழி

    பெரியதிருமொழியைப் பாடும் போது எம்பெருமான் எழுந்தருளியுள்ள திருப்பதிகளுக்கு தானே சென்று நேரில் வணங்கி திருப்பிருதி முதலாக திருக்கோட்டியூரீறாக அறுபது திருப்பதிகளை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

      நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டவது ஆயிரம் அவருடைய பெரிய திருமொழி. பெரிய திருமொழி முதற்பத்து 1-ம் திருமொழி பத்துப் பாடல்களும் அஷ்டாக்ஷரத்தின் மகிமையைச் சொல்கின்றன.

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
   பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
   அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
   உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
   நாராயணா என்னும் நாமமே (பெரிய திருமொழி:1.1.1)

          தான் எப்படி நாராயண நாமத்தின் பொருளை அறிந்து கொண்டேன் என்பதை விளக்கி, அதை அடைந்த விதத்தையும் தெரிவிக்கிறார். தன் கடந்த காலத் தவறுகளைச் சொல்லி,  அதற்காகத் தாம் வருந்துவதையும் தெரிவிக்கிறார். அந்த வருத்தம் தீரவே நாராயணன் தமக்கு அவனுடைய நாம மகிமையை வெளிக்காட்டி உளம் திருத்தினான் என்பதைச் சொல்கிறார்.

            முதல் பத்துப் பாடல்களும்  ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்து மந்திரத்தின் மகிமையைச் சொல்கின்றன.

           இந்த எட்டெழுத்து மந்திரப் பொருளை உணர்ந்து தெளிந்தால் உலகு தெளியும். ஆயினும் இந்த எட்டெழுத்து எப்படிப்பட்ட நன்மைகளை எல்லாம் செய்ய வல்லது என்பதை ஆழ்வார் தம் அனுபவத்தின்பாற்பட்டு வெளிப்படுத்துகிறார் இப்படி…

குலந்தரும் செல்வம் தந்திடும்
   அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்
   அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
   பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
   நாராயணா என்னும் நாமம்! (பெரிய திருமொழி:1.1.9)

          நல்ல சுற்றத்தைத் தரும்; செல்வ வளத்தைத் தரும்; அடியவர்கள் படும் துயரங்களையெல்லாம் நிலந்தரஞ்செய்யும் (தரைமட்டமாக்கி விடும்); நீள் விசும்பாகிய பரமபதத்தைக் கொடுக்கும்; அருளோடு பெருநிலமும் வலிமையும் கொடுக்கும்; மற்றெல்லாவற்றையும் தரும்; பெற்ற தாயினும் அதிகமான பரிவைத் தரும்; நல்லதே தரும் திருநாமமே நாராயணாய என்னும் திருமந்திரம்.

     பெரிய திருமொழி முதற்பத்து 2-ம் திருமொழி பத்துப் பாடல்களில் திருமங்கையாழ்வார் திருப்பிருதியைப் பாடுகிறார். திருப்பிருதி என்பது வடக்கே மானசரோவர்.

வாலி மாவலத் தொருவனது உடல்கெட
வரிசிலை வளைவித்து அன்று
ஏல நாறு தண் தடம் பொழில்
இடம்பெற இருந்த நல் இமயத்துள்
ஆலி மாமுகில் அதிர்தர
அருவரை அகடுற முகடேறி
பீலி மாமயில் நடம்செயும் தடம் சுனை
பிருதி சென்று அடை நெஞ்சே (பெரிய திருமொழி:1.2.1)

     வாலியின் பலம் கெடும்படி வில்லை வளைத்து வீழ்த்தியவனை, வாசனை வீசும் குளிர்ந்த பரந்த பொழில் கொண்ட இமயத்தில் மழை மேகங்கள் சப்தமிட, மலை உச்சிகளில் மயில்கள் ஆடும் சுனைகளுடைய திருப்பிருதி என்கிற இடத்தைச் சென்று அடை.அவர் ஊர் ஊராய்ச் சென்று பாடிய பாசுரங்கள் பலவற்றுள் திருவேங்கடத்தில் பாடிய பாடல்கள் உருக்கமானவை.

மானே கண்மடவார் மயக்கிற் பட்டு மானிலத்து
நானே நானாவித நரகம்புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம்பொழில் சூழ் திருவேங்கட மாமலை என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டு அருளே
         ……………………………….(பெரிய திருமொழி:1.9.2)

          மான்கண் பெண்களின் மோகத்தில் நான்கு விதமான பாவங்களும் செய்தேன்.  திருமங்கையாழ்வாரின் பல பாடல்களில் இவ்வகையான பாவமன்னிப்புக் கோரும் தொனியைப் பார்க்கலாம். வைணவக் கருத்துகளில் முக்கியமானது சரணாகதி தத்துவம். தான் செய்த தவறுகளை உணர்ந்து கடவுளிடம் சரணடைந்துவிட்டால் மன்னிப்பு கிடைக்கும் என்பதன் மறுபிரதியை மற்ற மதங்களிலும் காண்கிறோம்.

திருமங்கை ஆழ்வாரின் பிரமிப்பூட்டும் பாடல்களில் இது ஒன்று.

கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோள் ஒன்றிலாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்தறியேன்
குன்றேய் மேகமதிர் குளிர்மா வேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே
……………………………………………….(பெரிய திருமொழி:1.9.3)

          காரணமில்லாமல் பல உயிர்களைக் கொன்றேன். என்னிடம் வந்து யாசகம் கேட்டவர்களிடம் இனிமையாக பேசக்கூட இல்லை. வேங்கடப் பெருமானே உன்னை வந்தடைந்து விட்டேன் என்னை ஆட்கொள்வாய். பிற்காலத்தில் அருணாகிரிநாதரிடம் இந்தப் போக்கைக் காண முடிகிறது.

ஆழ்வார் தன் வாழ்க்கையின் பொழிப்புரையை இரண்டு வரிகளில் தருகிறார்.

தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்-
கரி சேர் பூம் பொழில் சூழ் கன மா மலை வேங்கடவா!-
அரியே வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.
………………………………….(பெரிய திருமொழி:1.9.7)

33.13(b): திருநின்றவூர் (பெரிய திருமொழி:2.5.2 & 7-10-5)

பக்தவச்சலப் பெருமாள்-என்னைப் பெற்ற தாயார்

***பாசுரம் கேட்டுப் பெற்ற-பரந்தாமன் (பக்தவச்சலப் பெருமாள்) —->>> 

TM Alwar (2)         திருமங்கையாழ்வார் திருவள்ளூர் வந்து, திரு எவ்வுள் கிடந்தான் வீரராகவன் மீது பலச்சுருதியுடன் பதினோரு பாசுரங்கள் பாடினார். பிறகு திருநின்றவூருக்குச் சென்றார்.

      ஆழ்வார் அங்கு வந்தபோது இரவு நேரமானதால், திருக்கோவில் நடையடைக்கப்பட்டு பெருமாள் ஏகாந்தத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்கள். எனவே ஆழ்வார் பயணத்தைத் தொடர்ந்து கடல்மல்லை (மாமல்லபுரம்) வந்து சேர்ந்தார்.

    திருமங்கையாழ்வார் திருநின்றவூரில் சேவை சாதிக்கும் திருமகளையும் பக்தவத்சலப் பெருமாளையும் சேவிக்காமல்-பாசுரங்கள் செய்யாமல் போனது திருமகளுக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்தது.

     அதனால், தயார் பெருமாளை, கடல்மல்லைக்குச் சென்று திருமங்கையாழ்வாரிடம் தங்களுக்கான பாசுரங்களைப் பெற்றுவருமாறு சொல்ல, பிராட்டியின் சொல் தட்ட முடியாத பெருமாள், கடல்மல்லைக்குச் சென்றார். அப்போது, திருமங்கையாழ் வார் தலச்சயனப் பெருமாள் சந்நிதியில் நின்று சேவித்துக் கொண்டிருந்தார். தான் வந்திருப்பதை ஆழ்வாருக்கு குறிப்பால் உணர்த்திய திருநின்றவூர் பக்தவச்சலபெருமாள், தான் வந்த நோக்கத்தை சூசகமாகத் தெரிவித்தார்.

திருகடல்மல்லை-திருநின்றவூர்

     பெருமாள் வருகையைப் புரிந்துகொண்ட ஆழ்வார் பூரித்து மாமல்ல புரத்திலிருந்து கொண்டே, திருநின்றவூர் பெருமாள்மீது பாசுரம் செய்தார்.

பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டுப்
பொய்ந்நூலை மெய்ந்நூலென் றென்று மோதி
மாண்டு, அவத்தம் போகாதே வம்மினெந்தை
என் வணங்கப்படுவானை, கணங்களேத்தும்
நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான் தன்னை
நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார் சோலைக்
காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக்
கண்டது நான்
கடல்மல்லைத் தலசயனத்தே
……………………………….
பெரிய திருமொழி:2-5-2

     ஸ்வரூபத்தைக் கெடுக்கவல்ல காரியங்களை ஏறிட்டுக் கொண்டு பிறரை ஆச்ரயித்து அவர்களுக்கு அடிமை செய்தும் அபத்தங்களான பாஹ்யமதச்சுவடிகளை சாஸ்த்ரமாகக் கொண்டு எப்போதும் அந்தச் சுவடிகளையே வாசித்துக்கொண்டிருந்து முடிந்து பாழாய்ப் போகாமல் வாருங்கள் எனக்குத் தந்தையானவனும்என்போல்வாரும் வணங்குதற்கு உரியவனும் ஞானிகளின்) கூட்டங்களாலே துதிக்கப்படுபவனும் அளவிறந்த அப்படிப்பட்ட வஸ்துவாக உள்ளவனும் காளமேகம் போன்றவனும் திருநின்றவூரில் எழுந்தருளியிருக்கிற முத்துக்கோவை போலக் குளிர்ந்த வடிவையுடையவனும் பூங்கொத்துகள் நிறைந்த சோலைகளையுடைய காண்டவவனத்தை ஜ்வலிக்கிற அக்நியினுடைய வாயிலே புகுவித்தவனுமான பெருமானை நான் கண்டது கடல்மல்லைத் தலசயனத்தே

     பாசுரத்துடன் திரும்பிவந்த திருமாலிடம் தாயார், “”எல்லா திவ்விய தேசங்களுக்கும் ஆழ்வார் பத்திற்கு மேற்பட்ட பாசுரங்கள் பாடியவர். நமக்கு மட்டும் ஏன் ஒரு பாசுரத்துடன் நிறுத்திக்கொண்டார்?” என்று கேட்டு, மேலும் பாசுரங்களைப் பெற்று வருமாறு எம்பெருமாளை திரும்பவும் அனுப்பி வைத்தாள்.

திருகண்ணமங்கை-திருநின்றவூர்

       அதற்குள் திருமங்கையாழ்வார் பல திவ்விய தேச ங்களைப் பாடியும், சேவித்துக்கொண்டும் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருக்கண்ண மங்கைக்கு வந்துசேர்ந்தார்.

          ஆச்சரியமான ஒற்றுமை என்னவென்றால், திருக்கண்ணமங்கை பெருமாளின் திருநாமமும் ஸ்ரீபக்தவச்சலப் பெருமாள்தான். திருநின்றவூர் பெருமாள், திருக்கண்ணமங்கை பெருமாளின் சந்நிதியில் நின்றிருந்த திருமங்கை ஆழ்வாரிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தோடு, நோக்கத்தையும் உணர்த்தினார். பரவசத்தால் நெகிழ்ந்துபோன மங்கை மன்னன், கீழ்வரும் பாசுரத்தை அருளிச் செய்தார்.

ஏற்றினை யிமயத்துளெம் மீசனை
இம்மையை மறுமைக்கு மருந்தினை,
ஆற்றலை அண்டத் தப்புறத் துய்த்திடும்
ஐயனைக் கையிலாழி யொன்றேந்திய
கூற்றினை குருமாமணிக் குன்றினை
நின்றவூர் நித்திலத் தொத்தினை
காற்றினைப் புனலினைச் சென்றுநாடி
கண்ணமங்கையுள்கண்டுகொண்டேனே!’
…………………………
பெரிய திருமொழி:7-10-5

 காளைபோல் செருக்குடையவனும் இமயமலைத் திருப்பிரிதியிலெழுந்தருளியிருக்கின்ற ஸ்வாமியும் இஹலோகத்ததுப் பலன்களை யளிப்பவனும் பரலோகபு ருஷார்த்தத்திற்கு ஸாதனமாயிருப்பவனும் பரிபூர்ணசக்தியே வடிவெடுத்தது போலிருப்பவனும் அண்டங்களுக்கு அப்பாலுள்ள பரமபதத்தில் செலுத்தவல்ல ஸ்வாமியும் திருக்கையில்ஒப்பற்ற திருவாழியை தரித்துக் கொண்டுள்ளவனும் எதிரிகட்கு யமன் போன்றவனும், சிறந்த நீலமணிமயமான மலைபோன்றவனும் திருநின்றவூரி லெழுந்தருளி யிருக்கிற முத்துத்திரள் போன்றவனும் காற்றுப்போல் ஸுகமளிப்பவனும் தண்ணீர்போல் உயிர்தரிக்கச் செய்பவனமான பெருமானை சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டுகொண்டேன்

  இரண்டு பாசுரங்களைப் பெற்றதில் பிராட்டிக்கும் பரந்தாமனுக்கும் பெருத்த மகிழ்ச்சி.

      எம்பெருமாள் தான் இருந்த இடத்திலிருந்தே பாசுரங்களைப் பெற்றிருக்க முடியும். ஆனால் தன் அடியார்களிடம் வாத்சல்யம்- அன்பும் பாசமும் கொண்டவர் என்பதால் ஆழ்வாரைத் தேடிப் போய் பாசுரம் பெற்றுவந்தார். அதனால்தான் பக்தவத்சலன் என்றழைக்கப்படுகிறார்.

33.13(c): திருக்குறுந்தாண்டகம் (20 பாடல்கள்)

         பாடலின் ஒவ்வொரு அடியும் இடையிலே தாண்டுவதை இந்தப் பாடல்களில் காணலாம். பாடலின் அகத்தே தாண்டுவது தாண்டகம். ஒவ்வொரு அடியிலும் ஆறு சீர்கள் வந்தால் அது குறுந்தாண்டகம்.

மூவரில் முதல்வனாய ஒருவனை உலகம்கொண்ட
கோவினை குடந்தை மேய குருமணித் திரளை இன்பப்
பாவினைப் பச்சைத் தேனை பைம்பொன்னை அமரர் சென்னிப்
பூவினைப் புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வார் தாமே.
……………………………….……………….திருக்குறுந்தாண்டகம்-6.

       மும்மூர்த்திகளுக்கும் முதல்வன், உலகத்தை விழுங்கிய தலைவன், குடந்தையின் மணித்திரள், இன்பப் பாட்டு, பச்சைத் தேன், பசும்பொன், தேவர்களின் தலைப்பூ இப்படி என்னவெல்லாம் சொல்லித் தொண்டர்கள் அவனைப் புகழ முடியும்!

திருநெடுந்தாண்டகம் (30 பாடல்கள்)

       நெடுந்தாண்டகம், எட்டு சீர்கள் அமைந்தவை. தாண்டகம் என்னும் இலக்கிய வகையின் விதிகள் கடின)மானவை.

       புள்ளி எழுத்துகளை நீக்கினால் ஒவ்வொரு அடியிலும் இருக்கும் எழுத்துகளின் எண்ணிக்கை 27-க்கு மேல் இருக்க வேண்டும்.

 திருநாவுக்கரசரின் ஆறாம் திருமுறை தாண்டக யாப்பில் அமைந்தது. திருத்தாண்டகம் என்றும், அவர் ஏறக்குறைய ஆயிரம் பாடல்கள் இயற்றியுள்ளார்.

திருமங்கையாழ்வாரின் தாண்டகங்கள் இரண்டும் மொத்தம் ஐம்பது பாடல்களே.திருநெடுந்தாண்டகத்தின் இந்தப் பாடல் பிரசித்தமானது.

பாருருவில் நீர் எரி கால் விசும்பும் ஆகி
பலவேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற
ஏருருவில் மூவருமே யென்னநின்ற
இமையவர்தம் திருவுருவேறெண்ணும்போது
ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ
ஒன்று மாகடலுருவம் ஒத்து நின்ற
மூவுருவும் கண்டபோது ஒன்றாம்சோதி
மூகிலுருவம் எம்மடிகள் உருவம்தானே (திருநெடுந்தாண்டகம்-2)

     நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்றும் பலவேறு சமயங்களுமாய் பரந்து விரிந்தவனை ஒருமைப்படுத்தி, பிரமன், விஷ்ணு, சிவன் மூவரையும் ஓர் உருவம் என்று இமையவர்கள் எண்ணும்போது ஓர் உருவம் பொன்நிறம், ஒன்று சிவந்த நெருப்புருவம், ஒன்று கடல் உருவம். இந்த மூன்று உருவங்களும் கண்டபோது ஒருமைப்படுத்திய ஒரு சோதி போன்றவன் மேகக் கருமை படைத்த எங்கள் நாராயணனின் உருவம், என்று விஸ்தாரமான அழகான பாசுரத்தால் விளக்குகிறார்.

33.13(d): நலாயிர திவ்யபிரபந்தம்- மூன்றாவது ஆயிரம் (Later Part)

திருவெழுகூற்றிருக்கை:

‘    திருவெழுகூற்றிருக்கை’ என்பது மூன்றாவது ஆயிரமாகிய இயற்பாவில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

      எழுகூற்றிருக்கை என்பதும் கடினமான பாட்டமைப்பு. ஏழு+கூற்று+ இருக்கை., என்று பிரிப்பார்கள்.

     ஏழு அறையாக்கி சிறுமிகளின் பாண்டியாட்டம் போல கட்டம் வைத்து புகுந்து எழுதப்படும் அமைப்பு.

       ஒன்றிலிருந்து ஏழு வரை ஏறியும் இறங்கியும் சொற்கள் அமைக்கப்படும். இதை ‘சித்திரக் கவி’ வகையிலும் சேர்ப்பார்கள்.

    திருமங்கையாழ்வாரின் எழுகூற்றிருக்கை 46 அடிகள் கொண்டது. நிலைமண்டில ஆசிரியப்பா வகையைச் சேர்ந்தது. இதை,  தேர் வடிவத்தில் கோலம் போல எழுத முடியும்.  ‘ரதபந்தம்’ என்று இதற்குப் பெயர்.

      திருமங்கையாழ்வாரின் எழுகூற்றிருக்கை 46 அடிகள் கொண்டது. நிலைமண்டில ஆசிரியப்பா வகையைச் சேர்ந்தது. ஒன்று முதல் ஏழு முடிய ஏறி ஏறி இறங்கி, இறுதியில், ஒன்றாய் விரிந்து நின்றனை என்று அமைத்திருக்கிறார். குடந்தை ஆராவமுதப் பெருமாளைப் பாடியதாகச் சொல்கிறார்கள். இதை, தேர் வடிவத்தில் கோலம் போல எழுத முடிகிறது. ரதபந்தம் என்றும் பெயர் சொல்கிறார்கள். கவிதைக்கு ஒரு பயிற்சியாக இருக்கும் இந்தப் பாட்டு ஆழ்வாரின் திறமையைக் காட்டுகிறது.

ஒன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து
மங்கையர் இருவரும்
மலரன அங்கையில் முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை,
நெறிமுறை நால்வகை வருணமும் ஆயினை
மேதகும் ஐம்பெரும்
பூதமும் நீயே அறுபதம்
முரலும் கூந்தல் காரணம், ஏழ்விடை
அடங்கச் செற்றனை அறுவகைச்
சமயமும் அறிவரு நிலையினை, ஐம்பால்
ஓதியை ஆகத்து இருத்தினை அறமுதல் நான்கவையாய்
மூர்த்தி மூன்றாய்
இருவகைப் பயனாய்
ஒன்றாய் விரிந்து நின்றனை.

         இவ்வாறு 1234567654321 என்று ஏற்ற இறக்கத்தில் அனாயாசமாகக் கவிதை புனைந்திருக்கிறார்.

திருவெழுகூற்றிருக்கை என்னும் பெயரில்

 • திருஞான சம்பந்தர்
 • திருமங்கை ஆழ்வார்
 • நக்கீர தேவ நாயனார்
 • அருணகிரிநாதர்

ஆகியோர் பாடிய பாடல்கள் உள்ளன.

33.13(e): மடல்கள்(சிறிய & பெரிய திருமடல்கள்):

     திருமங்கையாழ்வார் காலத்துக்கு முன்பும் பெண்கள் மடலேறுவதாக சில குறிப்புகள் கலித்தொகை போன்ற சங்க நூல்களில் உள்ளன. ஆனால் அவை,  காதலன் கிடைக்கவில்லை என்றால் பெண்ணாகிய நான் சமூக ஒழுங்கை மீறி மடலூர்ந்து வருவேன் என்று அடிபணிய வைக்கும் வகையில் உள்ளன.

    தமிழில் அகத்துறை நூல்களில் ‘மடல்’ ஒரு வகை. இதை பக்தி இலக்கியத்தில் முதலில் பயன்படுத்தியவர் திருமங்கையாழ்வார்.

        சங்க இலக்கியங்கள் மடல் என்று பெரும்பாலும் பனை மடலையே குறிக்கும்.   விரும்பிய பெண்ணை அடைய முடியாத நிலையில் மடலேறியாவது அவளைப் பெறுவேன் என்று பனை மடல்களால் ஆன குதிரை வடிவம் அமைத்து ஊர் நடுவே காதலன் தோன்றிப் பிடிவாதம் செய்து அடையும் முரட்டுக் காதல்.

      அவன் மேல் இரக்கம் கொண்டு பெண்ணைப் பெற்றவர்கள் திருமணத்துக்கு சம்மதிப்பார்களாம்.

    இந்த வழக்கத்தை மாற்றி மென்மையாக்கிய பெருமை திருமங்கையாழ்வாருக்கு உரியது.

 தான் ஒரு ஆண் என்றதால்,  தன் தன்மைக்கு ஏற்ப மடல் ஏறத் துணிந்தார் ஆழ்வார்.

     ஆனால்  ‘உலகில் ஆண் என்ற புருஷாகாரம் பகவான் ஸ்ரீவிஷ்ணுவுக்கே உரியது’ என்று புருஷ சூக்தம் புகல்வதால், பகவானைத் தவிர அனைவரும் பெண்களே. இதையே தன் சிறிய திருமடலுக்கும் பெரிய திருமடலுக்கும் மூலமாகக் கொள்கிறார் ஆழ்வார்.

     பெண்கள் மடலேறுதல் தகாது என்று இலக்கணம் சொன்னபோதும், தன்னை ஒரு பெண்ணாக எண்ணி  திருமால் மீது காதல் கொண்ட பெண்  அவனை அடைய முடியாத நிலையில் மடல் ஏறத் துணிந்ததாகப் பாடி,  புரட்சி செய்கிறார்.

    கண்ணன் கிடைத்திலன் என்பதன் காரணத்தால் திருமங்கையாழ்வார் பெண்ணாகி மடலேறினார் . ஓர் இளம் பெண்ணின் நோக்கிலிருந்தும் பல பாடல்கள் இயற்றியுள்ளார்.

      சிறிய திருமடலிலே நாராண நாமத்தையும், பெரிய திருமடலில் கண்ணன் என்ற நாமத்தையும் எதுகை பயில்கிறார் ஆழ்வார்.

       பெரியதிருமடலில் கண்ணன் என்பதுடன் முழுவதும் எதுகை பயில்கிறார் .பெரிய திருமடலில் விஷ்ணுவுக்கு ஏற்பட்ட பல ஊர்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறார்.

33.14.திருமங்கையாழ்வாரின் சிறப்பு

        திருமங்கையாழ்வாரின் வாள் வீச்சும் கவிதை வீச்சும் வேறு எவரிடமும் காண முடியாதவை. எல்லாவற்றையும் விட, கம்பீரமான பக்தியை, இந்த மண்ணில் விதைத்தவர்  திருமங்கையாழ்வார்.

 • பெரிய திருமொழி (1084 பாடல்கள்)
 • திருநெடுந்தாண்டகம் (30 பாடல்கள்)
 • திருக்குறுந் தாண்டகம் (20 பாடல்கள்)
 • திருவெழுக்கூற்றிருக்கை (ஒரு பாடல் – 47 அடிகள்)
 • சிறிய திருமடல் (ஒரு பாடல் – 155 அடிகள்)
 • பெரிய திருமடல் (ஒரு பாடல் – 297 அடிகள்)

   என்கிற ஆறு வகை பிரபந்தங்களை 1137 பாசுரங்களாக அருளிச் செய்து அதிகமாக 86 திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தார்.

     திருமங்கை மன்னன் நிறைய சம்பாதித்தார், நிறைய அனுபவித்தார், நிறைவாக வாழ்ந்தார், காதலித்தார்- முதலில் பெண்ணை, பின்பு திருமாலை. பல கோவில்களைச் செப்பனிடத் திருப்பணிகள் செய்வித்தார். எல்லா திவ்யதேசங்களையும் பாடியிருக்கிறார்.

   *மனிதனாகப் பிறந்து, முரட்டு வீரனாக வளர்ந்து, அரசனாகப் பதவி அனுபவித்து, மங்கையின் மீது காதல் கண்டார்.

  *அந்தக் காதலியின் வார்த்தைகளால், எம்பெருமான் மீது காதல் கொண்டார்

 *பரம வைஷ்ணவனாக மாறி, அரச பொறுப்பைத் துறந்து அரங்கனுக்காக,அவன் ஆலயத்தின் திருமதில்களைக் கட்டுவதற்காக, “திருடனாகவும்” மாறினார்

   *எம்பெருமானையே நேரில் கண்டு, அவன் திருவாயினாலே “ஓம் நமோ நாராயணாய” என்ற திருஎட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் பெற்றார்.

   *அரங்கன் ஆலயத்தில்,அரங்கனைப் பாடி, அரங்கனை மகிழ்வித்து, அவனிடமே ஆழ்வார்களின் தமிழுக்கு ஒரு விழா வேண்டி, இன்று வரை, இன்னும் வரும் காலங்களிலும், தொடர்ந்து நடைபெறும் வகையில், வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெறக் காரணமானவர், திருமங்கையாழ்வார்.

  *மனதில் எத்தகைய காதல் இருந்திருந்தால், இந்த பக்தி நிலை ஏற்பட்டிருக்கும் என்பதை என்னும் பொழுது, நாமும் இந்த நிலையை அடைய முயற்சிக்க வேணும் என்ற ஆசை ஏற்படுகிறது.

   இலக்கண வகைகள் பலவற்றையும் முயன்று அருமையாக எல்லா வகைப் பாடல்களையும் படைத்தார். திருமங்கை ஆழ்வாரின் கவிதை வீச்சு அவரை நம்மாழ்வாருக் அருகில் கொண்டு செல்கின்றன.

  துணைவியுடன் இருந்து அருள் பாலிக்கும் ஒரே ஆழ்வார், திருமங்கையாழ்வார்தான்.TM Alwar (1)

33.15.திருமங்கையாழ்வார் வாழி திருநாமம்!

கலந்த திருக்கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே!
   காசினியில் குறையலூர்க் காவலோன் வாழியே!
நலந்திகழ் ஆயிரத்து எண்பத்துநாலு உரைத்தான் வாழியே!
   நாலைந்தும் ஆறுஐந்தும் நமக்கு உரைத்தான் வாழியே!
இலங்கு எழுகூற்றிருக்கை இருமடல் ஈந்தான் வாழியே!
   இம்மூன்றில் இரு நூற்று இருபத்தேழு ஈந்தான் வாழியே!
வலந்திகழும் குமுதவல்லி மணவாளன் வாழியே!
   வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே!

வையம் தழைக்க வந்தவரே
வைணவர்களுக்கு அமுது அளித்தவரே
வையம் அளந்தானை வழிப்பறி செய்தவரே
எம்பெருமானை நேரில் தரிசித்தவரே
எட்டெழுத்து மந்திரம் பெற்றவரே
திருமங்கையாழ்வாரே

நின் தாள் போற்றி

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்
*******************************************************

RELATED ARTICLES- ஆழ்வார்கள்

Pl Also, Click & Look for each ஆழ்வார் at the HRE Links for ஆழ்வார்கள் given below

 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Please click below to go to CONTENTS for all the Articles in HRE:

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

 

Advertisements