Tags

, , , , , , , , , , ,

பிறப்பு–திருமழிசை-தை-மகம்-சுதர்சன சக்கரத்தின் அம்சம்TM Alwr-1

36.1. திருமழிசை    

     பிருகு, அத்திரி மகரிஷி, வசிஷ்டர், பார்க்கவர் போன்ற முனிவர்கள் பூமியில் தவமியற்ற எண்ணி, தவமியற்றும் இடம், பகவான் விஷ்ணு மகிமையால், உலகிலேயே மிகச் சிறந்த தலமாக இருக்க வேண்டும் என்று விரும்பினர்.

     முனிவர்கள் அனைவரும் பிரம்மனிடம் சென்று தங்கள் எண்ணத்தைத் தெரிவித்தார்கள். பிரமன் திருமழிசைத் தலத்தைச் சுட்டிக் காட்டினான். ஆனால் முனிவர்கள் “தேவனே இது எந்த வகையில் உலகிற் சிறந்த தலம் என்கிறீர்கள்?”  என்று கேட்டார்கள்.

   பிரம்ம தேவன் இந்தத் தலத்தை நிறுத்துக் காட்டிவிடுகிறேன் என்று, ஒரு துலாக்கோலில் ஒரு தட்டில் மற்ற எல்லாத் தலங்களையும் வைத்து, திருமழிசைத் தலத்தை மற்றொரு தட்டில் வைத்து எடை போட்டுக் காட்டினார். ஆச்சரியப்படும் விதத்தில், மற்ற எல்லாத் திருத்தலங்களையும் சேர்ந்த தட்டைவிட கனத்தால் அதிகரித்து திருமழிசைத் தலம் இருந்த தட்டு மட்டும் கீழே தாழ்ந்து இத்தலத்தின் பெருமையை உயர்த்திப் பிடித்தது.

     தேவர்கள் சந்தோஷ மிகுதியால், “பிரம்மதேவனே, இந்தத் தலத்தையே நாங்கள் எங்கள் தவத்துக்கு ஏற்ற இடமெனத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்” என்று சொல்லி பூரிப்படைந்தனர். இந்தத் தலமே ‘மஹிசாரண்யம்’ என்று பெயர் பெற்று, பின்னர் திருமழிசை என்று பெயர் பெற்றது.

Please click below to go to CONTENTS for all the Articles in HRE: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

TM Alwr-2

     பிரம்ம தேவன் இந்தத் தலத்தை துலாக்கோலில் எடைபோட்டு இதன் பெருமையை உணர்த்திய செய்தியை, திருக்கச்சி நம்பிகள் தம்முடைய ஒரு வெண்பா மூலம் சுட்டிக்காட்டுகிறார்:

உலகு மழிசைய முள்ளுணர்ந்து தம்மில்
புலவர் புகழ்க் கோலால் தூக்க – உலகுதன்னை
வைத்தெடுத்த பக்கத்தும் மாநீர் மழிசையே
வைத்தெடுத்த பக்கம் வலிது.

     அனைத்து திவ்ய தேசங்களைக் காட்டிலும் இந்தத் தலம் உயர்ந்தது என்று பிரம்மதேவன் காட்டினான் என்றால், அது அந்த மண்ணில் ஒரு மகானின் அவதாரம் நிகழப் போவதைக் காட்டத் தான் என்பது புரியும்.

     அந்தப் பிள்ளை, பெருமாளுக்கே மிகப் பிரியமான பிள்ளை. சொன்னதெல்லாம் பெருமாள் மனமுவந்து கேட்டு நடந்திருக்கிறார்.  “பெருமாளே உன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்” என்றால் பெருமாளும் சுருட்டிக் கொண்டு அவரோடு நடந்திருக்கிறார். பின்னர், பழையபடி “பைந்நாகப் பாய் விரித்துக் கொள்” என்றால், அவர் அந்தப் பிள்ளையின் சொற்படி கேட்டு அப்படியே செய்திருக்கிறார்.

     அப்படி படுத்துக் கொண்டிருந்த பெருமாளைப் பார்த்து ஓரிடத்தில், “என்ன பெருமாளே, நீர் அப்படியே படுத்துக் கொண்டிருக்கிறீரே?”  என்று செல்லமாகக் கேட்க, அவரும் பிள்ளையின் சொல்லுக்காக எழுந்திருந்து அவருடன் பேசவும் செய்திருக்கிறார்.

       இப்படியெல்லாம் மகிமைகளை நடத்திக் காட்டிய அந்தப் பிள்ளைதான், திருமழிசை திருத்தலத்தில் அவதரித்த திருமழிசையாழ்வார்.

36.2. பார்க்கவ முனிவர்-கனகாங்கி

     பிரம்ம தேவன் மூலம் இந்தத் தலத்தின் சிறப்பைக் கேட்டறிந்த பார்க்கவர் முதலிய சில முனிவர்கள் அந்தத் தலத்தில் வந்து தவம் செய்யலாயினர். பார்க்கவ முனிவர் திருமாலை நோக்கி தீர்க்கசத்திர யாகம் புரிந்தார். அந்த நேரத்தில் தான், கந்தர்வப் பெண்ணான அவருடைய மனைவியார் கருவுற்று தைத் திங்களில் மகம் நாளில் (கி.பி. ஏழாம் நூற்றாண்டு இடைப் பகுதியில்) ஒரு பிள்ளையைப் பெற்றார்.முழுமையற்ற நிலையில் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு கை, கால் போன்ற உறுப்புகள் இல்லாமல் இருந்ததால், அதை ஒரு மூங்கில் புதரில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

    அவர்கள் சென்ற பின்பு, அன்னை மகாலெட்சுமி, அய்யன் விஷ்ணுவுடன் வந்து அக்குழந்தையை எடுத்து ஆசீர்வதித்து விட்டுச் சென்றனர். அவர்களின் அருளால் அக்குழந்தை ஞானமும், முழு வடிவமும் பெற்றது. அவரது வலது கால் கட்டை விரலில் கூடுதலான ஒரு கண்ணும் இருக்கும்.

36.3. திருவாளன்-பங்கயச்செல்வி

     அந்தப் பிள்ளையை, பிரம்புத் தொழில் புரியும் திருவாளன் என்பவன் பிரம்பு அறுத்துப் போவதற்காக அங்கே வந்தபோது கண்டான். குழந்தை ஒன்று அந்தப் பிரம்புப் புதரில் அழுவதைக் கண்டதும் பரிவோடு அள்ளியெடுத்தான்.

    பிள்ளையில்லாத தன்னுடைய குறையைத் தீர்ப்பதற்காகவே இறைவன் இக் குழந்தையைக் கொடுத்தருளியிருக்கிறான் என்று எண்ணி, பெருமகிழ்வோடு வீட்டுக்கு எடுத்துச் சென்றான். தன் மனைவியான பங்கயச்செல்வியிடம் குழந்தையைக் கொடுத்து, அந்தக் குழந்தை கிடைத்த விவரத்தையும் கூறினான்.

    பங்கயச்செல்வி தாய் உள்ளத் தவிப்போடு பால் புகட்ட முயன்றும் குழந்தை அப்பாலைக் குடிக்க மறுத்தது. அந்த அறியாப் பருவத்திலேயே உணவின் மீதான பற்றைத் துறந்தது. பங்கயச்செல்விக்கோ என்ன செய்வதென்று புரியவில்லை. அந்தக் குழந்தையோ வெகுநாள் வரை பால் உண்ணாமலும் சிறுநீர் கழிக்காமலும் அப்படியே இருந்து வந்தது. திருவாளனும் அவன் மனைவியும் மனம் வருந்தினர்.

அந்தக் குழந்தை பால் உண்ணவில்லையே தவிர, அதன் மேனி சிறிதும் வாட்டமடையவில்லை! பூரண வளர்ச்சியோடு மேன்மேலும் பொலிவுற்றது. அதைக் கண்டு அவர்களிருவரும் பெரும் வியப்படைந்தார்கள். இந்தச் செய்தி ஊர் மக்களுக்குப் பரவியது. அவர்கள் ஒவ்வொருவரும் வந்து அந்தக் குழந்தையைப் பர்த்துவிட்டு  “இது தெய்வக்குழந்தை”  என்று போற்றிச் சென்றார்கள்.

திருமழிசை இறைவன் அருளால் தோன்றிய அந்தக் குழந்தையை ‘திருமழிசைப் பிரான்’ என்ற பெயராலேயே கூப்பிட்டுக் கொண்டாடினார்கள்.

36.4. வயது முதிர்ந்த தம்பதியர்

    ஒரு நாள், குழந்தை பாக்கியமற்ற, வயது முதிர்ந்த தம்பதியர் வந்து அக்குழந்தையைக் கண்டனர். அவர்கள் குழந்தைக்கு, பாலமுது கொடுத்த போது அக்குழந்தை அதை ஏற்றுக் கொண்டது.

     இதைக் கண்ட பங்கயச்செல்வி வியப்புற்றாள். தன் மார்பிலே சுரந்த பாலைக் குடிக்காமல் இவர்கள் கொண்டுவந்த பாலைக் குடிக்கிறதே. சரி, எப்படியாவது இந்தக் குழந்தை உண்டால் சரி என்று எண்ணிய அவள், தன் கணவரிடம்,  “இனி தினமும் அந்தப் பெரியவரை நம் குழந்தைக்கு பால் கொண்டுவந்து ஊட்டும்படி கேட்டுக்கொண்டாள்.

   அவரும் அதற்கு இணங்கி அன்றுமுதல் நாள்தோறும் தன் வயதான மனைவியுடன் குழந்தைக்கு காய்ச்சிய பால் கொண்டு வந்து கொடுத்தார். குழந்தையும் புன்சிரிப்போடு பருகி மகிழ்ந்தது.

36.5. கணிக்கண்ணன்

     தினமும் பால் காய்ச்சி சமர்ப்பித்துக் கொண்டிருந்த அந்த வயதான தம்பதியருக்கு பிள்ளையில்லா குறையை தீர்க்க திருவுள்ளம் பற்றியது அக்குழந்தை.  எப்போதும் பால் முழுவதையும் அருந்தி விடும் அக்குழந்தை அன்று அந்த பாலை மீதம் வைத்துவிட்டது. நீங்களும் அருந்துங்கள் என்று சொல்வது போல் ஜாடைக் காட்டியது. அதை அருந்தி விட்டு அவர்களும் வீடு திரும்பினர். அந்த பாலின் சக்தியினால் அவர்கள் இருவருக்கும் வியோதிகம் நீங்கி வாலிபம் திரும்பியது. வாழ்க்கையில் இருவரும் இன்புற்றிருந்த சமயம் மனைவி கருவுற்றாள். தெய்வக் குழந்தையின் சக்தியால் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு ‘கனிக்கண்ணன்’ என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.

     அந்த தம்பதியர் கனிக்கண்ணனை திருமழிசையார் முன்னிலையில் கொண்டு வந்து விட, அவரது கடாக்ஷத்திலே நல்ல அறிவைப் பெற்று, அவருக்கு சிஷ்யன் ஆகி, பாகவத நிஷ்டனாகி, இருவரும் தோழர்களாக வளர்ந்து வந்தார்கள்.

   கனிகண்ணன், வேதங்கள், சமய நூல்கள் அனைத்தும் நன்கு கற்றான். அவன் திருமழிசை ஆழ்வாரின் நெருங்கிய நண்பனாகவும், நாளடைவில் அவரையே குருவாகவும் ஏற்றுக்கொண்டான்.

36.6. பரம்பொருள்

      முனி குமாரராகையால், திருமழிசையார் வயது ஏழு வந்தவுடனேயே ஐம்புலன் அடக்கி அஷ்டாங்க யோகம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதற்கு இந்த உலகுக்கெல்லாம் மூலகாரணமான பரம்பொருள் யார் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்ட பிறகே அத்தகைய பரம்பொருளைத் தியானித்து யோக நிஷ்டையில் அமர வேண்டும் என்று எண்ணிய அவர் அதற்குரிய வழியை ஆராய எல்லா சமய நூல்களையும், தத்துவங்களையும் கண்டறிய எண்ணினார்

     எனவே அதற்குரிய வழியை ஆராய்வதற்காக அனைத்து சமய நூல்களையும் தத்துவ நுட்பங்களையும் கற்றுத் தெளிவுற எண்ணினார்.

   அதன் அடிப்படையில், சாக்கியம், சமண மதங்களின் நூல்களைக் கற்றார். பின் அவற்றை விட்டு, சைவ சமயத்தில் புகுந்து சைவம் தொடர்பான நூல்களை ஆராய்ந்தார். பிறகு  “உலகுக்கெல்லாம் மூலகாரணமான முழுமுதற்பொருள் சிவபெருமானே!”  என்று தீர்மானித்து சைவ சமயத் தத்துவங்களுக்கு ஓர் அவதார புருஷராகவும் மகானாகவும் விளங்கினார்.

36.7.திருமயிலையில்-சிவயோகியர்

     ஞான ஒளியும் தெய்வீக அருளும் பெற்று, யோகங்கள் பலவும் புரிந்து சித்தராக மாறிய திருமழிசைப் பிரான், சிவபெருமான் கோயில் கொண்டுள்ள திருத்தலங்களுக்குச் சென்று, விரிசடையில் பிறைசூடிய முக்கண்ணனை சேவித்தவாறே, திருமயிலைக்கு வந்தார். அங்கே மௌன விரதம் கைக்கொண்டார்.

36.8.பேயாழ்வார் சந்திப்பு

   திருமயிலையில் வைணவரான பேயாழ்வார் ஒரு பூஞ்சோலையில் தங்கியிருந்தார்.  ‘திருமழிசையார் ஒரு மகா யோகி; மாமேதை; சைவர்’  என்று பேயாழ்வார் கேள்விப்பட்டிருந்தார். எனவே சிறப்பு வாய்ந்த திருமழிசையாருக்கு பரம்பொருளோடு இரண்டறக் கலக்கும் ஆத்மானுபவத்தை போதித்து, அவரை சைவ சமயத்திலிருந்து வைணவத்துக்கு திருத்திப் பணி கொள்ள எண்ணினார் பேயாழ்வார்.

    அவர் திருமழிசையாரை நாடிச் சென்று சமய வாதம் செய்ய அழைத்தார். ஆனால் திருமழிசையாரோ மௌன விரதம் கைக்கொண்டிருந்ததால் அதற்கு இணங்கவில்லை. எனவே பேயாழ்வார் ஒரு யுக்தியைக் கையாண்டார்.

36.9.பேயாழ்வார் செடிகளைத் தலைகீழாக நட்டது

   திருமழிசையாரின் கண்களில் படும்படி, ஓரிடத்தில் செடிகளை நடத் தொடங்கினார். ஆனால் வழக்கம்போல நடாமல், அவற்றின் வேர்களை வானத்தை நோக்கியும், இலைகள் பூமியில் பதியும் படியும் தலைகீழாக நட்டு வைத்தார். பிறகு அறுத்து முடியப்பட்ட கயிற்றில் பொத்தல்கள் உள்ள ஓட்டைக் குடத்தைக் கட்டி, நீர் எடுத்து அச்செடிகளுக்கு ஊற்ற முயன்றார்.

    பேயாழ்வாரின் விசித்திரமான செய்கையைக் கண்ட திருமழிசையார் எள்ளி நகையாடினார். பேயாழ்வார்,  “யோகியாரே, ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார்.“நீர் செய்யும் பித்துக்கொண்ட செயலைக் கண்டால் யாவரும் சிரிக்கத் தான் செய்வார்கள்” என்றார் திருமழிசையார்.

     “பித்து கொண்ட செயலை யாமோ செய்கிறோம்? பித்தனை வழிபட்டு வெறும் சித்துக்களாலும் யோக வித்தைகளினாலுமே பரம்பொருளை அடைந்துவிட முயலும் நீர் தான் பித்துப் பிடித்தவர்போல் செயல் புரிகிறீர்.

     நான் செடி நடுவதைக் கண்டு பேதைமையால் ஏளனம் செய்தீரே தவிர, அதன் உட்பொருளை உம்மால் உணர முடியவில்லையே! நீரா மறுமையில் முக்தியெனும் பேரின்பத்தை அடைவதற்குரிய வழியை உலக மக்களுக்கு எடுத்துக்காட்டப் போகிறீர்?” என்று கேட்டார் பேயாழ்வார்.

     திகைப்பு மேலிட ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தார் திருமழிசைப் பிரான்.  பிறகு அவர்  “மாயனை வழிபடுபவரே, நும் செயலின் உட்பொருள் தான் யாதோ?”  என்று கேட்டார்.

   “சிவயோகியாரே, யாம் செய்த செயல் நும் மன நிலையைக் குறிப்பதாகும். உம்முடைய மனம் சிறிது காலம் ஒரு மதத்தைச் சார்ந்திருந்தது. அதை விட்டு மற்றொரு மதத்தைப் பற்றிக்கொள்வதையே அறுந்து முடிபோட்ட கயிறு குறிக்கிறது. இந்த ஓட்டைக் குடத்தில் முகக்கும் தண்ணீரெல்லாம் ஒழுகி ஓடிவிடுமல்லவா? அதுபோலவே உம்முடைய மனத்தில் எவ்வித மதக்கொள்கையும் தத்துவ ஞானங்களும் நிலைகொள்ளாமல் பலவாறாக நீங்கி ஓடிவிடுகின்றன. செடிகளைத் தலைகீழாக நட்டது, உலகத்துக்கு ஆதி அந்தம் தெரிந்து கொள்ளாமலே உண்மையான பரம்பொருளை அறிந்து விட்டதாக நினைத்து மயங்கித் தலைகீழாகச் செல்லும் உம்முடைய ஞானநிலையையே குறிப்பதாகும்” என்றார் பேயாழ்வார்.

  பின்னர், அனைத்துக்கும் மூல காரணமான பரம்பொருளின் தத்துவம் பற்றி இருவருக்குமிடையே பலவித வாக்குவாதங்கள் நிகழ்ந்தன.  “மாலடியாரே! காணுதற்கரிய அந்தப் பரம்பொருளை நீர் கண்டீரோ?” என்று கேட்டார் திருமழிசையார்.

   ”கண்டேன்; என்னுள்ளேயும் கண்டேன்; எனக்கு வெளியேயும் கண்டேன்; நான்மறையுள்ளும் அவனைக் கண்டேன். அன்றலரும் மலரினுள்ளும் கண்டேன். வீசும் காற்றிலும் கண்டேன். மண்ணிலும் கண்டேன்; விண்ணிலும் கண்டேன். நாமங்கள் பல சொல்லி நாரணனாகி நிற்பதைக் கண்டேன்”  என்றார் பேயாழ்வார்.

   “சரி, அவன் எல்லாமாகி எங்குமாகி நின்றாலும், அவன் உருவைக் காண முடியுமா?”  என்று கேட்டார் திருமழிசையார்.

   “அவன் உருவமற்றவன் என்றாலும், அவன் உருவமெடுப்பதையும் நான் கண்டேன். நாராயணனாகி நிற்கும் அவன் திருமேனி அழகையும் கண்டேன். திகழும் அருக்கன் நிறங்கண்டேன். அவன் கையில் பொன்னாழியும் வலம்புரிச் சங்கும் கண்டேன். அந்த மணிவண்ணன் குழலூதி மாடு மேய்ப்பதையும் கண்டேன். வாமனனாகி மாவலியிடம் மூவடி நிலம் தானம் கேட்பதையும் கண்டேன். பின் நெடுமாலாகி மூவுலகையும் ஈரடியால் அளந்து மூன்றாம் அடியாக மாவலியின் முடி மீது திருவடி வைப்பதையும் கண்டேன்.

    என் உள்ளத்துள்ளே ஒளிவிளக்கேற்றி வைத்த அந்த மாயனை நான் நாடி நாடி என் மனத்தினுள்ளே வசப்படுத்தினேன். அவன் என் உள்ளத் தாமரையில் புகுந்து நின்றான்; இருந்தான்; கிடந்தான்… அவன் அடி சேர்ந்து வாழும் வகையையும் யானறிந்தேன்” என்று, பேயாழ்வார் உள்ளம் உருகி அவன் தரிசனம் கண்ட விதத்தை எடுத்துரைத்தார்.

   இதைக் கேட்டுக் கொண்டிருந்த திருமழிசையாருக்கு மெய் சிலிர்த்தது. அனைத்துலகத்துக்கும் ஆதிமூலமான பரம்பொருள் ஸ்ரீமந் நாராயணனே என்பதை அவர் உணர்ந்தார்.

     மேலும் பெருமான் உலகை உண்டு உமிழ்ந்த காரணத்தையும் விளக்கினார். “கடல் அலைகள் எல்லாம் கடலிலே பிறந்து, அதாவது கடலிலிருந்தே பொங்கிப் பொங்கி எழுந்து, கடைசியில் கடலினுள்ளேயே அடங்கி விடுவதுபோல், உலகில் தோன்றிய அனைத்தும் இறைவனாலேயே தோன்றி இறைவனுக்குள்ளேயே அடங்கிவிடுகின்றன. இதை உலகுக்குக் காட்டவே எம்பெருமான் உலகத்தை உண்டு உமிழ்ந்தான்” என்று விளக்கமளித்தார் பேயாழ்வார்.

    “ஆத்மானுபவமாக நீங்கள் கண்ட பரம்பொருளை யானும் காண வழிகாட்ட வேண்டும்” என்று பேயாழ்வாரை வேண்டிக் கொண்டார் திருமழிசையார்.  “பரஞான பரபக்தியோடு பரம பக்தியின் மூலம் பரம்பொருளின் அருள்பெற்றால் தான், அந்தப் பரம்பொருளைக் காணமுடியும்”  என்றார் பேயாழ்வார்.

     உடனே திருமழிசையார் அவரை நோக்கி, “என் மன இருளைப் போக்கி ஞானம் பெற அருள்செய்தீர். அதனால் நீரே எனக்கு குரு. இனி நான் திருமகள்நாதனின் திருவடித் தாமரையையே பற்றுக் கோடாகக் கொள்வேன். அதற்குரிய தன்மையை எனக்கு நீரே கூறி அருள வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார்.

36.10.பேயாழ்வார் திருமழிசையாருக்கு உபதேசித்தல்

     மனம் திருந்திய அவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்களோடு மந்த்ரா அர்த்தங்களையும் திருமழிசையார் செவியில்முறைப்படி  உபதேசித்தார் பேயாழ்வார். ஸ்ரீமந்நாராயண மந்த்ரம் செவிகளில் பாய்ந்ததும் திருமழிசையார் பரம விஷ்ணு பக்தரானார். அத்திருமந்த்ர மகிமையால் ஸ்ரீமந்நாராயணனை தன் அகக்கண்களால் கண்டார். சிரத்தின் மீது ஆரம் உயர்த்தி கைதொழுது அநேக தண்டனிட்டு, கண்களில் நீர் மல்க மெய்மறந்து பலவாறாக பாசுரங்களைப் பாடி பெருமானைத் துதித்தார் திருமழிசையார்.  அதைக் கண்டு பேரானாந்தம் அடைந்த பேயாழ்வார் எம்பெருமானை சிந்தையிற்கொண்டு யோக நிஷ்டையில் ஆழ்ந்தார்.

      திருமழிசையார் அக்காட்சியைக் கண்டு அகம் மகிழ்ந்து, நெஞ்சமெல்லாம் கசிந்துருகி பாடியாடினார். திருமால் அவருக்கு மதிநலம் தந்தார். பரம்பொருளான பரந்தாமன் தனக்குக் காட்சி தந்த கருணைத் திறத்தை எண்ணியெண்ணி மகிழ்ந்தார் திருமழிசையார்.

சாக்கியம் கற்றோம் சமணம் கற்றோம் அச்சங்கரனார்
ஆக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம் – பாக்கியத்தால்
செங்கட் கரியானை சேர்ந்துயாம் தீதிலோம்
எங்கட்கு அரியதொன்றும் இல்

    என்னும் திருமழிசையாரின் வெண்பாவின் மூலம், அவருடைய மனநிலையை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.

36.11. திருமழிசையில் யோகம்

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு திருமழிசையாழ்வார் பகவான் ஸ்ரீமந் நாராயணன் மீது இன்னிசைப் பாக்களைத் தீந்தமிழில் புனையலானார். திருவல்லிக்கேணிக்குச் சென்று மாலவனை மனத்தில் ஏந்தி யோகத்தில் ஆழ்ந்தார்.

     பேயாழ்வாரின் கருத்துகளில் மனத்தை பறிக்கொடுத்த திருமழிசையார் வைஷ்ணவத்தை மிகவும் பெருமையோடும் பூறிப்போடும் மனங்குளிர ஏற்றுக்கொண்டார்.

    திருமழிசையாரும் அவரை வணங்கி விடைப் பெற்று திருமழிசைக்கு வந்து யோக நிலையில் நின்று திருமகள் கேள்வனை தியானித்துக் கொண்டிருந்தார். சுதர்சனத்தின் அம்சமாய் அவதரித்த ஸ்ரீவைஷ்ணவ பக்தரான அவர், சக்கரம் போன்று சுழன்று சுழன்று பல மதங்களில் உருண்டும் கிடந்தும் இறுதியில் ஸ்ரீமந்நாராயணன் திருவடிக்கமலம் கிடப்பதே மெய்யான பொருள் என்பதை மனதில் உறுதியாகக் கொண்டார்.

சிவ-தரிசனம்

     அந்த நேரத்தில் அவருடைய பரம பக்தியை சோதிப்பதுபோல் உமையொரு பாகரான சிவனார் தம் தேவியோடு ரிஷப வாகனத்தில் சென்றார். உமாதேவி திருமழிசையாரைக் கண்டதும் ‘யோகத்தில் அமர்ந்திருக்கும் அவருக்குக் காட்சியளித்துநாம் அருள்புரிவோம்’ என்று கயிலையானிடம் கூறினாள்.

   “தேவி! அவர் நாராயணன் மீது பக்தி பூண்டவர். அவர் பாகவத அனுபவம் ஒன்றிலே லயித்திருக்கிறார். தவிரவும் வேறொன்றையும் அவர் விரும்ப மாட்டார். நம்மையும் கவனிக்க மாட்டார்” என்றார்.

   சிவபெருமான், ஆயினும் “அவரைக் கண்டு செல்வதே தங்கள் திருவருளுக்கு ஏற்றது” என்று அவரை வற்புறுத்த, திருமழிசையாரின் முன் காட்சியளித்தார்.

திருமழிசையாழ்வாரோ உமையொருபாகனைக் கண்ணெடுத்தும் பாராதிருந்தார்.

   அதை உணர்ந்த சிவனார், கண்டும் காணாதவர் போல் திருமழிசையார் அருகில் சென்று, “உமக்கு அருள் புரியவே யாம் இங்கு வந்தோம். எம்மை அலட்சியம் செய்யலாமா?”  என்று கேட்டார்.

    “உம்மால் எனக்கு ஆக வேண்டிய பயன் என்ன? அதனாலே மௌனமாக இருக்கிறேன்” என்றார் திருமழிசையார்.  “ஏதாவது வரம் கேள்! தருகிறோம்!” என்றார் சிவபெருமான்.  “எனக்கு ஒன்றும் வேண்டாம்” என்றார் திருமழிசையார்.

   “நம்முடைய வருகை வீணாகாமல் ஏதாவது ஒரு வரத்தைக் கேள்!”  என்று மீண்டும் சிவபெருமான் புன்சிரிப்போடு கூறினார்.

    திருமழிசையாரும் புன்சிரிப்போடு “உம்மால் எனக்கு பரமபதம் தர முடிந்தால் அதையே வரமாகத் தாருங்கள்” என்று கேட்டார்.

    “பரமபதத்தை அருளக்கூடியவன் பரந்தாமனான வைகுந்த நாதனே! ஆகையால் என்னால் தரக் கூடிய வேறு ஏதாவது வரத்தைக் கேளும்” என்றார் பரமசிவன்.

    “பரமபதம் பெற பல தவங்கள் புரிய வேண்டும். அதற்கு எனக்கு அதிக ஆயுள் வேண்டும். எனவே இன்று சாக வேண்டியவர்களை நாளை சாகும்படி செய்ய உம்மால் முடியுமா?”  என்று கேட்டார் திருமழிசையார்.

   ”அது உயிர்களின் வினைப்படி நடக்கும்” என்றார் சிவபெருமான். இதைக் கேட்டதும் எள்ளி நகையாடிய வண்ணம், அருகிலிருந்த ஒரு ஊசியைக் காட்டி, “இதன் பின்னே இந்த நூல் வருகிறபடி செய்ய முடியுமா?” என்று கேட்டார்.

 36.12. வலது திருவடி கண்

    இந்த எள்ளல் வார்த்தை கேட்டதும் மிகுந்த சினங்கொண்டார் சிவனார். முக்கண்ணனாகிய சிவபெருமான் தம் மூன்றாம் கண்ணான நெற்றிக் கண்ணைத் திறந்தார். அடுத்த கணம் அதிலிருந்து பெரும் நெருப்பு எழுந்து மூவுலகையும் சூழ்ந்தது. ஆனால் அந்நெருப்பால் திருமழிசையார் ஒரு சிறிதும் பாதிக்கப்படவில்லை. பதிலுக்கு திருமழிசையார் யோக வலிமையால் தம் வலது திருவடி கண்ணை ஏவினார்.

      அதிலிருந்து நெருப்பு ஊழித்தீ போல் பொங்கி எழுந்தது. மூவுலகையும் தாக்கி தகிக்கச் செய்தது. கங்கையை சடையில் தாங்கிய சிவபெருமானையும் அந்நெருப்பு சூழ்ந்தது. அதனால் இந்திராதி தேவர்கள் வைகுந்தம் சென்று பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த திருமகள்நாதனை வணங்கி   ‘இந்நெருப்பிலிருந்து எம்மைக் காத்தருள வேண்டும’ என்று வேண்டிக் கொண்டனர்.

    திருமால் அந்தத் தேவர்களை நோக்கி, “தேவர்களே கவலையை விடுங்கள்; நாம் புஷ்கலாவர்த்தம் பொழியச்செய்து, அப்பெரு நெருப்பை அடக்குகிறோம்” என்றார். அவ்வாறே ‘புஷ்கலாவர்த்தம்’ என்னும் மேகத்தை அனுப்பினார். அம்மேகம் பெருமழையைப் பெய்வித்து பெருந்தீயை அணைத்தது. அதோடு பிரளய வெள்ளம் போல் பூமியெங்கும் நீர் நிறையலாயிற்று. ஆயினும் அதற்கு  அஞ்சாதவராக  திருமழிசையார் திருமகள் நாதனை மனத்தில் எண்ணியவாறு அந்தப் பெரு வெள்ளத்தினிடையேயும் அசைவற்று அமர்ந்திருந்தார்.

36.13. பக்திசாரர்

    அவருடைய செயலைக் கண்ட சிவபெருமான் அவருடைய பரம பக்தியின் வலிமையைப் போற்றிப் புகழ்ந்து, “பக்திசாரர்” என்னும் பட்டத்தைக் கொடுத்து தேவியோடு கயிலைக்குச் சென்றார்.

36.14. திருவெஃகா

     திருமழிசையில் இவர் தங்கி இருத்தபோது பொய்கைஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் இவரைச் சந்தித்து அளவளாவி இவருடன் புறப்பட்டுத் திருவல்லிக்கேணி என்னும் திருப்பதியை அடைந்து அங்கே கோயில் கொண்டுள்ள எம்பெருமானை வணங்கி வழிபட்டார்கள். பொய்கையார் முதலிய மூவரும் இவருடன் சில நாள் இருந்து, பிரிந்து சென்றார்கள்.

     திருமழிசையாழ்வார் அத் திருப்பதியில் பல நாள் இருந்து இறைவன் திருவருளை எங்கும் பரப்பி, காஞ்சியிலுள்ள பொய்கையாழ்வார் பிறந்த திருவேக்கா சென்று, பொய்கையாழ்வாரைக் கண்டெடுத்த யதோத்காரி சன்னதியில் தியான நிலையில் இருந்தார். திருவெஃகாவில் பாம்பனைப் பள்ளிகொண்ட பெருமானிடம் பேரன்பு கொண்டு வழிபட்டு, அவ்விடமே தங்கிவிட்டார். இவரிடம் பக்தி கொண்ட கணிகண்ணரும் பிரிவின்றி இவருக்கு தொண்டு செய்து உடன் உறைத்தார்.

36.15. கிழவி-குமரியாதல்

         வயதான மூதாட்டி ஒருவர், திருமழிசை ஆழ்வாரின் திருமாளிகையிலே தினமும் திருமாளிகையை பெருக்கி சுத்தம் செய்து, வெளியில் கோலமிட்டு கைங்கர்யங்கள் செய்து வந்தார். இவரின் கைங்கர்யங்களைக் கண்டு மகிழ்வுற்ற திருமழிசை ஆழ்வார், அவரிடம் ,அவருக்கு ஏதாவது உதவி செய்வதாகவும் ஆகவே என்ன உதவி வேண்டும் என்றும் கேட்க, அம்மூதாட்டி, தன்னால் இந்த முதுமையைத் தாங்க முடியவில்லை என்றும் அதற்கு ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டார். அவருக்கு அவரின் முதுமையை நீக்கி, இளமை பருவத்தை அருளினார்.

      மிக அழகான, வசீகரமான தோற்றமுடையவராகிய மாறிய அந்தப் பெண்னை, அப்பொழுது அப்பிரதேஸத்தை ஆண்டு வந்த மன்னன் விரும்பி மணந்து கொண்டான். காலம் செல்ல, அந்தப் பெண் தன் இளமை நிலையிலேயே இருக்க, அந்த அரசன் மட்டும் முதுமை நிலையை அடைந்தான். அவளின் நிரந்தரமான அந்த இளமை நிலைக்கு என்ன காரணம் என்று அவளிடம் கேட்க, அப் பெண், திருமழிசை ஆழ்வார் தனக்கு அந்த நிலையை அளித்ததாகக் கூறினாள். இதனை தெரிந்து கொண்ட அந்த அரசன் தனக்கும் அவ்வாறான இளமை நிலை வேண்டி, திருமழிசை ஆழ்வாரை அனுக விரும்பி, அவரின் சிஷ்யரான கணிகண்ணனிடம், ஆழ்வாரிடம் சொல்லி, தனக்கும் இளமைப் பருவத்தை அளிக்க வேண்டினான். ஆனால் கணிகண்ணனோ அவ்வாறு செய்ய இயலாது என்று கூறி அரசனின் விருப்பத்தை நிராகரித்தார்.

     மன்னன், கனிகண்ணனிடம், ‘என்னைப் புகழ்ந்து உன் குரு பாட வேண்டும்’, என்று கூறினார்.

     ஆனால், கனிக்கண்ணனோ, ‘எம் குருநாதர் எம்பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் பாட மாட்டார்’, என்று கூறினார்.

    கணிகண்ணர் அரசனிடம் வெறுப்புக் கொண்டு, ”உன் ஏவலுக்கு யான் அடங்கியவனல்லன். திருமழிசைப்பிரானும் உன் கட்டளைக்குச் செவி சாய்ப்பவரல்லர். இறைவன் ஒருவனுக்கே நாங்கள் அடிமை” என்று கூறித் திரும்பிவிட்டார்.

அரசன் கோபம்

     அரசன் கோபங் கொண்டான். ”என் விருப்பத்தை நிறைவேற்றாதவர்களுக்கு என் நாட்டில் இருக்க உரிமை இல்லை. இவர்கள் என் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று கட்டளையிட்டான்.

     கணிகண்ணருக்கும் உண்மை தெரிந்தது. நிகழ்ந்ததைத் திருமழிசைப்பிரானும் தெரிந்து கொண்டார். உடனே வெஃகாவின் இறைவனிடம் முறையிட்டுக்கொண்டார்.

கணிக்கண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா-துணிவுடைய
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப் பாய்சூருட்டிக் கொள்

   என்ற பாடலைப் பாடினார் உடனே கணிகண்ணருடன் அந்நகர்விட்டு ஏகினார். திருமாலும் பக்தர் உள்ளத்தவரானதால் வெஃகாவில் உள்ள தம் இருக்கையை விட்டுத் திருமழிசைப்பிரானுடன் புறப்பட்டார்.

36.16.சொன்னவண்ணம் செய்த பெருமாள் (யதோக்தகாரி)

     அரசன் அவர்கள் போய்விட்டதை அறிந்து அகமகிழ்ந்திருக்ககையில் கோயில் அர்ச்சகர்கள், ”வேந்தே! திருமாலும் பெரிய பிராட்டியும் கோயிலினின்றும் வெளிப்போந்தார்கள் என்று முறையிட்டுக் கொண்டார்கள். அரசன் திடுக்கிட்டு மந்திரிகளுடன் ஆலோசித்தான். ”கணிகண்ணருக்குச் செய்த அபசாரமே இது” என்று மந்திரிகள் கூறினார்கள். உடனே அரசன் நடுங்கிப் பரிவாரங்கள் சூழ, கணிகண்ணரையும் திருமழிசைப்பிரானையும் தேடிப் புறப்பட்டான்.

TM Alwr-3

36.17. ஓரிக்கை

    வெஃகாவிற்கு அருகில் ஓரிடத்தில் திருமழிசைப்பிரான் கணிகண்ணருடன் தங்கியிருந்தார். அங்கே சென்று அவர்கள் பாதங்களில் வீழ்ந்து குற்றம் பொறுக்கும்படி கேட்டுக்கொண்டான் அரசன். திருமழிசைப்பிரான் மன்னனை மன்னித்தார். உடனே அரசருடன் இருவரும் வெஃகாவின் கோயிலுக்குள் சென்றார்கள்.

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா கிடக்க வேண்டும்-துணிவுடைய
செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயும் உன்றன்
பைந்தாகப் பாய்படுத்துக் கொள்.

   என்று பாடினார். இறைவன் திரும்பவும் கோயில் கொண்டதைக் கண்டு களிகொண்டான் அரசன். அன்று முதல் அரசனால் பெரிதும் ஆதரிக்கப்பட்டு இருவரும் அங்கேயே தங்கியிருந்தார்கள்.

     கனிக்கண்ணன், கமலக்கண்ணன், திருமழிசையாழ்வார் மூவரும் ஓர் இரவு ஒரு இடத்துல தங்கியிருந்த இடம்தான் ‘ஓர் இரவு இருக்கை’, பெயர் மருவி தற்காலத்தில், ‘ஓரிக்கை’ என்றாயிற்று.

36.18. பெரும்புலியூர் வேத-அந்தணர்கள்

    திருமழிசை ஆழ்வார், திருக்குடந்தை ஆராவமுதனை ஸேவிக்க விரும்பி, திருக்குடந்தை செல்லும் வழியில், பெரும்புலியூர் என்ற இடத்தில் ஓய்வெடுக்க தங்கினார். அங்கு சில அந்தணர்கள் வேதம் ஓதிக்கொண்டிருந்தனர். வேற்று மனிதர் ஒருவர் வந்து அமர்ந்ததைக் கண்ட அந்த அந்தணர்கள் வேதம் ஓதுவதை நிறுத்திக் கொண்டனர். இதனை உணர்ந்து கொண்ட ஆழ்வாரும் அவ்விடத்தை விட்டு கிளம்ப, அந்தணர்கள் மீண்டும் வேதம் ஓத விழைந்தனர்.

    ஆனால் அவர்கள் எந்த இடத்தில் தாங்கள் நிறுத்திய வேத மந்திரத்தை தொடங்குவது என்பது புரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர். இதனி கண்ட திருமழிசை ஆழ்வார், அவர்கள் தொடங்க வேண்டிய மந்திரத்தை உணர்த்த ஒரு விதையை எடுத்து அதனை உரித்து காண்பித்து, பூடகமாக எந்த இடத்தில் அவர்கள் வேத மந்திரத்தை தொடங்க வேண்டும் என்று சைகை காட்டினார்.

தங்கள் தவறினை புரிந்து கொண்ட அந்த அந்தணர்கள் , திருமழிசை ஆழ்வாரிடம் மன்னிப்பு கேட்டு, அவரையும் வேத கோஷ்டியில் கலந்து கொள்ள வேண்டினர்.

பெரும்புலியூர் வேதியர் யாகம்

     திருமழிசையாழ்வார் அவ்வூரில் பிட்சை பெறும் பொருட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வூரில் கோயில் கொண்டிருந்த திருமால் விக்கிரகத்தின் முகம் அவர் செல்லும் திசைகளில் எல்லாம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தது. அதைக் கண்டு அர்ச்சகர்கள் பெரும் வியப்பெய்தினார்கள். வேதியர் சிலரிடம் அதைப் பற்றிக் கூறினார்கள். அவர்களுக்கு அது வியப்பை அளித்தது.

    அவர்கள் யாகசாலைக்குச் சென்று அங்கு வேள்வித் தலைவராக யாகம் தொடங்கும் பெரும்புலியூர் அடிகளிடம் எடுத்துரைத்தார்கள். பெரும்புலியூர் அடிகள் பெருமான் இவ்வாறு செய்வதன் காரணத்தை உணர்ந்தார். யாகசாலையை விட்டுச் சென்று திருமழிசையாரை அடைந்து, அவருடைய காலில் விழுந்து வணங்கினார்.

     அவரை யாகசாலை, உன்னதமான பீடத்தில் அமரச் செய்து உபசரித்தார். யாகம் தொடங்கியது. வேள்வித் தலைவர் முதலாவதாகச் செய்ய வேண்டிய பூஜையை திருமழிசையாருக்குச் செய்தார். அப்போது வேள்விச் சடங்குகள் செய்வதற்கு அமர்ந்திருந்த வேதியர் சிலர்,  “நான்காம் வருணத்தானுக்கு அக்கிர பூஜை செய்வதா?”  என்று ஆத்திரப்பட்டார்கள். பெரும்புலியூர் அடிகள் அதைக் கண்டு மனம் வருந்திக் கண்ணீர் விட்டார்.

    இதைக் கண்ட திருமழிசையாழ்வார், அவர்களுக்கு புத்தி புகட்ட எண்ணி, திருமகள் நாதனை நோக்கி,  “சக்கரத்தைக் கையில் ஏந்திய திருமாலே, இக் குறும்பை நீக்கி, என்னையும் உன்போல் ஓர் ஈஸ்வரனாக்க முடிந்தால், இவ்வேள்விச் சடங்கர் வாய் அடங்கிட என் உள்ளத்தினுள்ளே நீ கிடக்கும்வண்ணமே என் உடம்புக்கு வெளியேயும் உன் உருவப் பொலிவை காட்டிவிடு” என்று வேண்டி பின்வரும் பாடலைப் பாடினார்:

அக்கரங்கள் அக்கரங்கள் என்றுமாவது தம்கொலோ?
இக்குறும்பை நீக்கி என்னை ஈசனாக்க வல்லயேல்
சக்கரம்கொள் கையனே, சடங்கர் வாயடங்கிட
உட்கிடந்த வண்ணமே புறம்பொசிந்து காட்டிடே!

    இப்படிப் பாடியவுடனேயே, பாற்கடலில் பாம்பணையில் தன் திருவடிகளைத் திருமகளும் பூமகளும் வருடிட, தான் பள்ளி கொண்ட காட்சியை அனைவரும் காணும் வண்ணம் திருமழிசையாரின் உடல் மீது காட்டியருளினார். அந்த அற்புதத்தைக் கண்டு அனைவரும் வியந்தார்கள். தங்கள் குற்றத்தை உணர்ந்து அவரைப் பணிந்தார்கள். பிறகு திருமழிசையார் அவர்களிடமும் பெரும்புலியூர் அடிகளிடமும் நன்மொழிகளைக் கூறி விடைபெற்று திருக்குடந்தை புறப்பட்டுச் சென்றார்.

36.19. திருக்குடந்தை


   அதன் பிறகு, சிறிது காலம் கழித்து திருமழிசையாழ்வாரும், கனிகண்ணனும் திருக்குடந்தை நோக்கிப் பயணித்து ஆரவமுதப் பெருமாளிடத்தில் வந்து சேர்ந்தார். திருக்குடந்தையிலேயே தங்கி எம்பெருமான் பெயரில் மங்களசாசனம் பாடினார்.

     கோயிலுள் அரிதுயில் புரியும் பெருமானின் கோலத்தைப் பார்த்து, “குடந்தையில் படுத்துறங்கும் பெருமானே, நடந்த கால்கள் நொந்தனவோ? பூமியை ஏனமாய் ஏந்திய உடல் குலுங்கினவோ? படுத்துறங்கும் நீ எழுந்து வந்து என்னோடு பேசு!”  என்று வேண்டினார்.  TM Alwr-4

        பெருமாளும் உடனே எழ ஆரம்பிததார். அடியவர்க்கு எளியவனான ஆராவமுதனின் அற்புதக் கோலத்தைக் கண்டு, “வாழி நேசனே” என்றார் திருமழிசையாழ்வார். பெருமாளும் எழுந்த கோலத்தோடு நிறுத்திக்கொண்டார்

நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால்வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக் கரை குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே                        ……………………………………………..
(திருச்சந்தவிருத்தம்- 61)

       திருக்குடந்தைக்கு ஸ்ரீஆராவமுதனை சேவிக்கும் பொழுது, கிடந்த நிலையில் இருந்த பெருமாள், எழுந்திருக்க முயலும் பொழுது, ஆழ்வார் அவரை அப்படியே இருக்க வேண்ட, பெருமாளும் , கிடந்த நிலையில் இல்லாமலும், எழுந்த நிலையிலும் இல்லாமல் , அப்படியே கிடந்திருந்து எழுந்த நிலையிலேயே ஆழ்வாருக்கு ஸேவை ஸாதித்தார்.

   அவருக்கு ஸேவை ஸாதித்த நிலையிலேயே, திருக்குடந்தை ஆராவமுதன் இன்றும் எல்லோருக்கும் காட்சி அளிக்கிறார்.

காஞ்சிப் பெருமானும் திருக்குடந்தை ஆராவமுதனான சார்ங்கபாணியும்

36.20. உத்தான ஸயனம்

    காஞ்சிப் பெருமான் போலவே, திருக்குடந்தை ஆராவமுதனான சாரங்கபாணியும் திருமழிசை ஆழ்வாரின் சொல்படி கேட்டான்.

TM Alwr-5

   எம்பெருமான் எழுந்திருக்க முயல்வதைக் கண்ட ஆழ்வார், ஐயகோ! நாம் எம்பெருமானைச் சிரமப்படுத்தி விட்டோமோ என்று நினைத்து ‘வாழிகேசனே’ என்று பாடலை முடிக்க,எம்பெருமானும் சற்று சாய்ந்த நிலையில் நிலைகொண்டு, அதே நிலையில் இன்றளவும் காட்சி தருகிறார். இதற்கு உத்தான சயனம் என்று பெயர்.

 @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

36.21. ***திருமழிசை ஆழ்வார் பாசுரங்கள்->>>

A. திருச்சந்த விருத்தம் (120-பாசுரங்கள்-முதலாயிரம்)

     திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்த விருத்தம் சந்தக் கலிவிருத்த யாப்பு வகையைச் சேர்ந்தது. திருச்சந்த விருத்தம், ஓசை நயம் மிகக் கொண்டது… ஒவ்வொரு பாட்டும் ஒரு தாள வாத்தியத்தைத் தட்டுவது போன்ற ஓசை நயத்தோடு திகழ்கின்றது.

    திருச்சந்த விருத்தத்தின் முதல் பாடல் இது:

பூநிலாய ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய்;
தீநிலாய மூன்றுமாய், சிறந்தகால் இரண்டுமாய்;
மீநிலாயது ஒன்றுமாகி வேறுவேறு தன்மையாய்
நீநிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே?
—————————————-திருச்சந்த விருத்தம்-1

என்று கீழ் வரிசையாக எண்கள் சென்று கொண்டிருக்கும்.

பூநிலாய ஐந்து என்றது – பூமியில் உள்ள ஒலி, ஊறு, தோற்றம், சுவை, நாற்றம் ஆகியவை (அதாவது ஒலி, தொடுகை, உருவம், சாரம், மணம் ஆகியவை).

புனல் கண் நின்ற நான்கு என்றது – நீரில் உள்ள ஒலி, ஊறு, தோற்றம், சுவை என்பது (நீருக்கு நான்கு குணங்கள் உண்டு. ஒலி, தொடுகை, உருவம், சாரம் ஆகியன).

     தீ நிலாய மூன்று என்றது – தீயில் ஒலி, ஊறு, நாற்றம் என்பது (அதாவது சப்தம், தொடுகை, வடிவம் என்று மூன்று).

    கால் இரண்டு என்றது – காற்றில் ஒலி, ஊறு என்பது (அதாவது சப்தம், தொடுகை ஆகியன).

    மீநிலாயது ஒன்று என்றது – விண்ணில் ஒலியாய் என்பது. இப்படி வெவ்வேறு வகைப்பட்ட தேவர், மனிதர், விலங்கு, தாவரம் என இவற்றின் ஆத்மாவாய் உள்ள நீ, காரிய காரணப் பொருளாக, முழுமுதலாக இருப்பதை யாரால் நினைக்க முடியும்?

    முதல் பாட்டைத் தொடர்ந்து தன் இரண்டாவது பாடலிலும் எண்களோடு விளையாடுகிறார் திருமழிசையாழ்வார்.

ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்,
வேறு வேறு ஞானம் ஆகி மெய்யினோடு பொய்யுமாய்,
ஊறொடு ஓசை ஆய ஐந்தும் ஆய ஆய மாயனே!
——————————————–திருச்சந்த விருத்தம்-2

மூன்று ஆறு முதலில் வருகிறது. மூன்று ஐந்து; ஓர் இரண்டு, ஒரு மூன்று, ஓர் ஏழு, ஓர் எட்டு, கடைசி வரியில் ஒரு ஐந்து. இந்த எண்ணிக்கைகள் குறிப்பிடுவன.

முதல் மூன்று ஆறு

       முதல் ஆறு, வேதமோதல் முதலான தொழில்களைச் சொல்வது. படிப்பது, கற்பது, படிக்க வைப்பது, கற்பிப்பது, கொடுப்பது, பெறுவது என்று ஆறு செயல்கள் சொல்லப்படுகின்றன.

       இரண்டாவது ஆறு, இந்தச் செயல்கள் செய்வதற்கான ஆறு பருவ காலங்கள்… அவை கார்; கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகியன.

    மூன்றாவது ஆறு, ஆக்னேயம் முதலிய யாகங்கள். வேதம் ஓதல், வேள்வி வளர்த்தல், திருப்பலி கொடுத்தல், தானம் செய்தல் போன்று யாகங்கள் செய்பவர்கள் அனுஷ்டிக்கத் தக்க ஆறு செயல்கள்.

அடுத்து ஐந்துகள்

     முதல்ஐந்து, ஐந்து யக்ஞங்கள். தேவர்களுக்கு, முன்னோர்களுக்கு, இயற்கைக்கு, மனிதர்களுக்கு, பிரம்மாவுக்கு என ஐந்து யக்ஞங்கள்…

          இரண்டாவது ஐந்து உண்ணும்போது செய்யப்படும் ப்ராண, அபான, வ்யான, உதான, சமான என்ற ஐந்து ப்ராண ஆஹுதிகள்…

           மூன்றாவது ஐந்து, ஐவகை வேள்வித் தீ ஏறு சீர் இரண்டு என்றது, ஞானம் வைராக்கியம் ஆகியன.அடுத்து வரும் மூன்று, செல்வம், கைவல்யம், பரமபதம் ஆகியன.

      ஏழு என்பது, விவேகம் முதலிய ஏழு மன நிலைகள்.
ஆறு என்றது, ஞான சக்தியாகிய ஆறு.

      எட்டு என்பது பலன்கள். (அவை பாபமற்ற தன்மை, கிழத்தனம் அற்ற தன்மை, மரணமற்ற தன்மை, சோகமற்றிருப்பது, பசியற்றிருப்பது, தாகமற்றிருப்பது, வீண் போகாத இஷ்டம், வைராக்கியம் ஆகியன).

      வேறு வேறு மதங்களாகவும் உண்மையும் பொய்யுமாகி தன்மாத்திரைகளாகவும் ஆனவன் மாயன் கண்ணன் என்பது ஆழ்வார் கூறும் உண்மை.

       இப்படியும் அல்லாது அழகிய சந்தமெட்டுக்களோடு படித்துப் பார்க்க அழகையும் சிறந்த அனுபவத்தையும் தரும் பாசுரங்கள் திருச்சந்தவிருத்தத்தில் அநேகம் உள்ளன. அவற்றில் ஒரு பாடல்:

சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதிநீ
சொல்லினால் படைக்கநீ படைக்கவந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்கநின் குணங்கள் சொல்லவல்லரே?
——————————————-திருச்சந்த விருத்தம்-11

       சொல் என்று சொல்லப்படுவது வேதங்களை. வேதங்களின் தொடர்ச்சி நீயே. வேதங்கள் சொல்லும் பொருளும் நீயே. வேதத்தாலே அளவிட்டு அறியப்படாமல் வெளிப்படும் சோதியும் நீயே. நீ கொடுத்த வேதத்தாலே படைப்பதற்குத் தோன்றிய பிரம்மனும் வெறும் சொற்களால் உன் குணங்களைச் சொல்லிவிட முடியுமா?

திருச்சந்த விருத்தத்தில்:

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வாக்கனைக் கிடந்து எண்ணிலாத முன்னெல்லாம்
அன்று நான் பிறந்திலேன்; பிறந்த பின் மற்ந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என்னெஞ்சினுள்ளே!
—————————திருச்சந்த விருத்தம்-64

       நீ வெவ்வேறு ஊர்களில், நின்று, இருந்து, கிடந்து என்னும் வெவ்வேறு கோலங்களில், கணக்கில்லாத யுகங்களாய் அருள் புரிந்துக் கொண்டிருக்கின்றாய்! அப்பொழுதெல்லாம், நான் பிறக்கவேயில்லை. நான் பிறந்த பின்பு உன்னை ஒருகாலத்திலும் மறந்ததேயில்லை. நான் இருக்கின்ற இக்காலத்தில், நீ நின்றது, இருந்தது, கிடந்தது எல்லாம் என் இதயத்தாமரைக்குள்ளேயன்றி வேறெங்குமில்லை! என்று பாடி பரவசமடைகிறார்.

B. நான்முகன் திருவந்தாதி (96-பாசுரங்கள்-மூன்றாவது ஆயிரம்)

     விஷ்ணு புராணத்தை மையமாகக் கொண்ட தத்துவத்தை இவர் தன்னுடைய நான்முகன் திருவந்தாதியின் முதல் பாசுரத்திலேயே தெளிவுற வெளிப்படுத்துகிறார்.

நான்முகனை நாராயணன் படைத்தான்; நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் – யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ்பொருளை;
சிந்தாமல் கொள்மின்நீர், தேர்ந்து. (நான்முகன் திருவந்தாதி-1)

     ஸ்ரீமந் நாராயணனே நான்முக பிரமனைப் படைத்தான். அப் பிரமனும் தன்னையே  முதலாகக் கொண்டு சங்கரனைப் படைத்தான். நான் அறிந்த இந்த ஆழ்பொருளை அந்தாதி வடிவத்தில் சொல்கிறேன். சிந்தாமல் சிதறாமல் மனதில் இதைக் கொள்ளுங்கள்.

       நான்முகன் திருவந்தாதியின் இரண்டாவது பாசுரத்தில் இதை இன்னும் யோசித்துப் பார்க்கிறார் ஆழ்வார்:

தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்;
ஆரும் அறியார் அவன் பெருமை; ஓரும்
பொருள்முடிவும் இத்தனையே; எத்தவம் செய்தார்க்கும்
அருள்முடிவது ஆழியான் பால். (நான்முகன் திருவந்தாதி-2)

      தேர்ந்து பார்த்தால் சக்கரத்தைக் கையில் கொண்ட திருமால் ஒருவன்தான் தேவன். அவன் பெருமையை ஒருவரும் அறிய மாட்டார். வேதம் முதலிய நூல்களால் ஆராயப்படும் பொருள் முடிவும் இத்தனையே. எவ்விதமான சாதனங்களை மேற்கொண்டவர்களுக்கும் அவற்றின் பலன் சக்கரம் ஏந்திய திருமாலின் அருளால் மட்டுமே உண்டாகும்.

அறியார் சமணர்; அயர்ந்தார் பவுத்தர்;
சிறியார் சிவப்பட்டார்; செப்பில்- – வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
ஈனவரே, ஆதலால் இன்று. (நான்முகன் திருவந்தாதி-6)

     இதுநாள் வரை மாயவனை மாலவனை மாதவனை ஏற்றிப் போற்றாதார், அறியாமையாலே நீசரேயாவார் என்று கூறுகிறார்.

இன்றாக நாளையே ஆக இனிச் சிறிது,
நின்றாக நின் அருள் என்பாலதே; — நன்றாக
நான் உன்னையன்றி இலேன் கண்டாய்; நாரணனே!
நீ என்னை அன்றி இலை. (நான்முகன் திருவந்தாதி-7)

       நாராயணனே, இன்றைக்கோ, நாளைக்கோ, என்னும் சிறிது காலம் கழித்தோ என்றைக்கு ஆனாலும் தலைவனான உன்னருள் அடியவனான என்னிடம் ஏற்படும். நிச்சயமாக நான் உன்னையன்றி வேறு புகல் இல்லாதவன். அதேபோல் நீயும் என்னையன்றி வேறு காப்பாற்றப்படக்கூடிய பொருள் பெறாதவன்.

வாழ்த்துக -வாய்; காண்க கண்; கேட்க செவி; மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண்மலரால்- – சூழ்த்த
துழாய் மன்னு நீள் முடி என் தொல்லை மால் தன்னை
வழாவண் கைகூப்பி மதித்து. (நான்முகன் திருவந்தாதி-11)

       திருத்துழாய் மாலை சூடிய திருமுடி உடையவனும் என்னிடம் நெடுநாட்களாக அன்பு பூண்டவனும் ஆன திருமாலை, விடாது கைகள் கூப்பித் தொழுது, தியானித்து, தலை சாய்த்து வணங்கி, குளிர்ந்த பூக்கள் கொண்டு வழிபடுங்கள். உங்கள் வாய் அவனைத் துதிக்கட்டும். கண்கள் அவனையே நோக்கட்டும். காதுகள் அவனைப் பற்றியே கேட்கட்டும் – என்று எப்போதும் அவனைச் சிந்தித்திருக்கும் வழியைக் காட்டுகிறார் இந்தப் பாசுரத்தில்.

    திருமழிசை ஆழ்வார் இறுதியில் அடைய விரும்புவது வைகுந்தத்தை. வைகுந்தம் அடைவது எங்ஙனம்? அவர் தமது நான்முகன் திருவந்தாதியின் இறுதிப் பாடல்களில் அதைத் தெரிவிக்கிறார்.

ஏன்றேன் அடிமை; இழிந்தேன் பிறப்பு இடும்பை;
ஆன்றேன் அமரர்க்கும் அமராமை; – -ஆன்றேன்
கடன் நாடும் மண்ணாடும் கைவிட்டு, மேலை
இடம் நாடு காண, இனி. (நான்முகன் திருவந்தாதி-95)

     உனக்கு அடிமை செய்வதையே ஏற்றேன். பிறப்பால் வரும் வினைகள் நீங்கப் பெற்றேன். பிரமன் முதலிய தேவர்களும் என் பக்கலில் அமர முடியாத படியான பக்தி ஞானத்தால் நிறைவுற்றேன். ஆகவே அடியேற்கு சுவர்க்கம் பூவுலக இன்பம் ஆகியன தேவையே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலான அடியார்கள் குழாங்களின் திருநாட்டைக் காண பரம பக்தி பெற்றேன் என்று வைகுந்தம் அடைவதான பரமபக்தியை வெளிப்படுத்துகிறார் ஆழ்வார்.

    திருமால் அருகில் எப்போதும் வாசம் செய்யும் பெரும் பேற்றை அளிப்பது வைகுந்தப் பெருவாழ்வு. அது அமரர் உலகைவிடப் பெரிதானது. இந்த வைகுந்தப் பெருவாழ்வைப் பெறுவதற்காக ஏன் இப்படிப்பட்ட முயற்சிகளைச் செய்யவேண்டும் என்றால், இந்த உலகுக்கு மூலகாரணனான நாரணனின் இருப்பிடம் அது என்ற ஞானத்தால் தான். அதற்கு மூலகாரணன் நாரணன் என்ற ஞானம் வரவேண்டும். அதை அறிந்த விதம் எங்ஙனம் என்பதை ஆழ்வார் காட்டும் பாங்கு இது.

     நான்முகன் திருவந்தாதியின் கடைசிப் பாசுரத்தில் அதை வெளிப்படையாக அறிவிக்கிறார் ஆழ்வார்:

இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்;
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை- – இனி அறிந்தேன்
காரணன் நீ; கற்றவை நீ; கற்பவை நீ; நல்கிரிசை
நாரணன் நீ; நன்கு அறிந்தேன் நான். (நான்முகன் திருவந்தாதி-96)

     சிவனுக்கும் பிரமனுக்கும் தெய்வமாக இருப்பவன் நீயே என்பதை அறிந்து கொண்டேன். உன் இயல்பை அறிந்ததால், நீயே உலக காரணன் என்பதையும் தெரிந்து கொண்டேன். முன்பு கற்றவை, இனி அறியப் போகிறவை யாவும் நாராயணன் ஆகிற உன் பேரருளாலே என்பதையும் நன்கு அறிந்துகொண்டேன்.

ஆகவே காரணப் பொருளான உன் இருப்பிடமே என் பிறப்பறுக்கும் இருப்பிடம் என்பதாலே அதை நாடினேன்… என்பது ஆழ்வாரின் தீர்மானமான முடிவு.

       ஸ்ரீமன் நாராயணனின் மேல் மிகுந்த பக்தியும் , ஈடுபாடும் கொண்டு, திருமழிசை ஆழ்வார், இரண்டு பிரபந்தங்களை இயற்றினார். 120 பாசுரங்களைக் கொண்ட திருச்சந்தவிருத்தமும், 96 பாசுரங்களைக் கொண்ட நான்முகன் திருவந்தாதியும்.

     நான்முகன் திருவந்தாதியில், இவர் இருந்த பல் வேறு சமயங்களைப் பற்றி குறிப்பிட்டு, ஸ்ரீமன் நாராயணனே எல்லோர்க்கும் தெய்வம் என்று அருளுகின்றார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

திருமாலின் திருவடி சேர்தல்

    பெரும்புலியூரில் இவ்வாறு பல அற்புதங்கள் செய்த பின்னர் அங்கு விட்டுத் திருக்குடந்தை வந்தடைந்தார். குடந்தையில் பல ஆண்டுகள் தங்கி ஆராவமுதப் பெருமானின் அருஞ் செயல்களைத் திருப்பாக்களால் பாடி வாழ்ந்து வந்தார். நான்முகன் திருவந்தாதி தொண்ணூற்றாறும், திருச்சந்தவிருத்தம் நூற்றிருபதும் செய்தவர் அந்நகரிலேயே திருமாலின் திருவடியிற் கலந்தார்.

     இப்பூவுலகிலே நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகள் வாழ்ந்தவர் திருமழிசை ஆழ்வார்.

அன்புடன் அந்தாதி தொண்ணூற்றுஆறு உரைத்தான் வாழியே!
அழகாரும் திருமழிசை அமர்ந்த செல்வன் வாழியே!
இன்பமிகு தையில் மகத்து இங்கு உதித்தான் வாழியே!
எழில் சந்த விருத்தம் நூற்றிருபது ஈந்தான் வாழியே!
முன்புகத்தில் வந்து உதித்த முனிவனார் வாழியே!
முழுப் பெருக்கில் பொன்னி எதிர் மிதந்த சொல்லோன் வாழியே!
நன்புவியில் நாலாயிரத்து எழுநூற்றான் வாழியே!
நங்கள் பத்திசாரன் இரு நற்பதங்கள் வாழியே!

திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

RELATED ARTICLES- ஆழ்வார்கள்

Pl Also, Click & Look for each ஆழ்வார் at the HRE Links for ஆழ்வார்கள் given below

(1) Please click below to go to CONTENTS for all the Articles in HRE: please CLICK below

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

(2) திவ்யபிரபந்த பாடல் வரிசைக்கு please CLICK below

https://drdayalan.wordpress.com/2015/02/06/hre-6

Advertisements