Tags

, , , ,

     சௌவுமிய நாராயணர்: சுவாமியுடன் ஸ்ரீதேவி, பூதேவி மட்டு மின்றி மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் இருக்கிறார். இவருக்கு “பிரார்த்தனை கண்ணன்’ என்று பெயர். TK-1

     புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இவருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால், பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை.மகாவிஷ்ணு இரண்யனை வதம் செய்யும் வரையில், இத்தலத்தில் தங்கியிருந்த இந்திரன், தான் தேவலோகத்தில் பூஜித்த சவுமிய நாராயணரை, கதம்ப மகரிஷிக்கு கொடுத்தார். இந்த மூர்த்தியே இக்கோயில் உற்சவராக இருக்கிறார். இவரது பெயராலே, இத்தலமும் அழைக்கப்படுகிறது.

Please click below to go to CONTENTS for all the Articles in HRE: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

      பெரியாழ்வார் இவரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்திருக்கிறார். பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலம் இது.

        தேவ சிற்பி விஸ்வகர்மா, அசுர சிற்பி மயன் இருவரும் இணைந்து இத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்தனர். “ஓம் நமோ’, நாராயணாய’ எனும் மூன்று பதங்களை உணர்த்தும் விதமாக இந்த விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது.

  • விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்).
  • முதல் தளத்தில் சயனகோலத்தில் சௌவுமிய நாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்).
  • இரண்டாவது அடுக்கில் நின்ற கோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்),
  • மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்)

    என சுவாமி நான்கு நிலைகளில் அருளுகிறார். திருமாமகள் தாயாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவளுக்கு நிலமாமகள், குலமாமகள் என்றும் பெயர்கள் உண்டு.

         விளக்கு நேர்த்திக்கடன்: இக்கோயிலில் விளக்கு நேர்த்திக்கடன் பிரசித்தி பெற்றது. இங்கு பிரார்த்திப்பவர்கள் ஒரு அகல் விளக்கு வாங்கி சுவாமியிடம் வைத்து பின், வீட்டிற்கு கொண்டு செல்கின்றனர். பின் அவ்விளக்கில் காசும், துளசியும் வைத்து, சிறு பெட்டியில் வைத்து மூடி பூஜையறையில் வைத்து விடுகின்றனர். இந்த விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இவ்வாறு வேண்டுதல் நிறைவேறியவர்கள் மாசி தெப்ப திருவிழாவின்போது இந்த விளக்குடன் மற்றொரு நெய் விளக்கை தீர்த்த கரையில் வைத்து வழிபடுகின்றனர். அந்நேரத்தில் புதிதாக வேண்டுதல் செய்பவர்கள் இந்த விளக்கை எடுத்துச் செல்கின்றனர்.

      மகாமக கிணறு: புருரூப சக்கரவர்த்தி இத்தலத்தை திருப்பணி செய்தபோது மகாமகம் பண்டிகை வந்தது. அப்போது பெருமாளை தரிசிக்க விரும்பினார் புருரூபர். அவருக்காக இத்தலத்தில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் உள்ள கிணற்றில் கங்கை நதி பொங்க, அதன் மத்தியில் பெருமாள் காட்சி தந்தார். பிரகாரத்தில் உள்ள இந்த கிணறை “மகாமக கிணறு’ என்றே அழைக்கிறார்கள். 12 வருடங்களுக்கு ஒருமுறை மகாமக விழாவின்போது, சுவாமி கருட வாகனத்தில் இங்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்கிறார்.

     ராமானுஜருக்கு உபதேசம்: இவ்வூரில் வசித்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் திருமந்திர உபதேசம் பெறுவதற்காக, வைணவ ஆச்சார்யாரான ராமானுஜர் வந்தார். TK-2

                  நம்பியின் இல்லத்திற்கு சென்ற அவர் வெளியில் இருந்து அழைத்தார். நம்பி, “யார்?’ என்று கேட்க, நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்,” என்றார். நம்பி வீட்டிற்குள்ளிருந்தே, நான் செத்து வா!’ என்றார். புரியாத ராமானுஜரும் சென்று விட்டார். இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலை சொன்னார்.

             அடுத்த முறை சென்ற ராமானுஜர் நான் என்னும் சொல்லை தவிர்த்து அடியேன் வந்திருக்கிறேன்’ என்றார். அவரை அழைத்த நம்பி, “ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திர உபதேசம் செய்தார். மேலும், மந்திரத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும், மீறி சொன்னால் அவருக்கு நரகம் கிடைக்கும் என்றும் கூறினார்.ஆனால், ராமானுஜரோ உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இக்கோயில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்துவிட்டார்.

        கோபம் கொண்ட நம்பி, ராமானுஜரை கடிந்து கொண்டார். அவரிடம் ராமானுஜர் பணிவாக, தனக்கு நரகம் கிடைத்தாலும், மக்கள் நன்றாக வாழ்வார்களே, அதுபோதும்! என்றார். மகிழ்ந்த நம்பி “நீ என்னிலும் பெரியவர், எம்பெருமானார்’ என்று சொல்லி கட்டித்தழுவிக்கொண்டார்.ராமானுஜர் மந்திர உபதேசம் செய்த விமானத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு நேரே நம்பியின் வீடு இருக்கிறது. இந்த வீடு “கல்திருமாளிகை’ என்றழைக்கப்டுகிறது. இக்கோயிலில் நம்பி, ராமானுஜர் இருவருக்கும் தனி சன்னதிகள் இருக்கிறது.

        பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர், இரண்யனை வதம் செய்வது குறித்து ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனாலும் பயந்த முனிவர்கள் இரண்யன் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசிக்க வேண்டும் என்றனர். சுவாமியும் அவர்களது கோரிக்கையை ஏற்றார்.

TK-3

            இதனிடையே இத்தலத்தில் கதம்ப மகரிஷி, விஷ்ணுவின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். அவர் தான் தவமிருக்குமிடத்தில், எவ்வித தொந்தரவும் இருக்கக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தார். எனவே தேவர்களுடன் ஆலோசனை செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்தார் மகாவிஷ்ணு. அப்போது நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழிக்கப்போவதாக கூறினார் மகாவிஷ்ணு. மகிழ்ந்த தேவர்களும், கதம்ப மகரிஷியும் அவர் எடுக்கப்போகும் அவதாரத்தை தங்களுக்கு காட்டும்படி வேண்டினர், எனவே, அவதாரம் எடுப்பதற்கு முன்பே இங்கு நரசிம்ம கோலம் காட்டியருளினார்.

       இதனால் மகிழ்ந்த கதம்ப மகரிஷியும், தேவர்களும் அவரது பிற கோலங்களையும் காட்டும்படி  வேண்டினர். சுவாமியும் நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு, இங்கேயே எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் “திருக்கோட்டியூர்’ என்றும் பெயர் பெற்றது.

       மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது போன்று ஓரிரு கோயில்களில் தான் இந்த அஷ்டாங்க விமானம் உள்ளது.

        கருவறைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி மூன்று கருவறைகளைக் கொண்ட விமானத்தை அமைப்பது அஷ்டாங்க விமானம் எனப்படுகிறது.

            108 திவ்ய தேசங்களில் கூடலழகர் திருக்கோயிலிலும், திருக்கோஷ்டியூரிலும் சுவாமி, அஷ்டாங்க விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்.

மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள்

  1. பெரியாழ்வார்
  2. திருமங்கையாழ்வார்
  3. திருமழிசையாழ்வார்
  4. பூதத்தாழ்வார்
  5. பேயாழ்வார்

###################################################

வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்து அளறாயிற்றே                    

           ஒளி நிறைந்த நீண்ட கண்களையுடையவனும், கேசி என்னும் அசுரனைக் கொன்றவனுமான, பேரெழில் மிக்கத் தலைவன் கண்ணன் பிறந்த திருநாளை முன்னிட்டு, அழகிய, வேலைப்பாடுகள் அமைந்த, உயரமான மாளிகைகள் நிறைந்த திருக்கோட்டியூரானது, கோகுலத்தை மிஞ்சும் வண்ணம் பேரெழில் பெற்றது; ஆயர்களும், ஆய்ச்சியரும், தங்கள் முன் எதிர்படுவோர் அனைவர் மீதும் நறுமண எண்ணையையும், வண்ணப் பொடிகளையும் தூவிக் குதூகலித்தனர். அவர்களின் இந்த மகிழ்ச்சி ஆரவாரச் செய்கையினால், கண்ணன் வீட்டின் பரந்த முற்றமும் நறுமண எண்ணெயும், வண்ணப் பொடியும் கலந்த சேறாய் மாறியிருந்தது.

பெரியாழ்வார் திருமொழி:1.1.1 (13)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

தாரேன் பிறர்க்குன் னருளென் னிடைவைத்தாய்,
ஆரே னதுவே பருகிக் களிக்கின்றேன்,
காரேய் கடலே மலையே திருக்கோட்டி
யூரே, உகந்தா யையுகந் தடியேனே

   உனது திருவருளை அடியேன் பக்கம் நிலை நிறுத்தினாய், இனி இவ்வருளை வேறொருவர்க்கும் விட்டுக்கொடுக்கக் கடவேனல்லேன்; மேகங்கள் படியப்பெற்ற திருப்பாற்கடலையும் திருமலையையும் திருக்கோட்டியூரையும் திருவுள்ள முவந்து இருப்பிடமாகக் கொண்டிருக்கிறவுன்னை அடியேன் விரும்பி அவ்வருளையே அனுபவித்து சந்தோஷப்படுகின்றேன்.

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி: 7.1.3 (1550)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

குறிப்பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த,
குறிப்பெனக்கு நன்மை பயக்க, – வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல்,
தான்கடத்தும் தன்மையான் தாள்.

   திருக்கோட்டியூரிலும் திருமலையிலும் நித்ய வாஸம் பண்ணுபவனுமான பெருமானை துதிப்பதற்கு எனக்கு ஆசை எம்பெருமானை இடைவிடாது அநுபவிப்பதனால் உண்டாகும் பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்கு எனக்கு குதூஹலம், சரீர ஸம்பந்தத்துக்கு அடியான கருமங்களும் வியாதிகளும் வந்து சேராதபடி தானே அவற்றைப் போக்கியருளும் சுவபாவத்தை உடையவனான அப்பெருமானுடைய திருவடிகளை மறந்திருக்க மாட்டேன்.

திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்ததாதி-34 (2415)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பயின்ற தரங்கம் திருக்கோட்டி, பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள், – பயின்ற
தணிதிகழும் சோலை யணிநீர் மலையே
மணிதிகழும் வண்தடக்கை மால்.

   நீலமணிபோல் விளங்குமவனும் நீண்ட திருக்கைகளை உடையனுமான எம்பெருமான் நித்யவாசம் செய்தருளுமிடம் திருவரங்கமும் திருக்கோட்டியூருமாம் அநாதிகாலம் நித்யவாசம் செய்யுமிடமும் திருமலையாம் அழகு விளங்குகின்ற சோலைகளையுடைத்தாய் இந்நிலவுலகுக்கு அலங்காரமான திருநீர்மலையாம்.

இரண்டாம் திருவந்தாதி பூதத்தாழ்வார்-46 (2227)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம்,
மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி,
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு.

   திருவிண்ணகரமும் திருவெஃகாவும் விரிந்து துலையெறிகிற நீர்வம் பொருந்திய திருமலையும் பூமிலுண்டான வைகுந்தமாநகர் போன்ற பெரிய மாடங்களை யுடைத்தான திருவேளுக்கையும் பூமியிலுண்டான அழகிய திருக்குடந்தையும் தேன் (வெள்ளமிடுகிற சோலைகள்) பொருந்திய திருவரங்கமாநகரும் தென் திருக்கோட்டியூரும் (ஆகிய இத்திருப்பதிகள்) தனது உள்ளங்கையாலே (மாவலிபக்கல்) உதகதானம் பெற்ற பெருமான் தங்குமிடங்களாம்.

மூன்றாம் திருவந்தாதி பேயாழ்வார்-62 (2343)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Pl Also, Click & Look for other திவ்யதேசங்கள் at HRE Links given below

 (I) சோழநாட்டுத் திவ்யதேசங்கள்-https://drdayalan.wordpress.com/2016/03/08/hre-40

(II நடு நாடு திவ்யதேசங்கள்-https://drdayalan.wordpress.com/2016/04/20/hre-41

(III)தொண்டை நாடு திவ்யதேசங்கள் –https://drdayalan.wordpress.com/2016/02/22/hre-37

(IV) மலை நாடு திவ்யதேசங்கள்- https://drdayalan.wordpress.com/2016/06/12/hre-43

(V) பாண்டிய நாட்டுத்திவ்ய தேசங்கள்- https://drdayalan.wordpress.com/2015/12/29/hre-35

(VI) வட நாடு திவ்யதேசங்கள்-To be published soon

************************************************************************

Please click below to go to CONTENTS for all the Articles in HRE:

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

Advertisements