Tags

, , ,

24-2-2016

***தாயாருடன் உம்மை தரசனம் செய்ய அருளிய அனந்த சயனா, உமக்கு உமது ஆழ்வார்கள்-ஆச்சாரியரகளுடன் அடியேனின்   அனந்தகோடி நமஸ்காரங்கள்.

      நடுநாடு என்பது சோழநாட்டுக்கும் தொண்டைநாட்டுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியாகும். பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய சோழர் ஆட்சியின்போது ஆட்சி அமைப்பில் வளநாடு, கூற்றம், என்னும் நாட்டுப் பிரிவுகள் தோன்றின. அப்போது சோழநாட்டுக்கும், தொண்டைநாட்டுக்கும் இடைப்பட்டுக் கிடந்த நிலப்பகுதியை நடுநாடு எனப் பெயரிட்டு வழங்கினர்.

     இந்த நடுநாட்டை மகதம் எனவும் வழங்குவர். சங்ககாலத்தில் இது அருவாளர் வாழ்ந்த அருவாள் நாடு, ஓய்மான் நல்லியாதன் முதலானோர் ஆண்ட ஓய்மானாடு ஆகிய பெயர்களுடன் விளங்கியது.

     இந்த நடுநாட்டிலுள்ள இரு வைணவ தலங்கள் நடுநாடு திவ்விய தேசங்கள் என அழைக்கப்படுகின்றன.

41. திருவந்திபுரம் (10-பாசுரங்கள்)

     திருவஹீந்திபுரம் அல்லது திருவயிந்திபுரம் என்பது திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இக்கோயில் கடலூர் மாவட்டம் கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவஹிந்திரபுரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் தற்காலத்தில் அயிந்தை என்று வழங்கப்படுகிறது. நடு நாட்டுத் திருப்பதிகள் இரண்டில் இது ஒன்றாகும். இக்கோயிலில் தேவநாத சுவாமி , அயக்கிரீவர் சன்னதிகள் அமைந்துள்ளன.

      திருவந்திபுரம் அருகே ஓடும் கெடிலம் ஆறு வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடுகிறது. இது ஒரு சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது.இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணம், ஸ்காந்த புராணம், பிருகன் நாரதீய புராணம் ஆகிய புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இறைவன்: கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தேவ நாதன் என்றும் தெய்வநாயகன் என்றும் அழைக்கப்படுகிறார்.இறைவி: வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார்(பார்க்கவி). விமானம்: சந்திர விமானம், சுத்தசத்துவ விமானம்.திருமங்கையாழ்வாரால் மட்டும் பத்துப் பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்.

    அருள்மிகு ஹயக்ரீவர் ஆலயம் , திருவஹீந்த்ரபுரம் திருவஹிந்திபுரம், திருவஹிந்தை, திருவந்திபுரம்,
மூலவர் : தேவநாதர்; உற்சவர் : அச்சுதன்
தாயார் : செங்கமலம்
தல விருட்சம் : வில்வம்; தீர்த்தம் : கருடதீர்த்தம்
விமானம் : சுத்த சத்வம்
மூவராகிய ஒருவனை மூவுல குண்டு உமிழ்ந் தளந்தானை
தேவர் தானவர் சென்று சென்றிறைஞ்சத் தண் திருவயிந்திர புரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலிகன்றி விரித்துரைத்த
பாவு தண்டமிழ்ப் பத்திவை பாடிட பாவங்கள் பயிலாவே-  திருமங்கையாழ்வார்.

******Please click below to go to CONTENTS for all the Articles in HRE: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

 41.1

       தேவர்களுக்கு தலைவனாக இருந்தது கொண்டு தேவநாதன் என்ற திருநாமம் உண்டாயிற்று. ஸ்ரீமந் நாராயணன் நித்ய வாசம் செய்ய இருப்பதை அறிந்த ஆதிசேசன் இங்கு ஒரு நகரத்தை உண்டு பண்ணினான்.அதுதான் திரு அஹீந்த்ர (ஆதிசேஷ) புரம் என பெயர் பெற்று விளங்கியது.தேவநாத பெருமாளை வணங்குவோர் பெரிய பதவி, நிலைத்த செல்வம், மக்கட்பேறு, நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் ஆகியவற்றை பெறுவார்கள்.

     பெருமாளுக்கு தீர்த்த தாகம் ஏற்பட்டபோது அங்கிருந்த கருடாழ்வாரிடம் தீர்த்தம் கொண்டு வரப் பணித்தார். அவர் எடுத்து வர தாமதம் ஆனதால் ஆதிசேஷனிடம் சொல்லி தன் வாலால் அடித்து பெருமாளுக்கு தீர்த்தம் தந்தார். அதனால் அதற்கு சேஷ தீர்த்தம் என்று பெயர் வந்தது. இது ஒரு பிரார்த்தனை கிணறு ஆகும்.கருடன் கொண்டு வந்த நதி கருடநதி என்றழைக்கப்பட்டு அருகில் ஓடுகிறது. ரிஷியினுடைய சாபத்தால் இன்றும் இந்த நதியின் தீர்த்தம் மழைக்காலத்தில் ரத்தம் போல் சிவப்பாக ஓடுகிறது. . குரு, ராகு, கேது தோசம் உள்ளவர்கள் இங்கு வணங்கினால் அத்தகைய தோசம் நிவர்த்தி ஆகும்.ஹயக்ரீவருக்கு உலகிலேயே இவ்வூரில்தான் முதன்முதலில் கோயில் ஏற்பட்டது.

    ஆதிஷேஷ தலம்-தேசிகன் சந்நதி -தனிக் கொடிமரம்-அருகில் ஔதகிரி மலை-ஹயகீரிவர்-தேசிகருக்கு உபதேசம்

திருவந்திபுரம்-ஹயக்ரீவர்

        ‘கல்விக் கடவுள்’ சரஸ்வதி. அந்த சரஸ்வதிக்கே கல்வியறிவைக் கொடுத்தவர், ஞானத்தின் அதிபதியான ஹயக்ரீவர். அவரைத் தரிசித்தால் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி அறிவு பெருகும், குடும்பக் கஷ்டம் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அந்த வேண்டுதல்களோடு தங்கள் குழந்தைகளுடன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார், திருவந்திபுரம் ஹயக்ரீவர்!

       நடுநாட்டுத் திருப்பதிகள் இரண்டில் ஒன்றாகப் போற்றப்படுகிறது, கடலூர் மாவட்டம், திருவந்திபுரம். இத்தலத்தில், ஔஷதகிரி மூலிகை மலையின் உச்சியில் அமைந்துள்ளது ‘லக்ஷ்மி ஹயக்ரீவர்’ திருக்கோயில். ‘கல்விக் கடவுள்’ என்று சொல்லப்படும் ஹயக்ரீவருக்கு தமிழகத்திலேயே முதன் முதலில் கோயில் அமையப்பெற்ற தலம் இது என்பது இதன் தனிச்சிறப்பு.

  41.2

        பிரளய காலத்தில் – உலகம் அழியும் சமயம், பிரம்மாவின் தூக்கத்தில் உதித்த அசுரர்கள், வேதங்களைப் பெண் குதிரை வடிவமாக்கி பிரளய வெள்ளத்தில் அதலபாதாளத்தில் ஒளித்து வைக்க, அதனை மீட்க மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் குதிரைமுக (பரிமுகம்) பெருமாள் (ஹயக்ரீவர்). வேதங்களை மீட்டு வந்ததால் ஞானத்துக்கு அதிபதியாக விளங்குகிறார் லஷ்மி ஹயக்ரீவர்.

41.3      இமயமலையிலிருந்து சஞ்சீவ பர்வத மலையை பெயர்த்துக்கொண்டு இலங்கைக்குப் போனார் ஆஞ்சநேயர். அப்போது, அந்த மலையிலிருந்து கீழே விழுந்த ஒரு பகுதிதான் இந்த ஔஷதகிரி மலை.

             சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன், காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள தூப்பில் கிராமத்தைச் சேர்ந்த வேதாந்த தேசிகன் என்பவர், தனக்கு ஞானம் வேண்டி இந்த ஔஷதகிரி மலையின் மேல் அமர்ந்து கருட பகவானை நோக்கி தவமிருந்தார். அப்போது அவருக்கு அருள்பாலித்த கருட பகவான், ஞானத்துக்கு அதிபதியான ஹயக்ரீவர் மந்திரத்தை உபதேசித்து, ஹயக்ரீவரை வேண்டி பூஜிக்கச் சொன்னார். அதன்படியே பூஜித்த வேதாந்த தேசிகனுக்கு ஹயக்ரீவரும் அருள்பாலித்தார். அதன் பிறகு ‘நவரத்ன மாலை’, ‘மும்மணிக் கோவை’ போன்ற பல தமிழ் நூல்களை எழுதினார் வேதாந்த தேசிகன். அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்தான் இந்த லக்ஷ்மி ஹயக்ரீவர்.

        “குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தமா ஏதாவது தோஷம் இருந்தாலோ, அல்லது கல்வியறிவு பெருக வேண்டியோ, சந்நிதிக்கு வந்து பேனா, நோட்டு, தேன், ஏலக்காய் மாலை வாங்கி ஹயக்ரீவருக்கு பூஜை செய்யணும். பூஜை முடிஞ்சதும் அந்த தேனை குழந்தைகள் நாக்கில் கொஞ்சம் தடவிவிட்டு, ஏலக்காய் ஒண்ணை வாயில் போட்டுவிட்டா போதும்… உடனடியா தோஷமெல்லாம் நிவர்த்தியாகிவிடும். கல்வி அறிவு வளரும்!’’ என்ற கோயிலின் அர்ச்சகர் சேஷா பட்டாச்சார்யார், இத்தலம் பிணி தீர்க்கும் மகத்துவத்தையும் கூறினார்.

        இங்க கொடுக்கிற லக்ஷ்மி தீர்த்தம், தெய்விகமானது. வேதாந்த தேசிகர் ஆராதனை செய்த தீர்த்தம் அது. அந்த தீர்த்தத்தைப் பருகினா உடலில் உள்ள சகல பிணிகளும் பறந்துடும். அதாவது, குதிரைக்கு எப்போதும் வாயிலிருந்து நீர் வடிஞ்சுட்டே இருக்கும். குதிரை ரூபத்தில் இருக்கும் ஹயக்ரீவருக்கும் அப்படித்தான். அப்போது அசுரர்கள் அந்த நீரைப் பருகித்தான் தங்களோட பாவங்களைப் போக்கிக்கிட்டாங்க. இங்க கொடுக்கப்படும் லக்ஷ்மி தீர்த்தமும் அதுபோலத்தான். மூலிகைகளால் தயாரிக்கப்பட்டு அதை ஹயக்ரீவருக்கு ஆராதனை செஞ்சு தீர்த்தமா கொடுக்கப்படுது.

       108 திவ்ய தேசங்களில் திருவந்திபுரமும் ஒன்று. வைகானஸ ஆகம விதிமுறைப்படி தினமும் ஆறு கால பூஜைகள் செய்யப்படுகின்றன. ஹயக்ரீவருக்கு திருவோண நட்சத்திரம் என்பதால், ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை பூஜைக்கு உகந்த நாள்.

42.திருக்கோவலூர் (21-பாசுரங்கள்)

         ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 திவ்ய தேசங்களில் நடு நாட்டுத் திருப்பதிகளில் ஒன்றாகத் திகழும் திருக்கோவலூர் திரிவிக்ரம சுவாமியை முதலாழ்வார்கள் ஒருசேர தரிசித்து மங்களாஸôஸனம் பெற்ற தலமாகும்.

பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரங்கள்:

1.திருக்கண்ணமங்கை. 2. திருக்கண்ணபுரம். 3.கபிஸ்தலம். 4.திருக்கண்ணங்குடி. 5.திருக்கோவிலூர்.

             திவ்யபிரபந்தம் விளைந்த திருப்பதி என்ற பெருமையை மட்டுமல்லாமல் பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரங்களில் ஒன்றாக போற்றப்படும் தலமாகவும், தசாவதாரத்தில் ஓங்கி உலகளந்த உத்தமனாகவும் காட்சிதரும் இத்திருக்கோயிலில், ஸ்ரீ திரிவிக்ர சுவாமி, ஸ்ரீ புஷ்பவல்லித் தாயார், ஸ்ரீ ராமர், ஸ்ரீ வரதராஜர், ஸ்ரீ விஷ்ணு துர்க்கை, ஸ்ரீ வாமனன், ஸ்ரீ கருடன், துவாரபாலகர்கள், ஸ்ரீ பீடம், ஸ்ரீ மடப்பள்ளி நாச்சியார் சந்நிதி விமானங்கள், சோபன மண்டபம், பிரகாரங்கள் ஆகியவை திருப்பணிகள் செய்யப்பெற்று மஹா சம்ப்ரோஷணம் 4-7-2014 அன்று நடைபெற்றது.

     ஆழ்வார்கள் என்றால் வேதத்தாலும் அளவிட்டு அறிய இயலாத பெருமாளின் எல்லா குணங்களையும் அவனருளாலே அறிந்து அனுபவிக்கும் ஞானம் பெற்றவர்கள் என்று கூறலாம். மொத்தம் பன்னிரெண்டு ஆழ்வார்கள். அதில் முதாலாழ்வார்கள் மூவர். சித்தாதிரி ஆண்டு ஐப்பசி மாதத்தில், அடுத்தடுத்த நட்சத்திரத்தில் இவர்கள் பிறந்தது ஒரு அதிசயதக்க உண்மை!

               பொய்கையாழ்வார் திருமாலின் திருக்கரத்தில் உள்ள சங்கின் அம்சமாக ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில், காஞ்சிபுரத்தில் திருவெஃகாவை அடுத்த ஒரு பொய்கையில் பொற்றாமரை மலரில் அவதரித்தார். அவர் பொய்கையில் பிறந்ததால் அவருக்கு அந்தப் பெயர்.

              மறு நாள் அவிட்ட நட்சத்திரத்தில் (ஐப்பசி) திருமாலின் கதாயுதத்தின் அம்சமாக மாமல்லபுரத்தில் நீலோற்பல மலரில் (குருக்கத்தி மலரில்) பூதத்தாழ்வார் அவதரித்தார். பூதம் என்னும் வடசொல் பூ என்ற அடிச்சொல்லில் இருந்து தோன்றியது. இதன் பொருள், சத்தைப் பெற்றது என்பது. (சத்து = அறிவு) திருமாலின் திருக்குணங்களை அநுபவித்தே அறிவைப் பெற்றவர் பூதத்தாழ்வார்.

        அதற்கும் அடுத்த நாள் சதய நட்சத்திரத்தில்(ஐப்பசி) பெருமாளின் வாளின் அம்சமாய் மயிலாப்பூரில் உள்ள கிணற்றில் செவ்ல்லி மலரில் பேயாழ்வார் அவதரித்தார். இவருடைய பக்தி வைராக்கியத்தால் இவர் செய்த செயல்கள் சராசரி மனிதனை விட வேறு படுத்திக் காட்டியது. தம்மை மறந்த நிலையில், பேய் பிடித்தவர் போல, கண்கள் சுழலும்படி விழுந்து, சிரித்து, தொழுது, குதித்து ஆடினார், பாடினார். இதனால் இவரைப் பேயாழ்வார் என்று யாவரும் கூப்பிட்டனர்.

         இவர்களிடையே என்ன ஒரு ஒற்றுமை ! நீர் நிலையில், மலர்களின் மீது, ஒரு தாய் வயிற்றில் பிறக்காமல் இம்மூவரும் அவதரித்து உள்ளனர். தெய்வத்தின் அம்சமாகப் பிறந்ததினால் இயற்கையிலேயே ராஜச குணம், தாமச குணம் இல்லாமல் சத்வ குணத்தில் திளைத்திருந்தனர். பெருமாளின் அருளாலே மயர்வற மதிநலமும் அருளப் பெற்றிருந்தனர். இறைவன் மேல் அதிக பக்தியுடன், வைராக்கியத்துடன், போக வாழ்க்கையைத் துறந்து, மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில் இன்னொரு நாள் இருக்காமல் வாழ்ந்து வந்தனர். ஒருவரை ஒருவர் அறியவில்லை. இவர்கள் மூவரும் சந்திக்காமலே வாழ்ந்து வந்தாலும் இறைவன் மேல் திவ்யப்பிபந்தங்களை இயற்ற வேண்டிய தருணம் வந்ததும் மூவரும் திருக்கோவலூரில் சந்தித்துக் கொள்கின்றனர். எல்லாமே அவன் செயல் தானே!

      முதலில் திருக்கோவலூர் வந்தவர் பொய்கையாழ்வார். அவர்  மிருகண்டு முனிவரின் ஆசிரமத்தில் உள்ள ஒரு மிகச் சிறிய அறையில் தங்கி (ரேழி மாதிரி) சயனித்துக் கொண்டிருந்தார்.

       அப்பொழுது அங்கு வந்த பூதத்தாழ்வார் தனக்கும் அங்கு தங்க இடம் இருக்குமா என்று வினவினார். அதற்குப் பொய்கையாழ்வார் இங்கு ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம் என்று கூறி பொய்கையாழ்வாரை வரவேற்றார். இருவரும் ஒருவரை ஒருவர் வணங்கி உரையாட ஆரம்பித்தார்கள்.

     அப்பொழுது அங்கு வந்த பேயாழ்வார் அவரும் தங்க இடம் கேட்க, ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்று கூறி அவ்விருவரும் பேயாழ்வாரை வரவேற்றனர். நெருக்கி நின்று கொண்டு மூவரும் இறைவனின் பெருமையை சொல்லியும் கேட்டும் மகிழ்ந்தனர்.

       இந்த சந்தோஷ சூழ்நிலையில் அங்கிருக்க விரும்பி எம்பெருமானும் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார். அந்த சிறிய இடத்தில் அவர் வந்து அவரும் நெருக்க ஆரம்பித்ததும், யார் தங்களை நெருக்குவது என்ற கேள்வி அவர்கள் மனத்தில் எழுந்தது. இரவு நேரம். சுத்தமாக வெளிச்சம் இல்லை. எப்படி காண்பது? விளக்கு ஏற்ற முயற்சி நடக்கிறது? சாதாரண விளக்கில்லை ஞான விளக்கு. ஏன்? நான்காவது ஆளைத் தொட்டு உணர முடியவில்லை. உணர முற்பட்டு மூவரும் இறைவன் பால் திவ்யபிரபந்தப் பாடல்களை பாட ஆரம்பித்தனர். இதுவே நல்லாரம்பம்! அப்போது முதலில் வந்த பொய்கையாழ்வார் அந்தாதி தொடங்குகிறார் இப்படி.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று  
(பொய்கையார்)

     (வையம் = மண்ணுலகம்; தகளி = அகல்; வார் = நீண்ட; வெய்ய = வெம்மையான; சுடர்ஆழி = ஒளிமிக்க சக்கரப்படை; இடர்ஆழி = துன்பமாகிய கடல்)

      எல்லாமுமாக இருக்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை அவர். இறைவன் தகுதிக்கு ஏற்பப் பெரிய விளக்கேற்ற உள்ளம் கொண்டார். எனவே இவ்வுலகத்தையே அகல்விளக்காகவும், அதனை வளைத்துக் கிடக்கும் பெரிய கடல்நீரையே நெய்யாக வார்த்தார். அக்கடற்பரப்பின் ஒரு விளிம்பிலே தோன்றுவதுபோல் காட்சியளிக்கும் சூரியனை அதிலேற்றும் சுடராக்கி ஞான விளக்கேற்றி வழிபட்டார். அது அகவிருள் அகற்றும் விளக்காதலால், உலக மாயையையே உண்மையெனக் நினைக்கும் ஆத்மாக்களுக்கு வீடுபேறளிக்கும் என்பது அவர் நம்பினார்.

       பொய்கையாழ்வார் இறைவனை ஐம்புலன்களாலும் காண்கிறார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும், அழிவற்ற மெய்ஞ்ஞானமாகவும், ஞானமுடையார் செய்யும் வேள்வியாகவும், அறமாகவும் கண்டு மகிழ்கின்றார். இவர் இயற்றிய 100 வெண்பாக்கள் முதல் திருவந்தாதி என்று பெயர்பெற்றன. அதற்கான் முதல் பாடலே வையம் தகளியா.

         இந்தப்பாடலில் அகல் உள்ளது, நெய் உள்ளது, சுடர் உள்ளது. ஆனால் திரி இல்லை. திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதியில் இதைக் குறிப்பிடுகிறார்,

        ‘வருத்தும் புறவிருள் மாற்ற எம்பொய்கைபிரான் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றைத் திரித்தன் றெரித்த திருவிளக்கு’

     அதாவது  வருத்தும் புற இருள் மாற்ற பொய்கையாழ்வார் வேதங்களின் பொருளையும், தமிழையும், தன்னையும் கூட்டித் திரியாக்கி தீபச் சுடரை ஏற்றினார்.

 42.1

      அடுத்து பூதத்தாழ்வார் அன்பே விளக்காகவும், ஆர்வமே நெய்யாகவும், சிந்தையே திரியாகவும் கொண்டு ஞான விளக்கை ஏற்றி நாராயணனைத் துதித்தார்.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்
     

     (சிந்தை = உள்ளம்; நன்பு = நன்மை) அன்பு, ஆர்வம், இன்பு என்றவை எல்லாம் இறைவன் பால் ஏற்படும் ஈர்ப்பில் நமக்குண்டான சிறப்பு நிலைகளாகும். உலகில் பொருள்கள் பிரகாசிப்பதற்கு விளக்கு ஏற்றுவர். இவரும் நம் இயல்பும் பெருமாளின் இயல்பும் பிரகாசிப்பதற்காக ஞானச் சுடர் விளக்கை ஏற்றினார்.

     இவ்விருவர் ஏற்றிய விளக்கில் பேயாழ்வார் இலட்சுமி நாராயணனைக் கண்டார்.

திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் – செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கண்டேன்
என்ஆழி வண்ணன்பால் இன்று

     (அருக்கன் = கதிரவன்; செருக்கிளரும் = போர்க்களத்தில் கிளர்ச்சியுடன் விளங்கும்; பொன்ஆழி = பொன்மயமான சக்கரப்படை; சங்கம் = சங்கு;ஆழிவண்ணன் = கடல் நிறம் கொண்ட பெருமான்.) ‘பரிந்துரை கூறி நம்மை இறைவனிடம் சேர்ப்பிக்கும் பிராட்டியைக் கண்டேன். அவருடைய சேர்க்கையினாலே நிறம் பெற்ற திருமேனியைக் கண்டேன். சூரியன் போன்ற அழகிய நிறத்தையும் கண்டேன். போரில் சீறும் திருச்சக்கரத்தையும், மற்றொரு திருக்கையில் உள்ள திருச்சங்கினையும் சேவிக்கப் பெற்றேன்’ என்கிறார் பேயாழ்வார். பொன்னின் நிறம் போன்ற திருமகளின் நித்ய சேர்க்கையாலே அப்படியே பொன்னிறத்தைப் பெற்றது பெருமானின் கரிய திருமேனியும்.

     இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்கத் துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். மூவரும் உலகுய்ய திவ்யபிரபந்தங்களை அருளிச் செய்து பெருமாளின் கல்யாண குணங்களையும் விரிவாக  அனுபவித்து பிறரையும் அனுபவிக்கச் செய்தனர். கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்ற கூற்றை பொய்யாக்கி அவர்கள் இறைவனைக் கண்டு அதனை நம்முடன் பகிர்ந்ததே அவர்களின் அளப்பறியா அன்புக்குச் சான்று.

ஆன்மீகத் தேடலின் பாதை

1.தெய்வத்தைச் சந்திக்கும் ஆர்வம்
2.தெய்வ தரிசனத்துக்ககக் காத்திருத்தல்
3.ஆன்மாவின் கேவல்
4.தெய்வீகத் தோற்றம்
5.தெய்வத்துடன் சந்திப்பு

     ஆழ்வார்கள் ஆயினும் அவர்களுக்கும் இதே பாதை தான் இருந்திருக்கிறது என்று அவர்கள் வரலாற்றைப் படிக்கும்போது தெரிகிறது. திருப்பாற்கடலும் திருவேங்கடமும் எம்பெருமானின் இருப்பிடங்களாக இருந்தாலும், அவ்விடங்களில் அவர் இருப்பதே சமயம் பார்த்து பக்தனின் மனத்தில் குடிகொள்ளத் தான் என்று நிச்சயமாகக் கூறுகிறார் பொய்கையாழ்வார். நம்மைக் காப்பதே அவர் தொழில் என்கிறார். இப்படிப்பட்டத் தேடல் எவருக்கு இருந்தாலும் பக்தி மார்க்கத்தின் மூலம் ஒருவர் தன் ஆன்மாவின் உண்மை நிலையை உணர்ந்து, இறைவனை அறிந்து கொள்ள ஏற்படும் ஆசையின் மூலம் தியானத்தில் ஆழ்ந்து, ஆன்மாக்கும்  இறைவனுக்கும் உள்ள தொடர்பினை அறிந்து கொள்ள முடியும். அப்பொழுது பக்தி முதிர்ந்த நிலையில் இறைவனைக் காண முடியும் என்கிறார்.

உளன்கண்டாய் நன்னெஞ்சே உத்தமநேன்றும்
உளன் கண்டாய் உள்ளுவா ருள்ளத் – துளன்கண்டாய்
வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தி னுள்ளானென் றோர்

            எங்கும் எல்லாவற்றிலும் என்றும் நின்று அருளும் பரம் பொருள் இந்த மனித உள்ளத்துக்குள்ளும் கோவில் கொண்டுள்ளது என்கிறார் பொய்கையாழ்வார். எந்தத் துன்பம் உண்டானாலும் அவன் அருளைத் தேடினால் நிச்சயமாக அவ்வருளைப் பெறுவாய் என்று மூன்று ஆழ்வார்களுமே உறுதியளிக்கிறார்கள். வெளியில் எங்கும் போய் தேட வேண்டியதில்லை, கொஞ்சம் தியானித்தால் உள்ளத்துக்குள்ளேயே காண்போம்  என்கிற நம்பிக்கை இவர்கள் இயற்றிய மூன்று திருவந்தாதிகளைப் படித்தால் புரியும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இவர்களின் முதல் பாசுரமே அதை பிரதிபலிக்கிறது.

42.2

        மற்ற ஆழ்வார்களுக்கு முன்னடி அவதரித்து அவர்களுக்கு வழிகாட்டியாகத் திவ்ய பிரபந்தங்களை முதன் முதலில் அருளிய பெருமையால் இவர்கள் முதலாழ்வார்கள் என்று பெயர் பெற்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் 100 பாசுரங்கள் இயற்றினர், அவையே முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி என்று போற்றப்படுகின்றன.

42.3.png

       பிற சமயக் கண்டனம் இல்லாமை, பக்திப் பிரவாகம், பெருமாளின் திருவடி பெருமையைப் போற்றுதல், வழிபாட்டு நெறி காட்டுதல்,”தன்னனுபவக் கூறல்” இவை இம்மூவர் பாடல்களின் சிறப்பு அம்சங்கள். இறைவனைக் கண்டதை இவர்கள் நம்முடன் பகிர்கிறார்கள். மாதவனின் பெயரைச் சொல்வதே இனிமையான எளிமையான உய்யும் வழி, அதுவே வேதங்களுக்கு நிகர் என்ற உண்மையை நமக்கு எடுத்துரைத்துள்ளனர்.

        முதலாழ்வார்கள், பல திவ்யதேச யாத்திரை செய்து யோக பலத்தால் நெடுங்காலம் வாழ்ந்திருந்து பிறகு மறுபடியும் திருக்கோவலூரையே அடைந்து அங்கேயே திருநாட்டுக்கு எழுந்தருளினர்.

 முதலாழ்வார்கள் ஆழ்வார் திருவடிகளே சரணம்! 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Please click below to go to CONTENTS for all the Articles in HRE:

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

*****************************************************************

RELATED திவ்யதேசங்கள் ARTICLES:-

                     Pl Also, Click & Look for other திவ்யதேசங்கள் at HRE Links given below

 (I) சோழநாட்டுத் திவ்யதேசங்கள் (1 to 40)
https://drdayalan.wordpress.com/2016/03/08/hre-40

(II நடு நாடு திவ்யதேசங்கள் (41 & 42)
https://drdayalan.wordpress.com/2016/04/20/hre-41

(III) தொண்டை நாடு திவ்யதேசங்கள்(43 to 64)
https://drdayalan.wordpress.com/2016/02/22/hre-37

(IV) மலை நாடு திவ்யதேசங்கள் (65 to 77)
https://drdayalan.wordpress.com/2016/06/12/hre-43

(V) பாண்டிய நாட்டுத் திவ்யதேசங்கள்(78 to 95)
https://drdayalan.wordpress.com/2015/12/29/hre-35

(VI) வட நாடு திவ்யதேசங்கள் (96 to 105)-To be published soon

(VII) விண்ணுலகம் (106 & 108)- To be published soon

Advertisements