Tags

, , , , , , , , , , , , , ,

Please click below for all the Articles in HRE:

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

அனந்தன் என்னும் ஆதிசேஷனின் அம்சமான, இராமாநுஜர் 1000 ம் ஆண்டு அவதாரத் திருநாள் 1-5-2017 

Ramanujar

{அவதாரம்: ஸ்ரீபெரும்பூதூர், பிங்கள ,1017, ஆண்டு சித்திரை மாதம், சுக்ல- பஞ்சமி-திருவாதிரை}

பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பாமன்னு மாறனடி பணிந் துய்ந்தவன் பல்கலையோர்
தாம்மன்ன வந்த இராமாநுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே.

வைகுந்த ஆலோசனை-அனந்தனின் இராமாநுஜ அவதாரம்

                மனதைக்குழப்பும் வகையில் பிற மதங்களின் ஆதிக்கம் ஓங்கி, இருந்த  காலம்.  திருப்பாற்கடலில் ஸ்ரீமந்நாராயணன் ஸயனித்து இருக்க, அவர் அருகில் கவலையே உருவாக ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறார்.

      நீங்கள் பகவத்கீதையில் கூறியதை மறந்து பிற மதவாதிகளின் பேச்சில் மயங்கி, உம்மை மறந்து பிற தேவதைகளின் அருளை நாடிச் செல்கின்றனர். மேலும் அந்த தேவதைகளுக்கு சக்திகளை அளிப்பதும் நீங்கள் தாம் என்பதையும் அவர்கள் உணரவில்லை.  முக்தி அடைவதற்கான மார்கமான சரணாகதியை நீங்கள் காட்டியிருந்தும், அதனை மறந்து அவர்கள் இந்த உலகில் பிறந்து உழல்வதையே விரும்புகின்றனர்.

     நீங்கள், பூவுலகில் அதர்மத்தை ஒடுக்க ஒரு அவதாரம் எடுக்க வேண்டும்  “என்று முடிப்பதற்கு முன்பே பகவான்,  அந்த அளவிற்கு பயங்கரம் நடந்துவிடவில்லை மேலும் என் அவதாரமான ‘கல்கி”அவதாரம் கலியுக முடிவில்தானே நிகழவேண்டும்.

     அவ்வப்போது ஆழ்வார்களையும், ஆச்சார்யர்களையும் அவதரிக்கச்செய்து அவர்கள் மூலம் அருளிச்செயல்களை அளிக்க மக்கள் உம்மை வந்து சரணாகதி அடைவதில்லையே.   மற்ற மதவாதிகளின் அழகான பேச்சில் மயங்கிக் கிடக்கிறார்களே, அந்த ஜீவாத்மாக்கள் நம்மிடம் எப்போது வந்து சேர்வது? என்று வாஞ்சையுடன் ஸ்ரீதேவி கேட்க, வேறு ஒருவரை ஆச்சார்யனாக அவதரிக்கச் செய்து அவர்மூலம் சரணாகதி தத்துவத்தை, எளிய முறையில், எடுத்துச் சொல்லச் செய்து நம்மிடம் வந்து சேரவேண்டும்.

     பகவான், அநந்தனை நியமிக்க, ஆதிஸேஷன், தனியாக நான் மட்டும் பிறந்து எதைச்சொன்னாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள் என ஆதிசேஷன் தன் பேச்சை முடிப்பதற்குள், எம்பெருமான், அநந்தா விஷத்தை விஷத்தால்தான் முறிக்கமுடியும். உன் சக்தி அவர்கள் மனதை உன் திறமையான வாதங்களால் மாற்றிவிடும் என்று முடித்தார்.

    நீ பூலோகத்தில் வாஸம் செய்யப் போவது 120 ஆண்டுகளே.  அவை நம் நாட்கணக்கில் கண்ணிமைக்கும் நாழிகை.அநந்தன் ப்ரபோ! அடியேனுக்கு சரணாகதியைப் பற்றி என்ன தெரியும்“ என்று கேட்க, எம்பெருமான்,

    ராமாவதாரத்தில் காகாசுரன், விபீஷணன், ஸமுத்ரராஜன்; கிருஷ்ணாவதாரத்தில் காளிங்கன் போன்றோர் என்னை சரணடைந்து அவர்களைக் காப்பாற்றியது மறந்துவிட்டாயா? நான் பகவத் கீதையில் கூறிய சரம-ஸ்லோகத்தின் பொருளையும் மக்களுக்கு உன் உபதேஸங்களாக எடுத்துக் கூறு, மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூற அநந்தன் பூலோகத்தில் பிறவி எடுக்கத் தயாரானார்.

                ஸ்ரீஆளவந்தாரின் சிஷ்யர்களில் ஒருவரான, பெரிய திருமலை நம்பிகள் (ஸ்ரீசைலபூரணர்) என்பவருக்கு இரு சகோதரிகள் இருந்தனர்.  அவர்கள் பூமிபிராட்டி மற்றும் பெரியபிராட்டி.  இவர்களில் மூத்த காந்திமதிஅம்மையார் (பூமிபிராட்டி), ஸ்ரீபெரும்பூதூரில் வாழ்ந்த கேஸவப்பெருமாளுக்கும், இளையவரான பெரியபிராட்டியை மதுரமங்கலம், கமலநயன பட்டர் என்பவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.பெரிய திருமலை நம்பிகள் திருமலைக்குச்சென்று வேங்கடமுடையானுக்கு கைங்கர்யம் செய்வதில் ஈடுபட்டார்.

55.1. இராமாநுஜர் திருஅவதாரம் (1017)

  சிலகாலம் குழந்தைப்பேறு இல்லாது இருந்த கேஸவப்பெருமான்- காந்திமதிஅம்மையார் தம்பதிகள் பல திவ்யதேஸங்களுக்குச் சென்று சென்னையிலுள்ள திருவல்லிக்கேணி திருத்தலத்திற்கு வந்தனர்.  அங்கு பார்த்தசாரதி-வேதவல்லித்தாயாரை தரிசித்து தங்களுக்கு புத்ர பாக்யம் வேண்டி ஸ்ரீபெரும்பூதூர் திரும்பினர்.

Also please refer:-

      வேங்கட கிஷ்ணன் அருளால், காந்திமதி அம்மையார் கருவுற்றாள்.  கி.பி. 1017, பிங்கள ஆண்டு சித்திரை மாதம், சுக்ல பக்ஷ பஞ்சமி, திருவாதிரை திருநக்ஷத்திரத்தில் வியாழக்கிழமை அந்த தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.

    தம் சகோதரிக்குக் குழந்தை பிறந்திருக்கும் செய்தி அறிந்த பெரிய திருமலைநம்பிகள்(ஸ்ரீசைலபூரணர்), திருமலையிலிருந்து, ஸ்ரீபெரும்பூதூர் வந்தார்.  குழந்தையைப் பார்த்ததும் எம்பெருமானுக்குத் தொண்டு செய்யும் காந்தி  குழந்தையின் முகத்தில் தெரிந்ததால் “இராமாநுஜன்” , “இளையாழ்வார் “ என்ற பெயரும் வைத்தார்கள்.

     மதுரமங்கலத்தில் கமலநயன பட்டர்-ஸ்ரீதேவி தம்பதிகளுக்கு குரோதன ஆண்டு தை மாதம், புனர்பூஸ நக்ஷத்திரத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.  பெரிய திருமலை நம்பிகள், மதுரமங்கலம் கடாக்ஷித்து அதற்கு “ கோவிந்தபட்டர் “ என்று பெயர் சூட்டினார்.

    இராமாநுஜர்16ம் வயதில் தனது தந்தையை இழந்தார். 17வது வயதில் தஞ்சம்மாளை தன் பார்யாளாக ஏற்றார்.

    கோவிந்தபட்டரும் வேத அத்யனம் பண்ணி ஸாமாந்ய சாஸ்திரங்களைக் கற்றார்.  பிறகு உரியகாலத்தில் திருமணமும் செய்து கொண்டார்.

55.2.முதல் குருயாதவப்ரகாசர்

    இராமாநுஜர், திருப்புட்குழி யாதவப்ரகாசரிடம் வாசித்து வருவது கேட்டு கோவிந்தபட்டரும், அவரிடம் சென்று வாசிக்கத் தொடங்கினார்.

   

        ஒருநாள் தம் குருவிற்கு, இராமாநுஜர் எண்ணைத்தேய்த்துக் கொண்டு இருந்தார், அச்சமயம், ஒரு சிஷ்யன் குருவிடம் “தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷீணி” என்ற ஸ்ருதி வாக்யத்திற்கு அர்த்தம் கேட்க, குரு,கபி=, குரங்கு, ஆஸம்=பின்பாகம், (குரங்கினுடைய பின்பாகத்  தைப் போன்று சிவந்த கண்களையுடையவன் பகவான்) என்று பொருள் கூறினார்.

     இதைக்கேட்ட ராமாநுஜரின் கண்ணீர் பெருகியது. குரு, காரணம் கேட்க, ராமாநுஜரும், ஸ்வாமி, உயர்ந்த எம்பெருமானின் திருக்கண்களைத் தாங்கள் குரங்கின் பின்பாகத்துடன் ஒப்பிடுவது சரியில்லை. நிறைய நீருள்ள தடாகத்தில், தண்டு பெருத்ததாய் ஸூர்ய கிரணத்தினால் மலர்ந்ததாய் இருக்கும் தாமரை மலர் போன்ற கண்களையுடையவன் பகவான் என்றே பொருள் கொள்ள வேண்டும்.  என்றார்.

       யாதவபிரகாஸரின் மனம் கொந்தளித்தது.  தமக்குப் பிரியமான சில சீடர்களை அழைத்து, ராமாநுஜன் போக்கே சரியில்லை.  அவனை இப்படியே விட்டால் நம் மதத்திற்குதான் ஆபத்து.ஆகவே அவன் கதையை முடித்துவிடவேண்டும்.

     நான் கங்கா யாத்திரைக்கு ஏற்பாடு செய்கிறேன்.  அங்கே கங்கையின் பிரவாகத்தில் அவனைத்தள்ளிவிட்டு, தவறி விழுந்து விட்டான் என்று சொல்லி விடலாம் “  என்றார்.  கள்ளம் கபடமறியாத இராமாநுஜரும், கோவிந்தனும் வர குருவும் சீடர்களும் வடதேஸ யாத்திரைக்குப் புறப்பட்டனர்.

    ஒரு நாள் குருவும்-சீடர்களும் விந்திய மலைச்சாரலில் முன்னேறி கொண்டு இருக்க, இளையாழ்வாரும், பட்டரும் மிக பின் தங்கியிருந்தார்கள்  கோவிந்தன் தன் அண்ணனிடம் குருவின் சூழ்ச்சியைப் பற்றி தெரிவித்து, அவரை அங்கிருந்து தப்பிப்போகச் செய்துவிட்டு தான் மட்டும் வேகமாகச் சென்று குருவின் கூட்டத்துடன் சேர்ந்து கொண்டார்.  இளையாழ்வாரும் தம் ஊர் நோக்கி திரும்பிச் செல்ல பயணமானார்.

          யாதவபிரகாஸரும் அவர் சிஷ்யர்களும், வேகுநேரமாகியும் இராமாநுஜர் காணாமல் போகவே, பல இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் இளயாழ்வார் கிடைக்கவில்லை.  ஆகவே , ஏதாவது காட்டு-மிருகம், இராமாநுஜரைக் கொன்றுறிருக்கக்கூடும்  என்ற முடிவிற்கு வந்தவர்களாக, நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

     தனியே இளையாழ்வார், பிரயாணம் செய்து களைத்து, அஸ்தமிக்கும் தருணத்தில் ஒருமரத்தடியில், அமர்ந்தார்.

        ஒரு வில்லியும், வில்லிச்சியும் காஞ்சீபுரம் போய்க் கொண்டு இருக்கிறோம். எங்களுடன் வாருங்கள் என்றதும், இளையாழ்வார் பின்னே தொடர்ந்தார்.இரவு மூவரும், ஒருமரத்தடியில் தங்கினார்கள். பொழுது விடிந்தது.வில்லிச்சி தனக்கு தாகமாக இருக்கிறது என்று சொல்ல இளையாழ்வார் சாலையோரமிருந்த கிணற்றில் தண்ணீர் கொண்டு வந்தபோது அவர்களை அங்கு காணவில்லை.  தலையை உயர்த்திப்-பார்த்தவருக்கு, புண்யகோடி விமானம் கண்களில் பட்டது. தாம் இப்போது இருப்பது காஞ்சீபுரம் தான்,  வந்த தம்பதிகள் பேரருளனான வரதராஜனும், பெருந்தேவித்தாயாருமே என்பது. எம்பெருமானின் கருணையை நினைந்து, நினைந்து மூர்ச்சையானார்.

               கோயிலுக்குச்சென்று  பேரருளாளனை தரிசித்தார்.  அன்று முதல் தாம் அந்த திவ்ய தம்பதிகளுக்கு நீர் கொண்டு வந்த கிணற்றிலிருந்தே தீர்தம் கொண்டுவந்து, பேரருளாளனின் திருமஞ்சனத்திற்கு கைங்கர்யம் செய்யத் தொடங்கினார்.

    இன்றும் அந்த சாலைக்கிணற்றிலிருந்துதான் பெருமாளுக்கு தீர்த்தம் கொண்டுவரப் படுகின்றது. அருகில் இராமாநுஜருக்கு  சந்நிதியுள்ளது.  பிரதி வருடமும், இயற்பா சாற்றுமுறைக்கு மறுநாள் அருளாளன் இந்த இளையாழ்வார் சந்நிக்கு எழுந்தருள, அவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.  அன்று எம்பெருமானும்-தாயாரும், வில்லி, வில்லிச்சியாக கையில் வில்லும், அம்பும் ஸமர்பித்து அலங்காரம் செய்யப்படுகின்றது.

உள்ளங்கை கொணர்ந்த நாயனார்

           யாதவப்ரகாஸர் மந்திரசக்தியினால், கங்கையில் ஸ்நாநம் செய்த கோவிந்த பட்டரின், கையில் ஒரு சிவலிங்கத்தை வரவழைதர்.  நீ இதனை தினமும் பூஜித்து வா இன்று முதல் உன் பெயர் உள்ளங்கை கொணர்ந்த நாயனார் என்று வாழ்த்னார் , தன் ஸ்ரீவைஷ்ணவ சீடன் ஒருவனை அத்வைதியாக மாற்றி விட்டோம் என்று மகிழ்ந்தார். கோவிந்தனும் சிவமதத்தைச் சேர்ந்தவராக மாறியதுடன் அந்த லிங்கத்தை தம் சொந்த ஊரான மதுர மங்கலத்தில் ப்ரதிஷ்டை செய்து பூஜித்து வரலானார்.  பின்பு காளஹஸ்தி சென்று காளஹஸ்திநாதனுக்கு சிவபூஜை செய்து வரலானார்.

            சீடர்களுடன் காஞ்சீபுரம் திரும்பிய யாதவப்ரகாஸர் இராமாநுஜரைக் கண்டு, ஆச்சர்யப் பட்டார். இராமநுஜர் முன் போல் அவரிடம் பாடம் கற்கச் சென்றார்.

          காஞ்சி மன்னனின் மகளை ஒரு சமயம் ப்ரஹ்ம-ராக்ஷஸ் பற்றிக்கொண்டது.  பலர் முயன்றும் அதை விரட்ட முடியவில்லை.  சிலர் யாதவப்ரகாஸர் அதை விரட்டமுடியும் என்று கூற, மன்னன் ஆட்களை அனுப்பினான்.

               அவர் அதை விரட்ட அது“ நீர் போன ஜன்மத்தில் மதுராந்தகம் ஏரியில் ஒரு உடும்பாக இருந்தீர். அங்கு வந்த சில ஸ்ரீவைஷ்ணவர்கள் உண்ட மிச்சத்தை நீ உண்டதால் இந்த ஜன்மாவில் பிறவியைப் பெற்றீர். நானோ போன ஜன்மாவில், ப்ராஹ்மண ஸ்ரேஸ்ஷடனாக இருந்தேன்.  ஒரு யாகம் செய்யும் போது நேர்ந்த சிறிய தவரினால் இதுபோல் மாறிவிட்டேன். ஆகவே நீ போகச்சொன்னால் போகமாட்டேன்.  உன் சீடரான இராமாநுஜர் சொன்னால் போவேன் என்றது. “  மன்னன் இளையாழ்வாரிடம் வேண்ட அவரும் இந்த பெண்ணை விட்டுச் சென்று விடு என உடனே அகன்றது.

            யாதவப்பிரகாஸர் உபநிஷத் வாக்யங்களுக்கு, அர்த்தம் சொல்லிக் கொண்டு இருந்தார். உபநிஷத் வாக்யத்திற்கு அத்வைத மதப்படி அர்த்தம் கூறினார்.  ஆனால் இளையாழ்வாரின் மனம் அதை ஒப்பவில்லை.  அவர் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின்படி, பொருள்கூற, குருவிற்கு கோபம் வந்தது.

         இனி நீ உனக்கு உகந்த இடத்தைத் தேர்ந்து கொள் “ என்று கூறிவிடவே, இராமாநுஜரும் தம் வீட்டிற்குத் திரும்பினார்.  அவருடைய தாயாரும், பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து கொண்டிரு“ என்று கூறிவிடவே, இளையாழ்வாரும்  தினம் சாலைக்கிணற்றிலிருந்து, பேரருளாளனுக்கு  தீர்த்தம் கொண்டுவரும் கைங்கர்யத்தைச் செய்து கொண்டு வந்தார்.

55.3.திருக்கச்சி நம்பிகள்

தஞ்சம்மாள் செய்கை-1

       திருகச்சி நம்பிகளைப் பற்றி கேள்வியுற்ற இராமாநுஜர், அவரைத்தம் இல்லத்திற்கு அழைத்து ஆஸனமிட்டு, தண்டன் சமர்ப்பித்து நம்பிகள் புறப்பட, அவரை வழியனுப்புவதற்காக, இராமாநுஜர், கொஞ்ச தூரம் அவரைப்பின் தொடர்ந்தார்.  ஆனால் அதற்குள் ராமாநுஜரின் மனைவி நம்பிகள் அமர்ந்திருந்த இடத்தை கோமயத்தால், சுத்தி செய்தாள்.  திரும்பி வந்த இளையாழ்வார், இதனால் கோபமுற்று தம் தேவியைக் கோபித்துக்கொண்டார்

           `தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த திருக்கச்சிநம்பியை குருவாக ஏற்றுக்கொண்டவர்.

அருளாளன் வாக்கு-அற்புதங்கள் ஆறு

             இராமானுஜருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை திருக்கச்சி நம்பிகளிடம் கூற அவரும் அதை தேவப்பெருமாளிடம் எடுத்துரைக்க, பேரருளானும் மனமுவந்து ஆறு வார்த்தைகளை அருளிச்செய்தார்.

 1. அஹமேவ பரம் தத்துவம்

நாமே உயர்ந்த தத்துவம்-நாராயணனே பரம் பொருள்.

 1. தர்சநம் பேத ஏவச

சித்தாந்தம், ஆத்ம பரமாத்ம பேதத்தையுடையது. ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு என்பது சித்தாந்தம்.

 1. உபாயேஷு ப்ரபத்திஸ்யாத்

  மோட்சத்திற்கு ப்ரபத்தியே சிறந்த உபாயம். சரணாகதியே மோட்சத்திற்கு வழி. சரணாகதியே கடைத்தேறுவதற்கு உகந்த வழி.

 1. அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம்

அந்திம காலத்தில் ஸ்ம்ருதி வேண்டியதில்லை. இவ்வாறு சரணமடைந்தவன் ஆக்கை முடிவில் நாராயணனை நினைத்தல் வேண்டுமென்கிற நிர்பந்தமில்லை.

 1. தேஹாவஸாகே முக்கிஸ் யாத்

சரீர முடிவில் மோட்சமுண்டு – பிறவியின் முடிவில் மோட்சமுண்டு, மரணமானால் வைகுந்தம் ப்ராப்தமாகும்.

 1. பூர்ணாசார்ய ஸ்மாச்ரய

     பெரிய நம்பிகளையே நாட வேண்டியது. அவரைக் குருவாகக் கொள்வதென்ற இராமானுஜரின் எண்ணத்திற்கு விடையாக அமைந்ததே இந்த அருட்செயல்.

       இந்த  “ஆறு வார்த்தைகளை” தாமே ஆசிரியர் போல இருந்து விளக்கினார் திருக்கச்சி நம்பிகள். நம்பிகள் மூலம் காஞ்சி தேவப்பெருமாளிடம் பெற்ற இந்த ஆறு வார்த்தைகள் தான் ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கைப் போக்கை தீர்மானித்தது. இவ்வாறு இராமானுஜர் என்ற மகானை உருவாக்கிக் கொடுத்ததில் எல்லாமாக இருந்தவர் திருக்கச்சி நம்பிகள்.

55.4.ஆளவந்தார்

      ஒருசமயம், சில ஸ்ரீவைஷ்ணவர்கள், ஸ்ரீரங்கம் சென்று, ஸ்ரீஆளவந்தாரை, தரிசித்தனர். இராமாநுஜரைப்பற்றி கூறினார்கள்.அவற்றைக் கேட்ட ஆளவந்தார் இராமாநுஜரைக்காண காஞ்சீபுரம் எழுந்தருளினார்.  திருக்கச்சி நம்பிகளும் அவரை எதிர்கொண்டு அழைத்து கோயிலுக்கு அழைத்துச் சென்று, பெருமாள் சேவை செய்து வைத்தார்.ஆளவந்தார், “ இராமாநுஜர் யார்? “ என்றுகேட்க, நம்பியும், யாதவப்ரகாஸருடன் இருந்த சீடர்களில், அவர்தான் இராமாநுஜர் என்று கூற, ஆளவந்தாரும், இளையாழ்வாரை கண்குளிரக் கடாக்ஷித்தார்.

     இந்த சமயத்தில், திருவரங்கத்தில், ஸ்ரீஆளவந்தாரின், திருமேனி தளர்ந்தது. இதைக்கேள்வி பட்டு ஸ்ரீவைஷ்ணவகள், காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கம் வந்தனர்.  அவர்களிடம் ஆளவந்தார், ராமாநுஜரைப்பற்றி விசாரிக்க அவர்கள், இளையாழ்வார் யாதவப்ரகாஸரிடமிருந்து, பிரிந்து வந்து விட்ட நிகழ்ச்சியைச் சொல்ல, அதற்கு, ஆளவந்தார், “அடியேனுடைய ப்ரபத்தி வீண்போகவில்லை. “ என்று கூறி பெரிய நம்பிகளை அழைத்து, “ நீர் காஞ்சி சென்று இராமாநுஜரை இங்கு அழைத்துவாரும் “ என்று நியமித்தார்.

      ஸ்ரீஆளவந்தாரின் முகத்தில் தெரிந்த கவலையை நோக்கிய சீடர்கள், உமது திருவுள்ளத்தில் என்ன குறை என்று கேட்க அவரும்,இராமாநுஜரைக் காணாத குறை; வ்யாஸ சூக்தத்திற்கு பாஷ்யம் செய்ய வேண்டும்; நம்மாழ்வாருடைய ஸ்ரீசூக்திகளுக்கு வியாக்யானம் செய்ய வேண்டும் என்ற கவலை என்று கூறியவர், மூன்று விரல்களை மூடிக்கொண்டார்.

       சீடர்கள், “ பெரியபெருமாள் உம் எண்ண-த்தை நிறைவேற்றி வைப்பார் “ என்று கூற, நாதமுனிகளின் ஸ்ரீபாத தீர்த்தத்தை ஸ்வீகரித்து கொண்டு திருநாட்டிற்கு எழுந்தருளினார்.

       ஸ்ரீரங்கத்தை நெருங்கிய பெரிய நம்பிகளும், ராமாநுஜரும், “ஆளவந்தார் பரமபதித்து விட்டார் “ என்ற விஷயத்தைக் கேட்ட இருவரும், வாய்விட்டு அழுதனர்.

   ஆளவந்தாரின் திருமேனியை தரிசித்தபோது, மூடியிருந்த மூன்று விரல்களைப்பார்த்து கேட்க, அருகிலிருந்தவர்கள், அவர் மனதிலிருந்த மூன்று கவலைகளைப் பற்றி விரிவாகக் கூற,“ஆளவந்தாரின் அநுக்ரஹத்திற்கு பாத்திரனான அடியேனைக்கொண்டு அம்மூன்று கைங்கர்யங்களையும் பேரருளாளன் பூர்த்தி செய்வான் என்று இராமாநுஜர் கூறிய மறுகணமே, ஆளவந்தாரின் மூடியிருந்த மூன்று விரல்களும் திறந்தன.

இராமானுசர் எடுத்துக்கொண்ட சபதம்

 • பிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டி,உரை எழுதுவது.
 • விஷ்ணுபுராணம் இயற்றிய பராசரர்; பாகவதம் இயற்றிய வேதவியாசர் ஆகியோரின் பெயரை அழியாத புகழுக்கு வழி கோலுவது;
 • வேதத்தை தமிழில் பாசுரங்களாய் ஈந்த நம்மாழ்வாரின் புகழ், உலகில் என்றென்றும் வாழும்படிச் செய்வது.Also please refer:-

HRE-15:ஆளவந்தார்: https://drdayalan.wordpress.com/2015/06/12/hre-13

5.5. பெரியநம்பிகள்

      ஆளவந்தாருக்குப்பின் மடாதிபதியாக பொருப்பேற்றுக்கொண்ட திருவரங்கர், இராமநுசரை அழைக்கும்படி வேண்டி, ஆனால் அவர் திருக்கச்சிநம்பிகளையும் பேரருளாணையும் பிரிய மனம் இல்லையனில் அவரை வர்புருத்தவேண்டாம் என கூறியனுப்பினார்.

ஏரிகாத்த கோதண்டராமன் சந்நிதி(துவயம் விளைந்த திருப்பதி)

            அதே சமயம், பேரருளாளன் நியமனப்படி, இராமாநுஜரும், பெரிய நம்பிகளைக்காண ஸ்ரீரங்கத்திற்கு யாத்திரை மேற்க்கொண்டார்.இருவரும் மதுராந்தகத்தில் சந்தித்துக் கொண்டனர்.  இராமாநுஜர், பெரியநம்பிகளிடம், பேரருளாளன் நியமனத்தைக்கூறி, தண்டம் சமர்ப்பித்தார்.

       பெரியநம்பிகள்,ஏரிகாத்த கோதண்டராமன் சந்நிதியில், ஒரு மகிழ மரத்தின் அடியில் ராமாநுஜருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தருளினார்.எல்லா மந்திரங்களையும், த்வயத்தின் அர்த்தத்தையும் உபதேஸித்தார்.ஆகவே இந்த க்ஷேத்திரத்தை துவயம் விளைந்த திருப்பதி என்று சொல்வார்கள்.  இந்தத்தலத்தில் ஆண்டாள் சந்நிதிக்கு பின்புறத்தில் மகிழ மரத்துடன் ஒரு மேடை இருக்கிறது.  அங்குள்ள மதில் சுவரில், பஞ்ச ஸம்ஸ்காரம் நடைபெறும் காட்சி சித்திரமாகக்காணப்படுகின்றது.  ஒவ்வொரு வருடமும், ஆவணிமாதம், சுக்ல பஞ்சமியில் பஞ்ச ஸம்ஸ்கார உத்ஸவம் நடைபெறுகிறது.

பஞ்ச ஸம்ஸ்காரம்

   எம்பெருமானை ஆச்ரயிப்பதற்கு பின்பற்ற வேண்டிய ஐந்து சாதனைகள்- ஸம்ஸ்காரம்.

 • எம்பெருமானின் அடையாளமாகிற சங்க-சக்ரங்களை தரிப்பது.-தாப ஸம்ஸ்காரம்.
 • எம்பெருமானின் திருவடிகள் போல ஊர்த்வ புண்ட்ரத்தை (நெடுக்காக திருமண்காப்பு) தரிப்பது- புண்ட்ர ஸம்ஸ்காரம்.
 • எம்பெருமானது அடியார்களான ஆசார்யர்களின் திருநாமத்தை அவர்களின்- தாஸன் என்று சேர்த்துச் சொல்லுதல்-தாஸ ஸம்ஸ்காரம்.
 • எம்பெருமானுக்கும் நமக்கும் உண்டான உறவை உணர்த்தும் மந்த்ரத்தை அநுசரிதித்தல்-‘மந்த்ர ஸம்ஸ்காரம்.
 • தனது தாஸத்வம் சித்திப்பதற்கு ஸ்ரீமந்நாராயணனை ஆராதித்தல்யாக ஸம்ஸ்காரம்.

     இந்த ஐந்து ஸம்ஸ்கரங்களும் எல்லா ஜீவாத்மாக்களும் அவசியம் பெற வேண்டிய ‘ஸ்ரீவைஷ்ணவ தீட்சை ஆகும். இந்த தீக்ஷை ஆத்மாவைப் பற்றியதே தவிர சரீரத்தைப் பற்றியது அல்ல. கர்மாக்களின் அடியாகவே சரீரங்கள் வேறுபடுகிறதேயொழிய ஆத்மாக்கள் எல்லாம் ஞானத்துக்கும் ஆநந்தத்திற்கும் இருப்பிடமாய் ஸ்வயம் ப்ரகாசமாய் எம்பெருமானுக்கு பத்நியாய் சேஷமாய் இருக்கிறது என்பதை வேதம் முதலான சாஸ்திரங்கள் உத்கோஷிக்கின்றன என்று பராசர பகவானும் அருளிச் செய்தார்.

“தாப: புண்ட்ர ஸ்ததாநாம மந்த்ரோ யாகச்ச பஞ்சம:| அபீபரம ஸம்ஸ்காரா: பாரமைகாந்த்ய ஹேதவே:||

      இப்படிப்பட்ட பஞ்ச ஸம்ஸ்காரம் (ஸ்ரீவைஷ்ணவ தீக்ஷை) என்னும் விஷயத்தை பராசர பகவான் முதலான பல பல ரிஷிகள், உபதேசித்துள்ளதில் மேற்சொன்னது புண்ட்ர ஸம்ஸ்காரம். ரிய

     ஏரியில் பாஷ்யகாரர் படித்துறை என்று இராமாநுஜர், அனுஷ்டானம் செய்த இடமும் உள்ளது.  பெரியவர்கள் தினமும், இவ்விடத்தில் தங்கள் நித்யகர்மாநுஷ்டானங்களை செய்து வருகிறார்கள்.

   இந்த ஒரு தலத்தில்தான் இளையாழ்வார் க்ருஹஸ்தராக, வெள்ளை ஆடையுடன் சேவைசாதிக்கின்றார்.

சபதம்-1 (நிறைவேற்றம்)

      பராசரர் மற்றும் வேதவியாசர் பெயர்களை தன் சீடனாகிய கூரத்தாழ்வானின் குழந்தைகளுக்கு இட்டார், இவர்களில் விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்கு எழுதிய விரிவான உரை இன்றும் பராசர பட்டரின் உரை என்று சிறந்து விளங்குகிறது.

சபதம்-2(நிறைவேற்றம்)

       தன் சீடன் திருக்குருகைப்பிரான் மூலம் திருவாய்மொழிக்கு உரை படைத்து நம்மாழ்வாரின் பெயர் என்றும் ஓங்கி இருக்கும்படிச் செய்தார்.

      காஞ்சிபுரத்தை அடைந்த ராமாநுஜர், தம் கிருஹத்தின் ஒருபாகத்தில், பெரியநம்பிகளை வசிக்கச்செய்தார்.  பகவத் ஆராதனத்திற்கு வேண்டிய த்ரவியங்களையும், நம்பிகளுக்கு சமர்பித்து,அவரிடத்தில் மிகுந்த பக்தியுடன் வ்யாஸ சூத்திரங்களையும் அதன் அர்த்த விசேஷங்களையும், திவ்யப்ரபந்த பாசுரங்களையும் கற்று வந்தார்.

தஞ்சம்மாள் செய்கை-2

         ஒருநாள், இளையாழ்வாருக்கு எண்ணைத் தேய்க்க ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் வந்தார். அவர் தமக்கு மிக பசியாக இருக்கிறது என்று கூற, இராமாநுஜர் தம் தேவியிடம் அவருக்குச் சாப்பிட ஏதாவது உணவு தருமாறு கூற, அவர் தேவி,   “இன்று கொடுப்பதற்கு ஒன்றுமில்லை“ என்று கூறிச் சென்றுவிட்டாள். பிறகு இராமாநுஜர், உள்ளேச் சென்று பார்த்தபோது, ஒருபாத்திரத்தில் உணவு இருப்பதைக் கண்டு, அதை அந்த வைஷ்ணவருக்குக் கொடுத்து பசியாறச் செய்ததுடன், தன் மனைவி பொய்சொன்னதற்காக அவளையும் கடிந்து கொண்டார்.

தஞ்சம்மாள் செய்கை-3

    பின்பொரு சமயம், இராமாநுஜர், ஸ்ரீபெரும்பூதூர் செல்ல நேரிட்டது.  தம் ஆச்சார்யரிடம், நியமனம் பெற்று சென்றார்.  அப்போது கிணற்றடியில், ஜலம் தூக்கும்போது, இராமாநுஜர் தேவிக்கும், பெரியநம்பிகள் தேவிக்கும் அல்ப விஷயத்தில் சண்டை ஏற்பட்டது.

     இதனையறிந்த பெரியநம்பிகள், அங்கு இனி இருப்பது உசிதமில்லை என்று எண்ணி, இராமாநுஜர் திரும்புவதற்கு முன்பு தன் தேவியுடன் ஸ்ரீரங்கம் திரும்பினார்.

      ஸ்ரீபெரும்பூதூரிலிருந்து திரும்பிவந்த இராமாநுஜர் நடந்த விஷயங்களைக் கேள்வியுற்று, தம் மனைவியைக்கடிந்து“இனி நீ இங்கு வசிக்க வேண்டாம், உன் பிறந்தகம் போய்சேர் “ என்று நடந்த மூன்று தவருகளுக்காக, தேவிகளின் சொத்துக்கள் யாவற்றையும் கொடுத்து, அவளைப் பிறந்தகம் அனுப்பிவைத்தார்.

55.6.இராமாநுஜர்-சந்யாசம்

      ஸன்யாஸம் மேற்கொள்வதே நல்லது, என்று எண்ணி பேரருளாளனும், பேரவாவுடன் அர்ச்சகர் முகமாக,” யதிராஜன் “ என்ற திருநாமத்தைச் சாற்றினார்.

முதலியாண்டான்

   பஞ்சசம்ஸ்காரத்தின் போது ‘முதலியாண்டான்’ எனும் திருநாமம் பெற்ற இராமனுஜரின் ‘தண்டு’ (திரிதண்டம்) எனவும், ‘பாதுகை’ என்றும் புகழப்பட்டார்.

கூரத்தாழ்வான்

     இராமானுஜர் அவதரிப்பதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னர்  தைமாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் ஸ்ரீராமனின் அம்சமாய் அவதரித்தவர் பேரருளாளன் செல்வத்தின் மேல் விரக்தி ஏற்படுத்தி இராமனுஜரிடத்து சீடராக்கினார். பஞ்சசம்ஸ்காரத்தின் போது ‘கூரத்தாழ்வான்’ என்று திருநாமம் பெற்றார். இவர் இராமனுஜரின் இரண்டாவது சீடர். இவர்; இராமனுஜரின் ‘பவித்திரம்’ என்று புகழப்பட்டவர்.

நடாதுராழ்வான்

   நடாதுராழ்வான் ஸ்ரீஇராமனுஜரின் ஸ்ரீபாஷ்ய வியாக்யானதிற்கு நியமிக்கப்பட்டவர்.

         ஒருமுறை திருக்கச்சி நம்பியிடம் பெருமாள் தோன்றி, சன்னியாசம் பெற்ற ராமானுஜரை நல்ல ஒரு மடத்தில் வைத்து வேதம் கற்றுக்கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படியே ராமானுஜருக்கு பல்வேறு வேதங்கள் கற்றுத்தரப்பட்டன.

        யதிராஜரான, இராமாநுஜர் நியமனப்படி, அநுஷ்டானங்களை செய்து கொண்டு வந்தவர் ஸ்ரீஆளவந்தாரின், நியமனப்படிக் காரியங்களை செய்துமுடிக்க உத்தேசித்தார்.  தமக்கு உதவியாக எண்ணி தம் சகோதரரான கோவிந்தபட்டர் நினைவு வந்தது.  ஒருவரை திருமலைநம்பிகளிடம் அனுப்பி அவர் மூலமாக, அத்வைதியாக மாறிய கோவிந்தபட்டரை திருத்தி பணிகொள்ள வேணடுமாறு விண்ணப்பிக்கச் செய்தார்.

55.7.முதல் குருயாதவப்ரகாஸர்சீடானாகுதல்-யதிராஜர்

      யாதவப்ரகாஸரின் தாயார் பலர் ராமாநுஜருடைய வைபவத்தைக் கூற கேட்க, தன் மகனும் யதிராஜருக்கு சிஷ்யனாக வேண்டுமென எண்ணி இராமாநுஜரைப்போல, சிகை, திரிதண்டம், யஞ்ஞோபவீதம் ஆகியவைகளை ஸ்வீகரித்துக் கொள்வாயாக என்று கூறினார்.யாதவப்ரகாஸர் மனதிலும் பழய நிகழ்ச்சிகள் தோன்றலாயின.

      இராமநுஜரிடம் சென்று அவரை சரணடையத் தமக்குத் தகுதியுண்டு என்று வருந்தியவரின் ஸ்வப்னத்தில், ராமாநுஜரை ஒரு முறை ப்ரதக்ஷிணம் செய்தாலே பலன் என்று பேரருளாளன் நியமிக்க, அவர் திருக்கச்சிநம்பிகளிடம் தாம் இரவுகண்ட கனவையும்கூறி, பேரருளாளன் திருவுள்ளத்தைக்கேட்டுத் தமக்குத் தெரிவிக்க வேண்டுமென்று ப்ரார்த்திக்க, அவரும் வரதன் இராமாநுஜரை ப்ரதக்ஷிணம் செய்தால் போதும் என்று கூற, யாதவப்ரகாஸரிடம் தெரிவிக்க, உடனே இராமாநுஜர் எழுந்தருளியிருக்கும் இடம் சென்று அவரை வலம் வந்து தெண்டம் சமர்பித்து “ என்னை உமதடிமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்“ என்று ப்ரார்த்திக்க, இராமாநுஜரும், யாதவப்ரகாஸருக்கு ஸாத்திர முறைப்படி செய்துவைத்து  காஷாயம் ஆகியவைகளைத் தந்து கோவிந்தஜீயர் என்ற திருநாமத்தையும் இட்டு அருளினார்.

       தம்முடைய குருவிற்கே ஆசானாக ஆன இராமனுஜர். யதிகளுக்கெல்லாம் யதியாக விளங்கினார், யதிராஜா ஆனார்.

      காஞ்சியில், யதிராஜர் தம்மிடம் வந்து சேர்ந்த, கூரத்தாழ்வான், முதலியாண்டான் முதலான சிஷ்யர்களுக்கு, மீமாம்ஸா, சாஸ்த்திரங்கள் இரண்டையும் உபதேஸித்துவந்தார். இதனைக்கேள்வியுற்ற ஸ்ரீரங்கத்து வைஷ்ணவர்கள் எல்லோரும் மிக சந்தோஷமடைந்தனர். ஆளவந்தாரின் சிஷ்யர்களான, பெரியநம்பிகள் முதலானோர் எல்லாம் ஆலோசித்து, ஸ்ரீராமாநுஜரைப் பெரியகோயிலுக்கு அழைத்துவந்து அங்கு நம் சம்பிரதாயங்களை ப்ரவசனம் செய்ய ஏற்பாடு செய்யவேண்டுமென்று நிச்சயித்து அதற்கு திருவரங்கப் பெருமாளரயரை வேண்டிக்கொள்ள அவரும் காஞ்சீபுரம் புறப்பட்டார்.

     காஞ்சீபுரம் வரதன் மண்டபத்தில் எழுந்தருளியிருந்தான். அவரை சேவித்த அரையர் ஸ்ரீஆளவந்தார் அருளிச்செய்த ஸ்தோத்ர ரத்னத்தையும், ஆழ்வார்கள் பாசுரங்களையும் சொல்ல, வரதன் “ நீர் வேண்டுவது என்ன ? “ என்று அர்சகர்கள் மூலம் கேட்க, அரையர் “ ராமாநுஜரைத் தந்தருள வேண்டும்  “ என்று விண்ணப்பிக்க, அருளாளனும் “ தந்தோம் “ என்று கூறி ராமாநுஜரை அழைத்து, “ திருவரங்கப் பெருமாள் அரையருடன் போங்கள் “ என்று நியமித்து அருளினார்.

55.8.இராமாநுஜர் ஸ்ரீரங்கம் வந்து சேர்தல்- உடையவர்

       யதிராஜரும், பகவத் நியமனப்படி திருவரங்கம் செல்ல நிச்சயித்து, தாம் ஆராதித்து வரும் பேரருளாளப் பெருமாளையும், பகவத் ஆராதனத்திற்கு வேண்டியவைகளையும் செய்து தாம் மீண்டும் மடத்திற்குச் செல்லாமலே, தம் சீடர்களுடன் திருக்கச்சி நம்பிகள் வழியனுப்ப ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார்.

        பெருமாள், “ யதிராஜரே ! உபயவிபூதி ஐஸ்வர்யத்தையும் உமக்கு அளித்தோம்.  இனி நம் கோயில் காரியங்களை எல்லாம் ஆராய்ந்து நடத்திவர வேண்டும்.  நீர் இனி நம் உடையவர் “ என்று அர்ச்சகர் முகமாக அருளினார். பிறகு பெரியபெருமாள் நியமனப்படி, அகளங்க நாட்டாழ்வான் என்பவரைத்தம் சீடராக ஆக்கி, அவர் மூலம், கோயில் கார்யங்களை நன்கு நடத்தி வந்தார்

       ஸ்ரீரங்கம் கோயிலில்  பிராமணர்கள் மிகுந்த ஆசாரசீலராக காட்டிக்கொண்டதை இராமாநுஜர் கண்டித்தார். நீங்கள் அத்தனை உயர்ந்தவர்களாக இருந்தால் ஸ்ரீ ரங்கநாதனை நீங்கள் சேவிக்கக்கூடாது. அவருக்கு நிவேதனம் செய்யபடும் பிரசாதத்தையும் ஏற்கக்கூடாது. தீண்டப்படாதவரான திருப்பாணாழ்வாரை அவர் தம்முடன் இணைத்துக்கொண்டதால் உங்கள் நோக்கப்படி ரங்கநாதனும் தீட்டு உள்ளவர்தான். அவர் அருகே செல்லாதீர்கள் என்று கண்டித்தார்.

55.9.திருமலைநம்பிகள்

    தம் சகோதரர் கோவிந்தனைத் திருத்திப் பணிகொள்ளும்படி, திருமலை நம்பிகளிடம் அனுப்பிய ஸ்ரீவைஷ்ணவர்கள், திருமலை நம்பிகளிடம் சென்று நாங்கள் வந்த விஷயத்தைக்கூற, அவரும் காளஹஸ்திக்கு வர, உள்ளங்கை கொணர்ந்த நாயனார் என்ற பெயருடன் விளங்கும் கோவிந்தபட்டரை வழியில் சந்தித்தனர்.

    ஆளவந்தார் அருளிய “ ஸ்வாபாவிகாநவதிகாதி ஸயே சித்ருத்வம்  “ என்ற ஸ்லோகத்தைச் சொல்ல நாயனாரும், மனம் சலித்தார்.  ஒரு மரத்தடியில், உட்கார்ந்து திருமலைநம்பிகள் எங்களுக்கு திருவாய்மொழி அர்த்தத்தைச் சொல்லிக்கொண்டு இருக்க, அங்கிருந்த நாயனாரும் புஷ்பம் பறிப்பதை நிறுத்திக்கொண்டு, பாசுர அர்த்தங்களைக்கேட்டார்.  நான்காம் பாட்டில்,  “ எம்பெருமானுக்கல்லால் பூவும் பூசனையும் தகுமே “ என்றுவர, இதனைக்கேட்ட நாயனாரும் கையில் வைத்திருந்தப் பூக்கூடையை விட்டெறிந்து “ தகாது, தகாது “ என்று திறவுகோலையும், மோதிரத்தையும் திருப்பித் தந்துவிட்டு, திருமலைநம்பிகள் பாதத்தில் விழுந்து, தம்மை ஏற்றுக்கொள்ள வேண்டினார்.

     அவரை அழைத்துக்கொண்டு திருமலைக்கு வந்து, உபயநாதிகளையும், பஞ்ச ஸம்ஸ்காரத்தையும் செய்து வைத்து, ஆழ்வார்கள் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்களை உபதேஸித்து வருகிறார்.”  என்று அவர்கள் கூறிமுடிக்க, அவற்றைக்கேட்ட இராமாநுஜர் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார்.

       உடையவர், பெரியநம்பிகளிடம்” ஸ்ரீஆளவந்தார் திருவடிகளில் சேவிக்காத குறை தீரத் தேவரீர் திருவடிகளை ஆச்ரயித்தேன்.  நீரே அர்த்த விசேஷங்களை அடியேனுக்கு அருளிச்செய்தருளவேண்டும்” என்று பிரார்த்திக்க, அவரும் சில நாட்கள் உபதேஸித்துவிட்டு திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் சென்று திருமந்திரத்தையும், சரம ஸ்லோக அர்தங்களையும் கேட்டு அறிந்து கொள்ளச் சொன்னார்.

55.10. திருக்கோஷ்டியூர் நம்பிகள்

            பெரியநமபிகள் நியமனப்படி, உடையவர் தம்சீடர்களுடன் ஆளவந்தாரின் சீடரான திருக்கோஷ்டியூர் நம்பியிடம் தண்டனிட்டு, தம் விருப்பத்தை வெளியிட்டார்.  அவரும் மற்றொரு சமயம் உபதேஸிக்கின்றோம் என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்.  ஸ்ரீஇராமாநுஜர் திரும்ப வந்தார்.   இதுபோன்று பதினேழு முறை திருக்கோட்டியூர் சென்று, நம்பிகளிடம் வேண்ட அவரும், பிறகு உபதேஸிக்கின்றோம் என்ற பதிலையே சொல்லி அனுப்பி வைத்தார்.

      பின்பு ஒருசமயம், திருக்கோட்டியூர் நம்பிகளே, ஒரு ஸ்ரீவைஷ்ணவரையனுப்பி, ராமாநுஜரை அழைத்து வரும்படிக்கூற, பெருமகிழ்ச்சியடைந்த யதிராஜரும், தம்முடன், கூரத்தாழ்வான், முதலியாண்டான்  மற்றும் நடாதூர்ஆழ்வான்   என்ற சீடர்களுடன் திருக்கோட்டியூர் சென்றார்.

        மற்றமூவரையும் வெளியில் இருக்கச் செய்துவிட்டு, தாம் மட்டுமே நம்பிகள் இல்லத்துள் சென்று, நின்றார்.  நம்பிகள், நாம் உபதேஸிக்கும் மந்த்ரார்த்தங்களை வேறு ஒருவருக்கும் உபதேஸிக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் உபதேஸித்து அருளினார்.

        மறுநாள் காலை , கூரத்தாழ்வான் மற்றும் பல சீடர்களுக்கு, தாம் கேட்டறிந்த ரகஸ்யார்த்தங்களை உபதேஸித்தார்.

         இராமாநுஜர் திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மீதேறி திருமந்திரத்தின் பொருளை  இந்த உலகமே அறியும் படி உறக்க கூறினார்.

      இதனைக் கேள்வியுற்ற நம்பிகள் ராமாநுஜரை அழைத்து, நாம் இந்த ரஹஸ்யார்த்தங்களை யாருக்கும் உபதேஸிக்கக்கூடாது என்று நியமித்தும் நீர் ஏன் கூறினீர் என்று கேட்க, யதிராஜரும், அடியேன் ஒருவன் மட்டும்தானே நரகம் செல்வேன்.  இந்த அர்த்த விசேஷத்தைக்கேட்ட ஆத்மகோடிகள் அனைவருமே உங்கள் திருவடி சம்பந்தத்தால் பரமபதம் அடைவார்களன்றோ என்று யதிராஜர் சொல்லக் கேட்ட நம்பிகள், உடையவர் உள்ளக்கருத்தைப் புரிந்து கொண்டு,  மனமுகந்து, “  இத்தகய பரந்த எண்ணம் எமக்கில்லாமல் போயிற்றே “ என்று மனம் மிகவருந்தினார்.

        இவர் எம்பெருமானாரே என்று நம்பிகள் அருளிச்செய்தார்.அன்று முதல், ராமாநுஜருக்கு, “ எம்பெருமானார் “ என்ற பெயரும், விசிஷ்டாத்வைத ஸித்தாந்த்திற்கு  “ ராமாநுஜ சித்தாந்தம்  “ என்ற பெயரும் வழங்கிவரலாயிற்று.

      பிறகு எம்பெருமானார், பெரியநம்பிகள் தெரிவித்தபடி, திருவரங்கப்பெருமாள் அரையரிடம், சென்று, அவருக்கு ஆறுமாத காலங்கள் கைங்கர்யங்களைச் செய்துகொண்டே திருவாய்மொழியையும் கற்றார்.

           எம்பெருமான் கீதையின் முடிவில் சரமஸ்லோகத்தில் அருளிச்செய்த உபாயமான சரணாகதியை அனுஷ்டிக்கவேண்டும்.  இஹத்திலும், பரத்திலும் க்ஷேமத்தையளிக்க வல்லது ஆச்சார்யன் அநுக்ரஹம் ஒன்றே. “ இதற்கு உதாரணமாக விளங்கியவர் மதுரகவியாழ்வார் என்று எடுத்துக்கூறினார் .  யதிராஜர் தம் ஆச்சார்யன் நியமனப்படி, திருமலையாண்டானிடம், திருவாய்மொழிக்கு அர்த்தம் பயின்றார்.

       உடையவர் பெரியபெருமாள் நியமனப்படி, கோயில் கைங்கர்யத்தை, சிறந்த முறையில் நிர்வகித்துக் கொண்டு வந்தார்.  இருந்தபோதும், சில விரோதிகள் அவரைக் கொல்ல எண்ணி, அவர் உணவில் விஷம் கலந்திட திட்டமிட்டு, ஒரு கிருஹஸ்தரிடம் சொல்லி, அவருக்கு இடும் பிக்ஷையில் விஷம் கலக்கச் சொன்னார்கள். யதிராஜரின் பரம சிஷ்யையான அந்தப் பெண்மணி முதலில் மறுத்தாலும் பிறகு கணவனின் பயமுறுத்தலுக்கு அடி பணிந்தாள்.  தாம் இடும் அன்னத்தில் விஷம் கலந்து இட்டவள் உடனே கண்களில் நீர் மல்க அவரைத் தண்டனிட்டு விட்டு, கதறியபடியே வீட்டிற்குள் சென்றாள்.  ஒரு ஸந்யாசிக்குப் பிக்ஷை இட்ட பிறகு அவரை சேவிக்கக்கூடாது.  அப்படி சேவித்துவிட்டால் அந்த ஸந்யாஸி அன்று உபவாஸம் இருக்கவேண்டும் என்பது நியதி.

     அந்தப் பெண்மணியின் நடவடிக்கையைக் கண்ட யதிராஜர், காவேரிக்குச்சென்று, பிக்ஷை ப்ரஸாதத்தை ஆற்றுநீரில் சேர்த்துவிட்டு, பிக்ஷைவாங்கிய வஸ்த்ரத்தையும் உதறிக்கசக்கி எடுத்துக் கொண்டு, காவேரிக்கரையில் ஒருமரத்தடியில், மனவேதனையுடன் அமர்ந்தார்.  அவர் உதறிய வஸ்த்ரத்திலிருந்து கரையில் சிந்திய ப்ரஸாதத்தைச் சாப்பிட்ட காக்கை ஒன்று இறந்ததைக் கண்ட அவர் அன்று முதல் சிலநாட்களுக்கு உபவாசம் இருந்தார்.

     அதனைக் கேள்வியுற்ற திருக்கோட்டியூர் நம்பிகள் திருவரங்கம் வந்து கிடாம்பியாச்சன் எனும் தன் சீடனை இராமானுசருக்கு உணவு சமைக்க நியமனம் செய்தருளினார்.  

          ராமநுஜர் ஸ்ரீஆளவந்தாரின் ஆசையை நிறைவேற்ற ஸ்ரீபாஷ்யம் அருளிச் செய்தார்.மேலும் வேதாந்தஸாரம், வேதாந்த தீபம் வேதாந்த ஸங்க்ரஹம், கீதாபாஷ்யம் ஆகியவற்றையும் அருளிச்செய்தார். பங்குனி உத்ரத் திருநாளில், ரங்கநாதனுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் கண்டருளியபோது, சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம் ஆகியவற்றை அருளிச் செய்தார்.

     பிறகு கூரத்தாழ்வான், நடாதூராழ்வான், பிள்ளான் இவர்களின் விருப்பப்படி திவ்யதேஸம் தோறும் எம்பெருமான்களை சேவித்து இதர சமயத்தவர்களை வாதத்தில் ஜெயித்து தர்ஸன ஸ்தாபனம் செய்தருள யாத்ரை புறப்பட்டார்.

       திருக்குடந்தை ஆரவாமுதனை மங்களாஸாஸனம் செய்த பிறகு, திருமாலிருஞ்சோலை, திருப்புல்லாணி முதலிய திவ்ய தேஸங்களுக்கு சென்று, திருக்குறுங்குடிக்கு எழுந்தருளினார். இந்த திவ்யதேஸத்து எம்பெருமானான, திருக்குறுங்ருடி நம்பியே ஒரு வைஷ்ணவராக வந்து, உடையவரிடம், மந்திரோபதேஸம் செய்ய வேண்டினார்.  யதிராஜரும், அவருக்கு, ஸமாச்ரயணம் பண்ணி திருமண்காப்புகளைச்சாற்றி, திருமந்திரத்தை உபதேஸித்து, “ ஸ்ரீவைஷ்ணவ நம்பி “ என்ற நாமத்தையும் சூட்டினார்.

     அடுத்தகணம் அந்த ஸ்ரீவைஷ்ணவரைக் காணவில்லை மறுநாள், சந்நிக்கு அனைவரும், சென்றபோது, பெருமாள் நெற்றியில், உடையவர் முந்தினம் வைணவருக்கு சாற்றிய திருமண்காப்பைக் கண்டு, வந்தது இந்த எம்பெருமான்தான் என உணர்ந்து அதிசயத்தினர்.

55.11.பாஷ்யகாரர்-ஸரஸ்வதி தேவி

        மலைநாட்டுத் திருப்பதிகளை மங்களாஸாஸனம்  செய்த பிறகு இராமாநுஜர்,  வடதேஸ யாத்ரை புறப்பட்டார்.கோகுலம், ப்ருந்தாவனம், அயோத்தி, நைமிசாரண்யம், பதரி முதலிய திவ்ய தேஸங்களுக்கு சென்றார்.

சபதம்-3(நிறைவேற்றம்)

   அதன்பிறகு, ஸரஸ்வதீ வித்யா பீடத்திற்கு, எழுந்தருளினார்.  அப்போது ஸரஸ்வதிதேவியே, இவரை எதிர்கொண்டு அழைத்தாள்.  சங்கராதிகளைப்போல் இன்றி யதார்-த்தங்களைக்கொண்டு, வ்யாஸ ஸூக்தத்திற்கு நீர் பாஷ்யம் செய்ததினால், உமது பாஷ்யத்திற்கு“ ஸ்ரீபாஷ்யம் “என்ற பெயரும், அதனை இயற்றிய உமக்கு பாஷ்யகாரர் என்ற நாமத்தையும் சூட்டினோம் என்றாள்..

         பிறகு ஸரஸ்வதிதேவி, ஸ்ரீபாஷ்யத்தைத் தம் சிரஸ்ஸில் வைத்துக்கொண்டு, அந்த ஸ்ரீபாஷ்யத்தையும், தாம் ஆராதித்து வந்த, ஸ்ரீஹயக்ரீவர் விக்ரஹத்தையும், பாஷ்யகாரரிடம் கொடுத்து ஆசீர்வதித்தாள்.  உடையவர்  அவற்றைப்பெற்றுக்கொண்டு, சந்தோஷத்துடன் இருப்பிடம் திரும்பினார். இதனைக் கேள்வியுற்ற அந்த தேசத்து அரசன் உடையவரை வந்து வணங்கிச் சென்றான்.  இதனால் பொறாமை கொண்ட சிலர், அவரை மாய்த்திட எண்ணினர்.  அதற்காக,அபிசார யாகம் செய்தனர்.  அது அவர்களுக்கே தீங்காய் முடிந்து, அவர்கள் பைத்தியம் பிடித்து ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு,திரியலானார்கள்.ஆனால் அரசனின் ப்ரார்த்தனைக்கு மதிப்பளித்து உடையவர், அவர்களையும் ரக்ஷிக்க, அவர்களும் பழையபடியாகி, பாஷ்யகாரரின் திருவடி தொழுதனர்.

55.12.அப்பனுக்குச் சங்காழி அளித்த பெருமான்

     வடமதுரை முதலிய இடங்களுக்குச்சென்று, கங்கையில் நீராடி, புருஷோத்தமம், ஸ்ரீகூர்மம், ஸிம்ஹாசலம், அஹோபிலம், முதலிய திவ்ய தேசங்களைத் தரிசித்துக்கொண்டு திருமலைக்கு வந்தார்.

            அப்போது திருமலையில்,சைவர்கள் ஸ்ரீநிவாஸன் எங்களுக்கே சொந்தம், அவர்கள் எங்கள் தெய்வம், என்று பெரியதிருமலைநம்பிகளுடன் வாதிட்டு வந்த நேரம்.

     சிலர் சிவனுடைய சின்னங்களையே பெருமாள் தாங்கியிருக்கிறார் என்று வாதிட்டனர்.

           பாஷ்யகாரர் இன்றிரவு, உங்கள் தம்பிரான் சின்னங்களான சூலம், டமரு போன்றவைகளையும், எங்கள் எம்பெருமான், சின்னங்களான ஆழி, சங்கம் ஆகியவற்றையும் பெருமாள் சந்நதியில் வைத்து விட்டு  கர்பக்ருஹத்தைப்பூட்டி, இருதரப்பினரும் காவல் காத்து வரவேண்டியது.  மறுநாள் காலை ஸ்வாமி எந்தச் சின்னங்களைத் தாங்கி இருக்கிறாரோ அதனையே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கூறினார்.

            எல்லோரும் சம்மதிக்க அதுபோலவே செய்ய, இருதரப்பினரும் அன்று இரவு காவல் இருந்தனர்.  மறுநாள், ஸூர்யோதயம் ஆனதும், திருகாப்பு நீக்கி, உள்ளேச் சென்று சேவித்தனர்.    எம்பெருமான் வேங்கடவன் திருக்கரங்களில் சங்கும், சக்ரமும் ஜொலிக்க, கண்டு அனைவரும் வியந்தனர்.

     “மோட்சம் பெற வழிகாட்டுங்கள்” என்று கேட்ட மோர் விற்கும் இடையர் குலப்பெண்மணி. சிபாரிசு கடிதம் வாங்கிய மோர் விற்கும் பெண், திருமலை பெருமாளின் சன்னதி அர்ச்சகர்களிடம் ஓலையைக் கொடுத்தாள்.

     இராமாநுஜர் எழுதிய ஓலை என்பதை அறிந்ததும் மறுப்பு ஏதும் சொல்லாமல் பெருமாளின் திருமுன் சமர்ப்பித்தனர். பெருமாளே கைநீட்டி ஓலையை எடுத்துக் கொண்டு,””உனக்கு மோட்சம் கொடுத்தேன்” என்றார். அப்போது வானில் ஒரு பிரகாசமான விமானம் ஒன்று வந்தது. விஷ்ணுதூதர்கள் மோர் விற்கும் பெண்ணை ஏற்றிக் கொண்டு பரமபதம் கிளம்பிவிட்டனர்.

          பிறகு திருவேங்கடமுடையானின் திருவாராதனம் முன்போல நடைபெற ஏற்பாடு செய்த பிறகு திருவரங்கம் பெரிய கோயிலுக்குத் திரும்பினார்.

கிருமிகண்டசோழனும் நாலுரானும்

       ஸ்ரீரங்கத்தில், இராமாநுஜர், ஸ்ரீபாஷ்யத்தைப் ப்ரவசனம் பண்ணிக்கொண்டிருந்த சமயம், சோழநாட்டரசன் மிக குரூரமாக ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தான்.  அவன் சிவமதத்தைச் சேர்ந்தவன்.அவன் வைஷ்ணவ வித்வான்களிடமிருந்து, சிவனைவிட உயர்ந்தவர் கிடையாது என்று ஓலையில் எழுதி கையெழுத்துப் போடச் செய்தனர்.

             சில வைஷ்ணவர்கள், பணம், வீடு இவைகளுக்கு ஆசைப்பட்டும், மன்னனது இம்சை தாளாமலும் கையெழுத்து போட்டனர்.  இவனுடைய மந்திரியான நாலூரான், என்பவன் அரசனிடம்,இவர்கள் கையெழுத்து இடுவதனால் மட்டும், சிவன் பரதேவதையாகிவிட முடியாது ஸ்ரீரங்கத்தில் இருக்கும் இவர்கள் மதகுரு இராமாநுஜர் என்பவர் எழுதிக் கையெழுத்து இட்டால் மட்டுமே இவர்கள் ஒப்புவார்கள்,என்று கூற, அரசன், உடனே தன்ஆட்களையனுப்பி, ராமாநுஜரையும், அவர் சீடர்களை-யும் அழைத்து வரும்படி ஆணையிட்டான்.

55.13.மேல்கோட்டையூர்திருநாராயணபுரம்

     அதிகாரிகள், ராமாநுஜரை அதற்குமுன் பார்த்ததில்லை. அவர்கள் வந்த நோக்கத்தையறிந்த கூரத்தாழ்வானும் மற்ற சீடர்களும், ராமாநுஜரை வற்புறுத்தி அவர் காஷாயத்தின் மேலேயே வெள்ளை வேட்டியை உடுக்கச்செய்து, அவருடன் சில சீடர்களையும் சேர்த்து மேல்நாட்டை நோக்கி பயணிக்க வைத்துவிட்டு, கூரத்தாழ்வான் காஷாயம் உடுத்திக்கொண்டு, தண்டம் ஏந்தி, பெரியநம்பிகளுடன், வந்திருந்த அதிகாரிகளுடன், சோழமன்னன் சபைக்கு தம்மையே இராமாநுஜர் என்று கூறிக்கொண்டு சென்றார்.

      சில அதிகாரிகள் இராமாநுஜர் செல்வதை அறிந்து, அவரைப்பின் தொடர, உடையவர், பிடிமணலை எடுத்து,“கொடுமை செய்யும் கூற்றமும் என்கோலாடி குறுகப்பெறாதடவரைதோள் சக்ரபாணீ சார்ங்கவிற்சேவகனே” என்று ஓதி, அவர்கள் வரும் வழிநெடுக கொட்டி சென்றார்.

      அந்த மணலைமிதித்த அதிகாரிகள், மயங்கிவிழ, இராமாநுஜர் தம் சீடர்களுடன் மேல்நாட்டைநோக்கி நடந்து ஓர் இரவு நீலகிரி மலைச்சாரல் வந்து சேர்ந்தார்.

   மிதிலாபுரி, ஸ்ரீசாளக்ராமம் முதலிய இடங்களுக்கு எழுந்தருளினார். தம்திருவடிகளை ஆச்ரயித்தவர்களுக்கு, பஞ்ச சம்ஸ்காராதிகளைச் செய்வித்து விசிஷ்டாத்வைத க்ரந்தங்களை எல்லோருக்கும் உபதேஸித்தார்.  அவர்களில் மிகவும் முக்யமானவர் வடுகநம்பி என்பவர்.  பிறகு அங்கிருந்து, சிங்கபுரம் சென்றார்.  அங்கிருந்போது, சோழ மன்னன் கழுத்தில் புழுபுழுத்து, அவன் மாண்டான் என்ற செய்தி வந்தது.

     உடையவர் இட்டுக்கொள்ளப் போதிய திருண்காப்பு, இல்லாமல் போகவே, அவர் கவலையுற்றார்.அன்று இரவு அவர் கனவில் திருநாராயணன் தோன்றி, யதுகிரியில் மகிழமரத்தின் அடியில் திருத்துழாய் செடியின்கீழ், பெரிய புற்று ஒன்று இருக்கின்றது.  அதனுள் நாம் கோயில் கொண்டிருக்கின்றோம்.  திருமண்ணும் வேண்டிய அளவு கிட்டும். “ என்று கூற, மறுநாளே அவர் மன்னனிடம் தம் கனவைப் பற்றிக்கூறி, யதுகிரியை அடைந்து தாம்கனவில் கண்ட இடத்திற்குத் தேடிச் சென்றார்.

     அங்கு புற்றை நீக்கிப் பார்த்ததும், அதனுள் ஒரு கோயில் தெரிந்தது.  திருநாராயணனை வெளியில் கொணர்ந்து தாமும், சேவித்து, மன்னர் மற்றுமுள்ளவர்களையும் சேவிக்கச்செய்து மகிழ்ந்தார்.பிறகு திருமண் இருக்குமிடம் தேடிச்சென்று அதனை ஸ்வீகரித்துக்கொண்டு தாமும் சாற்றிக்கொண்டு, தம் ஆராதனப் பெருமாளுக்கும், திருநாராயணனுக்கும் சாற்றினார்.  யதுகிரிக்கு “ திருநாராயணபுரம் “ என்ற பெயரை வைத்து, தினமும், திருவாராதனமும் செய்ய ஏற்பாடு செய்தார்.    –

     ஆனால் திருநாராயணனுக்கு உத்ஸவமூர்த்தியில்லையே என்று கவலைப்பட்ட எம்பெருமானார் ஸ்வப்னத்தில், திருநாராயணனேத் தோன்றி, நம்முடைய உத்ஸவர் ராமப்ரியர் இப்போது டில்லி பாதுஷா அரண்மனையில் இருக்கிறார் அங்கேச் சென்று, கொண்டுவாரும் என்று கூற, ராமாநுஜரும் டில்லிச் சென்றடைந்தார்.

55.14.டில்லிபாதுஷாவும் அவர்மகளும்

     ஸ்ரீரங்கத்தை முஸ்லீம்கள் கொள்ளையிட்டுச் சென்ற போது டில்லி பாதுஷாவினால் கொண்டு செல்லப்பட்ட ஒரு ரங்கநாதன் விக்கிரகத்தின் மீது பாதுஷாவின் மகள் மனதைப் பறிகொடுத்து அப்பெருமானிடமே அடைக்கலமாகிவிட்டாள்.

            வந்த காரியம் என்ன என்று பாதுஷா வினவ, அவரும் வந்தக் காரியத்தைச்-சொல்ல, நவாப் தான் கொள்ளையடித்து வந்த பொருள்களையெல்லாம் அவருக்குக் காண்பித்து, அதில் அவர் தேடிவந்த பொருள் இருந்தால் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினான்.

            அதில் தாம் தேடிவந்த விக்ரஹம் இல்லை என்றதும், நவாப் தன் பெண், சிலவற்றை வைத்துக்கொண்டு விளையாடுவதாகக்கூறி, உடையவரை அந்தப்புரத்திற்கு அனுப்பி வைத்தான்.  எம்பெருமானார், அந்தப்ரத்தின் வாசலில் நின்று கொண்டு,  எம் ராமப்ரியரே!, எம் செல்லப்பிள்ளையே !  வாரும்“ என்று அழைத்த அடுத்த கணம், ஜல், ஜல் என்று சலங்கை ஒலிக்க ராமப்ரியரின் விக்ரஹம் அழகாக நடந்துவந்து, உடையவரின், துடையில் அமர்ந்தது.  அந்தக் காட்சியைக் கண்ட நவாப் நெக்குருகிப் போனான்.

Ramanujar-1

     தன் மகள் அந்தச்சிலையை விட்டு ஒரு க்ஷணமும் இருக்க மாட்டாள் என்ற காரணத்தால், மகளுக்குத் தெரியாமல் அந்த சிலையை உடையவருடன் பாதுகாப்பாக தம் நகர எல்லைவரை அனுப்பிவைக்க, இராமாநுஜர், விக்ரஹத்துடன் திருநாராயணபுரம் வந்து அதனை ப்ரதிஷ்டை செய்தார்.

     பாதுஷாவின் மகளும் பிரிவாற்றாமையால் பின்தொடர்ந்து அந்த ரங்கநாதனிடமே ஐக்கியமாகிவிட அப்பெண்ணுக்குத் துலுக்க நாச்சியார் என்றே பெயரிட்டு பெருமைபடுத்திப் போற்றித் துதித்தனர் வைணவர்கள். இந்நிகழ்வை நினைவுகூறும்முகத்தான் ஸ்ரீரங்கத்தில் மார்கழி மாதம் நடைபெறும்.

     ஏகாதசி திருவிழா பகல்பத்துத் திருநாளிலே உற்சவப் பெருமாளான நம்பெருமாள் முஸ்லீம்இனத்தவரைப் போன்று லுங்கி வஸ்திரம் கட்டிக்கொண்டு இந்த துலுக்க நாச்சியாருக்கு காட்சி தரும் வழக்கம் இன்றும் நடந்துவருகிறது.

      அவர் அதுநாள் வரை மறைந்து வாழ்வதற்கு உதவி புரிந்த ஹரிஜன மக்களுக்குதிருக்குலத்தோர்“ என்று பெயர் சூட்டி, அவர்களையும், திருத்தேர் முதல், தீர்த்தவாரிவரை கோயிலில் அவர்கள் பெருமாளை தரிசிக்கவும், தீர்த்தம் பெற்றுக் கொள்ளவும் அநுமதித்து, அவர்களை கௌரவித்தார்.

55.15.பெரிய நம்பிகள் திருநாடு அடைதல்

      திருநாராயணபுரம் தலத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தார்.  அப்போது ஸ்ரீரங்கத்திலிருந்து, வந்த ஒரு வைணவரிடம், கூரத்தாழ்வானும், பெரியநம்பிகளும் நலமா? என்று கேட்க, அவர்,ஆழ்வானையும், பெரியநம்பிகளையும், சோழமன்னனின் ஆட்கள் சபைக்கு அழைத்துச் சென்றனர்.  அங்கு மன்னன் ஆழ்வானை “ சிவாத்பரதரம் நாஸ்தி “ என்று ஓலையில் எழுதிக் கையெழுத்திடச் சொன்னான்.  அவரோ, “ த்ரோணமஸ்தி தத: பரம் “ என்று எழுதினார்.  சிவம் என்றால், குறுணி.  அதற்குமேல் அளவு த்ரோணம்பதக்கு உள்ளது என்று பொருள். இதனால் கோபமுற்ற சோழன், இந்த அந்தணர்களின் விழிகளைப் பறியுங்கள் என்று ஆணையிட்டான்.  ஆனால் கூரத்தாழ்வானோ “ சோழனே உம்மைப்பார்த்த இந்தக் கண்கள் இனி எமக்குத்தேவையில்லை“என்று கூறித் தாமேத்தன் விழிகளை பிடுங்கிக்கொண்டார்.

     பிறகு அவர்கள் பெரிய நம்பிகளின் கண்களையும் பிடுங்கிவிட்டனர்.  அந்த இருவரும் நம் மதத்திற்காக கண்களைக் கொடுத்தனர். அப்போது அருகிலிருந்த பெரியநம்பிகளின் மகள் அத்துழாய் அவர்கள் இருவரையும் அரசவையிலிருந்து, அழைத்துச் சென்றாள்.

      இந்த வேதனை தாங்காத பெரியநம்பிகள் ஆழ்வான் மடியில் தலையையும், மகளின் மடியில் பாதங்களையும் வைத்து தன் ஆச்சார்யரான ஸ்ரீஆளவந்தாரின் திருவடிகளைத்தம் தலையில் வைத்துக் கொண்டு திருநாட்டிற்கு எழுந்தருளினார் ”என்று நடந்து முடிந்தவற்றைக் கூற, எம்பெருமானார் மிகவும் மனம் வருந்தினார்.

    ஆழ்வானுக்கும், நம்பிகளுக்கும் துரோகமிழைத்த சோழன் கழுத்தில், புண் உண்டாகி, புழுத்துப் புரண்டு மாண்டதையும் கூறினார்.

55.16. இராமாநுஜர் ஸ்ரீரங்கம் திரும்பியது

    பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, திருவரங்கம் திரும்பினார். பாஷ்யகாரர். கூரத்தாழ்வான் இல்லத்திற்குச் சென்ற யதிராஜர், அவரை அப்படியே வாரித்தழுவிக்கொண்டார்.

 • நம் கோயில் அண்ணன்

    ஒரு சமயம், எம்பெருமானார், மதுராந்தம் வழியாக ஸ்ரீரங்கம் எழுந்தருளிய போது, அங்கு திவ்யப்ரபந்த காலக்ஷேபம் நடந்து கொண்டு இருந்தது.“நூறுதடா நிறை அக்காரவடிசல் சொன்னேன்“ என்ற ஆண்டாள் பாசுரம் வந்தது.   உடனே அவர், கோதைப்ராட்டியின் திருவுள்ளத்தை நிறைவேற்ற,திருமாலிருஞ்சோலை சென்று நூறு தடா நிறைய அக்காரவடிசலை சமர்பித்தார்.

Ramanujar & Alagar

     அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தார்.  வடபெருங்கோயிலுடையானை தரிசித்துவிட்டு, ஆண்டாள் சந்நிதிக்கு வந்தபோது, அர்ச்சகர் வாயிலாக ஆண்டாளே,“நம்கோயில்அண்ணன்“ என்று கொண்டாடப்பட்டு, மாலைமறியாதைகள் செய்து வைத்தனர்.

              சிலநாட்கள் கழித்து உடையவர், பெரிய பெருமாளை சேவித்து, மேல்வீடு பெற அநுக்ரஹிக்க வேண்டி ப்ரார்த்தித்தார்.  பெருமாளும் அவ்விதமே திருவுள்ளம் பற்றினார்.

55.17.இராமாநுஜர் திருநாட்டை அலங்கரித்தல்(1137)

             பிள்ளான், கிடாம்பியாச்சான், முதலியாண்டான், ஆழ்வார்கள் ஸ்வாமியின் விக்ரஹங்களையும் திருக்கோயில்கள் தோறும் ப்ரதிஷ்டைசெய்து, ஆராதிக்க நியமித்தருள வேண்டும் “என்று விண்ணப்பிக்க, அவரும் சம்மதித்து மூன்று விக்ரஹங்களை ஆலிங்கலித்து, கொடுக்க, அவற்றை ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்பூதூர், திரு நாராயணபுரம் ஆகிய மூன்று க்ஷேத்ரங்களில் தாம் முன்பே உகந்தளித்த சில விக்ரஹங்களோடு எழுந்தருளப்பண்ணி திருவாராதனம் செய்ய திருவுள்ளம் பற்றினார்.

              ஸ்ரீஆளவந்தாரின் பாதுகைகளில் தீர்த்தம் சேர்த்து, அந்த ஸ்ரீபாத தீர்த்தத்தை தாமும் ஸ்வீகரித்துக் கொண்டு, சிஷ்யர்களுக்கும் அளித்தார்.  பிள்ளானையும், கிடாம்பியாச்சானையும் அருகில் வரவழைத்து, சில விசேஷ அர்த்தங்களை உபதேசித்து விட்டு, பிள்ளான் மடியில் திருமுடியும், ஆச்சான் மடியில் திருவடிகளையும் வைத்துக்கொண்டு, சயனித்தார்.

       பெரியதிருமலைநம்பிகளின் திருவடிகளை த்யானித்தப் படியே எம்பெருமானார் கி.பி.1137ல் திருநாடு எழுந்தருளினார்.  அவர் நியமனப்படியே, முதலியாண்டான் ஸ்ரீபெரும்பூதூரிலும், கிடாம்பியாச்சான், நல்லான் முதலானவர்கள் திருநாராயணபுரத்திலும், பிள்ளான் கோயிலிலும், நடாதூராழ்வான் பெருமாள் கோயிலிலும், உடையவர் திருவிக்ரஹங்களைத் திருப்ரதிஷ்டை செய்து வைத்தார்கள்.

55.18.ஸ்ரீராமானுஜரின் மூன்று திருமேனிகள்

தமர் உகந்த திருமேனி (திருநாராயணபுரம்)

     மேல் கோட்டைத் திருநாராயணபுரத்தில் “தமர் உகந்த திருமேனி’, திருநாராயணபுரத்திலிருந்து இராமாநுஜர் விடைபெற்றபோது, அங்கிருந்த அடியார்கள் அவரைப் பிரிந்து வாழவேண்டுமே என வருந்தினார்கள். அப்போது இராமாநுஜர் தம்மைப் போல விக்கிரகம் ஒன்றை செய்வித்து, அதில் தம் சக்திகளை பிரதிஷ்டை செய்து, அவர்களிடம் அதை ஒப்படைத்து, ‘‘நான உங்களுடன் இருப்பதாக எண்ணி இந்த விக்கிரகத்தை கண்டு மன அமைதி பெறுங்கள்..’’ எனக் கூறி விடைபெற்றார்.

தாம் உகந்த திருமேனி (ஸ்ரீபெரும்புதூர்)

     ஸ்ரீபெரும்புதூரில் “தாம் உகந்த திருமேனி’யாக இராமாநுஜர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் தனி சந்நிதி கொண்டிருக்கிறார். உடையவர் சந்நிதியில் மூலவர் தெற்கு நோக்கிய திருக்கோலத்தில் இருக்கிறார். அந்த மூலவருக்கு இளையாழ்வார் என்ற திருப்பெயர்.

       உடையவரின் விக்கிரகத்தில் முறைப்படி கண்களைத் திறக்கும்போது உளி கண்ணில்பட்டு ரத்தம் கசிந்தது. அதேசமயம் திருவரங்கத்தில் பாடம் நடத்திக் கொண்டிருந்த உடையவரின் கண்களிலும் ரத்தம் வழிந்தது என்றும் ஒரு கருத்துண்டு. தம் விக்கிரகத்தை தான தழுவித் தந்ததால் ‘தான் உகந்த திருமேனி’ என்று வழங்கலாயிற்று.

தானான திருமேனி (ஸ்ரீரங்கம்)

         ஸ்ரீரங்கத்தில் தானான திருமேனி சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சமாதியான ஸ்ரீ ராமானுஜர், பத்மாசன திருக்கோலத்தில் மேலெழுந்து வந்ததாகும். குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைகளால் திருமேனியை பாதுகாத்து வருகிறார்கள்.

       எம்பெருமானார் ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தவுடன், அரங்கனுடைய வசந்த மண்டபத்திலேயே ராமானுஜருடைய திவ்ய மங்கள திருமேனியை பிரதிஷ்டை செய்தார்கள்.

     அத்வைத தத்துவத்தை அறிமுகப்படுத்திய ஆதி சங்கரர் வாழ்ந்த காலத்திற்கும் துவைத தத்துவத்தை அறிமுகப்படுத்திய மாத்வாச்சாரியார் வாழ்ந்த காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் ஸ்ரீ ராமானுஜர்.

 • திருநாட்டில் எம்பெருமானுடன்-இராமாநுஜர்

       அடியேன் இங்கே வந்த பிறகு, என்ன ஆகுமோத்தெரியவில்லையே  என்றுகவலையுடன் கூற, அதற்கு எம்பெருமான், “ அநந்தா இனி நீ கலங்க வேண்டாம். நீர் விதைத்த விதை அவர்கள் மனதில் ஆழப்பதிந்திருக்கும்.  மேலும் அவ்வப்போது, வேதாந்ததேசிகன், மணவாளமாமுனிகள் போன்ற ஆச்சார்யர்களை அவதரிக்கவைத்து நீர் விதைத்த விதைக்கு நீர்வார்த்து நன்றாக தழைத்து வளரச்செய்வோம். நிச்சயம் உமது பணி கலிமுடியும்வரை ஜீவாத்மாக்களின் சிந்தைகளில் ஒலித்துக்கொண்டிருக்கும்.  அவர்கள் இந்தப்பிறவியில் இல்லாவிடினும் அடுத்தப் பிறவியில் அதனைவுணர்ந்து, எம்மிடமே வந்துசேர்வார்கள்.  சோர்வுடன் வந்த நீர் சிறிதுநேரம் சயனியும்”

 • இராமானுசர் இயற்றிய நூல்கள்

        வடமொழியில் இராமானுசர் இயற்றிய ஸ்ரீபாஷ்யம் அவருடைய தலைசிறந்த படைப்பு. வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை நிலைநாட்டிய நூல் அதைத்தவிர அவர் இயற்றியவை:

 • வேதாந்த சங்கிரகம்-உபநிடத தத்துவங்களை விவரித்துச்சொல்கிறது.
 • வேதாந்த சாரம், மற்றும், வேதாந்த தீபம்-பிரம்ம சூத்திரத்தைப்பற்றிய உரைகள்.
 • கீதா பாஷ்யம்- கீதைக்கு விசிட்டாத்துவைதத்தையொட்டி எழுதப்பட்ட உரை.
 • நித்யக்கிரந்தங்கள். அன்றாட வைதீகச்சடங்குகளும், பூசை முறைகளும்.

 கத்யத்ரயம்= உரைநடை நூல்கள்.

 • சரணாகதி கத்யம்- பிரபத்தி என்ற சரண்புகுதலைப் பற்றியது.
 • ஸ்ரீரங்க கத்யம்-ரங்கநாதப் பெருமானை தாசனாக்கிக் கொள்ளும்படி வேண்டுவது.
 • வைகுண்ட கத்யம்-வைகுண்டத்தை நேரில் பார்ப்பதுபோல் விவரிப்பது.

       புருஷ குணங்கள் சிறந்தவரும்; ஜீவகாருண்யம், குரு பக்தி, வைராக்கியம், பகவத் பாகவத தொண்டு, பாண்டித்யம் பெற்றவரும்; நாலூரானும் நற்கதியடைய திருமாலிடத்தில் பிரார்த்தித்துக் கொண்டவருமான ராமானுஜரை  வணங்கினால்  கண் பார்வை கோளாறுகளும் விலகும்.

                ஸ்ரீரங்கம் பங்குனி உத்திரத்தன்று சேர்த்தி.தாயாருடன் வருடத்திற்கு ஒருமுறை நம்பெருமாள் சேந்திருக்கும் நன்நாள். உடையவர் ஸ்ரீ இராமாநுஜர் சரணாகதி அடந்த நாள். அன்றைய தினம் தாயாரையும் நம்பெருமாளையும் ஒரு சேர பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ஆதிசேஷனின் அவதாரங்கள்-இராமாநுஜர்

 ஸ்ரீராமர் காலத்தில் லக்ஷ்மணராக அவருடனே  இருந்து உதவி புரிந்தவர்.

ஸ்ரீ கிருஷ்ணர் காலத்தில் பலராமனாக கிருஷ்ணருக்கு  உதவி புரிந்தார்.

இக்கலிகாலத்தில் ராமானுஜராகப் பெருமாளுக்கு தொண்டு செய்தார்.

       ஆதிசேஷனின் அவதாரமாக பிறந்த இவரை வணங்கினால் ராகுவினால் ஏற்படும் மாங்கல்ய தோஷம், புத்தர பாக்கியமின்மை மற்றும் கேதுவினால் ஏற்படும் வாதக்கோளாறுகள் போன்ற காலசர்ப்ப தோஷங்கள் நிவர்த்தியாகும்.

Ramanujar-4

இராமாநுஜருடைய குருமார்கள்

 1. யாதவப்ரகாசர் உபநிஷத்துக்கள்.

 2. திருக்கச்சி நம்பிகள் வரதராஜப்பெருமாளிடம் நேரடி உரையாடல்; ஸ்ரீ இராமானுஜருக்காக ஆறு வாக்கியங்களை வரதராஜரிடம் பெற்று அனைவரும் உய்ய வழங்கியவர்.

 3. ஆளவந்தார் மூன்று கட்டளைகள்
 4. திருக்கோஷ்டியூர் நம்பிகள் திருமந்திரம்
 5. பெரிய நம்பிகள் (மகாபூரணர்)-துவயம்-பஞ்ச ஸமம்ஸ்காரம்- வியாச சூத்திரம், திவ்யபிரபந்தங்கள்.
 6. திருவரங்கப்பெருமாள் அரையர்-திருவாய்மொழி.
 7. திருலைநம்பிகள்(ஸ்ரீசைலேசர்)-இராமயணம்

இராமாநுஜருடைய திருநாமங்கள்

 • இளையாழ்வார் – பிறப்புப் பெயர் – பெரிய திருமலை நம்பிகள் இட்டது
 • இராமாநுஜர் (ராம+அனுஜர்=ராமனின் உடன் பிறந்தான்=இலக்குவன்)-பெரிய திருமலை நம்பிகள் தந்தது.
 • பரதபுரீசர் – பெரிய திருமலை நம்பிகள் தந்தது
 • யதிராசர் (யதி+ராசர்=முனிவர்க்கு அரசர்) – காஞ்சி வரதராஜப் பெருமாள் தந்தது
 • உடையவர் – ரங்கநாதனும், ரங்கநாயகியும் தம் சொத்தைத் தந்து, தந்தது.
 • தேசிகேந்திரன் – திருமலை வேங்கடேசன் தந்தது.
 • ஸ்ரீ பாஷ்யகாரர் – சரஸ்வதி தேவி தந்தது
 • திருப்பாவை ஜீயர் – பெரிய நம்பிகள் தந்தது.
 • எம்பெருமானார் – திருக்கோட்டியூர் நம்பி தந்தது.
 • நம் கோயில் அண்ணன் – வில்லிபுத்தூர் ஆண்டாள் தந்தது.
 • சடகோபன் பொன்னடி திருமலையாண்டான் தந்தது.
 • லக்ஷ்மண முனி – திருவரங்கப் பெருமாள் அரையர் தந்தது
 • அப்பனுக்குச் சங்காழி அளித்த பெருமான்-திருவேங்கட சம்பவம்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& Please click below to go to CONTENTS for all the Articles in HRE: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

Advertisements