Tags

, , , , ,

       தமிழக வரலாற்றில் கி.பி. 600 முதல் கி.பி. 900 காலப்பகுதியைப் பக்தி இயக்கக் காலம் என்பர். இக்காலத்தில் தமிழகத்தில் நிலைபெற்றிருந்தது பல்லவர் ஆட்சியாகும்.

       பக்தி இலக்கியம் பெருமளவில் தோன்றியது பல்லவர் காலத்திலேதான். வேறு எம்மொழியிலும் தமிழில் தோன்றிய அளவு பக்தி இலக்கியம் தோன்றவில்லை. இக்காலத்தில் எழுந்த பக்தி இலக்கியம் இருவகைப்பட்டது. தனித்தனிப் பதிகங்களால் பக்தி அனுபவங்களை வெளிப்படுத்துதல், பிரபந்தங்களாக வெளிப்படுத்துதல் என அவை இருவகையாக உள்ளன

        தமிழ்நாட்டுப் பக்தி இயக்கம் சைவம், வைணவம் என்னும் இரு கிளைகளாக     ஓங்கியது.பக்தி இயக்கத்தைத் துணைக்கொண்ட சைவமும் வைணவமும் புறச்சமயங்களான சமண, பௌத்தத்தைத் தோற்கடித்தன.

          தமிழ்நாட்டில் செழித்திருந்த சமண பௌத்தங்களுக்கு எதிராகத் தமிழகத்தின் தொன்மைச் சமயங்களான சைவமும் வைணவமும் தொடங்கிய தத்துவ போராட்டமே பக்தி இயக்கம்.

பக்தி இயக்கமும் சமணமும்

       வினை, செய்தவனை விடாது வந்து துன்புறுத்தும், அவரவர் செய்த வினைப்பயனை நுகர்ந்தேதான் கழிக்க வேண்டும் என்பது சமணர் கொள்கை. இதற்கு மாறாகப் பக்தி இயக்க சைவ-வைணவ சமயங்கள் வினையினின்று     மனிதனுக்கு விடுதலையளித்தன.

         வினை, வினைப்பயன் யாவற்றிற்கும் மேலாக உள்ளவன் இறைவன் என்றும், அவனைச் சார்ந்தால் வினை கெடும் என்று சுருங்கக்கூறி மக்களை ஈர்த்தன. ஆழ்வார்களும்     நாயன்மார்களும்     நிலையாமையைப் பாடியுள்ளனர். ஆயினும் சமண பௌத்த மதங்களைப்போல உலக நிராகரிப்போடு அதனை வலியுறுத்தவில்லை. மனிதனுக்குப் பொருள்மீதுள்ள அளவுகடந்த ஆசையை அகற்ற உணர்த்துவதற்காகவே அவர்கள் நிலையாமை பற்றிப் பேசினர்.

      சமணசமயம் புலனடக்கத்தை அதிகம் வலியுறுத்தியது; இசை முதலான நுண்கலைகள் புலன் உணர்வைத் தூண்டும் என்னும் கருத்தில் அவற்றுக்கு எதிராக நின்றது. சைவமும் வைணவமும் இதற்கு மாறான நிலை எடுத்தது.

       இறைபக்திக்கு இன்ப நுகர்ச்சி ஒரு தடையாகாது. உலகம் உண்மையானது, உலகியல் இன்பங்களை நுகர்ந்து கொண்டே இறைவனிடம் பக்தி செலுத்தலாம் என்ற     கோட்பாட்டினை இச்சமயங்கள் முன்வைத்தன.

 • மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் என்றார் திருஞானசம்பந்தர்.
 • என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம் என்றார் திருநாவுக்கரசர்.
 • நல்ல பதத்தால் மனைவாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே என்றார் நம்மாழ்வார்.

           ஆழ்வார் நாயன்மார் பாடல்களில் துறவறம் பழிக்கப்படவில்லை; இல்லறம் வெறுக்கப்படவில்லை. நிலையாமை உணர்த்தப்படுகிறது. கலைகளும் போற்றப்படுகின்றன. இந்த உலக இன்பங்களை நுகர்ந்தவாறே இறைவனிடத்தில் பக்தி செலுத்தலாம் என்ற தெளிவைப் பக்தி இலக்கியம் தருகிறது. உலக வாழ்வைக் கண்டு அச்சம் நீங்கி, மக்கள் கூடி வழிபாடு செய்து பக்தியுணர்ச்சியில் திளைத்திருக்க ஊக்கமூட்டுகிறது.

       பக்திநெறிக் கவிஞர்களின் பாட்டில் கேட்ட இந்த வசீகரம் முன் எப்போதும் இல்லாத முறையில் அக்காலத் தமிழர்களைப் பெரிதும் கவர்ந்திருக்க வேண்டும்.

      ஆழ்வார் நாயன்மார்களின் பக்திப் பாடல்கள் விளைத்த புரட்சி; கடவுளுக்கு முன் மக்கள் எல்லோரும் சமமானவர்கள். கடவுள் ஒருவரே எல்லா மக்களுக்கும் தலைவர் என்ற கருத்தைப் பரப்ப அந்தப் பாடல்கள் உதவின. அதனால், அரசர்களையும் செல்வர்களையும் பாடுவதற்குப் பயன்பட்ட தமிழ், கடவுளைப் பாடுவதற்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்ற கொள்கை வளர்ந்தது. அரண்மனையில் நிகழ்ந்துவந்த விழாக்கள் பல, கோயில்களில் கடவுளுக்கு உரிய திருவிழாக்களாக மாறின.

பக்தி இயக்கமும் மக்களும்

       அன்றைய தமிழ்ச் சமூகத்தில் சாதி வேற்றுமை நிலவிய போதிலும், இறையடியார் யாவரும் வணங்கத் தக்கவரே என்னும் கொள்கையினைப் பக்தி இயக்கம் முன்னிறுத்தியது.

       அதன் விளைவாகத் தொண்டர்குலமே தொழுகுலம் என்னும் குரல் அடியார் மனத்தில் எல்லாம் எதிரொலித்தது.

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து, எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்,
வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார், அடியார் தம் அடியார் எம் அடிகேளா

என்று பாடுகிறார் நம்மாழ்வார்.

    இழிந்த சாதியிற் பிறந்தவராகிச் சிறிதுகூட நல்ல குணங்கள் இல்லாதவரேயானாலும், வலக்கையில் சக்கரப்படையைக்கையில் ஏந்திய திருமாலுக்கு அடியார்களாயின் அவர்கள் எம்மால் வணங்கத்தக்கவர் என்பது இத்திருவாய்மொழிப்     பாசுரத்தின்     கருத்தாகும்.

       இதே போன்றதொரு கருத்தினைத் திருநாவுக்கரசரின் பாடல்

ஒன்றிலும் காணலாம். ஆவுரித்துத தின்றுழலும்
புலையராயினும் சிவபிரானுக்கு அன்பராகில் அவரேயாம்
வணங்கும் கடவுள் என்கிறார் அப்பர். இத்தகைய கருத்துகள்
அக்காலத் தமிழ் மக்களை ஈர்த்ததில் வியப்பில்லை.

        மேலும் பக்தியியக்கம் – முக்தி அடைவதற்குரிய எளிய வழியாகவும் பக்தியை அறிமுகம் செய்தது. இழிந்தவனும் பக்தனானால் அவனுக்கு     முக்தி உண்டு என்பதைப் புராணக்கதைகள் மூலம் எடுத்துக் காட்டியது.

       மேலும் இத்தகைய கொள்கைகளை விளங்கும் இனிய தமிழில் பாடல்களாக்கி இசைத்தமிழில் எடுத்து விளக்கியதும் பக்தி இயக்கத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. இறைவன் கோயில் கொண்டுள்ள ஊர்தோறும் சென்று நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறைவனை கண்டு போற்றினர்.

பக்தி & தமிழ் இலக்கியம்

      கற்றோர்க்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்ட இலக்கியத்தை மக்கள் இலக்கியமாக மாற்றிய பெருமையும் பக்தி இயக்கத்திற்கு உண்டு. பக்திக் கவிஞர்கள் பேச்சு வழக்கில் உள்ள பழகுதமிழ்ச் சொற்களை உயிர்த்துடிப்புடன் கையாண்டனர்.

      ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்விய பிரபந்தத்திலும் நாட்டுப்பாடல் மரபுசார்ந்த இசைப்பாடல்கள் உள்ளன. திருமங்கையாழ்வாரும், மாணிக்கவாசகரைப்போல், நாட்டுப் பாடல்கள் சிலவற்றைப் பின்பற்றிப் பக்திப் பாடல்கள் பாடியுள்ளார்.

       மகளிர் விளையாட்டில் சாழல் என்பது ஒன்று. தும்பியை அழைத்துப் பெண்கள் பாடுவது ஒரு வகை. குயிலே கூவாய் என்று பாடுவது மற்றொரு வகை. வீட்டில் பல்லி ஒரு திசையில் ஒலித்தால் யாரோ விருந்தினர் வருவார் என்று நம்பும் நம்பிக்கையை ஒட்டி, ‘திருமால் வருமாறு ஒலிசெய், பல்லியே!’ என்று பாடுவது இன்னெரு வகை. இவ்வாறு சாழல் முதலான வகைகளில் நாட்டுப் பாடல் மரபில் பல பாடல்கள் பாடியுள்ளார் திருமங்கையாழ்வார்.

கூவாய் பூங்குயிலே குளிர்மாரி தடுத்துகந்த
மாவாய் கீண்ட மணிவண்ண னைவரக்
கூவாய் பூங்குயிலே.

(நாலாயிர. 1944) இது குயிலை அழைத்துப் பாடும் பாட்டுகளில் ஒன்று.

கொட்டாய் பல்லிக்குட்டி
குடமாடிஉலகளந்த
மட்டார் பூங்குழல் மாதவ னைவரக்
கொட்டாய் பல்லிக்குட்டி.

(நாலாயிர.1945) இது பல்லிப் பாடல்களில் ஒன்று. இவை.

        வேதங்களையும் உபநிடதங்களையும் கொண்ட வடமொழிக்கு இணையாகத் தமிழைத் தெய்வ மொழியாக உயர்த்தி உணர்ச்சிப் பெருக்குடன் ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடியுள்ளனர்.

 • செந்திறத்த தமிழோசை வடசொல் ஆகிய தென்னன் தமிழை, வடமொழியை என்று திருமங்கையாழ்வாரும்,
 • பன்னிய நூற்றமிழ்மாலை பாடுவித்து என்சிந்தை மயக்கறுத்த திருவருளினானை என்று அப்பரும்,
 • செந்தமிழர் தெய்வமறை நாவர் என்று திருஞானசம்பந்தரும்,
 • திணைகொள் செந்தமிழ் என்று சுந்தரரும் பாடியிருத்தல் நினைக்கத்தகும்.

       சமண பௌத்த சமயத்தினர் பேரின்பக் காதலைப் பாடும் நாயக-நாயகி பாவத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஆழ்வார்களும் நாயன்மார்களும் பழைய அகத்திணை மரபைத் தழுவி, நாயகி பாவனையில் தெய்வத்தின்பால் கொண்ட மானுடக் காதலைப் பாடியுள்ளனர். உலகியல் காதல் அடிப்படையில் செய்த இப்புதுமை அன்று முதல் இன்றுவரை கற்போர்க்குப் பெருவிருந்து படைத்துக் கொண்டிருக்கிறது.

       சங்க இலக்கியத்துள் காணப்படும் காதல் மரபுகளை அமைத்து திருமங்கையாழ்வார் பக்திப் பாடல்கள் பாடியுள்ளார்.

 • வண்டு, நாரை முதலியவற்றைத் தூது அனுப்பித் திருமாலின் அன்பை வேண்டச் செய்யும் பாடல்கள் சுவையானவை.
 • “நாரையே! நீ திருமாலுக்கு என் காதலைப்பற்றிச் சொல்லி வருவாயானால், எனக்கு அதைப்போன்ற இன்பமான உதவி வேறு எதுவும் இல்லை. அதற்குக் கைம்மாறாக, இந்தப் பசுமையான இடமெல்லாம் உன்னுடையதே ஆகுமாறு, நீ இங்கெல்லாம் மீன்களைக் கவர்ந்து உண்பதற்காகத் தருவேன். இங்கே உன் பெண் துணையும் நீயுமாக இனிமையாகத் தங்கி இந்த உலகில் இன்பமாக வாழலாம்” என்கிறார்.
 • காதல் நோயால் வருந்தி வாடிய மகளைப்பற்றிக் கவலைப்பட்டுத் தாய் சொல்லும் சொற்களாகவும்,
 • நோயையும் வாட்டத்தையும் பற்றி அறிந்து குறி சொல்லவல்ல கட்டுவிச்சியின் சொற்களாகவும் அவர் பாடியுள்ள பாடல்களும் கவிதைச் சுவை நிரம்பிய பக்திப் பாடல்களாகும்.

திருமங்கையாழ்வாரின் பெரிய திருமடலும், சிறிய திருமடலும்

         திருமங்கையாழ்வாரின் பெரிய திருமடலும், சிறிய திருமடலும் அவரது  தனித்தன்மையை வெளிப்படுத்துவனவாகத் திகழ்கின்றன. நாணமும் அடக்கமும் கொண்ட பெண்கள் மடலூர்தல் இல்லை என்ற பழைய மரபை மாற்றி இயற்றப்பட்டன இவ்விரு மடல்களும். திருமாலைக் காதலிக்கும் பெண்கள் மடலேறுகின்றனர்.

          காவிரியாறு தந்த வளத்துடன் மக்கள் இயக்கமாக விளங்கிய பக்தி இயக்கம் தந்த சக்தியும் கலந்தபோது சோழநாடு பேரரசு ஆகியது. அந்தப் பேரரசுக்காலத்தில் தோன்றிய கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகிய ஒப்பற்ற இருநூல்களும் பக்தி இயக்கத்தின் விளைவே.

     “சைவருடைய பக்தியியக்கம் பெரியபுராணத்திற் பூரணத்துவம் பெற்றது போல, வைணவருடைய பக்தியியக்கம் கம்பராமாயணத்திற் பூரணத்துவம் பெற்றது”

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மெய்யன்பரே,

 • Hindu Religious Extracts (HRE) என்னும் இந்த லிங்கில் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.
 • மேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
 • இந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி.
 • இங்கே காணப்படும் பொருளடக்கம் (CONTENTS) என்னும் இந்த லிங்கில் (LINKs) இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுரைகளை எளிதில் காண ஏதுவாக இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Also, Please click below to go  to CONTENTS for all the Articles in HRE:

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

Advertisements