Tags

, , , , ,

          பதிகங்கள் என்பவை 10 பாடல்களைக் கொண்டவைகள். பொதுவாக நாலாயிர திவ்ய பிரபந்த பதிகங்கள், 10 பாசுரங்கள் இறுதியில் ஒரு பலஸ்ருதி என, மொத்தம் 11 பாசுரங்களாக அமைந்து இருக்கும்.

         ஆனால், பெரியாழ்வார் திருமொழி 2-ம் பத்து 3-ம் திருமொழியும், நம்மாழ்வார் திருவாய்மொழி 2-ம் பத்து 7-ம் திருவாய்மொழியும் 12 பாசுரங்கள் இறுதியில் ஒரு பலஸ்ருதி என, மொத்தம் 13 பாசுரங்களாக அமைந்து இருப்பது சிறப்பு.

      இவ்விரு திருமொழிகளும் பன்னிரு திரு நாமப்பாடல்கள் என அழைக்கப்படுகினறன்.

         பரந்தாமனின் எண்ணற்ற திருநாமங்களை ஆயிரம் திருநாமங்களாக தொகுத்து பீஷ்மர், யுதிஷ்டிரனிடம் கூறியதுதான் விஷ்ணு சகஸ்ர நாமம்.

         அந்த ஆயிரம் திருநாமங்களை பன்னிரெண்டு திருநாமங்களாக சுருக்கி பரந்தாமனி்ன் பெருமைகளைக் “கேசவா, மாதவா, நாராயணா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, திரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா,…ருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா” என கூறுவதுண்டு.

          வைணவர்கள் மிக முக்கியமாகக் கருதும் இப்பன்னிரெண்டு திருநாமங்கள் மிகவும் மகத்துவம் வாய்ந்தவை.

1) கேசவா – நீண்ட கேசத்தை உடையவன்; கேசி என்ற அரக்கனை வென்றவன்.
2) மாதவா – திருமகள் மணாளன்
3) நாராயணா – உயிருக்கு ஆதாரமாக இருப்பவன்
4) கோவிந்த-பூமியைப் பிரளயத்திலிருந்து காத்தவன்; பசுக்களை மேய்த்தவன்
5) விஷ்ணு – அனைத்துப் பொருள்களிலும் நிறைந்திருப்பவன்
6) மதுஸுந-இந்திரியங்களை ஈர்ப்பவன்; மது என்னும் அரக்கனை வென்றவன்
7) திரிவிக்ரமா – மூன்றடிகளால் உலகங்களை அளந்தவன்
8) வாமனா – குள்ளமான உருவம் உடையவன்
9) ஸ்ரீதரா – ஸ்ரீயான திருமகளைத் தரிப்பவன்
10) ருஷீகேசா – தன் ஆணைப்படி புலன்களை நடத்துபவன்
11) பத்மநாபா – நாபியில் தாமரையை உடையவன்
12) தாமோதரா-கயிற்றால் கட்டப்பட்ட தழும்பு கொண்ட வயிறு உடையவன்.

      இப்பன்னிரு திரு நாமஙகளை “வைகுந்தவாசன், வாமனாவதாரன், கிருஷ்ணாவதாரன் நாமங்கள்” என மூன்று வகையாக பிரிக்கலாம்.

வைகுந்தவாசன்: நாராயணா, விஷ்ணு.
வாமனாவதாரன்: திரிவிக்ரமா, வாமனா.
கிருஷ்ணாவதாரன்: கேசவா, மாதவா, கோவிந்தா, மதுசூதனா, ஸ்ரீதரா, ருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா.

      இப்பன்னிரு திருநாமங்களை மைய்யமாக வைத்து பெரியாழ்வார் & நம்மாழ்வார் பாடிய பாசுரங்களே பன்னிரு திருநாமப்பாடல்கள்

பெரியாழ்வார் திருமொழி:2.3.1 to 13 (139 to 151)

இரண்டாம் பத்து மூன்றாந் திருமொழி-காது குத்தி திரி இட்டுக்கொள்ள வாராய்
1) கேசவ (139)
போய்ப்பா டுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொருதிறல் கஞ்சன் கடியன்
காப்பாரு மில்லை கடல் வண்ணா உன்னைத் தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலையுண்ட பித்தனே கேசவ நம்பீ உன்னைக் காது குத்த
ஆய்ப்பாலர் பெண்டுக ளெல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான்
வைத்தேன்.

2) நாராயணா (140)
வண்ணப் பவளம் மருங்கினில் சாத்தி மலர்ப்பாதக் கிங்கிணி யார்ப்ப
நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய்
எண்ணற் கரிய பிரானே திரியை எரியாமே காதுக் கிடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய கனகக் கடிப்பும் இவையா.

3) மாதவ (141)
வையமெல் லாம் பெறும் வார்கடல் வாழும் மகரக் குழைகொண்டு வைத்தேன்
வெய்யவே காதில் திரியை யிடுவன் நீ வேண்டிய தெல்லாம் தருவன்
உய்ய இவ் வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடராயர் கொழுந்தே
மையன்மை செய்து இள வாய்ச்சிய ருள்ளத்து மாதவ னே இங்கே வாராய்.

4) கோவிந்தா (142)
வண நன்றுடைய வயிரக் கடிப்பிட்டு வார்காது தாழப் பெருக்கி
குணநன் றுடையர் இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீசொல்லுக் கொள்ளாய்
இணை நின்றழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலாப்பழம் தந்து
சுண நன்றணி முலை யுண்ணத் தருவன் நான் சோத்தம் பிரான் இங்கே வாராய்.

5) விட்டுவே (விஷ்ணு) (143)
சோத்தம் பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரிகுழ லாரொடு நீபோய்
கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால் குணங்கொண் டிடுவனோ நம்பீ
பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் பிரானே திரியிட வொட்டில்
வேய்த்தடந் தோளார் விரும்பு கருங்குழல் விட்டுவே நீ இங்கே வாராய்.

6) மதுசூதன (144)
விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி யதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே யஞ்சி மதுசூதனே யென்ற றிந்தேன்
புண்ணேது மில்லை உன் காது மறியும் பொறுத்து இறைப் போது இரு நம்பீ
கண்ணா என் கார் முகி லே கடல் வண்ணா காவலனே முலை யுணாயே.

7) திரிவிக்கிரமா (145)
முலையேதும் வேண்டேனென்றோடி நின் காதில் கடிப்பைப் பறித்தெறிந் திட்டு
மலையை யெடுத்து மகிழ்ந்து கல் மாரி காத்துப் பசு நிரை மேய்த்தாய்
சிலையொன்று இறுத்தாய் திரிவிக்கிரமா திருவாயர் பாடிப் பிரானே
தலை நிலாப் போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே யன்றே.

8) வாமன (146)
என் குற்றமே யென்று சொல்லவும் வேண்டாகாண் என்னை நான் மண்ணுண்டே னாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற் றிலையே
வன் புற்றரவின் பகைக்கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும்
துன்புற் றனவெல்லாம் தீர்ப்பாய் பிரானே திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே.

9) சிரிதரா (ஸ்ரீதரா) (147)
மெய்யென்று சொல்லுவார் சொல்லைக் கருதித் தொடுப்புண்டாய் வெண்ணெயை யென்று
கையைப் பிடித்துக் கரையுர லோடு என்னைக் காணவே கட்டிற் றிலையே
செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில் சிரிதரா உன் காது தூரும்
கையில் திரியை யிடுகிடாய் இந்நின்ற காரிகை யார்சிரி யாமே.

10) இருடீகேசா (ரிஷிகேசா) (148)
காரிகை யார்க்கும் உனக்கும் இழுக்குற்றென்? காதுகள் வீங்கி யெறியில்
தாரியா தாகில் தலை நொந்திடுமென்று விட்டிட்டேன் குற்றமே யன்றே
சேரியிற் பிள்ளைக ளெல்லாரும் காது பெருக்கித் திரியவும் காண்டி
ஏர்விடை செற்று இளங் கன்று எறிந் திட்ட இருடீகேசா என் தன் கண்ணே.

11) பற்பநாபா (பத்மநாபா) (149)
கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக் கடி கமழ் பூங்குழ லார்கள்
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்களமுதே
உண்ணக் கனிகள் தருவன் கடிப்பொன்றும் நோவாமே காதுக் கிடுவன்
பண்ணைக் கிழியச் சகட முதைத்திட்ட பற்பநாபா இங்கே வாராய்.

12) தாமோதரா (150)
வாவென்று சொல்லி என் கையைப் பிடித்து வலியவே காதில் கடிப்பை
நோவத் திரிக்கில் உனக்கிங் கிழுக்குற்றென்? காதுகள் நொந்திடும் கில்லேன்
நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவைகாணாய் நம்பீமுன் வஞ்ச மகளைச்
சாவப்பா லுண்டு சகடிறப் பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய்.

13) பலன் (151)
வார்காது தாழப்பெருக் கியமைத்து மகரக் குழையிட வேண்டி
சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பன்னிரு நாமத்தாற் சொன்ன
ஆராத அந்தாதி பன்னிரண் டும் வல்லார் அச்சுத னுக்கு அடி யாரே.

நம்மாழ்வார் திருவாய்மொழி (2.7.1 to 13):இரண்டாம் பத்து ஏழாம் திருமொழி

அடிமை கொண்ட-இனியன்-அளவிட்டு அறியா-சங்கு திருவாழி-சமர்த்தன்
    நாமாவில் தொடங்கி நாமாவில் முடியும் நம்மாழ்வார் பன்னிரு திருநாமப்பாடல்கள்

1) கேசவன் (3075)
தம்மோடு எல்லாரும் தம்மைப் போன்று இறைவனுடைய அங்கீகாரத்திற்கு ஆளானார்கள்

கேசவன் தமர்க்கீழ் மேலெமரேழெழுபிறப்பும்,
மாசதிரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா,
ஈசனென் கருமாணிக்க மென் செங்கோலக் கண்ணன்
விண்ணோர் நாயகன், எம்பிரானெம்மான் நாராயணனாலே

2) நாராயணன் (3076)
நாராயணன் ஆகையாலே என்றும், அந்நாராயண மந்திரத்தின் பொருள் .

நாரணன் முழுவேழு உலகுக்கும் நாதன் வேத மயன்,
காரணம்கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை,
சீரணங்கமரர்பிறர் பலரும் தொழுதேத்த நின்று,
வாரணத்தை மருப்பொசித்த பிரானென் மாதவனே.

3) மாதவன்(3077)
அங்கீகரிப்பதற்குரிய காரணம்

மாதவனென்றதே கொண்டு என்னை இனியிப்பால் பட்டது,
யாதவங்களும் சேர்க்கொடேனென் றென்னுள் புகுந்திருந்து,
தீதவம் கெடுக்குமமுதம் செந்தாமரைக்கட்குன்றம்,
கோதவமிலென் கன்னற்கட்டி யெம்மானென் கோவிந்தனே

4) கோவிந்தன்(3078)
எல்லாக் காலங்களிலும் தன்னையே அனுபவிக்கும்படி செய்தான்

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலனென் றென்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத்திருத்தி, என்னைக் கொண்டென்
பாவந்தன்னையும் பாறக்கைத் தெமரேழெழு பிறப்பும்,
மேவும் தன்மைய மாக்கினான் வல்லனெம் பிரான் விட்டுவே.

5) விஷ்ணு (3079)
தம்மை அனுபவித்ததனாலே அவன் வடிவில் புகரைச் சொன்னார்

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்,
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு,
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி,
விட்டிலங்கு முடியம்மான் மதுசூதனன் தனக்கே.

6) மதுசூதனன் (3080)
அடிமை கொண்டதற்கு அடி நிர்ஹேதுகமான திருவருள்.

மதுசூதனையன்றி மற்றிலேனென் றெத்தாலும் கருமமின்றி,
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழியூழிதொறும்,
எதிர் சூழல் புக்கெனைத்தோர் பிறப்பு எனக்கே அருள்கள் செய்ய,
விதி சூழ்ந்ததாலெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே.

7) திரிவிக்கிரமன் (3081)
தன்னையே எல்லாக் காலமும் அனுபவிக்கும்படியான மனத்தினைத் தந்தான்

திரிவிக்கிரமன் செந்தாமரைக்கணெம்மானேன் செங்கனிவாய்
உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு நிறத்தனனென்றென்று,
உள்ளிப் பரவிப்பணிந்து பல்லூழியூழி நின்பாத பங்கயமே,
மருவித் தொழும்மனமேதந்தாய் வல்லைகாணென் வாமனனே

8) வாமனன்(3082)
தந்த அளவு அன்றியே தீ மனத்தினையும் போக்கினான்

வாமனனென் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய், என்றென்றுன் கழல் பாடியே பணிந்து,
தூமனத்தனனாய்ப் பிறவித் துழதி நீங்க, என்னைத்
தீ மனங்கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே.

9) ஸ்ரீதரன் (3083)
தன்னுடைய நற்குணங்களையே நான் அனுபவிக்கும்படி என் மனத்திலே புகுந்தான்

சிரீஇதரன் செய்ய தாமரைக் கண்ணனென்றென்றிராப்பகல்வாய்
வெரீஇ, அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த் துயிர்த்து
மரீஇய தீவினைமாள இன்பம்வளர வைகல் வைகல்
இரீஇ, உன்னையென்னுள்வைத்தனை யென்னி ருடீகேசனே.

10) ரிஷிகேசன் (3084)
அனுபவத்திற்கு விரோதியாய் இருந்த இந்திரியங்களையும் தன் வழியாக்கிக் கொண்டான்

இருடீகேசன் எம்பிரா னிலங்கையரக்கர்க்குலம்,
முருடுதீர்த்தபிரானெம்மா னமரர்பெம்மானென்றென்று,
தெருடியாகில் நெஞ்சே, வணங்கு திண்ணமறியறிந்து,
மருடியேலும் விடேல் கண்டாய் நம்பி பற்பநாபனையே

11) பத்மநாபன் (3085)
இறைவன் என்னை அல்லது அறியான் ஆனான்

பற்பநாபன் உயர்வற உயரும் பெருந்திறலோன்,
எற்பரனென்னையாக்கிக் ¦ காண்டெனக்கேதன்னைத்தந்த
கற்பகம், என்னமுதம் கார்முகில்போலும்வேங்கடநல்
வெற்பன், விசும்போர்பிரா னெந்தை தாமோதரனே.

12) தாமோதரன் (3086)
என்னைப்போலே காண்பார்க்குக் காணலாவதொழியத் தன் முயற்சியால் அறியப்போகாது

தாமோதரனைத் தனி முதல்வனை ஞால முண்டவனை,
ஆமோதரமறிய வொருவ ர்க்கென்றெ தொழுமவர்கள்,
தாமோதரனுருவாகிய சிவற்கும் திசை முகற்கும்,
ஆமோதர மறிய எம்மானையென்னாழி வண்ணனையே.

13) பலன் (3087)
வண்ண மாமணிச் சோதியை யமரர் தலைமகனை,
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூர்ச்சடகோபன்,
பண்ணிய தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்,
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டண்ணல் தாளணைவிக்குமே.

ஆக, பன்னிரு திருநாமப்பாடல்கள்

 பெரியாழ்வார் திருமொழி:2.3.1-13
 நம்மாழ்வார் திருவாய்மொழி: 2.7.1-13

***இதைப்போன்று, ஆனால் பன்னிரு திருநாமப்பாடல்கள் அல்லாது, 11 க்கும் அதிகமான பாசுரங்களைக் கொண்ட திருமொழிகள்

 பெரியாழ்வார் திருமொழி:1.2.1-21
 திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி: 10.7. 1-14

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மெய்யன்பரே,
• இந்த லிங்கிள் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.
• மேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் சிறப்பாக இருக்கும்
• இந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
Please click below to go to CONTENTS for all the Articles in HRE:
https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

Advertisements