Tags

, , , ,

           சம்பந்தர் பாடல் பெற்ற, கிருத யுகத்திலிருந்து உள்ள திருமீயச்சூர் மேகநாதர் தலம், திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென் கரைத்தலங்களில் 56ஆவது சிவத்தலமாகும். தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் 119 வது தேவாரத்தலமாகவும் அமைந்துள்ளது.

         இத்தலத்தில் சூரியன் வழிப்பட்டார். அம்பிகை திருத்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தலம். ஸ்ரீலலிதாம்பிகை வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டவாறு அமைந்துள்ளார்.

Untitled

       ஸ்ரீலலிதாம்பிகையை தரிசனம் செய்ய வந்த காஞ்சி மகாப்பெரியவர், அம்பிகையை விட்டு செல்ல மனம் வராமல் பிடிவாதம் பிடித்தது அம்பிகையின் பெருமைக்கு ஒரு சான்றாகக் கூறப்படுகிறது.

மூலவர் விமானம்

            கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோயில்-கொடி மரம், பலிபீடம், நந்தி-அடுத்து மற்றொரு கோபுரம். எதிரே உள்ள திருச்சுற்றில் விசுவநாதர் சன்னதி. கோயிலின் இடது புறம் லலிதாம்பிகை அம்மன் சன்னதி.இரண்டாவது கோபுரத்தைக் கடந்து உள்ளே பலி பீடம். அடுத்துள்ள கருவறைக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள். கருவறையில் மேகநாதசாமி.

அம்பாள் : மேகலாம்பிகை, சௌந்தர்ய நாயகி, லலிதாம்பிகை.
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்.
தலவிருட்சம் : வில்வம் மரம்.

         கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, சேத்திர புராணேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சந்திரசேகரர், துர்க்கை, ரிஷபாரூடர். திருச்சுற்றில் தேயுலிங்கம், விநாயகர் சன்னதிகள். அடுத்து இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், வருணலிங்கம், நிருத்வி லிங்கம், அகத்திய லிங்கம், குபேரலிங்கம், ஈசான லிங்கம், சித்தி விநாயகர், மகாலட்சுமி, பிரித்வி லிங்கம். அடுத்து ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர்.

லலிதாம்பிகை கோயில்

        கோயிலின் வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி லலிதாம்பிகை கோயில். இவளுக்கு சௌந்தரநாயகி என்ற திருநாமமும் உள்ளது. இவள் ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய,-வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. உலகிலேயே இது போன்ற கலை அழகு மிக்க இறைவி உருவை வேறெந்தக் கோயிலிலும் காண முடியாது. அமர்ந்த கோலத்தில் சாந்த சொரூபியாகக் காட்சி அளிக்கும் அம்பாளின் இருப்பிடம் ஒரு ராஜ தர்பார் போன்ற உணர்வைத் தருகிறது.

Lalithambigai

          இத்தலத்தில், லலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் படிப்பவர்களுக்கு, அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும். ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் இங்கு செய்வது சிறப்பு. பிரண்டை அன்னத்தை, தாமரை இலையில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்து, அன்னதானம் செய்தால் நீண்ட ஆயுளும், சகல நோய்களும் தீரும்.

ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம்

      திருமீயச்சூர் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய திருத்தலம். இங்குதான் ஸ்ரீஹயக்ரீவர், அகத்திய முனிவருக்கு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்தார்.

       ஸ்ரீஹயக்ரீவர் அகத்தியருக்கு லலிதா சஹஸ்ரநாமம் உபதேசம் செய்யும் வேளையில், ஸ்ரீலலிதாம்பாளை தரிசிக்க சிறந்த இடம் எது என அகத்தியர் வினவினார். ‘அருணனும், சூரியனும் வழிபட்ட திருமீயச்சூர் சென்று, அங்கு லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் சொல்ல அதற்குக் கிடக்கும் பலனே தனி என ஸ்ரீஹயக்ரீவர் பெருமான் கூறி அருளினார்.

      அவ்வாறே ஒரு பௌர்ணமி நாளன்று ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தினால் திருமீயச்சூர் லலிதாம்பிகையை வழிபட்டதுடன் ஸ்ரீலலிதா நவரத்தின மாலை என்ற பாடலையும் அம்பிகைக்கு அர்ப்பணித்தார்.பௌர்ணமி தினத்தன்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை என இவற்றை மனமுருக பாட அன்னையின் அருள் கிடைக்கப் பெறலாம்.

கொலுசு

        பெங்களூரில் மைதிலி ராஜகோபாலாச்சாரி என்பவர் தினமும் காலையில் ஸ்நானம் செய்து, லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்த பிறகுதான் தனது மற்ற அன்றாடப் பணிகளைத் தொடங்குவார்.

      1999-ம் வருடம் நவம்பர் மாதத்தில் ஒரு நாள் இரவில் அவருடைய கனவில் அம்பிகை தோன்றி, எல்லா ஆபரணங்களும் எனக்கு உள்ளது. ஆனால் காலுக்கு அணிந்து கொள்ள கொலுசு இல்லை. அதனை நீதான் எனக்கு செய்து போட வேண்டும் எனக் கட்டளையிட்டு மறைந்தாள்.

        விழித்தெழுந்த அவ்வம்மையார், தனது கனவில் வந்து காட்சியளித்து கட்டளையிட்டுச் சென்ற அம்பிகை யார், ஏன் என்னிடம் வந்து கேட்க வேண்டும் எனக் குழப்பமடைந்தார். மிகுந்த ஆசாரமுள்ள வைணவக் குடும்பத்தைச் சேர்ந்த அப்பெண்மணி தனது கனவில் வந்து காட்சியளித்துத் தனக்கு ஆணையிட்டுச் சென்ற அம்பாளைப் பற்றி பலரிடமும் விசாரித்தார். யாரும் தெளிவாகச் சொல்லவில்லை.

         பின்னர் வைணவத் தலங்களான திருப்பதி, ஸ்ரீரங்கம் முதலிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள சன்னதியில் வீற்றிருக்கும் பத்மாவதி தாயார். ரங்கநாயகி தாயார் ஆகியோரைக் கண்டார். ஆனால் தனது கனவில் வந்த அம்பிகையின் உருவத்திற்கு ஒத்த உருவமாக அவருக்கு ஏதும் புலப்படவில்லை.

          இந்த நிலையில் யதேச்சையாக ஆன்மீக மாத இதழ் ஒன்றை அவர் பார்க்க நேரிட்டது. அப்புத்தகத்தின் அட்டைப் படமாக லலிதாம்பிகையின் உருவம் அச்சிடப்பட்டிருந்தது. அதைக் கண்ட மாத்திரத்தில் அப்பெண்மணி மிக்க ஆச்சரியம் அடைந்து தனது கனவில் வந்து, கட்டளையிட்ட அம்பிகை திருமீயச்சூரில் குடி கொண்டிருக்கும் லலிதாம்பிகை என அறிந்தார். தினமும் லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்ததன் பயன் இது என உணர்ந்து மிக்க பரவசம் அடைந்தார்.

         பெரும் புண்ணியம் செய்த பக்தை கொலுசினை செய்து கொண்டு கடைசியாக, திருமீயச்சூர் வந்துள்ளார். இங்கு வந்து கோயில் சார்ந்தவர்களிடம் இந்தச் செய்தியினை அவர் கூற அவர்கள் நம்பவில்லை. அந்தப் பெண்மணியின் தொடர் வற்புறுத்தலுக்குப் பிறகு அன்னையின் காலின் சுற்றுப் பகுதியில் கொலுசு அணிவிக்க வசதியாக துளை ஏதும் உள்ளதா என ஆராய்ந்துள்ளனர். பல காலம் அன்னைக்கு செய்த அபிஷேகங்களினால், அந்தப் பொருட்கள் துளையை மூடியுள்ளதைக் கண்டுபிடித்து, கொலுசிட துவாரம் உள்ளதைக் கண்டு அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர். இதன் பின்னரே அன்னையின் திருவிளையாடலை புரிந்து அம்பாளுக்கு கொலுசு அணிந்து மகிழ்ந்தனர்.

சிறப்புகள்

 காசிப முனிவரின் மனைவிகளான வினதை, கர்த்துரு ஆகிய இருவரும் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு பிள்ளைபேறு பெற்றனர்.
 சூரிய பகவான் இங்கு தவமியற்றி சாப விமோசனம் பெற்றார்.
 ஒவ்வோர் ஆண்டும் சித்திரை 21 லிருந்து 27 வரை சூரிய கிரணங்கள் கருவறையில் உள்ள சிவபெருமான் மீது பட்டு வழிபடும். இங்கே, ரதசப்தமி விழா விமர்சையாகக் கொண்டாடப் படுகிறது-ஸ்வாமியின் மீது கதிர்களால், பூஜிக்கிறார் சூரிய பகவான்!

புராண காலத்தில் இங்கு பிறந்தோர்

        கருடன்; அருணன்(சூரியனின் தேரோட்டி); வாலி; சுக்ரீவன்; எமன்; சனீஸ்வரன்.

         காசிப முனிவரின் மனைவிகளான கர்த்துரு, விநநை என்ற இருவரும் சிவபெருமானை நினைத்து கடும் தவம் புரிந்தனர். இவர்களது தவத்தின் பலனாக இறைவன் இவர்கள் முன்தோன்றி இருவருக்கும் தலா ஒரு முட்டையை பரிசாகக் கொடுத்தார். இந்த முட்டையை ஒரு வருட காலம் பாதுகாத்து பூஜை செய்து வந்தால், ஒரு ஆண்டு கழித்து உலகமே போற்றும் வண்ணம் மகன் பிறப்பான் எனக் கூறி விட்டு மறைந்தார்.

          ஆனால் ஒரு வருடம் கழித்து விநநையின் அண்டத்தில் இருந்து ஒரு பறவை பிறந்து பறந்து சென்று விட்டது. தனக்கு மகன் பிறக்காமல், இப்படி ஆகிவிட்டதே என்று ஈஸ்வரனிடம் வருந்தி கேட்கிறாள். அதற்கு முக்கண்ணன் ”நான் கூறியது போலவே அவன் மகாவிஷ்ணுவுக்கு வாகனமாக கருடன் என்ற பெயருடன் உலகமெங்கிலும் போற்றிப் புகழப் படுவான்” என கூறினார்.

           இதனிடையே விநநைக்குக் குழந்தை பிறந்து விட்டதே என்று அவசரப்பட்டு தனக்குக் கொடுக்கப் பட்ட முட்டையை பிரித்துப் பார்த்தாள் கர்த்துரு. இவளது அவசரத்தினால் அந்த முட்டையில் இருந்து சரியானபடி வளர்ச்சி அடையாத தலை, முதல் இடுப்பு வரை மட்டுமே வளர்ந்த குழந்தை பிறந்தது. தான் செய்த தவறை உணர்ந்த கர்த்துரு இறைவனை நாடி, இப்படி ஆகி விட்டதே என மனம் வருந்தினாள். சிவபிரானும், ”நான் சொல்லியதுபோல் இக்குழந்தை சூரியனுக்கு சாரதியாக விளங்கி உலகப் புகழ் பெறுவான்” என்று கூறினார்.கர்த்துரு தனது மகனுக்கு அருணன் எனப் பெயர் சூட்டினாள். இறைவனின் ஆணைப் படி சூரியனுக்கு சாரதியாக விளங்கினான்.

தலவரலாறு & தலச்சிறப்பு

              இறைவனை தரிசிப்பதற்கு ஆசைப்படும் ஒருவருக்கு, முட்டுக்கட்டை போடுவது பாவம். ஒருவரது அங்கக் குறைபாட்டினைச் சுடிக்காட்டி ஏளனம் செய்வதும் மகாபாவம். சூரிய பகவான் இந்த இரண்டும் பாவங்களையும் செய்தார்.

            சூரியனின் ரதத்தினைச் செலுத்துகிற அருணன் அங்கஹீனம் கொண்டவன்; அவனுக்கு திருக்கயிலாயத்துக்குச் சென்று சிவனாரை தரிசிக்க வேண்டும் என விருப்பம். சூரியனிடம் அனுமதி கேட்டதற்கு, மறுத்ததுடன் உடற் குறையைச் சொல்லி ஏளனம் செய்தான்.

      சிவபக்தியில் திளைத்திருந்த அருணன், மோகினிப் பெண்ணாக உருவெடுத்தான். திருக்கயிலாயம் புறப்பட்டான்; மோகினியின் அழகில் மயங்கினான் இந்திரன். இதில் உருவானவன் தான் வாலி. எண்ணம் ஈடேறியது. சிவதரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில், திரும்பி வந்த அருணன், சூரியனாரிடம் விஷயத்தைச் சொன்னான். ‘மோகினிப் பெண்ணாகவா? உருவம் மாறிச் சென்றாயா? எங்கே மாறிக்காட்டு’ என்றார்.

       அருணன், மோகினியாக மாறினான். அழகில் சூரியனை மயக்கினான். விளைவு.. சுக்ரீவன் பிறந்தான்.

      தனது பக்தனைத் தடுத்து, அவனது ஊனத்தைக் கிண்டல் செய்தத சிவனார் சூரியனைச் சபித்தார். இருளடைந்து போனார் சூரியனார். ஏழு மாதங்கள், மேகமண்டலத்தில் எங்களை யானை மீது வைத்து பூஜித்து வா. அப்போது தான் உனது பாவம் தீரும்’ என அருளினார்.

        இதை அடுத்து சூரியனார், மேகமண்டலத்தில் யானை மீது, சிவ-பார்வதியை வைத்து பூஜை செய்யத் துவங்கினார். ஆனால், ஏழு மாதங்கள் நிறைவுறுவதற்கு முன்பே, சிவனாரிடம் சென்று, இன்னும் சாப விமோசனம் தரவில்லையே?’ என்று கேட்க… வெகுண்டாள் பார்வதி. ‘உரிய நேரம் வரும் வரை பொறுக்க மாட்டாயா?’ என்று கடும் உக்கிரத்துடன் சூரியனாருக்குச் சாபம் கொடுக்க எழுந்தாள். பதறிப்போன சிவனார், ‘எற்கெனவே கொடுத்த சாபத்தால் இருளில் மூழ்கினான் சூரியன். இன்னொரு சாபம் கொடுத்தல், இந்த உலகம் இருளில் விழிபிதுங்கித் தவிக்கும். வேண்டாம் தேவி, சாந்தமாக இரு!’ என்று உமையவளை அமைதிப்படுத்தினார்.

       பிறகு உரிய காலம் வந்ததும், சூரியனாருக்கு சாப விமோசனம் அளித்தார். அவரின் திருமுகமும் இந்த உலகமும் பழையபடி இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வந்தது! சூரியனாருக்கு அருளிய ஈசன், மேகநாதர் எனும் திருநாமத்துடன், கஜபிருஷ்ட விமானத்தின் கருவறையில், அருள் புரிகிறார்,

      சிவபெருமான அருளால் தன் கருமை நிறம் விடுபட்டு இங்கு வெளிச்சம் பெற்றார். சூரிய பகவான் தன் கருமை நிறத்திலிருந்து மீண்டதால் ’மீயச்சூர்’ என்று வழங்கப்படுகிறது.

      அம்மனின் அருள் பெருக்கு அதிகமான ஆலயம். ஆபரணம் கொலுசு ஆகியவை அணிந்து பார்க்க பரவசிக்கும் அம்மன் திருமுகம், சிவ சக்தி வடிவம் பிரகாரத்தில் சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளது. நான்முக சண்டேசுவரர் சிறப்பு ஆகும். கச்சூரிலும் நான்முக சண்டேசுவரர் உண்டு. ஸ்ரீசனிஸ்வரின் அவதாரத் திருத்தலம். ஸ்ரீசூரியனாரின் சாபம் போக்கிய தலம். ஆகவே இங்கே நவக்கிரகங்களுக்குச் சந்நிதி இல்லை. மாறாக 12 ராசிகளுக்கு உரிய 12 நாகர்களும் உள்ளனர். இவர்களுக்கு தீபமேற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால், ராகு – கேது முதலான சகல தோஷங்களும் விலகும், திருமணம் முதலான அனனத்து வரங்களும் கிடைக்கும்.

க்ஷேத்ரபுராணேஸ்வரர்

        இச்சம்பவத்தைச் சித்தரிக்கும் விதமாகக் கோவில் விமானத்தின் கீழ் தெற்கில் ஷேத்திர புராணேச்வரர் பார்வதியின் முகவாயைப் பிடித்துச் சாந்தநாயகியாய் இருக்கச் சொல்லி வேண்டுவது போன்ற வடிவில் காணப்படும் சிற்ப அழகை வேறெந்தக் கோயிலிலும் காண்பது அரிது.

Shethrapuraneswarar

         இந்த சிற்பத்தை ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால் அம்பாள் கோபமுடன் இருப்பதைப் போலத் தோன்றும். இதே சிற்பத்தை மறுபக்கம் சென்று பார்த்தால் அம்பாள் சாந்தசொரூபியாக நாணத்துடன் காணப்படுவாள். நேரில் சென்று பார்த்து ரசிக்க வேண்டிய சிற்பம் இது.

        மூலவர் கருவறை கோஷ்டத்தில் அம்பிகை சமேத க்ஷேத்ரபுராணேஸ்வரர் சிற்பம், அம்பிகையை சிவன் சமாதானப்படுத்தும் முறையில் அழகாக அமைந்துள்ளது. இச்சிற்பம் மிகவும் புகழ் பெற்ற சிற்பமாகக் கருதப்படுகிறது.

பாஸ்கர ராயர்

               ஆதிசங்கரர் பல முறை லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் பண்ண நினைத்து தமது சிஷ்யரிடம் சஹஸ்ர நாமச் சுவடிகளை எடுத்துவரப் பணித்த போதும், சிஷ்யர் விஷ்ணு சஹஸ்ரநாம சுவடிகளையே தந்தாராம். 2-3 முறை இவ்வாறு நடக்க, ஏன் இப்படி என்று சிஷ்யரிடம் கேட்கையில், சிஷ்யர் தாம் சுவடிகளை எடுக்கையில் ஒரு சிறு பெண் வந்து சுவடிகளை தந்ததாகவும், அதனைச் சரிபார்க்காது தாம் கொண்டுவந்து தந்ததாகக் கூறுகிறார். இவ்வாறு 2-3 முறை விஷ்ணு சஹஸ்ர நாமச் சுவடிகளை அன்னையே தந்ததாக அறிந்த சங்கரரும், அது அன்னையின் ஆணை என்று உணர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் மட்டும் செய்தாராம்.

                செளந்தர்ய லஹரி, பவானி ஸ்தோத்ரம், என்று பலவிதங்களில் அன்னை பராசக்தி மீது ஸ்லோகங்களை அருளிய ஆதிசங்கரர் லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் பண்ண இயலவில்லை. அதையே பிற்காலத்தில் வந்த ஒருவர் மூலமாக அன்னை செய்து வைத்தாள் என்றால் அது பிற்காலத்தில் வந்தவரது பக்தியை, அனுஷ்ட்டான சாதகத்தை, பாண்டித்யத்தை அன்னையே விரும்பிச் செயல்படுத்தினாள் என்றுதானே பொருள்?. இவ்வாறு லலிதா சஹஸ்ரநாம பாஷ்யம் பண்ணியவர்தான் பாஸ்கர ராயர்.

             இவர் பிறந்தது மாகாராஷ்டிரத்தில், பாகா என்னும் நகரத்தில். இவரது பிறப்பு கி.பி 1690 என்று தெரிகிறது. தந்தை பெயர் கம்பீர ராயர், தாயார் கோனாம்பா. கம்பீர ராயர் விஜயநகர அரசவையில் பெளராணிகராக இருந்தவர், மகாபாரதப் பிரவசனம் செய்து அதன் மூலமாக பாரதீ என்னும் பட்டப் பெயரை பரம்பரை உரிமையுடன் பெற்றதாகச் சொல்கிறார்கள்.

               கம்பீர ராயர் தமது மகனான பாஸ்கர ராயருக்கு காசியில் உபநயனமும், அத்யயனமும் செய்து வைத்திருக்கிறார். வாக்தேவி மந்திர தீக்ஷையும் நடந்து அம்மந்திரத்தை ஜபித்து வந்திருக்கிறார். சிறிது காலத்திலேயே வேத அத்யயனம் முடித்து ஊர் திரும்புகையில் குஜராத்தில் ப்ரகாசாநந்த நாதர் என்பவரை கண்டு அவரிடம் ஸ்ரீ வித்யை உபதேசமும், பூர்ணாபிஷேகமும் செய்து கொள்கிறார். பூர்ணாபிஷேக நாமம் ஸ்ரீ சிதானந்த பாதரேணு என்பதாகும். பின்னர் ஸ்ரீ கங்காதர வாஜபேயி என்பவரிடம் தர்க்க சாஸ்த்திரத்தையும் படிக்கிறார். அதர்வண வேதம் அழிந்து வருவதை தடுக்கும் விதமாக தானே அதனை அத்யயனம் செய்து அதனை பலருக்கும் கற்பித்து அவ்வேதத்தை உத்தாரணம் செய்கிறார்

                இவரது மனைவி பெயர் ஆனந்தி என்பதாகும். அவருக்கும் மந்திர உபதேசம் செய்வித்து பத்மாவதம்மாள் என்று தீக்ஷா நாமம் வழங்கியிருக்கிறார். பிறகு ஒரு சமயம் வல்லப ஸம்ப்ரதாயத்தைச் சார்ந்த ஒரு வித்வானை வாதில் வென்று அவரது மகளையும் திருமணம் செய்து கொள்கிறார். அந்த மனைவி பெயர் பார்வதி என்பதாம். இரு மனைவிகளுடன் காசியாத்திரை கிளம்பிச் செல்லும் வழியில் ஒர் மாத்வ மஹானையும் வாதில் வென்றதாகச் சொல்லப்படுகிறது. காசியில் ஸோம யாகம் செய்திருக்கிறார். அக்காலத்தில் காசியில் இருக்கும் வைதீகர்கள் உபாசனா மார்க்கத்தை ஏளனம் செய்வதும், குறை கூறுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது. பாஸ்கர ராயர் சமயாசாரத்தின் படியாக உபாசனை செய்து வந்தாலும், அவரை வாமாசாரத்தைச் சார்ந்தவர் என்று திரித்துக் கூறி இகழ்ந்து வந்திருக்கின்றனர்.

                 பல கேள்விகளுக்கும் சிறப்பாக, சுலபமாக பதிலளிக்கிறார் பாஸ்கரர். அவரது வாதத் திறமையையும், மந்திர சாஸ்திரத்தில் இருக்கும் திறமையும் எல்லோரும் வியக்கின்றனர். ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்தில் இருக்கும் “சதுஷ்ஷஷ்டி கோடி யோகினீ பரிசேவிதா” (237ஆம் நாமம்) என்பதில் வரும் 64 கோடி யோகினீகள் யார் என்று கேட்கின்றனர். பாஸ்கரரும் அம்பிகையை தியானித்துப் பின்னர், வரிசையாகச் சொல்ல ஆரம்பித்து, அந்தந்த யோகினிகளுக்கான பெயர், மந்திரங்கள், சரித்திரங்களை வரிசையாகச் சொல்லச் சொல்ல பிரமித்துப் போய்விடுகின்றனர். அப்போது தமது தலைவரான குங்குமாநந்த நாதரிடம் எப்படி இது சாத்தியம் என்று வினவ, அவரும் பாஸ்கர ராயர் சாதாரணமானவர் அல்லர். நமது கேள்விகளுக்கு அன்னை பராசக்தியே கிளி உருவில் அவர் தோளில் அமர்ந்து, அவர் சார்பில் பதிலளிக்கிறாள் என்று கூறுகிறார். தமது சிஷ்யர்கள் அந்தக் காக்ஷியைக் காணத்தக்க விசேஷ பார்வையையும் அளிக்கிறார். வைதீகர்களும் அன்னையைக் கிளி ரூபமாக தரிசித்து, பாஸ்கர ராயரிடம் மன்னிப்புக் கேட்டதுடன் நில்லாது பாஸ்கர ராயரை குருவாக ஏற்று அவரிடம் மந்திரோபதேசமும் பெற்றதாகச் சொல்லப்பட்டுகிறது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மெய்யன்பரே,

 இந்த லிங்கிள் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.
 மேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் சிறப்பாக இருக்கும்
 இந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
Please click below to go to CONTENTS for all the Articles in HRE:

12(A):Hindu Religious Extracts (HRE), இந்து மதச் சாரம்: CONTENTS