Tags

, , , , , , ,

திருஉத்தரகோச மங்கை. “மண் முந்தையதோ, மங்கை முந்தையதோ”, என்ற பழமொழி கொண்டு புகழப்படும் ஸ்தலம். மாணிக்கவாசகரால் திருவாசகத்தில் 38 இடங்களில் புகழ்ந்து சொல்லப்பட்ட தலம்.

பழம்பெரும் ஸ்தலங்களில் ஒன்றாகும். யுகங்கள் கடந்த புராணங்களின் வரலாற்றையும், தமிழ் மொழியின் பழமையையும் பெருமையையும் ஒருசேர உலகிற்கு எடுத்துக்கூறும் சைவஸ்தலம்.

இறைவன் – மங்களநாதர்
இறைவி – மங்களாம்பிகை
நடராஜர் – ஆதி சிதம்பரேசர் (மரகத நடராஜர்)
தலவிருட்சம்-இலந்தை மரம்
இறைவன்- இறைவி தனித் தனி ராஜகோபுரம்-விமான்-சந்நதி.

“பக்தரெல்லாம் பார் மேல் சிவபுரம் போல் கொண்டாடும் உத்தரகோச மங்கையூர்!” என்ற வரிகளின் வாயிலாக மாணிக்கவாசகர் இதை உலகிற்கு உரைத்துள்ளார். மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் இங்கு தான் காட்சி தந்தார். அதை பறைசாற்றவே, மாணிக்கவாசகரும்,”சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது இனியே” என்று சிவபெருமானிடமே பக்தியுடன் வினவினார்!

உத்தரம் – உபதேசம். கோசம் – ரகசியம். மங்கை – பார்வதி தேவி. எம்பெருமானாகிய சிவபெருமான், பார்வதி தேவிக்கு வேதாகமங்களின் இரகசியங்களை இங்கு தான் உபதேசித்தார்.

இராவணன் மனைவி, மண்டோதரியின், சிவபக்தியின் புகழ் பாடும் ஸ்தலம்- மண்டோதரிக்குக் காட்சி கொடுத்து இராவணன்- மண்டோதரி திருமணம் நடந்த இடம்.

இத்தலத்தின் வரலாற்றுப் புராணத்திலும், மதில் சுவற்றில் உள்ள கல்வெட்டுகளிலும் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இது இக்கோவிலின் பழமையை புலப்படுத்துகிறது. மேலும் மூவாயிரம் வருடங்களை கடந்து வாழும் இலந்தை மரம்,இத்திருக்கோவிலின் ஸ்தல வ்ருக்ஷம். இவ்வாலயத்தில் ஆறடி உயர மரகத நடராஜர் சிலை அமைந்துள்ளது. அக்னியின் மத்தியில் நடராஜப்பெருமான் ஆடுவதாகக் கூறுவர்.

ஆதி சிதம்பரேசன்

பார்வதி தாயார் காண, இங்கு ஆடிய நடனத்தை தான் தில்லை அம்பலத்தில் எம்பெருமான் ஆடியதாகக் கூறுவர்.
ரத்தினசபாபதி, ஆதி சிதம்பரேசன் என்றழைக்கப்படும் இந்த மரகத நடராஜர் வருடம் முழுவதும் சந்தனக் காப்புக்குள் மறைந்திருப்பார். மரகதத்திருமேனி கொண்ட நடராஜரை உள்வைத்தே சந்நிதி கட்டப்பட்டுள்ளது.அவரை வெளிக்கொணரவும் இயலாது. ஒவ்வொரு வருடமும் மார்கழி மாத திருவாதிரையன்று சந்தனப்படி கலைந்து விசேஷ அபிஷேகம் நடைபெறும். அன்றைய தினத்தில் மட்டும் நடராஜரை மரகத மேனியாக காணலாம். காப்பு அகற்றி அதிகாலை மீண்டும் சந்தனம் வைத்து அருணோதய காலத்தில் தரிசனம் நடைபெறும். அதுவே ஆருத்ரா தரிசனம்.

தாழம் பூ

மேலும், சிவபெருமானுக்கு தாழம் பூ ஆகாது. ஆனால், இங்கு அதற்கும் சாப நிவர்த்தி ஏற்பட்டதால் மங்களநாதராகிய சிவபெருமானுக்கு இக்கோவிலில் தாழம் பூ சார்த்தப்படும்.

பிரம்மபுரம்

பிரம்மாவுக்கு அடங்கா கோபம் உண்டாயிற்று. அக்கோபம்,அவரையும் அறியாமல் உண்டானதால் அவர் அதை அழிக்க முயன்று தோற்றுப்போனார். அவரை ஆட்டுவித்த அக்கோபம் உலகத்து உயிர்களையும் வதைத்தது. தவம் ஒன்றே இதற்கு விடை என்று உணர்ந்த பிரம்மா, கடுந்தவம் புரிய உலகிற்கு வந்து இடம் தேடினார். எங்கும் அமைதி இல்லை. உலகம் முழுவதும் சுற்றிய அவர் தக்க இடம் கிடைக்காமல் சோர்ந்து இருந்த நேரம்,உத்தர கோச மங்கை பற்றி அவர் மனதில் எண்ணினார். எம்பெருமானாகிய சிவபெருமானே உறங்கும் இடமல்லவா! தவத்தில் சிறந்தவன் சிவபெருமான்! அவரே நிம்மதியாக உறங்கும் இடம் என்றால் அதை விட தக்க இடம் வேறு எங்கு உள்ளது?! உடனே உத்தர கோச மங்கை வந்தடைந்தார். அக்னி தீர்த்தக் கரையில் சிவனை வேண்டி தியானத்தில் அமர்ந்தார் . சிவனும் அருள் புரிய,பிரம்மாவுக்கு விமோசனம் கிடைத்தது. இக்காரணத்தால், இத்தலம் பிரம்மபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

சிவாகமம்

இராம அவதாரத்திற்கும் முன்னால், இத்தலத்தில் சிவபெருமான் பூலோகத்தில் வசித்து, ஆயிரம் முனிவர்களுக்கு சிவாகமம் பற்றி உபதேசித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள்,முக்தி வேண்டி தவமிருந்த அம்முனிவர்களிடம், சிவபெருமான்,”முனிவர்களே, என்னை என் பக்தை மண்டோதரி அழைக்கின்றாள். நான் இலங்கை சென்றுவிட்டு வருகிறேன்.”என்றவர், ஒரு முனிவரை நோக்கி, “நான் வரும் வரை சிவாகம நூலை பத்திரமாக வைத்திருங்கள்.” என்று கூறிவிட்டு இலங்கை விரைந்தார்.
மண்டோதரியின் முன் சிவபெருமான் தன்னை ஒரு குழந்தைப் போல் பாவித்தார். மண்டோதரி சிவபெருமானின் அழகில் லயித்து நிற்க, அங்கு வந்த இராவணன்,”யார் குழந்தை இது? மிகவும் அழகான வசீகரிக்கும் முகம்.”என்று கூறியவாறு அக்குழந்தையை தன் கைகளில் ஏந்தினார் . இராவணன் சிவபெருமானை ஏந்திய நேரம், உத்தர கோச மங்கையில், ஒரு பெரும் ஜோதி எழுந்தது. ஜோதியால் ஈர்க்கப்பட்ட முனிவர்கள் அந்த ஜோதியில் கலந்து முக்தியடைந்தனர். அனால், இறுதியாக ஒரு முனிவர் மட்டும் ஜோதியில் ஐக்கியம் ஆகாமல் அமர்ந்திருந்தார். சிவாகம நூலினை பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் முனிவர் அவரே!

             தன் வாழ் நாள் முழுதும் வேண்டி நின்ற முக்தி அவர் கண் எதிரில் இருந்தும் அவர் அதை ஏற்கவில்லை. பின் எதற்கு இந்த கடுந்தவம்?முற்றும் துறந்து பித்தனாய் சுற்றியது இதற்குத்தானே! முக்தி ஆன்மாவின் சங்கீதம். ஆனால், சிவாகம நூலை பாதுகாக்கும் பொறுப்பைக் கொடுத்திருப்பது சிவபெருமான் அல்லவா! சிவபெருமான் பார்வதி தேவியிடம் இந்த சிவாகம ரகசியத்தைக் கூறும் பொழுது, அதைக் கேட்க ஆசைப்பட்ட முருகப்பெருமான் தேவியின் கூந்தலில் உள்ள மலரினுள் சென்று தேனீப் போல் ஒழிந்து கொண்டார். அதை அறிந்து கோபமுற்ற சிவபெருமான் இருவருக்கும் சாபமிட்டார். அத்தகைய பெருமை வாய்ந்த சிவாகம நூலை,ஒரு முனிவரை நம்பி விட்டுச்சென்றார் என்றால், அது முனிவரின் இப்பிறவிப்பலன் மட்டுமல்ல அவரது ஆன்மாவின் ஜென்ம பலன் அல்லவா!

சிவாகமம் & மாணிக்கவாசகர்

ஆண்டுகள் கழிந்தன. மண்டோதரியின் அன்பிலும் பக்தியிலும் தன்னை மறந்த சிவபெருமான் மண்டோதரிக்கும் இராவணனுக்கும் அருள் புரிந்துவிட்டு உத்தர கோச மங்கை வந்தார். முனிவர் ஒருவர் மட்டும் சிவாகம நூலுடன் அமர்ந்திருப்பதைக் கண்டார். நடந்தவை அனைத்தையும் அறிந்த சிவபெருமான் அம்முனிவரை அன்புடன் தழுவி,”எம் வாக்கினை காப்பாற்ற சுயநலமற்ற உனது இச்செயலால் அகமகிழ்ந்தோம். உமது அடுத்தப் பிறவியில் பாண்டிநாட்டில் மாணிக்கவாசகர் என்னும் நாமம் கொண்டு அவதரித்து, எம்புகழ் பாடி தமிழை வளர்ப்பாயாக!” என்று வரமளித்தார். மேலும் ஜோதியில் கலந்து முக்தி பெற்ற 999 முனிவர்களையும் லிங்கமாய் உருமாற்றி,தானும் சஹஸ்ரலிங்கமாய் தன் பக்தர்களுடன் உத்தர கோச மங்கையில் ஒரு சேர கலந்துகொண்டார்.

ஜோதி உருவான இடமே இக்கோவிலின் “அக்னித்தீர்த்தம்”. ஸ்தல விருக்ஷமான இலந்தை மரத்தின் அடியில் அந்த சஹஸ்ரலிங்கம் உள்ளது. இந்த இலந்தை மரத்தின் கீழ் அமர்ந்தவாறு தான் சிவபெருமான் முனிவர்களுக்கு சிவாகமம் பற்றி உபதேசித்தார். சிறந்த சிவபக்தராய் அவதரித்த மாணிக்கவாசகர், பார் வியக்கும் திருவாசகம், திருவெம்பாவை, திருக்கோவையார், திருப்பள்ளி எழுச்சி அருளியவர்.

  1. உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது.
  2. உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என்று அழைக்கப்படுகிறது.
  3. இத்தலத்துக்கு உமா மகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.
  4. திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘ இத்தலத்தில்தான் நடந்தது.
  5. பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில் சிறந்து இருந்த போது, அவர்களது. தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்தது.
  6. ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம்,‘தட்சிண கைலாயம்‘, சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா ஷேத்திரம், பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டது.
  7. மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன்கிடைக்கும்.
  8. இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும்.
  9. மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும்.
  10. மூலவருக்கு மங்களநாதர் என்ற பெயர் தவிர மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு.
  11. இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள் உள்ளன.
  12. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இத்தலம் ராமாயண காலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக இந்த கல்வெட்டு கருதப்படுகிறது.
  13. இத்தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர் வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.
  14. இத்தலத்து பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார்.
  15. கோவில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர்.
  16. இத்தலத்து முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான் என்று, ‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ கூறுகிறது.
  17. சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் “இலவந்திகைப் பள்ளி” என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும்.
  18. மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.
  19. இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார்.
  20. இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.
  21. சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
  22. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன பந்தை கொண்டுள்ளது. நாம் கையை நுழைத்துக்கூட பந்தை நகர்த்த முடியும்.
  23. இத்தல குளத்தில் வாழும் மீன்கள் கடல்நீரில் வாழும் மீன்களாகும்.
  24. பிரதோஷத்தன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர்.இந்த கோவிலில்சிவனுக்கு அம்பாளுக்கு தாழம்பூ மாலை கட்டிப்போட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். இதனால் திருமணம் உடனே கைகூடும்.
  25. இங்கு ஆதிகாலத்து வராகி கோவில் உள்ளது இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய்.ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் பூஜை தொடர்ந்து செய்தால் தீராத பிரச்னைகள்,திருமண்த்தடை போன்றவை விலகுகின்றன.
  26. காகபுஜண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது.
  27. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இத்தலத்தில் தான் ஞான உபதேசம் பெற்றனர்.
  28. இத்தலத்தில் உள்ள மங்களநாதர் சன்னதி, மங்களேசுவரி சன்னதி, மரகதகல் நடராஜர் சன்னதி சகஸ்ரலிங்க சன்னதி நான்கும் தனிதனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
  29. நடராஜர் மரகத கல்லில் இருப்பதால் இத்தலத்தை சிலர் ரத்தின சபை என்கிறார்கள். ஆனால் உலகின் முதல் கோவில் என்பதால் இது எந்த சபைக்கும் உட்படாதது என்றும் சொல்கிறார்கள்.
  30. காரைக்கால் அம்மையாரும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார்.
  31. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், கிருத்திகை, சதுர்த்தி நாட்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
  32. சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம் வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் 10-நாள் சிவ உற்சவம், ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், மார்கழி மாதம் திருவாதிரை விழா மாசி மாதம் சிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள்ஆகும்.
  33. மரகத கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.
  34. இத்தலத்தில் மொத்தம் 11 விநாயகர்கள் உள்ளனர்.
  35. மங்களநாதர் சன்னதியை சுற்றி வரும் போது இடது பக்க மூலையில் மகாலட்சுமியை வழிபடலாம்.இத்தலத்தில் உள்ள ராஜகோபுரத்தில் சர்பேஸ்வரர் சிலை உள்ளது.
  36. உலகத்தில் முதலில் தோன்றிய கோவில் என்ற சிறப்பு உத்தரகோசமங்கை தலத்துக்கு உண்டு. இந்த ஆலயம் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது.
  37. நடராஜர் இங்கு ஆடிய பின்னர்தான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார்.
  38. இது அம்பிகைக்கு பிரணவப்பொருள் உபதேசித்த இடம்.
  39. தலவிருட்சமான இலந்தமரம் மிகமிகத் தொன்மையானதும் இன்று வரை உயிருடன் உள்ளதும் பல அருள் தலைமுறைகளையும் முனிவர்கள் தரிசித்த தல விருட்சம் ஆகும். இந்த இலந்த மரம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது.
  40. வேதவியார், பாராசரும் காகபுஜண்டர் மிருகண்டு முனிவர்கள் பூஜித்த தலம்.
  41. உலகில் உள்ள 1087 சிவாலயங்களிலும் இருக்கும் அருட் சக்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ரலிங்கம் இங்குள்ளது.
  42. ஆண்டுக்கு இரண்டு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா.
  43. இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளது.
  44. சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.
  45. ஈசன் ஈஸ்வரி பிறந்த ஊரான உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் சொர்க்கம் செல்லுவது நிச்சயாமாகும்.
  46. உத்தர கோசமங்கை திருத்தலமானது ஸ்ரீராமருக்கு ஈசன் சிவலிங்கம் வழங்கி சேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடமாகும்.
  47. இத்தலத்தில் மாணிக்கவாசகர் பாடிய பொன்னூஞ்சல் பாடலை குழந்தைகளை தாலாட்டும்போது பாடினால், குழந்தைகள் உயரமாகவும், உன்னத மாகவும் வாழ்வார்கள் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.
  48. வாழ்வில் ஒரு முறையாவது சென்று தரிசிக்க வேண்டிய ஸ்தலம் உத்திரகோசமங்கை ..!
  49. திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி.
    அண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பார்கள்.
    உத்தர கோச மங்கை மண்ணை மிதித்தாலே முக்தி.
  50. ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.
  51. சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும்.உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது.

வலை வீசி விளையாண்ட படலம்.
இப்போது கோவில் வாசல் உள்ள இடத்தில்தான கடல் இருந்தது. இப்போது அதே கடல் பின் வாங்கிப் ஏர்வாடிப் பக்கம் போய்விட்டது.இங்குதான் சிவபெருமான் வலைவாணனாக உருவெடுத்து வந்து சுறாவை அடக்கினார்.
அவர் மணந்த கொண்ட மீனவப் பெண்தான் மங்களேசுவரி.

கோவில் அமைப்பு
முதல் பிரகாரத்தின் வாயு மூலையில் தனது தேவியருடன் முருகப்பெருமான் நின்ற கோலத்திலும், இரண்டாம் பிரகாரத்தின் வாயு மூலையில் ஆறு திருமுகம், பன்னிரு கைகளுடன் இரு தேவியர் சூழ, மயில் மீது அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார்.ஆலயத்தின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன. வலதுபுறம் உள்ள கோபுரம் ஏழு நிலைகளுடன் எழிலாக தோற்றம் கொண்டுள்ளது.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
Please click below to go to CONTENTS for all the Articles in HRE:
https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/